Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,956 முறை படிக்கப்பட்டுள்ளது!

அம்மார் பின் யாஸிர் (ரழி),

தாயார் பெயர் சுமைய்யா(ரழி) தந்தை பெயர் யாஸிர்(ரழி). யாஸிர்(ரழி) தன் தொலைந்து விட்ட சகோதரரைத் தேடியலைந்து மக்கா வந்து சேர்கிறார். மக்ஸுமி கோத்திரத்தில் அடிமைப் பெண்ணாயிருந்த சுமையா (ரழி) அவர்களை அபூஹுதைஃபா அவர்கள் யாஸிர்(ரழி) அவர்களுக்கு மனமுடித்து வைக்கிறார். இவர்களின் புதல்வரே அம்மார்(ரழி). இணைவைப்பாளர்களுக்கு இடையில் ஏகத்துவப் பிரச்சாரம் துவக்கப்படாத அந்நாளில் ஏகத்துவத்தின் மகிமையை உணர்ந்த யாஸிர்(ரழி) சுமைய்யா(ரழி) தம்பதியினர் இஸ்லாத்தில் இணைந்தனர். ஆரம்பத்தில் இஸ்லாத்தில் இணைந்தவர்களில் ஆறாவது நபர் சுமைய்யா(ரழி) ஆவார். குரைஷிகள் இஸ்லாத்தில் இணைந்தோரை துன்புறுத்தினர் அபூஜஹ்ல் போன்ற இணைவைப்பாளர்களில் முக்கியமானோர் மூதாதையர்களின் மூடப் பழக்க வழக்கங்களையும், இணைவைப்பையும் நியாயப்படுத்தி ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்ட ஏழைக் குடும்பத்தினரை அடிமைகளை கொடுமைப் படுத்தினர். அம்மாரின் குடும்பமும் இக்கொடுமைகளை சந்திப்பதில் விதிவிலக்கு பெறவில்லை. சித்தரவதையின் உச்ச கட்டமாக அம்மாரின் தாயார் சுமையா(ரழி) அபூஜஹலால் மர்மஸ்தானத்தில் ஈட்டியால் குத்திக் கொல்லப்பட்டு இஸ்லாத்தில் முதல் ஷஹீதான பெண் என்ற பெருமையடைந்தார். அது போலவே யாஸிர்(ரழி) அவர்களும். இணைவைப்பாளர்களால் இரக்கமின்றி கொல்லப்பட்டு ஷஹீதானார்கள்.

வீரத்தாயின் மகனான பெற்றோரின் தியாக மரணத்திற்குப் பின் அம்மார்(ரழி) ஏகத்துவக் கொள்கையை இதயத்தில் ஏந்தியவராக இணைவைப்பாளர்களின் எதிர்ப்பை மனத்துணிவுடன் சந்திக்கிறார். சுடு மணலில் ஆடையின்றி கிடத்தப்பட்ட அம்மார்(ரழி) ஈமானிய உறுதியுடன் திகழ்வதைக் கண்டு திடுக்குற்ற அபூஜஹ்ல் சித்ரவதைகளை அதிகரித்து இணைவைக்கும் படி கூறுகிறான். மறுக்கிறார் அம்மார்(ரழி). தண்ணீரில் தலையை முக்கி மூர்ச்சையாக்கின்றனர் இணைவைப்பாளர்களால் உயிர் போகும் அந்நிலையில் அம்மார்(ரழி) அவர்களை நபிகளாரின் ஏகத்துவக் கொள்கையை இகழ்ந்துரைக்க ஏவுகின்றனர். அவ்வாறே செய்கின்றார் அம்மார்(ரழி) அவர்கள். விட்டு விடுகின்றனர். அழுதவாறு நபிகளாரிடம் வந்த அம்மார்(ரழி) நான் இணைவைப்பு வார்த்தைகளை கூறிவிட்டேன் எனக் கூற அப்போது எவர் ஈமான் கொண்டபின் அல்லாஹ்வை நிராகரிக்கிறாரோ அவர் (மீது அல்லாஹ்வின் கோபம் இருக்கிறது) – அவருடைய உள்ளம் ஈமானைக் கொண்டு அமைதி கொண்டிருக்கும் நிலையில் யார் நிர்ப்பந்திக்கப்படுகிறாரோ அவரைத் தவிர – (எனவே அவர் மீது குற்றமில்லை) ஆனால் (நிர்ப்பந்தம் யாதும் இல்லாமல்) எவருடைய நெஞ்சம் கு.ப்ரைக்கொண்டு விரிவாகி இருக்கிறதோ – இத்தகையோர் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும்; இன்னும் அவர்களுக்குக் கொடிய வேதனையும் உண்டு. (16:106) என்ற வசனம் இறங்கியது.

அம்மார்(ரழி) அவர்களை தீயிலிட்டு பொசுக்குவார்கள். அப்பொழுது நபி இப்ராகீம்(அலை) அவர்களுக்கு நெருப்பை குளிரச் செய்தது போல் இவருக்கும் குளிரச் செய் என நபி(ஸல்) துஆ செய்தார்கள் என்று அம்ரு இப்னு மைமூன்(ரழி) கூறுகின்றார்கள். அம்மாரின் ஈமானிய உறுதி இறைநம்பிக்கை அவரின் எலும்புகளுக்குள்ளும் ஊடுறுவியுள்ளது. யார் அம்மாருடன் பகை கொள்கிறாரோ அவர் அல்லாஹ்வுடன் பகை கொள்கிறார் என்ற நபி மொழியைச் செவியுற்ற காலித் பின் வலீத்(ரழி) அம்மார்(ரழி)அவர்களுடன் இருந்த மனப் பிணக்கை நீக்கி சமாதானம் செய்து கொண்டார்கள்.. சிறந்த போர் வீரரான அம்மார்(ரழி) அபூபக்கர்(ரழி) வஆட்சியில் நிகழ்ந்த யமாமா, பாரசீகப் போரில் கலந்து கொண்டார்கள். யமாமா போரில் அம்மார்(ரழி), முஸ்லீம்களே ஏன் சுவனத்தை விட்டும் வெருண்டோடுகிறீர்கள் என போர் வீரர்களுக்கு உற்சாக மூட்டினார். அப்போரில் அம்மார்(ரழி)அவர்களின் ஒரு காது துண்டிக்கப்பட்டது. அப்படியும் அயராது போரிட்டார்.

உமர்(ரழி) ஆட்சி காலத்தில் கூஃபாவின் ஆளுனராக நியமிக்கப்பட்ட அம்மார்(ரழி) அவர்களை ஒருவன் ஒற்றைச் செவியன் எனக் கூறினான். அவனை அம்மார்(ரழி) அவர்கள் தண்டிக்கவில்லை. ஹுதைபத்துல் யமான்(ரழி) அவர்களிடம் அவருடைய மரணவேளையில் யாரைப் பின்பற்றுவது என மக்கள் கேட்டதற்கு அம்மார்(ரழி) அவர்களை பின்பற்றுங்கள். எங்கு உண்மை உள்ளதோ அங்கு அம்மார்(ரழி) இருப்பார் எனக் கூறினார்கள். ஹிஜ்ரத்க்கு பின் மதீனாவில் பள்ளி கட்டும் பணியில் அம்மார்(ரழி) இருமடங்கு சுமை சுமந்து வருவார்கள். புழுதி படிந்த அவர்களது மேனியையும் முகத்தையும் நபி(ஸல்)அவர்கள் தம் திருக்கரங்களால் துடைத்திருக்கிறார்கள். (புகாரி)

அம்மார்(ரழி) அவர்கள் அக்கிரமக்காரர்களால் கொல்லப்படுவார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். ஒருமுறை சுவர் இடிந்து விழுந்து மூர்ச்சையான அம்மார்(ரழி) அவர்களைக் குறித்து நபித்தோழர்கள் அவர் இறந்து விட்டதாக எண்ண மீண்டும் நபி(ஸல்) அவர்கள் சுமையாவின் மகனை அக்கிரமக் காரர்கள் கொலை செய்யப் போகின்றனர் எனக் கூறினார்கள். ஹிஜ்ரி 37 ல் அலி(ரழி) அவர்களுக்கும் முஆவியா(ரழி) அவர்களுக்கும்மிடையே நிகழ்ந்த ஸிப்பீன் போரில் அலி(ரழி)அவர்கள் படையில் பங்கெடுத்திருந்த அம்மார்(ரழி)அவர்கள் தனது 93 வது வயதில் அப்போரில் கொல்லப்படுகிறார்கள். இரத்தம் தோய்ந்த துணியுடன் கபனிடப் பட்டார்கள். அம்மாரை கான சுவனம் ஆசைப்படுகிறது-திர்மிதியில் காணப்படும் நபி மொழி.

படிப்பினை: உங்களில் (அல்லாஹ்வின் பாதையில் உறுதியாகப்) போர் புரிபவர்கள் யார் என்றும், (அக்காலை) பொறுமையைக் கடைப்பிடிப்பவர்கள் யார் என்றும் அல்லாஹ் (பரிசோதித்து) அறியாமல் நீங்கள் சுவனபதியில் நுழைந்து விடலாம் என்று எண்ணிக் கொண்டு இருக்கின்றீர்களா? 3:142 வசனத்திற்கு ஒப்ப வாழ்ந்த அம்மார்(ரழி) அவர்களின் வாழ்விலிருந்து நாம் பெறும் படிப்பினை ஈமானிய உறுதியே. ஈமான் கொண்டு இஸ்லாத்தை ஏற்றது முதல் இஸ்லாம் மேலோங்கவேண்டும். சத்தியம் வெல்ல வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் தம் உடலாலும், உள்ளத்தாலும் போராடி தமது 93 வது வயதிலும் வாளேந்திப் போர் புரிந்து தம் உயிரையும் அல்லாஹ்விற்காகத் துறந்த தியாகச் செம்மல் அம்மார்(ரழி) அவர்களைப் போன்றே நாமும், நம் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அல்லாஹ்விற்காகவே அர்பணிக்கக் கூடிய மக்களாக நம்மை ஆக்கியருள வல்ல நாயனிடமே பிரார்த்திப்போம்.

(… அந்நாளில் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே! நீ உன்னுடைய இறைவன் பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக. நீ உன் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக. மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான். (89:27-30)

நன்றி:- ஒற்றுமை