சகோதர, சகோதரிகளே மனிதர்களாகிய நாம் அல்லாஹ் படைத்த படைப்பினங்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்த படைப்பாக இருக்கிறோம் காரணம் தவறு செய்கிறோம், தவறை உணர்கிறோம், செய்த தவறுக்கு இறைவனிடமும் சம்பந்தப்பட்ட மக்களிடமும் மன்னிப்பு கோருகிறோம், மீண்டும் தவறுகள் நேராத வண்ணம் நமக்கு நாமே ஒரு வேலியை போட்டுக் கொள்கிறோம். நாம் சிந்திக்கின்றோம், உணர்கிறோம், சிரிக்கிறோம், அழுகிறோம், பேசுகிறோம், ஆடுகிறோம், பாடுகிறோம், ஆனந்தமாகவும் சுதந்திரமாகவும் சுற்றித்திரிகிறோம். அல்லாஹ் படைத்த ஒவ்வொரு பொருளையும் அது அணுவாக இருந்த போதும் ஆராய்ச்சி செய்துபார்க்கிறோம் இந்த அறிவுத் திறனை யார் வழங்கியது அல்லாஹ் தானே இதோ!
வானங்கள் மற்றும் பூமியின் படைப்பிலும் இரவு பகலின் மாற்றத்திலும் அறிவுடையோருக்கு நிச்சயமாக அத்தாட்சிகள் இருக்கின்றன. இத்தகையோர் நின்ற நிலையிலும் அமர்ந்திருக்கும் போதும், படுத்திருக்கும்போதும் அல்லாஹ்வை நினைந்து வானங்கள் மற்றும் பூமியின் படைப்பைப் பற்றிச் சிந்தித்தவர்களாக, “எங்கள் இறைவா! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை. நீ மிகத் தூயவன்; நரக நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக” என்று பிரார்த்திப்பார்கள். (அல்குர்ஆன் 3:191,192)
மனிதனின் விடாமுயற்சிக்கு அல்லாஹ் கொடுத்த வெற்றிகள்
வானத்தில் பறக்கும் பறவையைக் கண்டோம் ஆனால் நமக்கு பறக்க இறக்கைகள் இல்லை என்று கவலைப்பட்டதில்லை மாறாக அறிவைக்கொண்டு ஆகாய விமானங்களைப் படைத்து பறவையின் வழித்தடங்களை விட உயரமான வழித்தடங்களில் பறந்து செல்கிறோம்.
நீர் நிலைகளில் சுற்றித்திரியும் மீன்களை கண்டு நாம் அவ்வாறு தண்ணீரில் வாழமுடியாதே என்று வருத்தப்பட்டிருக்கிறோமா இல்லையே! மாறாக நம் மூளையைக் கொண்டு நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்குகினோம் இதன் காரணமாக மீன்கள் செல்ல முடியாத ஆழ்கடலின் ஆளமான பகுதிகளில் நாம் நுழைந்து நீரின் அழகை ரசிக்கிறோமே.
காடுகளை வசப்படுத்தினோம், நாடுகளை வசப்படுத்தினோம், வானம் மற்றும் கடல் மார்க்கங்களையும் வசப்படுத்தினோம் ஏன் தற்போது வால்நட்சத்திர கூட்டங்களையும் விண்மீன்களையும் வேட்டையாட கிளம்பிவிட்டோமே! இது எவ்வாறு கிடைத்தது நமது விடாமுயற்சியாலும் அறிவாற்றலாலும்தானே!
மனிதனுக்கு வெற்றி கிட்டியதும் ஆணவம் கூடுகிறது!
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு பண்புகளில் தவிர வேறு எதிலும் பொறாமை கொள்ளாகாது. ஒருவர் தமக்கு இறைவன் அளித்த செல்வத்தை அறப்பணியில் அர்ப்பணித்தல். மற்றொருவர் தமக்கு இறைவன் அளித்த ஞானத்தால் (மக்களின் பிரச்சினைகளுக்குத்) அதைக் கற்பித்துக்கொண்டும் இருத்தல். என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.(புகாரி 7141 Volume:7 Book:93)
சகோதரர்களே நாம் மேற்கண்ட நபிமொழியை சிந்திக்கின்றோமா? இல்லையே மாறாக அல்லாஹ் நமக்கு அளித்த வெற்றியை நாம் நினைத்துக்கூட பார்ப்பதில்லை ஏன் நமக்கு வழங்கப்பட்ட வெற்றியை நம்முடன் வாழக்கூடிய அனைத்து பகுதி மக்களுடனும் பரிமாறிக்கொண்டு ஆனந்தமான அமைதியான சமுதாயமாக வாழ நினைப்பதில்லை, மாறாக நான் என்ற ஆணவத்தை வளர்த்துக் கொள்கிறோம்! இதன் விளைவுகளால் ஒரு பகுதி மக்கள் அறிவாற்றலில் வளர்ந்த நிலையிலும் மறுபக்கம் அறிவாற்றலில் பின்தங்கியும் செல்லும் நிலை ஏற்படுகிறது ஆயுதங்கள் பெருகுகின்றன, வலிமை கூடுகிறது இறுதியாக அராஜகம் தலைவிரித்து ஆடுகிறது இதற்கு ஒரு சிறந்த உதாரணமாக கூறுவதாக இருந்தால் அமெரிக்காவின் அறிவுத்திறனும் மற்றும் இராக், நேபாளம், பூடான் போன்ற நாடுகளின் பின்தங்கிய நிலைகளையும் குறிப்பிடலாம்.
சவக்குழிக்குல் புதைக்கப்படும் மனிதாபிமானம்
நாம் வாழக்கூடிய இந்த உலகில் ஒருபுறம் செல்வச்செழிப்பில் மக்கள் மிதக்கிறார்கள். காலையில் தேநீர் அருந்துவது லண்டனிலும், மதிய உணவு ரோம் மற்றும் பாரிஸ் நகரங்கலிலும், இரவு உணவு அமெரிக்க நாடுகளிலும் மறுநாள் கண்விழிப்பது ஜப்பானிலும் என்று ஆகாய மார்க்கமாகவே பயணிக்கும் விஞ்ஞான வளர்ச்சியையும், பொருளாதார வளர்ச்சியையும் நாம் பெற்றுள்ளோம் ஆனால் அடுத்த வேளை உணவுக்கு தட்டுத்தடுமாரும் ஆப்பிரிக்க கருப்பு இன மக்களுக்காக நாம் எதையாவது கொடுக்கிறோமா?
சிந்தித்துப்பாருங்கள் சகோதரர்களே! ஆப்ரிக்க நாட்டில் உணவுக்குப் போராடும் ஒரு 10 வயது குழந்தை நம்மை பார்த்து இவன் வாகனங்களிலெல்லாம் பயணிக்கிறானே இவனிடமிருந்து எதையாவது நமக்கு உணவு கிடைக்குமா என்று ஏங்கித்த விக்குமே! இதை நாம் உணர்கிறோமா?
ஆனால் நாம் அவர்களைப்பார்த்தும் பார்க்காதவாறு முகத்தை திருப்பிவிடுவோம், அவர்கள் ஆசை ஆசையாக ஓடி வந்தால் நேரம் ஆகிவிட்டது கிளம்பனும் என்று கூறி அவர்களை நேசிக்க தவறுவோம். நம் ஏழை அண்ணனோ, தம்பியோ, தங்கையோ, உறவினரோ நம்மை பார்த்து நம் சகோதரன் உதவமாட்டானா? வசதியான இந்த சகோதரன் மூலமாக நமக்கு அல்லாஹ் ஒரு நல்ல வழியை காட்டமாட்டானா என்று மனதிற்குள் குமுறுவார் களே இதை நாம் உணர்கிறோமா? இப்படிப்பட்ட நம் சொந்த இரத்த பந்தங்களையே நாம் உதாசீணப்படுத்துகிறோம் ஆனால் பெருமையாக நம்மை அல்லாஹ் கைகொடுத்தான் என்று பேசிக்கொள்வோம் இந்த பெருமை எதற்கு? இந்த பகட்டு வேஷம் நமக்கு எதற்கு! அல்லாஹ் நாம் பெருமைப்படு வதற்காகத் தான் அறிவையும், செல்வத்தையும், உடல் ஆரோக்கியத்தையும் கொடுத்தானா? இதோ கீழ்கண்ட நபிமொழியை நினைவுகூறுங்கள்
ஆப்ரிக்காவை விடுங்கள் நம் அண்டை வீட்டில் வசிக்கும் ஏழை அல்லது நமது உடன்பிறந்த ஏழை சகோதரன் அல்லது ஏழை சகோதரியின் பச்சிளங் குழந்தைகள் பசியால் வாடும்போது நம்மை பார்த்து இந்த எங்கள் மாமா, பெரியப்பா, சித்தப்பா, பெரியம்மா, சின்னம்மா, சித்தி நமக்காக எதையாவது சாப்பிட கொடுக்கமாடடார்களா? என்று ஏங்கமாட்டார்களா? இதை நாம் உணர்கிறோமா?
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொரு வரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளராவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவரின் பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள். (புகாரி 7138, Volume:7 Book:93)
நம்முடைய சமுதாயம் பற்றி அல்லாஹ் தனது திருமறையில் எவ்வளவு அழகாக வர்ணிக்கின்றான் பாருங்கள்! நபிகளார் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளையும் படியுங்கள்!
மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தார்களி லெல்லாம்) மிக்க மேன்மையான சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள். (ஏனெனில்) நன்மையை ஏவுகிறீர்கள், தீமையை தடுக்கிறீர்கள், அல்லாஹ்வை நம்புகிறீர்கள். (அல் குர் ஆன் 3 : 110)
“மக்களில் சிறந்தவர் யார்?” என்று , அதற்கு நபி(ஸல்) அவர்கள் “மக்களில் குர் ஆனை நன்கு கற்றறிந்தவரும் , அல்லாஹ்வை அதிகம் அஞ்சுபவரும், அதிகமாக நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பவரும், அதிகமாக உறவை பேணி வாழ்பவருமே சிறந்தவர் ஆவார் என்றார்கள். (கன்ரா பின் அபீலஹப்(ரலி) : முஸ்னத் அஹ்மத்.)
நமது நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறியதாக முஆவியா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். “உலக மக்களில் நீங்கள் 70வது சமுதாயமாக இருக்கிறீர்கள். அந்த 70 சமுதாயங்களில் நீங்கள் தான் சிறந்த சமுதாயம் ஆவீர்கள். வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்விடம் மதிப்பு மிக்க சமுதாயம் ஆவீர்கள்.” (திர்மிதீ)
வசதி வாய்ப்புகளை பெறுக்கிக்கொள்ளும் நாம் மனிதாபிமானத்தை படிப்படியாக இழந்துக்கொண்டிருக்கிறோமே! நம்முடன் கூடப்பிறந்த ஏழை சகோதர, சகோதரிகளுக்கு கூட உதவாமல் வாழ்ந்துவருகிறோமே! நன்மையை ஏவுவதற்கு பதிலாக தீமையை வளர்த்துக்கொண்டு வாழ்கிறோமே இது முறையா?
உங்கள் தவறுக்கு நீங்களே பொறுப்பு காரணம் நன்மை தீமைகளை இஸ்லாம் போதித்துவிட்டது! அதற்கு அல்லாஹ் சாட்சியாக இருக்கிறான்!
பிறகு நபி அவர்கள் மக்களை நோக்கி, மறுமை நாளில் உங்களிடம் என்னைப் பற்றி விசாரிக்கப்படும்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “”நீங்கள் (மார்க்க போதனைகள் அனைத்தையும் எங்களிடம்) தெரிவித்து விட்டீர்கள்; (உங்களது தூதுத்துவப் பொறுப்பை) நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்; (சமுதாயத்திற்கு) நன்மையை நாடினீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிப்போம்” என்றார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் அவர்கள், தமது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி சைகை செய்துவிட்டுப் பிறகு, அதை மக்களை நோக்கித் தாழ்த்தி “”இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி!” என்று முடித்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 2334)
மக்களே எச்சரிக்கையாக இருங்கள் நீங்கள் விசாரிக்கப் படுவீர்கள்!
”இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன்; மேலும், நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும், உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். (அங்கீகரித்துக் கொண்டேன்.)” (அல்குர்அன் 5:3) (ஸஹீஹ்ுல் புகாரி 4406, 4407, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா, தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு கஸீர், அத்துர்ருல் மன்ஸுர்)
மக்களே! எனக்குப்பின் எந்த ஒர் இறைத்தூதரும் இல்லை; உங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் இல்லை. (ளிலாலுஸ் ஜன்னா 1061)
மக்களே! சிந்தித்துப் புரிந்து கொள்ளுங்கள்; எனது பேச்சை கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள். நான் எனது பிரசாரத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களிடையே அல்லாஹ்வின் வேதத்தை(யும் அவனது தூதரின் வழிமுறையும்) விட்டுச் செல்கிறேன். நீங்கள் அவற்றைப் பின்பற்றினால், ஒருபோதும் வழிகெட மாட்டீர்கள்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074) (முஅத்தா இமாம் மாலிக்/மிஷ்காத்182. ஸஹீஹுத் தர்கீப் 40.)
உங்களது இறைவனை நீங்கள் சந்திக்கும் வரை (இப்படியே வாழுங்கள்!) நீங்கள் அனைவரும் தவறாமல் அல்லாஹ்வின் முன்னிலையில் ஆஜராகப் போகிறீர்கள்! அப்போது அல்லாஹ் உங்களது செயல்களைப் பற்றி விசாரிப்பான். நான் மார்க்கத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களில் எவராவது மற்றவருடைய பொருளின் மீது பொறுப்பேற்றிருந்தால், அதை அவர் உரிய முறையில் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்து விடட்டும்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹுல் புகாரி 67, 105, 1741, 1742)
இனியாவது திருந்த முற்படுவோம்! குறைந்தபட்சம் நம்மால் ஆன துவா (பிரார்த்தனை)யாவது செய்து ஏழைகளுக்கு உதவிடுவோம்! அல்லாஹ் நமக்கு நேர்வழிகாட்டுவானாக!
நன்றி: Islamic Paradise