பெட்ரோல், டீசலுக்கு மாற்று எரிபொருளைக் கண்டுபிடிக்க உலகம் முழுவதும் ஆய்வு நடந்து வரும் நிலையில் A320 ரக ஏர்-பஸ் விமானம் ஒன்றை விமான எரிபொருளுடன் 30% காட்டாமணக்கு எண்ணெய் கலந்து ஓட்டி புதிய சாதனையை மெக்சிகோ நடத்திக் காண்பித்துள்ளது. கடந்த சனிக்கிழமை (2-4-2011) இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
டீசலுடன் தாவர எண்ணெயைக் கலந்து ரயில் என்ஜின்களில் இயக்கலாம் என்பதை இந்தியா போன்ற நாடுகள் நிரூபித்துள்ளன. இதற்காக இந்தியாவில் ரயில்பாதை ஓரங்களில் காட்டாமணக்குச் செடிகள் நட்டு பராமரிக்கப்பட்டன. என்ன காரணத்தாலோ இந்த ஆய்வும் சோதனைகளும் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளன.
ஆனால் மெக்சிகோ நாட்டில் விமானத்தையே காட்டாமணக்கு எண்ணெய் கலந்த எரிபொருளில் ஓட்டிப்பார்த்த போது விமானம் வெற்றிகரமாக, எந்தவிதத் தொழில்நுட்பச் சிக்கலும் இன்றி பறந்தது.
மெக்சிகோ சிட்டி சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஏஞ்செல் அல்பினோ கார்சோ நகரம் வரை விமானத்தை இவ்வாறு இயக்கியுள்ளார்கள்.
விமான எரிபொருளைப் பயன்படுத்தினால் ஏற்படும் கரியுமிலவாயு வெளிப்பாடு, இந்தக் கலப்பு எண்ணெயைப் பயன்படுத்தியபோது 60% குறைந்திருப்பதும் குறித்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.
முதலில் பெட்ரோல், டீசலுக்கான தேவை 30% முதல் 60% வரை குறைந்தாலே சர்வதேசச் சந்தையில் அதன் விலை தாறுமாறாக உயர்வதைக் கட்டுப்படுத்தி விடலாம். அதே சமயம் சாப்பிடுவதற்குத் தகுதியற்ற காட்டு ஆமணக்கு எண்ணெய்க்கும் நல்ல பொருளாதாரப் பயன்பாடு கிடைக்கும். எளிதில் சாகுபடி செய்யக்கூடிய இதை இந்தியா போன்ற நாடுகளில் தரிசு நிலங்களிலும் சாலையோரங்களிலும் சாகுபடி செய்து எண்ணெய் வளத்தை உள்நாட்டில் பெருக்க முடியும் என்பது குறிக்கத்தக்கது.
காட்டாமணக்கு எண்ணெயிலிருந்து பயோ டீசல் உற்பத்தி
- காட்டாமணக்கு எண்ணெயிலிருந்து டீசலுக்கு நிகரான பயோ டீசல் என்னும் எரிதிரவத்தை உற்பத்தி செய்யலாம்.
- இதில் காட்டாமணக்கு எண்ணெயானது ஆல்கஹாலுடன் கலக்கப்பட்டு, வினையூக்கிகள் சேர்க்கப்பட்டு குறிப்பிட்ட கால அளவுக்கு குறிப்பிட்ட வெப்பநிலையில் வினை கலனில் நன்றாக கலக்கப்படுகிறது.
- அப்பொழுது நடைபெறும் வேதிவினைகள் மூலம் பயோடீசல் மற்றும் கிளிசரால் கலவை உருவாகிறது.
- இக்கலவையானது சுத்திகரிக்கப்பட்டு பயோ டீசல் பெறப்படுகிறது.
- இவ்வமைப்பில் வெப்பப்படுத்துதல், கலக்குதல், சுத்திகரித்தல் முதலான பல வினைகளுக்குத் தேவையான கலன்கள் உள்ளன.
- நாளொன்றுக்கு 250 லிட்டர் பயோடடீசல் தயாரிப்பிற்கு தேவைப்படும் விளைநிலத்தின் அளவு 25 எக்டர்.
- பெறப்படும் உப பொருளான 55 கிலோ கிளிசரால் பிற வேதிப்பொருள் உற்பத்தியில் மூலப்பொருளாகவும், சோப்பு தயாரிப்பிலும் பயன்படுகிறது.