சந்திரா என்பது நாசாவின் விண்வெளி டெலஸ்க்கோப்பு. ஆகாயத்தின் மிதந்தபடி பேரண்டத்தைப் படம் பிடிக்கிறது. லாரா லோபெஸ் என்பவர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் (சான்ட்டா க்ரூஸ்) பயிலும் பேரண்டவியல் மாணவி. இவரது வேலை நட்சத்திரங்கள் தமது வாழ்நாள் இறுதியில் எப்படி வெடித்து மடிகின்றன என்பதை வகைப்படுத்துவது.
நட்சத்திரங்கள் தம்மையே எரித்து பிரகாசிக்கின்றன. அவற்றின் எரிபொருள் தீர்ந்து போகும் தருவாயில் மிகப் பெரிய தெர்மோ நியூக்ளியார் வெடிப்புக்கு உள்ளாகி ஹைட்ரஜன் பாம் போல வெடித்துச் சிதறுகின்றன. அந்த சிதறலை சூப்பர் நோவா என்று அழைப்பது வழக்கம். சாதாரணமாக ஒரு வெண் புள்ளியாக இருந்த நட்சத்திரம் திடீரென்று மிகப் பிரகாசமாக பெரிய ஒளிப்பந்தாக காட்சிதரும்.
லாராவின் வேலை சூப்பர்நோவா வெடிப்புகளுக்குப் பிறகு அந்த விண்மீன் எப்படி விரிந்து சிதைகிறது என்பதை அறிவதன் மூலம் அதன் மரணகால நிகழ்வுகளைக் கண்டறிவது. சூப்பர் நோவாக்களில் இரண்டு வகைகள் இருப்பது தெரிகிறது. ஒன்று டைப் 1ஏ என்பது. இது வெள்ளைக் குள்ளன் என்று அழைக்கப்படும் வயோதிக நட்சத்திரம் வெடிக்கும்போது நிகழ்வது இது.
இன்னொரு வகை சூப்பர்நோவா அகால மரணமடையும் பூதாகரமான இளம் நட்சத்திரங்களின் மரணத்தின் போது நிகழ்வது. இந்த இரண்டுக்கும் உள்ள வேறுபாடு மரண வயதும் மரணமடையும் நட்சத்திரத்தின் சைசும்தான். இவ்விரண்டையும் அவற்றின் சூப்பர்நோவாக்களின் அமைப்பை வைத்து கண்டுபிடித்துவிட முடியும் என்பது லாராவின் கண்டுபிடிப்பு.
வெள்ளைக்குள்ள நட்சத்திரம் அதாவது டைப் 1ஏ வகை மரணங்களின்போது உருண்டையான சூப்பர்நோவா ஏற்படுகிறது (படம்- இடது). மாறாக அகால மரணமடையும் நட்சத்திரங்களின் வெடிப்பின்போது சீரற்ற சூப்பர்நோவா (படம்- வலது) ஏற்படுகிறது. மேலும் இதை ஆராய்ந்தால் நட்சத்திரங்களின் இரகசிய வாழ்க்கைகளைப் பற்றிய விஷயங்கள் பல வெளிப்படும் என்பது லாராவின் எதிர்பார்ப்பு.
முனைவர். க. மணி ( kmani52 at gmail dot com), பயிரியல்துறை. பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரி. கோயம்புத்தூர்
நன்றி: கீற்று