Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

April 2012
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,115 முறை படிக்கப்பட்டுள்ளது!

வலி – சிறுகதை

மழை சோவென்று பெய்து கொண்டிருந்தது..

ஏங்க, “கொஞ்சம் நில்லுங்க,இப்ப சாயா போட்டு தந்திடுவேன் “ என்று கிளம்பிய ஹைதர் சாஹிபை சத்தமிட்டு அழைத்தாள் பல்கீஸ் பெத்தா.

விறகில் தீ பிடிக்காததால் அவசரத்திற்கு காய்ந்த பீடி இலையை அடுப்பில் விறகு மேல் போட்டு, பக்கத்தில் இருந்த சிம்னி விளக்கில் தாளை பற்ற வைத்து நெருப்பு உண்டாக்கி ஊதி ஊதி அடுப்போடு போராடி ஒரு வழியாக வீடு முழுவதும் புகை முட்ட கையில் சாயா கிளாசோடு ஓடி வந்தாள், பல்கீஸ் பெத்தா.சாயா கூட குடிக்காமல் தூறிக் கொண்டிருந்த மழையை பொருட்படுத்தாது குடையை எடுத்துக் கொண்டு தன் சைக்கிள் பழுது பார்க்கும் கடையை நோக்கி விரைந்தார் ஹைதர் சாஹிபு.

இப்படி சம்பாதிக்கும் ஹைதருக்கு ஒரே ஆண் குழந்தை தான். மகன் தங்களைப்போல் கஷ்டப்படக் கூடாது, எப்படியும் படிக்க வைத்து நல்ல நிலமைக்கு கொண்டு வரவேண்டும் என்று வைராக்கியத்தோடு போராடி வெற்றியும் பெற்றனர் இருவரும்.

அவர்களின் நல்ல மனதிற்கு ஏற்றாற் போல் மகன் ஹமீதும் பெரிய படிப்பு படித்து உயர்ந்த பதவியில் இருந்து அளவிலா நிம்மதியை இருவருக்கும் தந்து விட்டிருந்தான்.

பல்கீஸ் பெத்தா,ஹைதர் சாஹிபு வசிப்பது பழைய ஓட்டு வீட்டில்,ஆனால் மகனோ மற்றொரு தெருவில் புதிய வீடு கட்டி குழந்தைகளோடு குடியேறி வசதியாக வசித்து வருகிறார்.

பல்கீஸ் பெத்தாவும், ஹைதர் சாஹிபும் வைராக்கியமாக தாங்கள் வசித்த வீட்டை விட்டு மகனோடு போகாமல் மகன் அப்ப அப்ப செலவுக்கு தரும் பணத்தை வாங்கிக் கொண்டு, பெத்தா பொழுது போக்காக பீடி சுற்றியும், ஹைதர் சாஹிபு தன் பழைய சைக்கிள் கடையையும் கவனித்து வந்த வருமானத்தில் தனியாகவே நிம்மதியாக வாழ்ந்து வந்தனர்.

பல்கீஸ் பெத்தாவிற்கு தடப் புகையிலையும், வெற்றிலையும் போடும் பழக்கம் நெடுநாட்களாக இருந்து வந்தது. ஹைதர் சாஹிபு எத்தனை எடுத்து சொல்லியும் கேட்காமல், புகையிலையை வாயில் ஒதுக்கி வைத்து கொண்டு எப்பவும் புளிச் புளிச் சென்று துப்பிக் கொண்டிருப்பாள். பக்கத்தில் துப்புகணிக்கம் வேறு அதில் துப்புவது போதாது என்று வீட்டின் முற்றத்தில், தெரு வாசலோரம் எங்கும் பெத்தாவின் வெற்றிலை துப்பானி கரை தான்.

இந்த வெற்றிலை புகையிலை போடும் பழக்கத்திற்கும் பெத்தா துப்பும் துப்பானிக்கும் அசிங்கப்பட்டே மருமகள் தனியாக போய்விட்டாள்.

கொஞ்ச நாளாய் ஆக்கிய சோறு அப்படியே பானையில் இருக்க,பெத்தா சாயா மட்டும் போட்டு குடிப்பதையும் சோற்றை தண்ணீர் ஊற்றி வாசலில் கிடாய்க்கு வைப்பதையும் ஹைதர் சாஹிபும் கவனித்து கொண்டு தான் வருகிறார்.

“ஏம்மா,பல்கீஸ் சோறு இறங்கலையா? ஏதாவது இட்லி தோசை வாங்கி வரட்டுமா “ என்றவரிடம், “ஒண்ணும் திடமானதை முழுங்க முடியலைங்க”, என்றாள்.

“சரி,வைத்தியரை கூட்டியாரேன்,கை மருந்து சொல்வாரு கேட்டு சொல்படி நட, எல்லாம் சரியாயிடும்”, என்றார்.

ஊரில் பேர் போன மஞ்சி வைத்தியரை அழைத்து வந்தார் ஹைதர் சாஹிபு.

வைத்தியரும் பெத்தாவின் வாயை திறக்க சொல்ல, பெத்தாவால் வாயைக் கூட முழுமையாக திறக்க முடியலை,கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு வலி உயிர் போவதாயும்,எரியுதுன்னு புலம்பிய பெத்தாவை அப்பொழுது தான் கவனித்தார் ஹைதர்,முகம் வெளிறி, தீ பட்ட மாதிரி திட்டு திட்டாய் இருப்பதையும் கண்டார்.

நல்ல கவனித்து பார்த்த வைத்தியர்,“இதை டவுணில் பெரிய டாக்டரிடம் தான் காட்டணும், நிலைமை கையை மீறி போயிட்ட மாதிரி தெரியுது சாஹிபு“ என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டார்.

ஹைதர் சாஹிபிற்கு கையும் ஓடலை,காலும் ஓடலை, மகன் ஹமீதிடம் போய் விஷயத்தை சொல்ல, மகனும் எப்படியும் உம்மாவை பெரிய டாக்டரிடம் காட்டினால் குணமாகிடும் என்று தன் வாப்பாவை சமாதானப் படுத்தினார்.

சரியான எரிச்சல் ஹமீதிற்கு, எத்தனை முறை உம்மாவிடம் இந்த புகையிலை போடும் பழக்கத்தை விடு, பீடி சுற்றாதே, பீடி இலையை போட்டு அடுப்பில் எரிக்காதேன்னு சொல்லியும் கேட்காமல் இப்படி வம்பை விலைக்கு வாங்கிட்டு முழிக்கிறாங்களேன்னு வருத்தம்.

டவுண் ஆஸ்பத்திரியில் பல்கீஸ் பெத்தாவை டாக்டர் சோதனை செய்து விட்டு, ஒரு டெஸ்ட் பாக்கி விடாமல் அனைத்தையும் எடுக்க சொல்ல, ஹைதர் சாஹிபிற்கு விஷயம் ஓரளவு புரிந்தது.

மகன், பெற்றோர் இருவரையும் தங்கள் வீட்டிற்கு வரும் படி அழைக்க, மறுத்து விட்டு இருவரும் தம் வீட்டிற்கே வந்து விட்டனர்.

ஆஸ்பத்திரிக்கு காலையில் போய் மாலை திரும்பியதால் அயர்ச்சியாக இருந்தும், இரவு தூக்கம் வராமல் இருவரும் விழித்தே இருந்தனர். மனைவி ஒன்றும் சாப்பிடாமல் இருக்க ஹைதர் சாஹிபும் மட்டும், கடையில் சாயா குடித்து விட்டு வந்து படுத்து கொண்டார். முக்கி முனகி தூங்காமல் இருந்த மனைவியின் வேதனையை அவரால் தாங்க முடியவில்லை.

காலையில் எழுந்து சுபூஹு தொழுது விட்டு வந்த ஹைதர் சாஹிபு சற்றே அசந்த மனைவியின் அருகே வந்தமர்ந்தார்.கன்னத்தில் இருந்து பிசு பிசுப்பான நீர் வடிந்து கொண்டிருந்தது. இரண்டு நாளில் இத்தனை சுகவீனமா? இது என்ன முசீபத்து யா அல்லாஹ்! என்று அப்படியே மனம் பதைத்துப் போனார்,ஹைதர். அதற்குள் உதடு,நாக்கு,வாயின் உட்பகுதி எல்லாம் புண் பரவி விட்டிருந்தது.

காலையில் வந்த மகனின் முகமும் வாட்டமாக இருக்க, ரிசல்ட் வந்தவுடன் தான் ட்ரீட்மென்ட் ஆரம்பிக்க முடியும் வாப்பா, எனக்கும் ரொம்ப கவலையாயிருக்கு, ஏதோ புண்ணு பொடின்னு டாக்டர் சொல்லி, மருந்து தந்து சரியாயிடக்கூடாதான்னு இருக்கு.

ஆனால் ஆளாளுக்கு சொல்றதைப் பார்த்தால் உம்மாவிற்கு வாயில் புற்றோன்னு தோணுது, இனி என்ன செய்ய முடியும்னு பார்க்கனும் என்றார் ஹமீது.

ஹைதர் சாஹிபும், ஹமீதும் பயந்த மாதிரியே ரிசல்ட்டும் வந்தது.Mouth Cancer என்று டாக்டர் இலகுவாக சொல்ல,விஷயம் அக்கம் பக்கம் கசிந்து ஆட்கள் பார்க்க வரவும் போகவுமாக இருந்தனர்.

புற்று நோய் யாருக்கும் எந்த வயதிலும் வரலாம் உஷாராய் இருப்பது அவசியம், இந்த இளவு பிடிச்ச புற்று நோய் தன் உம்மாவுக்கு வரணுமா? தானுண்டு தன் வேலையுண்டுன்னு இருந்தவர், உருகி ஓடாய் தேய்வதை காணச் சகிக்காமல்,கவனிக்காது விட்டு விட்டேனே, என்று மனம் வருந்தினார் ஹமீது.

ஊணும் உறக்கமும் தொலைந்து பல்கீஸ் பெத்தா பார்க்கவே பரிதாபமாக ஆகிவிட்டதை கண்டு ஹைதர் சாஹிபு கடைகண்ணிக்கு கூட போகாமல் வீட்டில் மனைவி பக்கமே இருந்து வந்தார். பாங்கு சத்தம் கேட்டால் தெருவில் இருக்கும் பள்ளிக்கு மட்டும் தொழப் போய் வந்தார்.

டவுண் டாக்டரும் இனி ஒன்றும் செய்ய முடியாது, புற்று நோய் முற்றி விட்டது என்று பல்கீஸ் பெத்தாவிற்கு நாள் குறித்து விட்டார்.வேதனையுடன் மனைவி பல்கீஸ் தன்னோடு இருக்கப் போகும் நாட்களை எண்ணியபடி நேரத்தை கழித்தார்,ஹைதர் சாஹிபு.

சந்தோஷமாக வாழ்ந்த அந்த முதிய தம்பதியரின் வாழ்வில் புகையிலை என்ற கெட்ட பழக்கத்தால் பிரிவு என்ற கொடிய முடிவை அல்லாஹ் நாடிவிட்டானே!..

புற்று நோய்க்கு தீர்வு மரணம் தானா? இதனை ஆரம்பத்திலேயே கவனிக்காது விட்டது தன் தவறோ என்ற வேதனை அவரை ஆட்டி படைத்தது. நம்ம ஊரிலாவது, நாற்பது வயதை தாண்டியவர்கள் முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், மகனிடம் சொல்லி புற்றுநோய் விழிப்புணர்வைப் பற்றிய துண்டு பிரசுரம் ஒன்றை ஏற்பாடு செய்து, ஊர் முழுவதும் எல்லா ஜமாத்திற்கும் விநியோகிக்க வேண்டும் என்று உறுதி கொண்டார்.

மனதின் வலி சற்றே குறைந்தது ஹைதர் சாஹிபிற்கு.

குறிப்பு :-

துப்பானி – எச்சில

துப்புகணிக்கம் – எச்சில் துப்பும் சொம்பு

சுபூஹூ – அதிகாலை தொழுகை

முசீபத் – கஷ்டம், இடையூறு

ஜமாத் – கூட்டமைப்பு.

முக்கியக் குறிப்பு:

புற்று நோயை ஒழிப்போம்! புதிய உலகைப் படைப்போம்!  இந்தக் காலத்தில் புற்று நோய் யாருக்கு,எப்படி,எதுக்கு வருது என்று கணிக்க முடியவில்லை.காலம் கடந்த பின்பு கவலைப்ப்ட்டு புண்ணியமில்லை.

உணவே மருந்துன்னு சொல்வாங்க,சத்தான,தரமான ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடனும், உடலில் ஏதாவது சிறுமாற்றம், கட்டி, வீக்கம், வலி, உடல் நலக் குறைவு என்று வந்தால் உடனே நல்ல அனுபவமுள்ள மருத்துவரின் ஆலோசனை, மருத்துவத்தை கடைப்பிடிப்பது அவசியம் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.

நன்றி:– ஆசியா உமர்