- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

மதமறுத்த, மதம் பிடித்தத் தீவிரவாதிகள்!

ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு முன்னர் புதிதாக வார்க்கப் பட்டு, ஊடக அகராதிகளில் புகுத்தப் பட்டதும் இன்றைய காலகட்டத்தில் பரவலாகப் பேசப்பட்டு, வலிந்துத் திணிக்கப்பட்ட சொல்லாடல், “இஸ்லாமியத் தீவிரவாதம்” என்பதாகும்.

கடந்த செப்டம்பர் 11இல் அமெரிக்காவின் வாஷிங்டனின் பெண்டகன் மற்றும் நியூயார்க்கின் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு இது, முதன்மைத் தலைப்பு வகிக்கும் சர்வதேச அளவிலான விவாதப் பொருளாகவே மாறிவிட்டது.

இந்தியாவின் அரசியலை உலகம் மறுவாசிப்புச் செய்யத் தொடங்கக் காரணமாய் அமைந்த அண்மைத் தலைப்புச் செய்தியான “ஹிந்துத்துவத் தீவிரவாதம்” என்ற விஷயம் பற்றியெரியத் துவங்கிய வேளையில் ஒரே இரவில் மும்பை பயங்கரவாதத்தினால் இந்தியாவில் ஹிந்துத்துத் தீவிரவாதம் மறக்கடிக்கப்பட்டு மீண்டும் இஸ்லாமியத் தீவிரவாதம் புதிப்பிக்கப் பட்டது.

இஸ்லாத்தினை தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் தீவிரவாதத்தைக் கடுமையாக எதிர்க்கின்றனர். மும்பையில் சமீபத்தில் நடந்த மிருக வெறியாட்டத்தில் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, வருத்தத்தையும் பகிர்ந்து கொள்கின்றனர். இதில் இறந்துபோனவர்களில் ஒரு பெரும் பங்கினர் முஸ்லிம்கள் என்கிறது புள்ளிவிபரம் ஒன்று.

வன்முறை, பயங்கரவாதம் என்பதற்கு இஸ்லாத்தில் துளியும் இடமில்லை என்பதையும் வன்முறைக்கு வித்திடும் காரணிகள் எள்ளளவும் இஸ்லாத்தில் இல்லை என்பதையும் இந்த ஆக்கத்தில் பார்ப்போம்.

அமெரிக்காவின் 9/11 உட்பட ஆங்காங்கே பொதுமக்களைக் குறிவைத்து நடக்கும் இத்தகைய பயங்கரவாதத்தினை மேற்கொள்ளும் குற்றவாளிகளின் பின்னணியோ, அவர்கள் செய்த பாதகச் செயலுக்கான ஆதாரங்களோ முழுமையாக நிறுவப்படவில்லை என்ற வருத்தத்திற்குரிய யதார்த்தத்தை முதலிலேயே சொல்லியாக வேண்டும். குற்றமிழைத்ததாக ஐயுறப் படுவோர் (Prime suspect) மீது குற்றம் நிரூபணமாவதற்கு முன்னரே அரசும் ஊடகங்களும் கைகோர்க்கும் கோயபல்ஸ் தனத்தினால் குற்றவாளிகளாக்கப்படும் கொடுமையும் நமக்குப் பழகிவிட்ட ஒன்றாகும்.

இத்தகைய பயங்கரவாதிகளுக்குப் பல அமைப்புகளுடனான தொடர்பு இருப்பதாகச் சொல்லப் படுகிறது. முதலாளித்துவத்தை எதிர்க்கும் கம்யூனிஸவாதிகளோ, குடியரசின் மீது கோபமுள்ள சர்வாதிகாரக் கூட்டமோ அரசியல் இலாபங்களுக்காக உள்நாட்டுக் கலவரத்தைத் தூண்டும் மட்ட ரக அரசியல்வாதிகளோகூட தீவிரவாதிகளின் நிழல் முதலாளிகளாக இருக்கலாம்.

ஆனால் துரதிருஷ்டவசமாக, தீவிரவாதச் செயல்களைச் செய்பவர்கள் முஸ்லிம் பெயரில் உலாவருகின்றனர். இதில் மும்பைத் தீவிரவாதச் செயல்களைச் செய்தவர்கள் யார் என்பதோ ஏவி விட்டவர்களின் பின்னணி என்ன என்பதோ, இக்கொடிய செயல்களைச் செய்ய நேர்ந்த கட்டாயம் என்ன என்பதோ இன்னும் புரியாத புதிராகத்தான் உள்ளது.

எது எப்படி என்றாலும், இதுபோன்ற கொடிய காரியத்தைச் செய்பவர்கள் முஸ்லிம்கள் சூடிக் கொள்ளும் பெயரில் இருந்தாலும், இவர்கள் செய்த இப்பயங்கரவாதத்திற்கு “இஸ்லாமியத் தீவிரவாதம்” என்று பெயர் சூட்ட இயலாது. தர்க்க ரீதியில் இதை அணுகலாம்.

ஒரு யூதன் எப்படி இத்தகைய பயங்கரவாதச் செயலைச் செய்யும்போது, “யூதப் பயங்கரவாதம்” என்று அழைக்க இயலாதோ, கிறித்துவன் செய்கையில் “கிறித்துவப் பயங்கரவாதம்” என்று அழைக்க இயலாதோ அவ்வாறே முஸ்லிம் பெயரில் உள்ள ஒருவன் செய்யும் பயங்கரவாதத்தை “இஸ்லாமிய பயங்கரவாதம்” என அழைக்க இயலாது. இது அனைவரும் ஒருமனதாக ஒப்புக் கொள்ளும் கூற்றே!

காரணம், மதத்தின் பெயரால் அப்பாவி மக்கள் கொல்லப் படுவதை எந்த மதமும் அனுமதிப்பதில்லை. கொல்லப்படுவது முஸ்லிம்களோ, கிறித்துவர்களோ, இந்துக்களோ – மண்ணில் விழும் இரத்தம் ஒரே நிறம்தான்; பறிபோகும் உயிர் எவருடையதாக இருப்பினும் விலை மதிப்பற்றதுதான்.

“தனி மனிதன் ஒருவனைக் கொலை செய்வது நரக நெருப்பிற்கு இட்டுச் செல்லும் பெரும் பாவங்களில் ஒன்றாகும்!” என்பது இஸ்லாத்தின் அடிப்படையாகும். இந்த ஒரு கூற்றிலேயே அநியாயக் கொலையை இஸ்லாம் வன்மையாக எதிர்ப்பதை எவரும் உணர இயலும். தமது மதத்தின் மீது பற்றுள்ள எவனும் இத்தகைய மாபாதக செயலைச் செய்யத் துணிய மாட்டான்.

இதை இன்னொரு விதத்தில் சொல்ல வேண்டுமெனில், அமைதியைப் போதிக்கும் ஒரு சமயத்தைப் பற்றி நேர்மாறான அல்லது தவறான எண்ணத்தினைத் தோற்றுவிக்க வேண்டும் என்று எண்ணுபவர்களே தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவதோடு அவர்கள் தாங்கி இருக்கும் பெயர்களால் இஸ்லாத்துக்குத் தீராக் களங்கத்தை ஏற்படுத்துகின்றனர்.

இறைவன் உண்டு என்ற ஆத்திக நம்பிக்கையினைப் பின்பற்றும் அத்தனை மதங்களும் மனித குலத்தைத் தழைக்கச் செய்யும் அன்பு, கருணை மற்றும் அமைதியைப் போதிக்கின்றன. ஆனால் பயங்கரவாதிகளோ இதற்கு நேர்மாறாக வன்முறை, கொடூரம், மூர்க்கம் ஆகிய மனித குலம் வெறுத்து ஒதுக்கத் தக்க செயல்களை மதத்தின் பெயரால் செய்யும்போது இவையிரண்டும் எப்படி ஒட்டும்?

ஆக, இத்தகைய வன்முறையில் ஈடுபவர்களுக்கு மதங்களின் மீது முறையான நம்பிக்கை இல்லை, அல்லது ஏற்றுக்கொண்ட மதத்தின் கொள்கைகளை மிகச் சரியாக விளங்கிக்கொள்ளாமல் தாம் செய்யும் பயங்கரவாததிற்கு மதத்தின் பெயரைப் பயன் படுத்திக் கொள்கின்றனர் என்பதும் புலனாகிறது.

தீவிரவாதச் செயல்களைச் செய்பவர்களின் பின்னணியில் யார்? என்பது முக்கியமான கேள்வியாகும்.

மேற்காணும் கேள்விக்கு, ஃபாஸிஸக் கொள்கையை உடையோர், இன வேறுபாடுகளைத் தூண்டுபவர்கள், அரசியல் ஆதாயம் பெறுவோர் யாவர்? தீவிரவாதச் செயல்களால் மதரீதியான குழப்பங்கள் உருவானால் அதிலிருந்து பயனடைந்து கொள்பவர்கள் யாவர்? என்று சிந்தித்துப் பார்த்தால் எளிதாக விடை கிடைக்கும்.

இங்கே பயங்கரவாதத்தினைச் செய்பவர்களின் பெயர்களோ மத அடையாளங்களோ முக்கியமில்லை என்பதை நாம் உணர வேண்டும். தனது கண்ணுக்கு முன் நிற்கும் அப்பாவிகளைக் கண்மூடித்தனமாகச் சுட்டுத் தள்ளுபவன், வெடிகுண்டுகளை வைப்பவன், மனித வெடிகுண்டாக இருப்பவன், மனிதத்தன்மையற்ற ஒரு வெறி பிடித்த மிருகம் என்பதை மட்டும் நாம் நினைவில் நிறுத்த வேண்டும்.

இஸ்லாமியத் தீவிரவாதம், ஹிந்துத் தீவிரவாதம் போன்ற பதங்களெல்லாம் பிழையானவை என்பது ஓரளவிற்குப் பிடிபடும் இவ்வேளையில்,

பயங்கரவாதச் செயல்களைத் தடுத்து நிறுத்தி, இஸ்லாம் போதிக்கும் அமைதியையும் நீதியையும் இவ்வுலகிற்கு புத்துணர்ச்சியுடன் மீண்டும் தழைக்கச் செய்யும் பாரிய பொறுப்பு உலக முஸ்லிம்களின் எதிரில் இப்போது உள்ளது.

நன்றி: சத்தியமார்க்கம்