Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,433 முறை படிக்கப்பட்டுள்ளது!

நரக சிகிச்சையை அறுவை சிகிச்சையாக மாற்றியவர்

அறுவை சிகிச்சை என்றாலே ஒரு காலத்தில் நோயாளி விழித்திருக்கும் போதே, மயக்க மருந்து இல்லாத நிலையில் அறுவைச் சிகிச்சை மருத்துவர் உடலை கிழித்து எலும்புகளில் இரம்பத்தைப் பாய்ச்சி அறுப்பார். இதை நினைத்துப் பார்க்கும் போதே நமக்கு பெருந்திகில் உண்டாகிறது அல்லவா?.அந்த நோயாளிக்கு எப்படி இருந்திருக்கும்?

நரகவேதனையுடம் கூடிய கடினமான மருத்துவ சிகிச்சை முறையை மாற்றியமைத்து, நோவை உணரா வண்ணம் உணர்ச்சி மயக்கமூட்டுகிற முறையை (Anaesthesia) பயன்படுத்துவதை புகுத்துவதற்கு மூலகாரணமாக விளங்கிய “வில்லியம் டி.ஜி. மோர்ட்டோன்” என்பவரை பெரும்பாலானவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அமெரிகாவில் மசாசூசெட்ஸ் மாநிலத்தில் சார்ல்ட்டன் நகரில் 1819 ஆம் ஆண்டில் மோர்ட்டோன் பிறந்தார். இளமைப் பருவத்தில் பால்டிமோர் பல்மருத்துவக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார். 1842 ஆம் ஆண்டில் இவர் பல மருத்துவத்தில் தொழில் நடத்தினார். மோர்ட்டோன் தமது மருத்துவத் தொழிலில், செயற்கைப் பற்களைப் பொருத்துவதில் தனித்திறமை பெற்றவராக விளங்கினார்.

செயற்கைப் பற்களைத் தக்க முறையில் பொருத்துவதற்கு முதலில் பழைய பல்லின் வேரை அப்புறப்படுத்த வேண்டியிருந்தது. நோவு நீக்கும் மயக்க மருந்து கண்டுபிடிப்பதற்கு முன்னர், பல்லின் வேர்களை பிடுங்குவது மிகுந்த வேதனையை தந்தது. இதற்கு எதேனுமொருவகை மயக்க மருந்துக் கண்டு பிடிப்பது இன்றியாமையாததாயிற்று.

மயக்கமுற செய்வதற்கு “வேல்ஸ்” என்ற இவரின் இணை மருத்துவ அறிஞரால் கண்டுபிடிக்கப்பட்டு அன்றைய காலத்தில் பயன்பாட்டில் இருந்த (Laughing Gas) “சிரிப்பூட்டும் வாயு” என அழைக்கப்பட்ட நைட்ரஸ் ஆக்சைடு போதிய அளவுக்குப் பயனுடையதாக இராது என்பதை மோர்ட்டோன் உணர்ந்தார். அதைவிட ஆற்றல் வாய்ந்த மருந்தை கண்டுபிடிப்பதில் தீவிரமாக ஈடுபட்டார்.

அன்றைய காலப்பகுதியில் சார்லஸ் டி. ஜேக்சன் என்பவர் மருத்துவ வல்லுநராகவும், விஞ்ஞானியாகவும் விளங்கியவர். அவர் மோர்ட்டோனிடம் “ஈதரை” (Ether) மயக்க மருந்தாகப் பயன்படுத்திப் பார்க்கும்படி ஆலோசனை கூறிய சார்லஸ். அவர் நோயாளிகளுக்கு ஈதரை எவ்வாறு உட்செலுத்த வேண்டும் என்பது குறித்துப் பயனுள்ள ஆலோசனைகளை வழங்கினார்.

ஈதருக்கு உணர்ச்சி மயக்கமூட்டுகிற பண்பு உண்டு என்பது 300ஆண்டுகளுக்கு முன்னரே பாராசெல்சஸ் (Paracelsus) என்ற புகழ்பெற்ற சுவிஸ் மருத்துவரால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. 19 ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இது பற்றிய ஒரிரு அறிக்கைகள் வெளியாகியிருந்தன.

ஆனால் ஈதர் பற்றி எழுதிய ஜேக்சனோ வேறு எவருமோ இந்த வேதிப் பொருளை அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தவில்லை. ஈதர் ஒரு வெற்றிகரமான மயக்க மருந்தாக அமையாலமென மோர்ட்டோனும் கருதினார். அதைக் கொண்டு அவர் பரிசோதனைகள் நடத்தலானார். முதலில் தமது செல்லப் பிராணி நாய் உட்பட விலங்குகளிடம் அதைப் பயன்படுத்தினார். பின்னர் தம்மிடமே சோதனை செய்து பார்த்தார். இறுதியில் 1846 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் நாள் ஒரு நோயாளிக்கு ஈதரைப் பயன்படுத்திச் சோதனை செய்வதற்கான ஓர் அரிய வாய்ப்பு கிடைத்தது.

ஈபன் ஃபிராஸ்ட் என்ற நபர், கடுமையான பல வலியால் துடித்துக் கொண்டு மோர்ட்டோனிடம் வந்தார். தொல்லை கொடுத்த பல்லைப் பிடுங்கி தம் வலியை போக்கும் எந்தச் சிகிச்சைக்கும் தாம் தயாரக இருப்பதாகக் கூறினார். அவருக்கு மோர்ட்டோன் ஈதரை மயக்க மருந்தாக கொடுத்து அவருடைய பல்லைப் பிடுங்கினார். பிராஸ்ட் மயக்கம் தெளிந்து உணர்வு பெற்றபோது, பல்லைப் பிடுங்குகையில் தமக்கு வலியே தெரியவில்லை என்று கூறினார். இந்த முடிவுக்குத்தான் மோர்ட்டோன் காத்திருந்தார். வெற்றியும் புகழும் பொருளும் அவர் முன் காட்சியளித்தன.

இந்த அறுவை கிகிச்சையைப் பலர் முன்னிலையில் மோர்ட்டோன் செய்து காட்டினார். அடுத்த நாளன்றே செய்தியிதழ்களில் அந்த செய்தி வெளிவந்தது. ஆயினும் இது பரவலாகக் கவனத்தைக் கவரவில்லை. இந்த முறையை இன்னும் வியப்பு தரும் வகையில் செயல் விளக்கம் செய்து காட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. வலி நீக்கும் தமது முறையை ஒரு மருத்துவர் குழுவின் முன்னிலையில் நடைமுறையில் செயல் விளக்கம் செய்து காட்டுவதற்கு ஒரு வாய்ப்பளிக்கும்படி பாஸ்டனிலுள்ள மாசாசூசெட்ஸ் அரசு மருத்துவ மனையில் மூத்த அறுவைச் சிகிச்சை வல்லுநராகிய டாக்டர் “ஜான் லாரனிடம்” மோர்ட்டோன் வேண்டினார். இதற்கு டாக்டர் லாரன் இசைந்தார்.

அந்த மருத்துவமனையிலேயே செயல் விளக்கத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு 1846 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் நாளன்று, கணிசமான எண்ணிக்கையில் குழுமிருந்த மருத்துவர்கள், மருத்துவ மணவர்கள் முன்னிலையில் ‘கில்பர்ட் அப்பாட்’ என்ற அறுவை சிகிச்சை நோயாளிக்கு மோர்ட்டோன் ஈதரை மயக்க மருந்தாக கொடுத்தார். பின்னர் அப்பாட்டின் கழுத்திலிருந்து ஒரு கழலையை டாக்டர் லாரன் அறுவை சிகிச்சை செய்து அகற்றினார். மோர்ட்டோனின் செயல் விளக்கம் மகத்தான வெற்றியாக அமைந்தது. இதன் பின்பு, அடுத்த சில ஆண்டுகலிலேயே அறுவை சிகிச்சைகளில் மயக்க மருந்தினைப் பயன்படுத்தும் முறை மிகப் பரவலாகப் கையாளப்படலாயிற்று.

October 16th 1846
First successful public demonstration of anaesthesia
Massachusetts General Hospital, Boston
Anaesthetist: William Thomas Green Morton
Agent: Diethyl Ether
Patient: Gilbert Abbott
Operation: Excision of tumour under jaw
Surgeon: John Collins Warren
Comment: “Gentlemen, this is no humbug”

அன்றைய காலப்பாகுதியில் மயக்க மருந்தாக பயன்படுத்தப்பட்ட நைட்ரஸ் ஆக்சைடு (Laughing gas. சிரிப்பூட்டும் வாயு) அறுவை சிகிச்சையில் புரட்சிகரமான மாறுதலை ஏற்படுத்தி விடவில்லை. ஏற்படுத்தியிருக்கவும் முடியாது. நைட்ரஸ் ஆக்சைடில் சில விரும்பதக்க குணயியல்புகள் இருந்தாலும் பெரிய அறுவை சிகிச்சையில் மயக்க மருந்தாகத் தனியாகப் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு அது ஆற்றல் வாய்ந்தாக இருக்கவில்லை. (இன்று அது வேறு சில நேர்த்தியான மருத்துகளோடு இணைவாகவும், சில பல்மருத்துவப் பணிகளிலும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது).

மாறாக, ஈதர் அற்புதச் செய்வினைவுடைய ஓர் ஆற்றல் வாய்ந்த வேதிப் பொருளாகும். அதைப் பயன்படுத்தியதால், அறுவை சிகிச்சையில் புரட்சிகரமான திருப்பம் உண்டாயிற்று. இன்று பெரும்பாலான நேர்வுகளில் ஈதரை விட அதிஅக் ஏற்புடைய மருந்து அல்லது கூட்டு மருந்துகள் இருக்கின்றன. ஆயினும் ஈதர் பயன்பாட்டுக்கு வந்த பின்பு ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலத்திற்கு ஈதர் தான் பெரும்பாலும் மயக்க மருந்தாக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.

ஈதர் எளிதில் தீப்பற்றக் கூடியது. இதைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பின்விளைவாகக் குமட்டல் உணர்வு இருந்து கொண்டே இருக்கும். இந்த பாதகங்கள் இருந்த போதிலும், இறுகாரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மயக்க மருந்துகளில் இது ஒன்று தான் மிகவும் ஆற்றல் வாய்ந்த தனியொரு மயக்க மருந்து என்பதை மறுப்பதற்கில்லை. இதை எடுத்துச் செல்வதும் உட்செலுத்துவதும் மிக எளிது. அனைத்திற்கும் மேலாக, இது மிகவும் பாதுகாப்பானதாகவும் அதே சமயம் ஆற்றல் வாய்ந்தாகவும் அமைந்துள்ளது.

1846 ஆன் ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் நாள் காலையில் மயக்க மருந்தின் செயல் விளக்கம் செய்து காட்டியது மனித வரலாற்றின் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

பின்குறிப்பு:
இந்த கண்டுபிடுப்புத் தம்மை செல்வந்தராக்கும் என்ற மோர்ட்டோனின் நம்பிக்கை நிரைவேறவில்லை. ஈதரை மயக்க மருந்தாகப் பயனபடுத்திய பெரும்பாலான மருத்துவர்களும், மருத்துவமனைகளும் மோர்ட்டோனுக்கு உரிமைத் தொகை (Royalty) கொடுப்பது குறித்து கவலைப்படவேயில்லை. இதற்கென அவர் தொடுத்த வழக்குகளுக்காகவும், முந்துரிமைக்கான போராட்டத்திற்காகவும் அவர் செய்த செலவுகள் அவரது கண்டுபிடிப்புக்காக அவருக்கு கிடைத்த பணத் தொகையை விட அதிகமாக இருந்தன. மனச்சோர்விலும் வறுமையிலும் வாடிய மோர்ட்டோன் 1888 ஆம் ஆண்டில் நியூயார்க் நகரில் காலமானார். இறக்கும் போது அவருக்கு 49 வயதுகூட ஆகியிருக்கவில்லை.

நன்றி: வலையுகம்