ஐ.ஐ.டி.,க்களில் சேரும் தமிழக மாணவர்கள் எண்ணிக்கை குறைவதை தடுக்க, மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு, நுழைவுத் தேர்வுக்கான பயிற்சியளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.
ஜே.இ.இ., எழுத வேண்டும்: சென்னை, டில்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில், மத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி.,க்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சேர, மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையால் நடத்தப்படும், கூட்டு நுழைவு தேர்வுகளை (ஜே.இ.இ.,) எழுத வேண்டும்.கடந்த, 2012ல், இத்தேர்வு முறை, இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு, ஜே.இ.இ., ‘மெயின்’ மற்றும் ஜே.இ.இ., ‘அட்வான்ஸ்டு’ என, மாற்றப்பட்டது.இத்தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே, ஐ.ஐ.டி.,க்களில் சேர முடியும்.கடந்தாண்டு நடந்த, ‘அட்வான்ஸ்டு’ தேர்வில், தமிழக மாணவர்கள், 1,528 பேர் பங்கேற்றதில், 450 பேர் வெற்றி பெற்று, ஐ.ஐ.டி.,க்களில் சேர்ந்து உள்ளனர். இதில்,
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் படித்தவர்கள், 419 பேர்; அரசு பாடத்திட்ட பள்ளிகளில் படித்தவர்கள், 31 பேர் .ஐ.ஐ.டி.,க்களில் சேர்வதில் ஆந்திர மாணவர்கள் முதல் இடத்தை பிடிக்கின்றனர். இங்கிருந்து தேர்வெழுதியவர்களில், 3,698 பேர், ஐ.ஐ.டி.,க்களில் சேர்ந்துள்ளனர். அடுத்தபடியாக, ராஜஸ்தான் – 3,631; உத்தர பிரதேசம் – 2,520; டில்லி – 1,509; மத்திய பிரதேசம் – 1,489; பீகார், 1,158; மேற்கு வங்கத்தில் இருந்து, 637 பேர் தேர்வாகியுள்ளனர்.
சென்னையில், ஐ.ஐ.டி., இருந்தும், இங்குள்ளவர்கள் சிலருக்கு மட்டுமே இடம் கிடைத்துள்ளது. பிற மாநில மாணவர்களே இங்கு அதிகளவில் பயில்கின்றனர்.குறிப்பாக,சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு கிடைக்கும் அளவிற்கு, தமிழக அரசு பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. இதற்கு முறையான பயிற்சி இல்லாததே காரணம்.பொறியியல், மருத்துவ படிப்பு களுக்கான பொது நுழைவுத் தேர்வு தவிர்க்கப்பட்ட நிலையில், ஐ.ஐ.டி.,க்களை நோக்கி பயணிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது என்கின்றனர் கல்வியாளர்கள்.
Advertisement
இதுகுறித்து கல்வியாளர் ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில், ஜே.இ.இ., தேர்வுகளுக்கு, மாணவர்களை தயார் செய்யும் அளவிற்கான சிறந்த நிறுவனங்கள் போதுமானதாக இல்லை; அந்த நிறுவனங்கள் தான், மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களை தயார் செய்யும். சென்னையில் உள்ள சில சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் மட்டுமே, ஜே.இ.இ., தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. இவர்களுக்கு பெரும்பாலும் இடம் கிடைத்து விடுகிறது.மேலும், தமிழகத்தில் சிறந்த பொறியியல் கல்லூரிகள் பல இருப்பதாலும், அவற்றில் இடம் கிடைப்பதாலும், மாநிலபாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள், ஐ.ஐ.டி.,க்களில் சேருவதற்கான முயற்சிகளை எடுப்பதில்லை.
பயிற்சி தேவை:
முறையாக பயிற்சி பெற்றால், அதிகமான தமிழக மாணவர்களுக்கு இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. சி.பி.எஸ்.இ., பள்ளிகள் என்றில்லாமல், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மாநில அரசு பாடத்திட்டத்தை பயன்படுத்தும் தனியார் பள்ளிகளிலும், இதற்கான பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இந்தாண்டிற்கான, ‘அட்வான்ஸ்டு’ தேர்வு ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதிலாவது, தமிழக மாணவர்கள் அதிகளவில் சேர்வதற்கான முயற்சி எடுக்கப்பட வேண்டும்.
நன்றி: தினமலர்