Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

March 2015
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,956 முறை படிக்கப்பட்டுள்ளது!

சிறுகதை நெருப்பு ஓவியம்

சிறுகதை

நெருப்பு ஓவியம்

ஆர். மாணிக்கவேல், சவுதி அரேபியா

சரோஜா டீச்சரை அந்த குடிகாரன் கன்னத்தில் அறைந்தான். ஊரே வேடிக்கைப் பார்த்தது. அங்கு என்ன நடக்கிறது என்று யாருக்கும் எதுவும் புரியவில்லை. எனவே வேடிக்கையாகி விட்டது அந்த கொடூரம்.

அவனை எனக்குத் தெரியும். தினம் ஏதாவது ஒரு சாக்கடை ஓரத்தில் குடித்துவிட்டு கிடப்பான். முகம் சுளிக்கப் பார்த்துப் பார்த்து தெரிந்தவன்போல ஆகிப்போன தெரியாதவன். குடியாலேயே அவராக இருக்க முடியாமல் அவனாகிப் போனவன்.

சாக்கடையில் மேயும் பன்னிகள் உடம்பை குலுக்கிக்கொண்டு ஓடையில் தெறிக்கும் சாக்கடை அவனின் சட்டை வேட்டியை எல்லாம் அசிங்கமாக்குவது தெரியாமல் கிடப்பான். வாந்தி எடுத்து அதிலேயே மூஞ்சைப் போட்டு முணுகிக்கொண்டு இருப்பான். அவன்தான் டீச்சரின் புருஷன் என்று இதோ இதுவரைத் தெரியாது. தெரிந்து இருந்தால் டீச்சர் என்மனதில் இவ்வளவு அடர்த்தியாக ஆழமாக உயர்ந்து படர்ந்திருப்பார்களா?

அழகாகப் பின்னி கொண்டை போட்டு இருந்த டீச்சரின் முடியைப் பிடித்து இழுத்தான். கொண்டையைச் சுற்றி வைத்திருந்த அரும்புச்சரம் பிய்ந்து, பொரிந்து உதிரும் அரிசிப் பொரிபோல மண்ணில் உதிர்ந்தது. தலை நடுங்க முகம் கோண கண்கள் சிவக்க கழுத்தைப் பக்கவாட்டில் வளைத்துக் குனிந்தார்கள் டீச்சர். அவன் ‘உவ்வே’ என்று வாந்தி எடுத்தான். தட தடவென்று கழிந்த மலம்போல டீச்சரின் முகம் முழுவதையும் நனைத்த வாந்தி மார்பில் வழிந்து புடவை முழுதும் ஒழுகியது.

வாந்தி நாத்தத்தோடு சேர்ந்து வீசிய சாராய வாடைக்கு கூடி இருந்த அத்தனைபேரும் மூக்கைப் பொத்திக் கொண்டார்கள். அவனிடமிருந்து தப்பித்துக் கொள்ள திமிறிய டீச்சர் கால்கள் தடுமாற புடவைத்தடுக்கி அருகில் ஓடிக்கொண்டிருந்த திறந்த சாக்கடையில் விழுந்து புத்தம் புதிய பட்டுப்புடவை இடுப்புக்கு கீழே கறுப்பாக மாறிவிட கை ஊன்றி எழுந்தார்கள். கையெல்லாம் சாக்கடை. சாக்கடை வழிய வழிய மேலே ஏறி வந்தார்கள் தாய் பசுபோல.

என் சரோஜா டீச்சரா அது? மாறாத புன்னகையோடு பூப்போல இருக்கும் தங்க சிலைபோன்ற அந்த தெய்வீக முகம் உறுப்பிழந்த சிலைபோல அத்தனை கோரம். தலையைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டேன். எனக்கு குடலே வெளிவந்து விடும் அளவுக்கு வாந்தி வந்தது. சாக்கடையில் விழுந்து புரண்டு எழும் பன்னிபோல என் உடல்முழுதும் வாந்தியும் சாக்கடையும் கொட்டிக்கொண்டே இருப்பதுபோல் உணர்ந்தேன்.

மாங்காயில் உப்புத்தொட்டுத் திங்க நினைக்கும் குழந்தைகள், கருங்கல்மேல் மாங்காயை வைத்து கருங்கல்லால் அடித்து நசுக்கும். பூமியும் வானும் கருங்கல் ஆக நடுவில் நானே ஒரு மாங்காயாய் நசுங்குவது போல் துடித்தேன். திசைகள் என்னை பிய்த்து திங்கத்தொடங்கின. கண்கள் இருண்டு, உடல் மரத்து, உடலை அதல பாதலத்தில் கீழே வீசி எறிந்துவிட்டு உயிர் மேலே மேலே பயணம்போனது. உடல் கீழே கீழே விழுந்து போய்கொண்டே இருந்தது. எவ்வளவு ஆழத்திற்குத்தான் போகும் என்று தெரியவில்லை. பேச்சும் சத்தமும் வெகு தொலைவில் கேட்டது. மனிதர்கள் அத்தனைபேரும் சூனியமாகிப் போக, சத்தங்கள் ஒன்றோடு ஒன்று பிணைந்து பிரித்தறிய முடியாத ஒற்றை ஓசையாய் மாறி காதில் கனத்தது.

ஆழம் தெரியாமல் கீழே விழுந்து கொண்டே இருந்த உடல் அடிபட்டு பிய்ந்து சிதறும் கொடூரத்தை ரசித்து சுவைக்க வான்வெளியில் உயிர் சுற்றிக்கொண்டே இருந்தது ஒரு பருந்துபோல். உடல் இறுதியில் விழுந்தேவிட்டது. சிதறவில்லை, வலிக்கவில்லை. ஒரு சின்ன குலுக்கல்கூட இல்லை. ஏதாவது பூ மெத்தை பாதளத்தில் விரித்து இருக்கிறார்களோ? எங்கும் கனத்த இருட்டு, இருட்டு சுவரை மெல்ல கைகளால் தடவினேன். எதுவும் தட்டுப்படவில்லை, என் உடலைவிட்டு என் கைமட்டும் தனியாக கிடந்து துழாவிக்கொண்டு இருந்ததுபோல் உணர்ந்தேன். கண்திறக்கவில்லை என்பது சற்றென்று ஞாபகத்திற்கு வந்தது. மெல்ல மெல்ல கண்விழித்தேன்.

அப்பாவின் மடியில் கிடந்தேன். யாரோ சோடா உடைத்துக் கொடுத்தார்கள். மனித சுவற்றால் ஆன கிணற்றுக்குள் அப்பாவும் நானும் தவறி விழுந்து கிடப்பதுபோல் இருந்தது. அப்பா சோடாவை எனது வாயிக்குள் ஊற்றியதும் “வாந்தி.. சாக்கடை..” என்று உலறியபடியே வாயில் விழுந்த சோடாவைக் கொப்பளித்து அப்பாவின் மூஞ்சில் துப்பினேன். எச்சியும், சோடாவும் வழியும் முகத்தை இடது கையால் வழித்து துடைத்தப்படியே “பயப்படாத அய்யா.. பயப்படாத” என்று என்னை அணைத்து தூக்கிக்கொண்டு அப்பா எழுந்தார்கள்.

அப்பாவின் பிடியில் இருந்து வழுக்கி நழுவி திமிறிக்கொண்டு “டீச்சர்..டீச்சர்” என்று கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஓடினேன். அப்பா பாய்ந்து என்னை பிடித்து தூக்கி அணைத்து இறுக்கிக்கொண்டார்கள்.

“டீச்சர் வீட்டுக்குப் போயிட்டாங்க அய்யா, நீ பயப்படாத” என்று என் முதுகை அப்பா தடவினார்கள். நான் கண்களால் அந்த இடத்தை துழாவினேன். டீச்சரைக் காணவில்லை. அந்த குடிகாரனும் போய்விட்டான். அங்கே வேடிக்கை பார்த்த கூட்டம் இப்போ என்னை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தது. வேடிக்கை என்பதே என்ன? ஏன்? என்ற கேள்வியின் பௌதிக வடிவம்தானே.

யாரோ குடம் குடமாய் என்மீது வாந்தியை கொட்டுவதுபோல் இருந்தது. உடல் நடுங்கியது. மரம் செடி கொடி ஆடு மாடு மனுசன் பூமி வானம் எங்கும் வாந்தி வழிவதுபோல் இருந்தது. எதைப்பார்த்தாலும் வாந்தி வாந்தியாய் தெரிந்தது. உடம்பு தூக்கித் தூக்கிப் போட்டது. அடி மரத்தை பிடித்து ஆட்டிவிடும் போது நுனிமட்டும் ஆடிக் கொண்டே இருக்கும் மரம்போல நெஞ்சு துடித்துக்கொண்டே இருந்தது. அப்பாவை இறுக்கிக் கட்டிக்கொண்டேன்.

எதையும் பார்க்க முடியவில்லை. முன்னாடி வரும் மனிதர்கள் எல்லாம் என்மீது வாந்தி எடுக்கவே வருவதுபோல் இருந்தது. கண்களை மூடிக்கொண்டேன். இருண்டு போனது உலகம். இருட்டில் வானை அடைத்துக் கொண்டு சுனாமி போல் வாந்தி சீறிக்கொண்டு என்னை மூழ்கடிக்க வந்தது. “அப்பா… அப்பா… டீச்சர்… டீச்சர்..” என்று அலறினேன்.

இடது தோளில் கிடந்த என்னை வலது தோளுக்கு மாற்றிக்கொண்டு எனது முதுகை தடவியப்படியே “சஷ்டிய நோக்க சரவண பவனார் சிஸ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்” என்று மெல்ல கந்தர் சஷ்டிக்கவசத்தை அப்பா வாய் முணுமுணுத்தது.

“சீக்கிரம் ஏதாவது ஒரு ஆஸ்பிட்டலுக்கு குழந்தையைத் தூக்கிகிட்டுப் போங்க” என்றார் ஒரு பெரியவர். அப்பா தலையை ஆட்டிவிட்டு நடக்க தொடங்கினார்.

அப்பா முன்னே பார்த்துக்கொண்டுப்போக நான் அப்பாவின் தோளில் தொங்கியப்படி பின்னே பார்த்தபடியே போனேன். சாலையே ஒரு வாய்காலாகி வாந்தி பெருக்கெடுத்து வருவதுபோல தெரிந்தது. போவோர் வருவோர் முஞ்செல்லாம் வாந்தி வடிகின்றதுபோல் உத்துப்பார்த்தேன். தலையை உதறிக்கொண்டேன். வாந்தி வாடையும் சாராய நாத்தமும், விரட்ட விரட்ட தலையை சுத்தி சுத்தி வந்துக்கொண்டே இருக்கும் ஈயைபோல தொல்லை செய்தது.

“ஐயோ.. என் புள்ளைக்கு என்னாச்சி” என்ற அம்மாவின் அலறல் கேட்டு அப்பாவின் தோளில் இருந்து எழுந்து திரும்பிப் பார்த்தேன். அம்மா தலையில் அடித்துக்கொண்டு இரண்டு கையையும் விரித்துக்கொண்டு ஓடி வந்தது. தோளில் கிடந்த முந்தானை நழுவி இடுப்பில் இருந்து பறந்து தெருக்கூட்டியது. வெறும்ஜாக்கெட்டோடு தாலித்தெரிய தவித்து தாவி வந்தது. காற்றில் பறந்த விரிந்த கூந்தல் மூன்று திசையையும் அடைத்திருந்தது. பெரிய தாய் பறவை கால்களால் ஓடியபடி கைகளையே இறக்கையாக கொண்டு பறப்பதுபோல் இருந்தது அம்மாவின் கோலம். நான் அப்பாவிடமிருந்து நழுவி ஓடிபோய் அம்மாவைக் கட்டிக்கொண்டேன்.

அப்பா ஓடிவந்து அம்மாவையும் என்னையும் சேர்த்து அணைத்துக் கொண்டார்கள். “ஒண்ணுமில்ல.. ஓண்ணுமில்ல.. பயப்படாதீங்க” என்று இருவருக்கும் சமாதானம் சொல்லியப்படியே அம்மாவின் முந்தானையை எடுத்து தோளில் போட்டார்கள்.

நடுரோட்டில் நாங்கள் கட்டிக்கொண்டு நிற்பதைப்பார்த்த வேகமாக வந்த லாரி ட்ரைவர். “வேறு இடமே உங்களுக்கு கிடைக்கலையா?” என்று ஹாரன் அடித்து திட்டிவிட்டுப் போனான். அவரவர் துக்கம் அவரவரோடு அதனால்தான் இந்த உலகம் இன்னும் இன்பமாக இருக்கிறதோ?

எங்கள் இருவரையும் கையைப் பிடித்து சாலையோரம் கூட்டி வந்த அப்பா “அவனோட டீச்சர, அவ புருஷன் போட்டு அடிச்சிருக்கான், அத பாத்து பயந்துட்டான்” என்று சொன்னதும் அம்மாவுக்கு போன உயிர் திரும்பி வந்தது.

“எனக்குன்னு வந்து வாச்சியே” என்று என்னை இழுத்து முதுகில் இரண்டு போட்டது அம்மா. நான் வலி தாங்க முடியாமல் அப்பாவின் பின்னாடி ஓடி மறைந்துக்கொண்டேன். அது வலிப்பதற்காக அடித்த அடியில்லை. அம்மாவின் வலிமையான அன்பு. அன்பே வலியாக இறங்கியது எனக்குள்.

அதிக பாசம்தான் திடீர் கோபத்திற்கு காரணமோ? அப்பா அம்மாவை தடுத்து, என்னை தூக்கிக்கொண்டு அம்மாவின் கையை பிடித்தப்படி வீட்டுக்கு நடந்தார். நான் அம்மாவைப் பார்த்தேன். அம்மா அழுதபடி வந்தது. கன்னத்தில் கண்ணீர் கோடுகள். நான் கீழ் இறங்கி அம்மாவைக் கட்டிக்கொண்டேன். அம்மாவின் புடவை பின்னால் அவுந்து இடுப்புக்கு கீழே தொங்க உள்ளே கட்டியிருந்த காப்பித்தூள் உள்பாவாடைத் தெரிந்தது. நான் அம்மாவின் புடவையை இழுத்து பாவாடையில் சொருகினேன். அம்மா நின்று புடவையை அவுத்து ஒழுங்காக கட்டிக்கொண்டது. அம்மாவின் முகம் சுருங்கி சின்னதாகிவிட்டதுபோல் தெரிந்தது. வேதனையில் முகம் சுருங்குவதும். சுந்தோஷத்தில் முகம் மலர்வதும் அதிசயம்தான். யாருடைய முகமும் எல்லா நேரத்திலும் ஒரே மாதரி இருப்பதில்லை.

சற்று நேரத்திற்கு முன்பு இந்த பூமியையே அள்ளி விழுங்கிவிட வந்த அண்டரண்ட பட்சிபோல் இருந்த அம்மாவா இது? அருகம் புல்லின் நுனியில் குந்தியிருக்கும் சின்னப் பனித்துளிபோல் இப்போது அம்மா. அம்மா என்பதே சிறு துளியாக இருக்கும் பெரும்கடலோ? இந்த சின்னத்துளிக்குள்தான் இந்த பூமியையே மூழ்கடிக்கும் பெரும் மழை மறைந்திருக்கிறதோ? அம்மா எடுத்து வந்த அந்த விஸ்வரூபத்தை பார்த்ததாலேயே மெல்ல மெல்ல டீச்சர்மேல் அவன் எடுத்த வாந்தியின் கொடூரம் குறைந்தது. இன்னும் அருவருப்பு மட்டும் போகவில்லை. குமட்டிக்குமட்டி வந்தது. காரிக்காரி எச்சிசை துப்பிக்கொண்டே நடந்துபோனேன்.

அம்மா என்னை அணைத்து தூக்க குனிந்தது. அம்மாவின் கைபட்ட இடத்தில் வாந்தி ஒட்டுவதுபோல் நெளிந்தேன். தலையை வேகமாக ஆட்டிக்கொண்டேன். “நான் நடந்து வரேன்” என்றபடி அம்மா அப்பா இருவர் கையையும் பிடித்துக்கொண்டு நடவில் நடந்தேன். டீச்சரின் ஞாபகம் வந்தது. வாந்தி வழியும் முகமும். சாக்கடை ஒழுகும் புடவையும் என்னை எரிய வைத்தது. அழவேண்டும்போல் இருந்தது. இமைகள் கண்ணீர் ஈரத்தோடு பிசுபிசுத்தது.

ஆறாம் வகுப்பில் சேர்ந்ததும் கிடைத்த முதல் நண்பன் செந்தில்நாதன். அவன்தான் பள்ளியில் நுழைந்ததும் கைபிடித்து வகுப்பிற்கு அழைத்துப் போனான். உதவியும் நட்பும் வேறுவேறா? செந்தில் தான் வரைந்த நமது இந்திய குடியரசுச் சின்னத்தை காட்டினான். அழகாக இருந்தது. செந்தில்மீது நட்போடு மரியாதையும் கூடியது. எல்லா ஆபரணமும் மனிதனை மறைத்துக் கொண்டு தான் ஜொளிக்கிறது. கலையாபரணம் ஒன்றுதான் மனிதனுக்குள் மறைந்து கொண்டு மனிதனை ஜொளிக்கவைக்கிறது.

கி.மு 250ம் ஆண்டு மௌரிய பேரரசர் சாம்ராட் அசோகர் உருவாக்கிய புகழ்பெற்ற சாரநாத் தூணில் உள்ள சிங்க சிற்பம்தான் நமது குடியரசு சின்னம். கவிழ்ந்த தாமரை மலர்மீது வட்டவடிவ பீடம். பீடத்தின் பக்கச்சுவரில் நான்கு திசைகளையும் பார்த்துக் கொண்டு இருக்கும் இருபத்தி நான்கு ஆரங்கள் கொண்ட நான்கு சக்கரங்கள். அதுதான் அசோகச்சக்கரம் எனப்படும் இந்திய தேசியக்கொடியில் சுடர் ஒளி விடும் தர்மசக்கரம். தர்மசக்கரங்களுக்கு இருபுறத்திலும் காளை குதிரை சிங்கம் யானை இருக்கும். பீடத்தின் மேல் நான்கு சிங்கங்கள் உடம்போடு உடம்பு ஒட்டி முன்னங்காலோடு முகம் தெரிய நான்கு திசைகளையும் வாய்திறந்து பற்கள் தெரிய பார்த்துக்கொண்டு கம்பீரமாய் நிற்கும். சாரநாத் போனால் நாமும் அதைப் பார்க்கலாம் என்றான் சிரித்துக்கொண்டே. எனக்கும் அங்கெல்லாம் போகனும்போல் ஆசை எழுந்தது.

தொலைதூரம் போன மனம் சட்டென்று காலடிக்கு வந்து “முதலில் பக்கத்தில் இருக்கும் கங்கைகொண்ட சோழபுரத்தைப் பார் அப்புறம் சாரநாத்தைப் பார்க்கலாம” என்றது.

“கங்கைகொண்ட சோழபுரம் பெரியகோயிலில் உள்ள இறைவன் சண்டிகேஸ்வரருக்கு பொன்கொன்றை மலர்ச்சரத்தை சூடும் சிற்பம், கண்கள் விழுங்கும் கனி, கைகள் படிக்கும் கவிதை” என்று அப்பா அடிக்கடி சொல்வார்கள். என்கண்களில் தேன்பாயும். “கல்லை மலர்ச்சரமாக மாற்றிய அந்த கைகளை கண்ணில் ஒற்றிக்கொள்ளத் தோன்றும்” என்று அப்பா சொல்லும்போதே ஆயிரம் வருஷத்திற்கு அப்பால் பலமுறை சென்று இருக்கிறேன். அந்த முகமும் பெயரும் தெரியாத இறவா புகழ் பெற்ற சிற்பியின் மடியில் தவழ்ந்திருக்கிறேன். இந்த வருஷம் எப்படியாவது அப்பாவுடன் கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர்கோயிலை போய் பார்த்து விட வேண்டும். ராஜராஜசோழன் மகன் ராஜேந்திரசோழன் கட்டியது அது. கோயில்கூட பார்ப்பதற்கு தஞ்சை கோயிலின் தனயன்போல்தான் இருக்கும் என்று அப்பா சொல்வார்கள். பார்த்துக்கொண்டிருந்த படநோட்டை தூக்கி மடியில் வைத்தேன் “அடியில இருக்கிற சிங்கம் கீழ கடிச்சிட போகுதுடா” என்று செந்தில் சிரித்தான். நானும் சிரித்தேன்.

நாங்கள் சிரித்துக்கொண்டு இருக்கும்போதுதான். பக்கத்து வகுப்பிற்கு போகும் ஆசிரியர் விட்டெறிந்த ஒடிந்த சாக்பீஸ் சரியாக என் மூக்குநுனியில் பட்டு தன் பயணதிசையை மாற்றிக்கொண்டது. நான் திடுக்கிட்டு எழுந்து நின்று கை கட்டினேன். “சத்தம்போடாம இருங்கடா” என்றவர். அமைதியாக வகுப்பைப் பார்த்துக்க என்றார் என்னிடம். அலையை சிலையாக மாற்றும் வித்தை அவருக்கு தெரிந்து இருந்தது. மீசையை கன்னத்திலும் வளர்த்திருந்தார். அது கொஞ்சம் கூடுதலான பயத்தை உண்டாக்கியது அவர்மேல்.

“ஓராறு ஆறு, ஈராறு பன்னிரெண்டு” என்று நான் வாய்ப்பாடு சொல்லச் சொல்ல மாணவர்களும் கூட சொன்னார்கள். ஒழுங்கான சத்தத்தால் ஒழுங்கற்ற சத்தம் தடைப்பட்டுப் போனது. அடுத்த வரிசையில் முன்னாடி உட்கார்ந்து இருந்த முத்துக்குமார் மட்டும் சொல்லவில்லை. அவன் ஐந்தாம் வகுப்பு படித்த பள்ளியில் அவன்தான் வகுப்பு லீடராக இருந்திருப்பான்.

“ஒன்பதொன்பது என்பத்தொண்ணு” என்று நான் சொல்லிக்கொண்டு இருக்கும் போதுதான் மாணவர்கள் எல்லோரும் எழுந்து “குட்மார்னிங் டீச்சர்” என்றார்கள்.

நான் வாய்ப்பாடு சொல்வதை நிறுத்திவிட்டு நேராக நின்றபடியே கழுத்தை மட்டும் திருப்பி டீச்சரைப் பார்த்தேன். குங்குமத்தில் சிலைசெஞ்சி மஞ்சளுல குளிப்பாட்டி பூவாடை கட்டி கூட்டிக்கிட்டு வந்ததுபோல இருந்தார்கள் டீச்சர். விரிந்த விழி விரிந்தே இருக்க டீச்சரைப் பார்த்தேன். செந்தில் என் கால்சட்டையைப்பிடித்து இழுத்து உட்காரச்சொன்னான். உட்கார்ந்ததும் செந்தில் காதில் சொன்னான் “இது கணக்கு டீச்சர் சரோஜா” என்று. கண்ணுக்கெட்டிய தூரம்வரை உளுந்துகாயும் களத்தில் ஒரே ஓரு முத்துச்சோளம் காய்ந்தால் எப்படி இருக்கும்? எங்கள் ஊர்ப்பெண்களில் சரோஜா டீச்சர் ஒரு முத்துச்சோளம்.

அந்த வயசுல ஆயிரம் முகம் மனசுக்குள்ள வந்தாலும் அம்மா முகத்தைத்தவிர வேறு எந்த முகமும் மனசுல நிக்காது. ஓடுற தண்ணியல விழுந்த பூப்போல ஒவ்வொரு முகமும் அடிச்சிக்கிட்டு போயிகிட்டே இருக்கும். அம்மா முகம் மட்டும் பால்ல விழுந்த குங்குமப்பூப்போல மனசு முச்சுடும் பரவிவிடும். அம்மாப்போல சரோஜா டீச்சர் என்மனதில் பரவினார்கள்.

ஒரு பார்வையிலேயே அப்படி பரவிவிடமுடியுமா? அப்படி பரவிவிடும் சிலர் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அவர்களை பார்க்கும்போது அது நடந்துவிடுமோ?

டீச்சர் தனியாகத்தான் நின்றார்கள். கண்ணுக்கு தெரியாத ஒரு பூந்தோட்டம் கூடநிற்பதுபோல் இருந்தது. தேவதைகள் காற்றுகளாகி அவரை சூழ்ந்திருப்பதுபோன்ற ஒரு நினைவு.

இறைவன் மனிதர்களை அதிசயமாகத்தான் படைக்கிறான். மனிதன்தான் உயிரற்றதுகளை அதிசயம் என்று சொல்லி திரிகிறான். டீச்சர் நெஞ்சில் அணைத்திருந்த அட்டன்டெண்சை பிரித்து பெயரைப்படித்தார்கள். ‘பிரசண்ட் டீச்சர்’ என்று ஒவ்வொரு மாணவனும் எழுந்து சொல்லிவிட்டு உட்கார்ந்தார்கள். என் பெயருக்காக காத்திருந்தேன். முன்னமே என்பெயர் வந்திருக்கக்கூடாதா என்று ஏக்கமாக இருந்தது.

அண்ணன், பெரியப்பாவின் மகன், தமிழ் புலவருக்கு படித்த தமிழ் கல்லூரியில் வருகைப்பதிவேடு எடுக்கும்போது மாணவர்கள் எழுந்து ‘ஓம்’ என்று சொல்லிவிட்டு உட்கார்வார்களாம். அந்த நினைவு வந்து உள்ளத்தில் மகிழ்ச்சி வெள்ளம் பரவியது. என் பெயரை டீச்சர் இரண்டாம் தடவை அழைக்கும்போதே எனக்கு உறைத்தது. செந்தில் தொடையில் கிள்ளினான். நான் அவசரமாக எழுந்து ‘ஓம்’ என்றேன். வகுப்பே சிரித்தது. ‘ஸ்..’ என்று பல்லைக்கடித்து ‘பிரசண்ட் டீச்சர்’ என்றேன். டீச்சர் சிரித்தார்கள். அந்த சிரிப்பின் சிறகைப் பிடித்துக்கொண்டு நான் மேலே மேலே பறந்து போனேன்.

அட்டன்டெண்ஸ் எடுத்து முடித்ததும். என்னை எழுந்திருக்கச்சொல்லி பாதியில் நின்ற வாய்ப்பாட்டை தொடர்ந்து சொல்லச் சொன்னார்கள். பதினாறாம் வாய்ப்பாடு வரை சொல்லி முடித்தேன். என் அருகில் வந்து என் தலையில் கைவைத்து ‘வெரிகுட்’ என்று வாழ்த்தி உட்காரச் சொன்னார்கள். ஒரு ரோஜாமாலை என்தலையில் விழுந்து புரண்டதை உணர்ந்தேன். அம்மாவும் டீச்சரும் அழகாக இருந்துவிட்டால் தேவதைகள் என்பது எல்லாம் சும்மாதான். ஏன் சுற்றி வளைக்கிறேன். எந்த தேவதையும் அம்மா அல்லது டீச்சரின் முகத்தை அணிந்துக்கொண்டுதான் கனவில் கூட வரமுடியும்.

பிடிக்காமல் இருந்து பிடித்துப் போகக்கூடியது பள்ளிக்கூடம் போன்று வேறொன்று இல்லை. பிடிக்காமல் இருந்து பிடித்துப்போயி மீண்டும் பிடிக்காமல் போகக்கூடியதுதான் உலகில் அதிகமாக இருக்கு. பள்ளிக்கூடம் அப்படி இல்லை. பள்ளிக்கூடம் பிடித்துப்போன பின்பு பிடிக்காமல் போவதே இல்லை.

பள்ளிக்கூடம் பிடித்துப்போக ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கும். முதல் மதிப்பெண் எடுத்தால், விளையாட்டில் பரிசு வாங்குவதால், நல்ல நண்பன் கிடைத்துவிட்டால், கலைத்திறமை இருந்தால் பள்ளிக்கூடம் தானாகவே பிடித்துப்போகும். எனக்குப் பள்ளிக்கூடம் பிடித்துப்போனதற்கு காரணம் கணக்குப் பாடம். சரோஜா டீச்சர்தான் கணக்கு டீச்சர் என்பதால் எனக்கே என்னைப்பிடித்தது. கனவில் கூட கணக்குப் போட்டுக்கொண்டுதான் தூங்கினேன். அம்மாவும் டீச்சரும் இல்லாமல் எந்த கனவும் வருவதில்லை இப்போதெல்லாம்.

இனி தூங்கமுடியுமா? தூங்கினால் வாந்தி ஓழுகும் டீச்சரின் முகம் கனவில் வந்து கொல்லாமல் கொல்லுமே? தேவதைகளால் கட்டி, தேவதைகளால் மட்டும் கும்பிடப்படும் தேவதைகளின் திருக்கோயிலில், தேவதைகளின் தெய்வமாய் இருக்க தகுதியுடைய அழகிய அன்பான சரோஜா டீச்சர் முகத்தை இனி வாந்தியில்லாமல் நினைத்துப் பார்க்கமுடியுமா? அழகான பூமரத்தின் அடியில் நின்று ரசிக்கையில் மேலிருந்து சட்டையில் எச்சம் இடும் காக்கையால், அந்த பூமரத்தை நினைக்கையில் பார்க்கையில் ரசிக்கையில் காக்கையின் எச்சம்தானே முன்னாடி தோன்றி முகம் சுளிக்க வைக்கும்.

ஆசிரியர்கள் அனைவராலும் தேராது என்று கைவிடப்பட்ட குமாரை டீச்சர்தான் கண்டெடுத்தார்கள். அவன் அவனுக்குள்ளேயே காணடிந்து கொண்டு இருந்தபோது.

“நீயெல்லாம் ஏன்டா பள்ளிக்கூடம் வர” என்று நானே ஒரு நாள் கோபத்தோடு கத்தினேன்.

“டீச்சரை பறவையாக்கத்தான்” என்று சிரித்துக்கொண்டே சொன்னான். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

“பறவைகள்தானே முட்டைபோட பொறந்திருக்கு” என்று அவனே விளக்கமும் தந்தான். நான் சிரிப்பதா? கோபப்படுவதா என்று தெரியாமல் நகர்ந்து போய்விட்டேன்.

‘ஆடுகின்றானடி தில்லையிலே-அதை
பாடவந்தேன் அவன் எல்லையிலே      திங்களும் ஆட சூலமும் ஆட
விரிசடை மீதொரு கங்கையும் ஆட…
-ஆடுகின்றானடி..’

என்று விளையாட்டுத்திடலில் பாடிக்கொண்டிருந்த குமாரைக் கூட்டிக்கொண்டு போய் பாட்டு வகுப்பில் சேர்த்துவிட்டு அதற்கான செலவை தானே ஏற்றுக்கொண்டு, குமாருக்கே குமாரை அடையாளம் காட்டியது சரோஜா டீச்சர்தான். கல்லை கல்லாகவே பார்த்துவிட்டு போகும் கூட்டத்தில்தான் கல்லை சிலையாக பார்க்கும் சிற்பியும் இருக்கிறான்.

எப்போதும் அண்ணனுடைய பழைய யூனிபார்ம்மையே தொளதொளவென்று போட்டுவரும் கதிருக்கு புது யூனிபார்ம் எடுத்து தந்த டீச்சரை மனதுக்குள் கும்பிட்டேன். புது துணிமணி எடுத்து தரும்போதெல்லாம் அம்மா அப்பாவை சேர்ந்து நிற்கச்சொல்லி கும்பிட்டுதான் வாங்கிக்கொள்வேன். இப்போதெல்லாம் அம்மாவேறு டீச்சர் வேறாய் தெரியவே இல்லை.

டீச்சர் ஒருநாள் கட்டிவந்த புடவையை மறுநாள் கட்டிவந்து நான் பார்த்ததே இல்லை. இன்று கட்டிவரும் புதிய புடவையால் நேற்று கட்டிவந்த புதிய புடவையை பழசாக்கக் கூடியர்வர்கள்தான் சரோஜா டீச்சர். தங்கமே சுத்தம்தான். அதை தினம்தினமும் கழுவி சுத்தம் செய்வதுபோல்தான் டீச்சரின் அலங்காரமும்.

டீச்சரால் தாங்கமுடியுமா இந்த வாந்தியை. அந்த சாக்கடையை? பார்த்த எனக்கே இப்படி இருக்கே அனுபவித்த டீச்சருக்கு எப்படி இருக்கும். நினைக்க நினைக்க தலை வெடிக்கும்போல் இருந்தது. தலை உடனே வெடித்தால் தேவலாம்போலும் இருந்தது.

பிடித்துக்கொண்டு நடந்த அப்பா அம்மா கைகளை விட்டு விட்டு எங்காவது ஓடிக்கொண்டே இருக்கணும்போல் இருந்தது. ஓட ஒட உடம்பின் ஓவ்வொரு உறுப்பும் அறுந்து விழுந்துக்கொண்டே வந்தால் நல்லதுபோலும் தோன்றியது. கடைசியில் சுத்தமாய் நான் கரைந்து காற்றாகிவிட மாட்டேனா என்று மனம் ஏங்கியது. நெஞ்சு அதிர்ந்து கொண்டே இருந்தது. அப்பா அம்மாவின் கைகளை இருக்க பிடித்து உடம்பை முறுக்கிக்கொண்டேன்.

“என்னப்பா செய்யுது” என்று அப்பா தலையில் கைவைத்ததும். உடல் இளகியது.

“எதாவது சாப்பிடுறியா” என்றது அம்மா.

தலைதிருப்பி கடைகளைப் பார்த்தேன். மஞ்சள் மஞ்சளாய் எல்லாவற்றிலும் கண்ணுக்கு தெரியாமல் வாந்தி ஒட்டி இருக்குமோ என்ற பயம். ‘வேண்டாம்’ என்று தலையாட்டினேன். அம்மாவின் கண்கள் இன்னும் ஈரமாகத்தான் இருந்தது. என் கண்களும் ஈரமாகியது.

இரவு எதுவும் சாப்பிடாமலே படுத்துக்கொண்டேன். கண்ணை மூடினால் வாந்தி ஒழுக ஒழுக டீச்சர் கோரமாக நின்றார்கள். ‘டீச்சர்’ என்று கத்திவிட்டேன்.

“அய்யா சாமி” என்று அம்மா என்னை தன்மார்போடு அணைத்துக்கொண்டது. “என் புள்ளைக்கு என்னம்மோ ஆயிட்டுச்சிங்க” என்று பெரும் குரல் எடுத்து ஓப்பாரி வைத்தது. அப்பா அம்மாவின் வாயை பொத்தினார்கள். “ராத்திரில கத்தி ஊரக் கூட்டாத” என்று மெதுவாக சொன்னார்கள்.

என் பக்கத்தில் படுத்திருந்த பாப்பா “ஐ..பட்டாம் பூச்சிண்ணா” என்று தூக்கத்தில் பிணாத்தினாள்.

“இனி அந்த பள்ளிக்கூடத்திற்கே என் புள்ளைய அனுப்பமாட்டேன், முதல்ல டீ.சி வாங்கிகிட்டு வந்து வேற பள்ளிக்கூடத்தில என் புள்ளைய சேருங்கள்” என்று அம்மா மூக்கை உறிஞ்சியது. அப்பா சரி என்பதுபோல் தலையாட்டினார்கள். அப்பாவின் வலதுகையும், அம்மாவின் இடதுகையும் என்நெஞ்சை தடவி கொடுக்க நான் விழித்தப்படியே படுத்துக் கிடந்தேன்.

இரவின் அமைதியில் சின்னச்சின்ன சத்தம்கூட பெரிதாகக் கேட்டது. தெருவை உரசி உரசி சத்தம் எழுப்பிய ரப்பர் செருப்பு சாய்ந்து சாய்ந்து நடக்கும் யாரையோ சுமந்து போய் கொண்டு இருந்தது இரவை நீளமாக்கியபடி. தெருவின் முடிவில் நாய் ஒன்று ஊளையிட்டு இரவை திகிலாக்கியது. ‘கீச்..சீச்..’ என்று எலிகள் அடுப்பங்கரையில் தங்களின் ஆனந்தத்தில் நீந்தியது இரவின் கருமையில் ஒலிவடிவில் வண்ணங்கள் பூசி. எனக்கு பசித்தது அடிவயிற்றைத் தடவியபடியே அம்மாவை எழுப்பி சோறு போடச்சொன்னேன்.

ஊத்தி மூடிய சோற்றை பிழிந்து தட்டில் போட்டு மீன் குழம்பு ஊற்றி பிசைந்து எனக்கு ஊட்டியது அம்மா. குமட்டிக்கொண்டு வந்தது. பல்லைக் கடித்துக்கொண்டு மெதுவாக சாப்பிட்டேன். அப்பா எழுந்து வந்து தோளில் கிடந்த துண்டை மடக்கி தரையை விசிறிவிட்டு அம்மா அருகில் உட்கார்ந்தார்கள்.

இடது கையால் அம்மா என் தலையை தடவியபடியே “அந்த கொடுமையை பார்த்ததுக்கே உனக்கு இத்தனை குமட்டுதே, அதை அனுபவிக்கிற டீச்சரை பத்தி நினைச்சியா. டீச்சரு எவ்வளவு பாவம். அடுத்தவங்க துன்பத்த நினைச்சா நம்ம துன்பம் ரொம்ப சின்னதுதாம்ப்பா” என்று அம்மா தலையில் இருந்த தனது கையை இறக்கி எனது கன்னத்தை தடவி வழித்தது. என் கண்கள் நனைந்து வழிந்தது. அம்மா தனது முந்தானையை இழுத்து என் கண்களை துடைத்து, ‘தைரியமா இரிய்யா’ என்றபோது அம்மாவின் கண்களும் ஈரமாகின.

அம்மாவின் வார்த்தைகள் என் மனதில் ஆயிரம் ஆயிரம் மின்னலாய்ப் பாய்ந்து ஒளிர்ந்தது. ஒவ்வொரு ஒளிமலரிலும் டீச்சரின் பொன்வதனம் பூத்தது. பூத்தநொடியில் அது வாந்தியில் அழுந்தி மறைந்தது. தலையை ஓடிப்போய் சுவற்றில் முட்டிக்கொள்ளலாம்போல் இருந்தது. தலையை இடவலமாக ஆட்டிக்கொண்டேன். பொறையேறியது. அம்மா என் தலையை தட்டிக்கொடுத்து தண்ணீர் குடிக்க வைத்தது.

அம்மா ஊட்டிவிடும்வரை காத்திருக்காமல் நானே சோற்றை அள்ளி அள்ளிச் சாப்பிட்டேன். இல்லை மருந்துபோல் விழுங்கினேன். அப்பா தனக்கும் சோறு போட சொன்னார்கள். நான் சாப்பிட்டு எழுந்து வந்து பாப்பாவிற்கு அருகில் படுத்துக்கொண்டேன்.

“அண்ணா… அண்ணா… எனக்கும் பட்டம் செஞ்சிக்கொடுண்ணா” என்றாள் பாப்பா தூக்கத்தில். பாப்பாவின் கன்னத்தை வலிக்காமல் கிள்ளிவிட்டு திரும்பி அப்பாவையும் அம்மாவையும் பார்த்தேன். இருவரும் ஒரே தட்டில் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள்.

“புள்ளையை வேற பள்ளிக்கூடத்துல சேர்த்துடுங்க” என்று அம்மா சொல்லிக்கொண்டு இருக்கும்போது எனக்கு தூக்கம் வந்தது. போர்வையை இழுத்து தலைவரை மூடிக்கொண்டு கண்களை லேசாக மூடினேன்.

ஒருவாரமாகப் பள்ளிக்கூடம் போகவில்லை. இன்று டீ.சி வாங்கிக்கொண்டு வரேன், நாளை வாங்கிக்கொண்டு வரேன் என்று அப்பா காலம் கடத்தினார். உண்மையில் அப்பாவுக்கு நேரமில்லை. என் பயம் தெளிய கொஞ்சநாள் வீட்டிலேயே இருக்கட்டும் என்று அம்மாவிடம் சொன்னார்.

இன்று காலையிலேயே டீச்சரின் ஞாபகம் வந்தது. எழுந்து உட்கார்ந்து அழணும்போல் ஒரு தவிப்பு. பள்ளிக்கூடம் போயி டீச்சரைப் பார்க்கணும்போல் ஒரு நினைப்பு. “புள்ளைய வேற பள்ளிக்கூடத்துல சேர்த்துடுங்க” என்ற அம்மாவின் குரல்வேறு ஒலித்தது மனசுக்குள்.

‘இனி எப்படி டீச்சரைப் பார்ப்பேன், பார்த்தால் தாங்குவேனா? இத்தனை நடந்த பின்பும் டீச்சர் பள்ளிக்கூடம் வருவார்களா? இந்த அவமானம் தாங்கமுடியாமல் டீச்சர்.. ஐயோ அப்படி எல்லாம் நடந்துவிடக்கூடாது’ எனக்கு நெஞ்சே வேடித்து விடும்போல் இருந்தது. படுக்கையில் அதுக்கும்மேல் கிடக்கமுடியவில்லை. எழுந்து வீட்டில் குறுக்கும் நெடுக்கும் நடந்தேன். பெரிய சுவர் கெடிகாரத்தில் மணி எட்டு அடித்தது.

பாப்பா கால் இரண்டையும் நீட்டிக்கொண்டு தொடைகளுக்கு இடையில் பாவாடைமேல், சில்வர் கிண்ணத்தில் இட்டிலி வைத்து தின்றுக்கொண்டிருந்தாள். சட்டையெல்லாம் சட்டினி ஒழுகியது. அப்பா வேலைக்கு தயாராகிக்கொண்டு இருந்தார்கள். அப்பாவுக்கு மதிய சாப்பாடு அடைத்த கேரியரை முந்தானையால் துடைத்தப்படியே வந்த அம்மா “இன்னைக்காவது புள்ளையோட டீ.சிய வாங்கிகிட்டு வந்துடுங்க” என்றது.

முன்வாசல் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்க பாப்பா எழுந்து வாசலுக்கு ஓடினாள். பாவாடைமீது இருந்த இட்லி கிண்ணம் எகறி விழுந்து. இட்லியும் சட்னியும் வீடெல்லாம் சிந்தியது. நானும் பார்க்கப் போனேன்.

“இந்த இரண்டையும் வச்சிகிட்டு நான்படும்பாடு தாங்கமுடியல” என்று அம்மா அலுத்துக்கொண்டே சிந்திய இட்லியயும் சட்டினியையும் சுத்தம் பண்ண உட்கார்ந்தது. வாசல்படியைத் தாண்டி என் சரோஜா டீச்சர் வீட்டுக்குள் நுழைந்தார்கள்.

“டீச்சர்” என்று ஓடி நான் டீச்சரின் கால்களைக் இறுக்கிக் கட்டிக்கொண்டேன். டீச்சர் குனிந்து என்னை தூக்கி அணைத்துக் கொண்டார்கள். டீச்சரின் மேலிருந்து வந்த மைசூர் சாண்டல் சோப்பின் சந்தனவாசம் என்னைச்சுற்றி பரவியது.

“எச்சி துப்பிணா சிலேட்டு எழுத்து அழிஞ்சிப் போகலாம், கல்வெட்டுகள் அழியாது. நான் கல்வெட்டு நீயும் கல்வெட்டாகணும், சீக்கிரம் பள்ளிக்கூடம் கிளம்பு” என்றார்கள் என்னை கீழே இறக்கி விட்டப்படியே. அம்மா விரைந்து வந்து டீச்சரின் கையை பிடித்துக்கொண்டு “வாங்க..வாங்க” என்றது. அப்பா “வாங்க” என்று இரண்டு கையையும் குவித்து கும்பிட்டார்கள். டீச்சரும் அப்பாவிற்கு பதில் கும்பிடுப்போட்டார்கள்.

பள்ளிக்கு கிளம்ப சென்ற நான் திரும்பி நின்று பார்த்தேன். மாறாத அந்த தெய்வீக புன்னகையோடு, உச்சி முதல் உள்ளங்கால்வரை எல்லா திசைகளிலும் என் சரோஜா டீச்சர் அழகாய் ஒளிர்ந்து கொண்டே இருந்தார்கள் நெருப்பு ஓவியமாய் அதுவும் சுடாத நெருப்பு ஓவியமாய்.

 

http://www.agalvilakku.com/agal1/vilakku8/page8.html