ஒரு ஏக்கர்… ஆண்டுக்கு ரூ 1.5 லட்சம் லாபம்! – அள்ளிக் கொடுக்கும் அகத்தி…
சித்தா, ஆயுர்வேதம், யுனானி போன்ற பாரம்பர்ய வைத்திய முறைகளைக் கையாளும் மருத்துவர்களாக இருந்தாலும்சரி, நவீன அலோபதி முறை மருத்துவர்களாக இருந்தாலும்சரி ‘உணவில் கீரையைச் சேர்த்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்லாத மருத்துவர்களே இருக்கமாட்டார்கள். ‘உயிர்ச்சத்துகள் மற்றும் தாதுச் சத்துகளுக்காகத் தினம் ஒரு கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்’ எனப் பரிந்துரைக்கப்படுவதால் கீரைகளுக்கு எப்போதுமே சந்தையில் நல்ல கிராக்கி உண்டு. அந்தவகையில் உடற்சூடு, பித்தம், குடல் புண்கள் ஆகியவற்றைக் குணமாக்கும் அகத்திக்கீரைக்கு நல்ல சந்தை வாய்ப்பிருக்கிறது.
கால்நடைத் தீவனமாகவும் வரப்புப் பயிராகவும் வெற்றிலைக் கொடிக்காலில் கொடி படர்வதற்கான மரமாகவும்தான் அகத்தியை பெரும்பாலும் நடவு செய்வார்கள். ஆனால், அகத்திக்கீரையின் சந்தை வாய்ப்பு குறித்துத் தெரிந்தவர்கள், இதைத் தனிப்பயிராகப் பயிரிட்டு நல்ல லாபம் எடுத்துவருகிறார்கள்.
தமிழகத்தின் மிகப்பெரிய சந்தையான கோயம்பேடுச் சந்தையைக் குறிவைத்து வந்தவாசி, உத்திரமேரூர், மதுராந்தகம் போன்ற பகுதிகளில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது அகத்தி.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூருக்கு அருகிலுள்ள நெல்வாய் கூட்டுரோடு பகுதியிலிருந்து கோயம்பேட்டுச் சந்தைக்கு அகத்திக்கீரைப் பெருமளவு அனுப்பப்படுகிறது. இப்பகுதியிலுள்ள புழுதிவாக்கம் கிராமத்தில் அகத்திச் சாகுபடியில் ஈடுபட்டுவரும் ராமலிங்கம் என்பவரை ‘பசுமை விகடன்’ இதழுக்காகச் சந்தித்தோம். அவரிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் மகிழ்ச்சியாகப் பேச ஆரம்பித்தார்.
“நான் விவரம் தெரிஞ்சதிலிருந்து விவசாயம்தான் செஞ்சுட்டிருக்கேன். எங்களுக்கு 3 ஏக்கர் நிலமிருக்கு. 5 மாடுகள் இருக்கு. முன்ன நெல், வெண்டை, கத்திரி, கரும்பு, அவரை, கடலை, மல்லிகைப்பூனு சாகுபடி செஞ்சுட்டு இருந்தேன். வேலையாள் பற்றாக்குறையால நெல், கடலை, அகத்திக்கீரைனு இப்போ சாகுபடி செஞ்சுட்டிருக்கேன்.
ஒரு ஏக்கர் நிலத்துல அகத்தி இருக்கு. பக்கத்துல இருக்குற மதுராந்தகம் ஏரிதான் முக்கியத் தண்ணீர் ஆதாரம். ஏரியில தண்ணீர் அதிகமிருந்தா நெல் விவசாயம் செய்வோம். இல்லாட்டி அகத்திதான் போடுவோம்” என்ற ராமலிங்கம், அகத்தி வயலுக்குள் அழைத்துச்சென்றார்.
“இந்தப் பகுதியில மத்த கீரை விவசாயம் அவ்வளவா கிடையாது. ஆனா, அகத்தியை மட்டும் நிறைய பேர் சாகுபடி செய்றாங்க. இது தொல்லையில்லாத பயிர். ஒரு தடவை விதைச்சா ரெண்டு வருஷம் மகசூல் எடுக்கலாம். பெருசா ஊட்டமும் கொடுக்க வேண்டியதில்லை. வியாபாரிகளுக்குப் பேசி விட்டுட்டா, ரெண்டு வருஷத்துக்கு அவங்களே அறுவடை செஞ்சு எடுத்துக்குவாங்க. அதில்லாம முன்னாடியே ஒரு கட்டு இவ்வளவுனு விலை பேசிட்டுதான் விதைப்போம்.
அதனால, முன்கூட்டியே ரெண்டு வருஷத்துக்கான வருமானத்தைத் திட்டமிட்டுவிட முடியும். அகத்தியில மகசூல் முடிஞ்சப்புறம், அந்த வயல் நல்ல வளமாகிடும். ஏன்னா, அகத்தி இலைகள் மண்ணுக்கு நல்ல சத்தாக மாறிடுது. அடுத்து அந்த நிலத்துல என்ன பயிர் வெச்சாலும் நல்லா விளைஞ்சு வரும்” என்று அகத்தி குறித்துச் சொன்ன ராமலிங்கம், மகசூல் மற்றும் வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்…
“அகத்தியை விதைச்சு 70 நாள்ல முதல் அறுவடை செய்யலாம். அதுக்கப்புறம் 40 நாள்களுக்கு ஒருமுறை அறுவடை செய்யலாம். ரெண்டு வருஷத்துல 17 முறை அறுவடை செய்யலாம். அதுக்கப்புறமும் கீரை வரும். ஆனா, மகசூல் குறைவாத்தான் இருக்கும். ஒரு ஏக்கர் நிலத்துல ஓர் அறுவடைக்கு 650 சுமைக்குமேல (பெரிய அளவிலான கட்டு) கீரை கிடைக்கும். இப்போ ஒரு சுமை 30 ரூபாய்னு பேசி விட்டிருக்கேன்.
650 சுமைனு வெச்சுக்கிட்டாலும் ஒரு சுமை 30 ரூபாய் விலையில் 19,500 ரூபாய் வருமானம் கிடைக்கும். மொத்தம் 17 அறுவடைக்கும் சேர்த்து 3,31,500 ரூபாய் வருமானமாகக் கிடைக்கும். இதுல உழவு, விதை, விதைப்பு, உரம் எல்லாம் சேர்த்து 20 ஆயிரம் ரூபாய்ச் செலவாகும். அதுபோக, 3,11,500 ரூபாய் லாபமா நிக்கும்.
அகத்தி நட்டோம்னா வருஷத்துக்கு ஒன்றரை லட்ச ரூபாய்க்குக் குறையாம லாபம் கிடைச்சுடும். அகத்திபோட்ட வயல்ல நெல் போட்டோம்னா அதுக்கு உரம் போட வேண்டிய அவசியமில்லை. காத்துல இருக்கிற தழைச்சத்தை இழுத்து, மண்ணை வளப்படுத்தும் இந்த அகத்தி. அதனால, உரச்செலவு குறைஞ்சுடுது” என்று சொல்லியபடியே அடுத்த வேலையைப் பார்க்க வயலுக்குள் சென்றார் ராமலிங்கம்.
தொடர்புக்கு, ராமலிங்கம், செல்போன்: 97862 66536
யூரியா வேண்டாம்!
ஒரு ஏக்கர் பரப்பில் அகத்திக்கீரைச் சாகுபடி செய்வது குறித்து ராமலிங்கம் சொன்ன தகவல்கள் இங்கே…
“தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தில் 3 டிப்பர் அளவு மாட்டு எருவைக் கொட்டிக் கலைத்துவிட வேண்டும். பிறகு 2 சால் உழவு ஓட்டி மூன்று நாள்கள் காய விட வேண்டும். மீண்டும் நிலத்தை நன்கு உழுது மட்டப்படுத்தி, வாய்க்கால் எடுத்துப் பார் பிடித்து, அகத்தி விதையை நடவு செய்ய வேண்டும். வாரம் ஒருமுறை தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும்.
விதைத்த 10-ம் நாளுக்குமேல் விதைகள் முளைத்துவரும். நிலத்தின் ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும். விதைத்த 20-ஆம் நாளுக்குமேல் களையெடுத்துத் தழை, மணி, சாம்பல் சத்துகள் அடங்கிய கலப்பு உரத்தைப் (காம்ப்ளக்ஸ்) பரிந்துரைக்கப்படும் அளவில் இட வேண்டும். அகத்திக்குக் கண்டிப்பாக யூரியா இடக்கூடாது. வேறு உரங்களும் இடத் தேவையில்லை. செடிகளில் சத்துப் பற்றாக்குறையால் ஊட்டம் குறைந்தால் பரிந்துரைக்கப்பட்ட ரசாயன உரத்தை இட்டால் போதுமானது. அவ்வப்போது களைகளை மட்டும் அகற்றி வர வேண்டும். விதைத்த 70-ஆம் நாளுக்குமேல் அறுவடை செய்யலாம்.”
கலப்பு உரத்துக்குப் பதில் ஜீவாமிர்தம்!
அகத்திக்கீரையை இயற்கை முறையில் சாகுபடி செய்வது குறித்து பேசிய முன்னோடி இயற்கை விவசாயி தாந்தோணி, “அகத்திக்கீரையை ஒருமுறை விதைச்சா 10 வருடங்கள் வரை பலன் கொடுக்கும். இந்தப் பகுதியில இயற்கை விவசாயத்தில அகத்திக்கீரைச் சாகுபடி செய்றவங்களும் இருக்கிறாங்க. அகத்திக்கீரைக்கு மாட்டு எருவை அதிகமா கொடுக்கலாம்.
யூரியா, பொட்டாஷ் மாதிரியான ரசாயன உரங்களுக்குப் பதிலா ஜீவாமிர்தம் கொடுத்து வந்தாலே அகத்திக்கீரையில நல்ல மகசூல் எடுக்கலாம். இதுதவிர, ஜீவாமிர்தத்த தெளிச்சோ, பாசன தண்ணில கலந்துவிட்டோ பயிர்களுக்குக் கொடுக்கலாம்.
கலப்பு ரசாயன உரம் பயன்படுத்தினா பூச்சித்தாக்குதல் இருக்கும். அதனால, கலப்பு உரத்தைத் தவிர்க்கிறது நல்லது. இயற்கை உரங்கள உபயோகப்படுத்தினா சந்தை வாய்ப்பும் நன்றாக இருக்கும்” என்றார்.
தொடர்புக்கு, தாந்தோணி, செல்போன்: 93814 57817
அகத்தியில் நிச்சய வருமானம்!
ராமலிங்கத்தின் வயலில் அகத்தி அறுவடை செய்துகொண்டிருந்த கீரை வியாபாரி ரமேஷிடம் பேசினோம். “வந்தவாசி, மதுராந்தகம், உத்திரமேரூர் பகுதிகள்ல அகத்திச் சாகுபடி அதிகமாக நடக்குது. சிலர் எங்களமாதிரி வியாபாரிகள்கிட்ட கேட்டுட்டுத்தான் நடவே செய்வாங்க. முதல் அறுவடை முடிஞ்சதும் 40 நாளுக்கு ஒருதடவை, சரியான நேரத்துக்குப் போய் அறுவடை செஞ்சுடுவோம்.
அறுவடைச் செலவெல்லாம் எங்களைச் சேர்ந்தது. அகத்தி போட்டா கண்டிப்பா நல்ல வருமானம் எடுக்க முடியும். அகத்திச் சாகுபடி செய்றதுக்கு அதிகச் செலவும் ஆகாது. அதனாலதான் இந்தப் பகுதில அகத்தியை விரும்பிச் சாகுபடிசெய்றாங்க” என்றார்.
விகடன்