- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

பி எஸ் அப்துல் ரஹ்மான் (B.S. Abdur Rahman)

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த பி. எஸ். அப்துர் ரகுமான் (B.S. Abdur Rahman) அவர்கள், ஒரு சிறந்த தொழிலதிபராகவும், கல்வியாளராகவும், கொடைவள்ளலாகவும் திகழ்ந்தவர். அவரைப் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள் இதோ:

கீழக்கரையின் சீனா ஆனா (Sena Aana)

 

​கீழக்கரையில் உள்ள மக்கள் இவரை அன்போடு “சீனா ஆனா” என்று அழைப்பார்கள். இவர் புகழ்பெற்ற வள்ளல் சீதக்காதி அவர்களின் குடும்பப் பாரம்பரியத்தில் வந்தவர்.

முத்து வணிகத்தில் தொடங்கிய பயணம்

​இவருடைய தந்தை சையத் முகம்மது புகாரி ஆலிம் ஒரு சிறந்த முத்து வணிகர். தந்தையைப் பார்த்தே முத்து மற்றும் ரத்தினங்களின் தரத்தை மதிப்பிடும் கலையைக் கற்றுக்கொண்டார். தனது 15 வயதிலேயே கொழும்புவிற்குச் சென்று ரத்தின வணிகத்தில் ஈடுபடத் தொடங்கினார்.

ஹாங்காங்கில் தடம் பதித்த முதல் கீழக்கரைக்காரர்

​ரத்தின வணிகத்திற்காக பெல்ஜியம், அமெரிக்கா எனப் பல நாடுகளுக்குச் சென்றவர், ஹாங்காங்கில் தனது வணிகத்தை விரிவுபடுத்தினார். ஹாங்காங்கிற்கு வணிகத்திற்காகச் சென்ற முதல் கீழக்கரைக்காரர் இவர்தான் என்று கூறப்படுகிறது. அங்கு ETA-Ascon போன்ற பெரிய நிறுவனங்களை உருவாக்கினார்.

கல்வியில் புரட்சி

​வறுமையை ஒழிக்க கல்விதான் சிறந்த வழி என்று நம்பிய அவர், ஏராளமான கல்வி நிறுவனங்களை நிறுவினார்:

​வண்டலூர் கிரசன்ட் பொறியியல் கல்லூரி 1984-ல் தொடங்கப்பட்ட இது, தமிழகத்தின் முதல் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் ஒன்று. தற்போது இது பி. எஸ். அப்துர் ரகுமான் கிரசன்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் என்ற பெயரில் பல்கலைக்கழகமாக இயங்கி வருகிறது.

​தாஸிம் பீவி அப்துல் காதர் பெண்கள் கல்லூரி: தனது சகோதரியின் நினைவாக கீழக்கரையில் பெண்களுக்காகவே இந்தக் கல்லூரியைத் தொடங்கினார்.

சென்னைக்கு வழங்கிய அடையாளங்கள்

​சென்னையின் பல முக்கிய கட்டிடங்களை இவரது நிறுவனமே (East Coast Constructions) கட்டியது

மருத்துவமனை கீழக்கரையில்

ஏழை மக்களுக்காக யூசுப் சுலைகா (Yousuf Zulaikha) மருத்துவமனையை நிறுவினார்.

​காப்பகங்கள் இராமநாதபுரம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல இடங்களில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக ‘அல்-மூமின்’ இல்லங்களை உருவாக்கினார்.

​விளையாட்டு: இளைஞர்களை ஊக்குவிக்க 1997-ல் தமிழக அரசுக்கு ஒரு விளையாட்டு மைதானத்தைக் கட்டி தானமாக வழங்கினார்.

எம்.ஜி.ஆர் உலகம் சுற்றும் வாலிபன் படத்தைத் தயாரிக்கும்போது பல வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடந்தது. அதற்கான ஒத்துழைப்பை வெளிநாட்டுவாழ் தமிழர்கள் எம்.ஜி.ஆருக்கு அளித்தனர். அவர்களில் முக்கியமானவராக பி.எஸ்.அப்துல் ரஹ்மானும் இருக்கிறார், படத்தின் டைட்டிலில் அவருடைய பெயரும் இடம்பெற்றிருப்பதைப் பார்க்க முடியும்.

இவர் கால்வைக்காத தொழில்துறைகள் அபூர்வமானதாகத்தான் இருக்கும். முத்து, வைரம், ரத்தினங்களின் வணிகராக இருந்தவர் கப்பல் போக்குவரத்தையும் நடத்தியிருக்கிறார். இத்தகைய வளர்ச்சிக்கு முன்னோட்டமாக இருந்த ஆரம்பத் தொழில் என்னவென்று பார்ப்போமேயானால் அது ஆச்சரியத்தைத் தருவதாக இருக்கிறது.

இன்றைக்கு ரமலான் நோன்பு தொடங்கியிருக்கிறதல்லவா? இந்த நோன்புகளின் முடிவில் வரும் பெருநாளன்று அவர் கீழக்கரைக் கடைவீதியில் இனிப்பு, காரவகைகளிலான பண்டங்களை விற்றதுதான் அவருடைய முதல் தொழிலாகும். இந்த இனிப்பும் காரமும்கூட அவருடைய சொந்தத் தயாரிப்பல்ல. இவற்றை அவர் உசிலம்பட்டிக்குச் சென்று வாங்கிவந்துதான் பெருநாளன்று விற்றுக் காசு பார்த்திருக்கிறார். இதில் நல்ல லாபம் கிடைத்தது. இந்தத் தொழில் ஆர்வத்தைக் கண்டு அவருடைய வாப்பா அவரை ஊக்குவித்து வழிநடத்தினார். அதன் விளைவாக அவரின் வணிகம் ஆலமரம்போல விழுதுகளைப் பரப்பியது.

வணிகம் சிறந்தபின் கல்விநிறுவனங்கள் தொடங்குவதில் ஆர்வம் காட்டினார். கீழக்கரையிலுள்ள ஹமீதியா பள்ளிக்கூடம் உயர்நிலைப் பள்ளியாக முன்னேற்றமடைந்தபோது அண்டையிலுள்ள கிராமங்களுக்குச் சென்று அவ்வூர் ஜமாத்தினர்களைச் சந்தித்துத் தம் பள்ளிக்கூடத்தின் மாணவர் சேர்க்கைக்கு உதவிடுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார். இதன் வழியாகப் பக்கத்து ஊரிலிருந்து ஏழையெளிய மாணவர்கள் அப்பள்ளியில் பயில வந்தபோது அவர்களுக்கான பாடப்புத்தகங்கள், நோட்டுகள், பென்சில், பேனா உள்ளிட்ட அனைத்தையும் இலவசமாகவே வழங்கினார். சென்னையில் ஹாரிங்டன் சாலையில் கிரசெண்ட் பள்ளிக்கூடத்தை உருவாக்கினார். இது ஒரு வாடகைக் கட்டடத்தில் இயங்கியது.

The Hindu நாளிதழின் நிர்வாகிகளும் இவருக்குப் பின்னர் உதவினர். அது எப்படியென்றால் வண்டலூர் அருகே ஹிந்து நாளிதழின் நிர்வாகிகளுக்குச் சொந்தமான நிலம் ஒன்று இருந்தது. அதை வாங்கலாமே என்ற எண்ணத்தில் ஹிந்து நாளிதழின் நிர்வாகிகளை அணுகினார் அப்துல் ரஹ்மான். அவர்கள் உடனடியாக நிலத்தை விற்கச் சம்மதித்தனர். கல்வி நிறுவனத்திற்காக அந்த நிலத்தைக் கொடுப்பதால் அதைக் குறைந்த விலைக்கே விற்றனர். இன்று அந்த இடத்தில்தான் கிரசெண்ட் பல்கலைக்கழகம் செயல்படுகிறது.

சென்னையில் பாலிடெக்னிக் கல்லூரியைத் தொடங்க எண்ணி அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரை அணுகியபோது, “ ஏன் பாலிடெக்னிக் தொடங்குகிறீர்கள்? பொறியியல் கல்லூரி தொடங்கலாமே, நான் அனுமதி தருகிறேன்,” என்று சொல்லியிருக்கிறார். அதனால் அவர் தொடக்கிய பொறியியல் கல்லூரி தமிழ்நாட்டின் தனியார் பொறியியல் கல்லூரிகளாக ஆரம்பிக்கப்பட்ட முதல் ஆறு கல்லூரிகளில் ஒன்று. இவருடைய கல்விப் பணிகளுக்குக் கல்வியில் ஆர்வம்கொண்டிருந்த தமிழ்நாட்டின் முக்கியமான முஸ்லிம் பிரமுகர்கள் பலரும் கைநீட்டி உதவியுள்ளனர்

​அப்துர் ரகுமான் அவர்கள் Star Health Insurance நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2015-ம் ஆண்டு இவர் காலமானார்.