மூளையில் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றிய ஆராய்ச்சி
மனிதர்களாக பிறந்த யாவரும் `தான்’ என்று சொன்னாலே அது கண்டிப்பாக ஆன்மாவுடன், மூளையுடன், தனிமனிதனுடன் தொடர்புடையதுதான். இப்பொழுது திரைப்படங்களில் மனநிலை சம்பந்தப்பட்ட கதைகளை பற்றித்தான் பார்க்கிறோம். `பன்மடங்கு ஆளுமை முறையின்மை’, `அம்னீஷியா’ எனப்படும் மறதி நோய் இப்படிப் பலவகைகளில் ஏதோ காரண காரணியங்களால் மூளையில் ஏற்படும் பாதிப்புகள் உள்ளன. இதுமட்டும் தான் நமக்கு தெரிந்திருக்கும். ஆனால் இதைப்பற்றி அறிவியல் அறிஞர்கள் தீவிரமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பற்பல புதுப்புது தகவல்களை அளித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். `தான்’ என்பதை சாதாரணமாக விட்டுவிட முடியாது. இதனைப் பற்றி டார்மூத் பல்கலைக் கழக மனோதத்துவ விஞ்ஞானி டாட் ஹெதர்டன் பல ஆண்டுகளாக சக அறிவியல் அறிஞர்களுடன் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். தான் என்பது எப்படி மூளையுடன் சிந்தனையுடன் தொடர்புடையது என்பதைப் பற்றி பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து வருகின்றனர். எப்படி தான் என்பது மூளையிலிருந்து வெளிப்படுகிறது என்பதை ஆராய்ந்து வருகின்றனர்.
அமெரிக்க மனோதத்துவ நிபுணர் வில்லியம் ஜேம்ஸ் இதனைப் பற்றி தன்னுடைய “மனோதத்துவக் கோட்பாடுகள்” என்ற புத்தகத்தில் இதனுடைய விளக்கங்களை எழுதியுள்ளார். விஞ்ஞானிகள் சில சம்பவங்களை மேற்கோள் காட்டுவதன் மூலம் தான் என்ற உணர்விற்கும் சுய நினைவிற்கும் வேறுபாடுகளை கண்டறிந்துள்ளனர். 19-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட ஒரு விபத்தின் மூலம் பினியஸ் கேஜ் என்பவருக்கு மூளையில் ‘தான’ பகுதியில் ஏற்பட்ட பாதிப்பை பற்றி விளக்குகின்றனர். ரெயில்வே கட்டுமானப் பணியில் மேற்பார்வையாளராக பணிபுரிந்த இவருக்கு டைனமைட் வெடித்ததன் காரணமாக இரும்பு துகள்கள் காற்றின் மூலமாக அவரது தலையில் பலமாக ஊடுருவியது. ஆனால் அதிசயமாக உயிர் தப்பினார். இந்த விபத்திற்கு பிறகு கேஜ் உடைய நண்பர்கள் அவரது தன்மையில், நடவடிக்கையில் மாற்றத்தைக் கண்டனர்.
இதற்கு முன் கேஜ் ஒரு திறமையான ஊழியராகவும், திறமைமிக்க தொழில் முனைவோராகவும் கண்டனர். ஆனால் விபத்திற்கு பின் மிகவும் உணர்ச்சியற்றவராகவும், எதிலுமே விருப்பம் இல்லாதவராகவும், விபத்திற்கு முன் எவ்வளவுக்கெவ்வளவு மற்றவர்களிடம் அன்பு, மரியாதை செலுத்தினாரோ அந்த அளவிற்கு அவரிடம் குணங்கள் காணப்படவே இல்லை யாம். மாறாக இக்குணங்கள் குறைபாடுள்ளவராக இருந்தாராம். அவருடைய நண்பர்கள் கூறுகையில், “பழைய கேஜ் நம்மிடம் இல்லை” என்றனராம்.
இதிலிருந்து தெளிவாக புரிவது என்னவென்றால், சுயநினைவிழப்பது தான் என்ற நிலை இழப்பது. இவை இரண்டும் வெவ்வேறானவை. சுயநினைவிழக்காமலேயே நல்ல திடகாத்திரமானவன் தன்னுடைய நிலையை இழக்கலாம். மூளை பாதிப்பிலிருந்து தெரிவது என்னவென்றால் தன்னிலை என்ற அமைப்பு சிக்கலான வகையிலேயே அமைந்திருக்கிறது. சான்டா பார்பராவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் ஸ்டான் பி. க்லென் தன்னுடைய சக நிபுணர்களுடன் 2002ல் நடந்த மற்றொரு சம்பவத்தின் ஆய்வில் அம்னீஷியா என்ற மூளையில் ஏற்படும் பாதிப்பை பற்றி விளக்குகின்றனர். 75 வயதுடைய ஒரு வருக்கு மாரடைப்பினால் மூளையில் அம்னீஷியா என்ற பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் இவர் தன்னுடைய பழைய நினைவுகள் மற்றும் கடந்த காலத்தில் தான் செய்த அனைத்து நடவடிக்கைகள் மற்றும் கடந்தகால சம்பவங்கள் அனைத்தையும் மறந்தார். ஆனால் மற்ற இயக்கங்களை திரும்பப் பெற்றாலும் சுய நினைவை இழக்கவில்லை. நினைவகத்தில் உள்ள கடந்த கால நினைவுகள் எல்லாம் கம்ப்யூட்டர் விவரங்கள் அழிந்தது போல் ஆகிவிட்டது. சமீப காலமாக விஞ்ஞானிகள் மூளையை ஸ்கேன் செய்வதன் மூலம் பல அரிய தகவல்களை அளித்து வருகின்றனர்.
நம்முடைய நிலைமையைப் பற்றி அறிவது, நம்முடைய ஒவ்வொரு அங்கங்களின் அசைவு மற்றும் நடவடிக்கைகள் எப்படி மூளையிலிருந்து கட்டளையிடப்பட்டு கண்காணிக்கப்படுகிறது என்ற விவரங்களை அளிக்கின்றன. லண்டனிலுள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் மூளையை ஸ்கேன் செய்வதன் மூலம் எவ்வாறு நாம் நம் உடலைப் பற்றி அதனுடைய உணர்வுகளை அறிய முடிகிறது என்று கண்டறிந்துள்ளனர். அப்பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர் சாரா ஜெய்னி பிளாக்மோர் கூறுகையில், “இது மிகவும் அடிப்படையான விஷயம் என்றும், தன்னிலையின் முதல் கட்டமாகும்” என்கிறார். நம்முடைய மூளை ஒரு நடவடிக்கையை அல்லது ஒரு பணியை செய்வதற்கு இரண்டு சமிக்ஞைகளை அனுப்புகிறது. ஒன்று குறிப்பிட்ட அப்பணியை செய்வதற்கு மூளையிலுள்ள எந்தவொரு குறிப்பிட்ட பகுதி கட்டுப்படுத்துகிறதோ அல்லது கண்காணிக்கிறதோ அப்பகுதிக்கும், மற்றொன்று பணியை செய்யும் அங்கம் அல்லது உடலின் அப்பகுதிக்கு சமிக்ஞையை அனுப்புகிறது. பிளாக்மோர் கூறுகையில், “இது மின்னஞ்சலில் ஒரே தகவலை இரண்டு நபர்களுக்கு அனுப்புவது போன்றதாகும். அதாவது நகல் அஞ்சல் மற்றொருவருக்கு அனுப்புவது போன்றதாகும்.” என்கிறார். உதாரணமாக நாம் டி.வி யை ஆன் செய்கிறோம் என்றால் ஒரு சமிக்ஞை, கைக்கும் மற்றொன்று மூளையில் இப்பணியை செய்வதற்காக கண்காணிக்கும் பகுதிக்கும் செல்கிறது. மனிதன் தன்னைப்பற்றி அறிவதற்கு அல்லது தன் உணர்ச்சிகளை அறிவதற்கு நான் யார்? நாம் என்ன செய்கிறோம்? எங்கு இருக்கிறோம்? என்ன செயலை செய்கிறோம்? இப்படி சுய நிலையை அறிவதற்கு மூளையின் ஒரு பகுதி திட்டமிடுகிறது, கண்காணிக்கிறது, செயல்படுத்துகிறது. இது மனிதன் நான் யார்? என்பதை இழக்காமல் பார்த்துக்கொள்கிறது. இவ்வாறு ஒவ்வொரு பகுதியும் செயல்படுகிறது. பழைய கடந்த கால நடவடிக்கைகளை, சம்பவங்களை, வரலாறுகளை மறுபடியும் அசைபோடுவதற்கு உதவி புரிகிறது.
நவீன விஞ்ஞான வளர்ச்சியில் இந்த அரிய கண்டுபிடிப்புகள் மூலம் மூளையின் செயல்பாடுகள், மூளையின் எந்த ஒரு குறிப்பிட்ட பகுதியின் பாதிப்பால் மனிதனிடம் எந்த ஒரு குறை ஏற்படுகிறது. எதனால் பழைய நினைவுகளை மறக்கிறான். அப்பகுதியை மறுபடியும் சீரமைத்தால் குணமாகிவிடுமா? எப்பகுதியில் பாதிப்பு ஏற்படுவதால் தான் சுய உணர்வை இழக்கின்றான். அதாவது தன்னையே மறந்துவிடுவது. அறிவியலின் அதிவேக வளர்ச்சியின் உதவியால் மட்டுமே மனநிலைக் கோளாறு, மூளையில் ஏற்படும் கோளாறுகள் பிரிக்கப்பட்டு இன்னென்ன மனநிலைக் குறைபாடுகள் மூளையின் குறிப்பிட்ட பகுதியின் பாதிப்பால் ஏற்படுகிறது என்றெல்லாம் கண்டறியப்பட்டு அதற்கேற்ற சிகிச்சைகள் மேற்கொள்ள முடிகிறது.
உதாரணமாக இன்றைய காலத்தில் மின்சாரம் அதிர்ச்சியூட்டும் சிகிச்சை முறை போன்றவையாகும். இன்னும் அதிநவீன முன்னேற்றத்தால் மூளையில் ஏற்படும் பலவித குறைபாடுகள் அறுவை சிகிச்சை இல்லாமலேயே ஊசி, மாத்திரைகளால் குணப்படுத்த முடியும் என்கிற அளவிற்கு எளிதாகிவிடும் என்பது உறுதி!
எம்.ஜே. எம்.இக்பால், துபாய்.