Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

May 2021
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 787 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஏழு்மையிலும் நேர்மை (கதை)

எக்ஸ்பிரஸ் சரியாக காலை எட்டு மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு விட்டது.

ஒரு இரண்டாம் வகுப்பு பெட்டியில் பஞ்சு மாமாவும், பார்வதி மாமியும் அமர்ந்திருந்தனர்.

தஞ்சாவூரில் உள்ள பெண் வீட்டுக்கு செல்கிறார்கள்.
லக்கேஜ் அதிகம் இல்லை.

பார்வதி மாமிக்கு எழும்பூரிலேயே ஆனந்த விகடன், மங்கையர் மலர் இரண்டும் வாங்கிக் கொடுத்து விட்டார்.

ரயில் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மாமி அதில் மூழ்கி விட்டாள். மாமாவுக்கு அதில் இன்டெரெஸ்ட் இல்லை. ஹெட்போனை காதில் மாட்டிக்கொண்டு, யூட்யூபில் இருந்து டவுன்லோடு செய்த எம்.எஸ்.ஜி வயலின் கச்சேரியை கேட்க ஆரம்பித்தார்.

செங்கல்பட்டு தாண்டியதும் வீட்டிலிருந்து கொண்டு வந்த மிளகாய்ப்பொடி தடவிய இட்லியையும் சாப்பிட்டாகி விட்டது.

அடுத்தது காபி.
“ஏன்னா…காபி வந்தா வாங்குங்கோ…
நான் சித்த நேரம் விகடன் பாத்துண்டிருக்கேன்…”

“இந்த பேண்ட்ரி கார் காபி நன்னா இருக்காதுடி…
மேல்மருவத்தூர் ஸ்டேஷன்ல வாங்கித் தரேன்..”
“சரி”

வண்டி மேல்மருவத்தூர் அடையும்போது மணி 9.30.
வண்டி பிளாட்பாரத்தை அடையும்போதே வாசலுக்கு போனார்.
நல்ல வேளை.
ரெடியாக காபி வெண்டர் ஓர் ஆள் இருந்தான்.
“ரெண்டு காபி குடுப்பா”

முதலில் ஒரு காபியை மாமியிடம் கொடுத்துவிட்டு, மீண்டும் இரண்டாவது காபியை சீட்டில் வைத்து விட்டு,
அவனுக்கு பணம் கொடுக்க பர்ஸை எடுத்தார்.

ஒரு 200 ரூபாய் நோட்டுதான் இருந்தது. அதை அவனிடம் கொடுத்தார்.
“சார் 20 ரூபாயா இல்லையா சார்..”
“இல்லையேப்பா”

அவன் பாக்கியை கொடுக்க, தன் பாக்கெட்டை துழாவினான்.
அதற்குள் வண்டி புறப்பட்டு விட்டது.

பாக்கெட்டை துழாவிக்கொண்டே வண்டியின் பின் ஓடி வந்தான்.

அதற்குள் வண்டி பிளாட்பாரம் எல்லையை கடந்து விட்டது.
அதற்கு மேல் அவனால் ஓட முடியவில்லை.

பஞ்சு மாமா சீட்டிற்கு திரும்பி,
ஒன்றுமே நடக்காதது போல்,
காபியை உறிஞ்சி குடிக்க ஆரம்பித்தார்.

எல்லாவற்றையும் மாமி பார்த்துக்கொண்டு இருந்தாள்.
“என்ன 200 ரூபா போச்சா?”
“ஆமாம்..அதுக்கென்ன இப்போ?”

“யாராவது அவனண்டை 200 ரூபாய் குடுப்பாளா?”
“அவன் பாக்கி தர ட்ரை பண்ணினாண்டி..அதுக்குள்ள ட்ரெயின் கிளம்பிடுத்து..

என்ன பண்ணுவான் பாவம்..”
“போதுமே உங்க சமத்து…அவனை அப்டியே நம்பறேள் பாருங்கோ..

அங்க தான் உங்க அசட்டுத் தனம் நிக்கறது..”
“அவன் என்னை ஏமாத்தினான்னு சொல்றயா?”
“இல்லையா பின்னே..

அவன் சும்மா வண்டி பின்னாடி ஓடி வரா மாதிரி ஸீன் போட்டிருக்கான்..

அதை கூட புரிஞ்சுக்க தெரியலையே உங்களுக்கு..”
“போனா போறது டி..

பாவம் ஏழை..”
“பணத்தை கோட்டை விட்டது இல்லாமே, அவனுக்கு வக்காலத்து வாங்கறேளா?”
“போதும்..
உன் ஆத்துக்காரனுக்கு சாமர்த்தியம் போறாது தான்…
வாயை மூடிண்டு வா..”
இந்த சம்பாஷணையை வண்டியில் இருந்தவர்கள் அத்தனை பேரும் வேடிக்கை பார்த்தனர்.

அவர்களுக்கு இது ஏதோ சீரியல் பார்ப்பது போல் இருந்தது.

பலர் மாமா அசடு தான் என்ற தீர்மானத்துக்கு வந்தனர்.
சிலர் ‘இந்த மாமிக்கு ஆனாலும் வாய் ஜாஸ்தி…

மாமாவை எப்படி மட்டம் தட்டுகிறாள் என்று நினைத்தனர்.

வண்டியின் வேகம் அதிகரிக்க, எல்லோரும் இந்த சம்பவத்தை மறந்து,
அவர்கள் முன்பு செய்து கொண்டிருந்ததை தொடர்ந்தனர்.

மாமா மீண்டும் கச்சேரியை தொடர்ந்தார்.
எம்.எஸ்.ஜி “ஞானமு சகராதா” வாசித்துக் கொண்டிருந்தார்.

ஆனந்தமாக கண்ணை மூடி ரசித்ததில் அந்த 200 ரூபாயை மறந்தே போனார்.

25 நிமிடத்தில் திண்டிவனம் வந்து விட்டது.
அது ஒரு ரிசர்வேஷன் கம்பார்ட்மெண்ட் என்று பாராமல்,
கூட்டம் முண்டியடித்துக் கொண்டு ஏறியது.

எல்லோருக்கும் அவரவர் அவசரம்.
கூடவே ஒரு 15 வயதுப் பையனும் ஏறினான்.

அவன் அங்குலம் அங்குலமாக முன்னேறி, பஞ்சு மாமாவின் சீட் அருகில் வந்து விட்டான்.

“சார் மேல்மருவத்தூர் ஸ்டேஷன்ல நீங்க காபி குடிச்சீங்களா?”
“ஆமாப்பா”

“சார்..இந்தாங்க உங்க 180 ரூபாய்..” என்று சொல்லி,
ஒரு நூறு ரூபாய் நோட்டையும்,
நான்கு 20 ரூபாய் நோட்டுகளையும் அவர் கையில் திணித்தான்.

அவருக்கு சட்டென்று ஒன்றும் புரியவில்லை.

“சார்..நீங்க மேல்மருவத்தூர்ல காபி வாங்கினீங்களே,
அவர் பையன் சார் நானு. இது சகஜமா அடிக்கடி நடக்கும் சார். மேல்மருவத்தூரில் ட்ரெயின் ஒரு நிமிஷம் தான் நிக்கும்..

அதனால சில பேருக்கு பாக்கி சேஞ்ச் குடுக்க முடியாம போயிடும்.
தினமும் கொஞ்சம் பணத்தோட ட்ரெய்னில் வந்துடுவேன்.

அப்பா மேல்மருவத்தூரில் ட்ரெய்ன் புறப்பட்ட உடனே இதுமாதிரின்னா போன் பண்ணி கம்பார்ட்மெண்ட் விவரம் சொல்லிடுவார்.

நான் இங்கே ஏறி பாக்கி சில்லறை குடுத்துட்டு விழுப்புரத்துல இறங்கி திரும்ப செங்கல்பட்டு போயிடுவேன் சார்.
“உங்கப்பா போன் நம்பர் குடுப்பா”

“இதோ சார்…”

“அய்யா..உங்க பையன் என் பாக்கி 180 ரூபாயை திருப்பி குடுத்துட்டான்…
ஆனா நான் பேசறது அதுக்காக இல்லை…
அவனுக்கு நேர்மையை நீங்க கத்துக்குடுத்திருக்கீங்க பாருங்க..
அதுக்காக உங்களை பாராட்டியே ஆகணும்…
அதுக்காக தான் போன் பண்ணேன்..”

“ரொம்ப நன்றிங்க சாமி..
நான் அஞ்சாங்கிளாஸ் தான் படிச்சிருக்கேன்..
ஆனா இந்த பழக்கம் இருக்கறதுனால தான் நிம்மதியா வாழ்க்கை நடத்த முடியுதுங்க சாமி…

அதான் இதை என் ரெண்டு பசங்களுக்கும் சொல்லி குடுத்திருக்கேன்”

பஞ்சு மாமாவுக்கு நெஞ்சமெல்லாம் நிறைந்தது.

கண்களில் நீருடன் அந்தப் பையனை தட்டிக் கொடுத்தார்.

பார்வதி மாமி,
தன் கணவனை இப்போது பார்த்த பார்வையில் பெருமை நிறைந்திருந்தது