Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,951 முறை படிக்கப்பட்டுள்ளது!

மதுவிலக்கே மந்திரமாகட்டும்

மதுவை விலக்குகாலம் எத்தனை மாற்றங்களை ஏற்படுத்தினாலும் மனித குலத்துக்கு நன்மையை உடனடியாக அது செய்யாதபோது நீண்ட காலத்துக்கான அடிப்படையிலும் அது நன்மை தருவதில்லை. நன்மையைத் தராவிடினும் தீமையைத் தராமலாவது இருக்கலாம். குறிப்பாக பொழுதுபோகுக்கான பழக்கங்கள் ஒரு தலைமுறையை அழிப்பதோடு நான்கைந்து தலைமுறையையும் பாழ்படுத்தாமல் இருப்பதில்லை. பரம்பரையாய் உயிர்க் கொல்லி நோயாய் இருப்பது மதுப்பழக்கம்.

மது என்பது எந்த வகையாக இருந்தாலும் அது ஏதோ ஒரு வகையில் தீமை பயப்பதுதான். இன்றைக்குக் ‘கள்’ இறக்குவதைச் சட்டப்படி குற்றமற்றதாக அறிவிக்க வேண்டும் என்றும் ‘கள்’ளை மதுபான பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என்கிற குரலும் எழுந்திருக்கிறது. அதற்கு ஆதரவாகப் பல அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன. அரசியல் கட்சிகளைப் பொருத்தவரை எந்த லட்சியமும் அற்ற கொள்ளைக் கூட்டணியாகச் செயல்படுவதால் இதைத்தான் எதிர்பார்க்க முடியும். ஒரு காலத்தில் மாப்பிள்ளைக்குக் குடிக்கிற பழக்கம் இருக்கிறதா? என்றுதான் பார்ப்பார்கள். இப்போது படித்த மாப்பிள்ளைகள் ‘பாரில்’ அமர்ந்து குடிப்பதை நாகரிகமாகவும் ‘பார்ட்டி’ என்கிற பெயரில் குடித்துக் கும்மாளமிடுவதை உயர்வென்றும் கருதுவதும் குடியின் ஆதிக்கமாகக் கருதலாம். குடித்து விட்டுத் தெருவில் வீழ்ந்து கிடப்பதும் தகராறு செய்வதும் பண்பற்ற செயல்களாக இருந்த நிலைகூட மாறி, இதுவெல்லாம் இனித் தடுக்க இயலாது என்கிற பொதுப்புத்தி நிலைக்கு இந்த நாடு தள்ளப்பட்டு விட்டது.

கவிஞர்கள், எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள் என்று சகல துறையினரும் குடிப்பதைப் பற்றிக் குற்றவுணர்வு ஏதும் இல்லாமல் இயல்பாக அதுபற்றி, இது தனிமனித சுதந்திரம் என்று கருத்துரைப்பதும் இதற்கு ஆதாரம் தேடி சங்க இலக்கிய உதாரணங்கள் என்று பிதற்றுவதும் வெட்கக் கேடான விஷயம் என்பது மட்டுமன்றி, ஒரு தலைமுறைக்கே தவறான வழிகாட்டும் கைகாட்டி மரங்களாகவும் இவர்கள் வலம் வருகிறார்கள்.

குடியால் உயர்ந்தவர்களைப் பற்றி இவர்களால் யாரேனும் ஒருவரை அடையாளம் காட்ட முடியுமா…? அரசுக்கு வருமானம் மதுக்கடைகள் என்று அரசுகள் பிதற்றுகின்றனவே, இது வரை வறுமை ஒழிந்திருக்கிறதா…? வேலை வாய்ப்புகள் தான் பெருகியுள்ளதா…?

படித்த பண்புள்ள இளைஞர்கள் பலரும் ‘டாஸ்மாக்’ மதுக்கடைகளில் வேலைக்குச் சேர்ந்தபின் புதிய குடிகாரர்களாய் மாறிப்போனதை யாராலும் மறுக்க இயலுமா…? மேலதிகாரிகளைச் சரிகட்ட, எப்படியாவது சம்பாதிக்கிற உத்திகளைப் பழகவில்லையென்றாவது கூற முடியுமா…? கல்லூரி மாணவர்களில் சிலர் மேலைநாட்டுத் தாக்கத்தின் விளைவாகக் குடிக்கிற பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர்.

குடிக்கிற ஆண்களைக் கண்டிக்க வேண்டிய மாதர்கள்கூட குடிக்கத் தொடங்கிய வரலாறுகளும் நம்மிடம் உண்டு. தாயே தன் மகனுக்கு ஊற்றிக் கொடுக்கிறாராம். வெளியே சென்று அதிகமாகக் குடித்துப் பழகி விடுவானாம். வீட்டிலேயே ஒரு ‘பெக்கோ’ இரண்டு ‘பெக்கோ’ கொடுத்து விட்டால் வெளியே சென்று சீரழிய மாட்டானாம். குடிக்கு வக்காலத்து வாங்குகிற வணிக ஊடகத்தில் பிதற்றுகிற பேட்டியின் குரல் இது.

குடியின் தீமைகளைப் பற்றிப் பல நூற்றாண்டுகளாக பலரும் குரல் கொடுத்து வரும்போது இந்த நூற்றாண்டிலும் தேவைதானா….? என்கிற ஒரு பழமைக் கேள்வி புதுமையாய் எழுந்து வரும்! எந்த நூற்றாண்டானால் என்ன? நெருப்பு சுடத்தானே செய்யும்! குடி, குடியை எப்போதும் கெடுக்கத்தான் செய்யும். மிகப் பெரிய சாதனையாளர்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு பகுதியில் குடித்தே அழிந்து போயிருக்கிறார்கள்.

சில கருத்துகளை ஏற்கெனவே சொல்லப்பட்டு விட்டது என்று ஒதுக்கி விட முடியாது. திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டுதான் இருக்க வேண்டும். புதிய தலைமுறைக்கு இந்தக் கருத்துகள் மிகவும் அவசியம் தான். ஒரு தவறை தவறே இல்லையென்று சமாதானப்படுகிற ஒரு தலைமுறை உருவாகி வருகிறபோது இத்தலைமுறையை யார் எப்படிக் காப்பாற்றுவது?

குடி, ஒருவகையில் தனிமனிதப் பிரச்னைதான். அவர்களின் பணம், செல்வம் குடியில் அழிந்து விடுகிறபோது மீறிப்போனால் அக்குடும்பம் பாழ்படும். இது மேலோட்டமானதுதான். குடிக்கிற ஒருவனுக்குப் பிறக்கும் குழந்தைக்கும் நோய்க்கூறு ஏற்படும். குறைந்த விலை மருந்து, உழைக்கும் திறன் குறைவதால் நாட்டுக்கு இழப்பு என்று தொடர் சங்கிலிபோல் குடிகாரர்கள் பிரச்னைகள் தொற்று நோயாகி விடுகின்றன.

குடியை ஒழிக்க அல்லது கட்டுப்படுத்த இடைவிடாத பிரசாரமும் கருத்துப் பரிமாற்றமும் இன்றைக்குத் தேவை. இதற்கான வாய்ப்புகள் உருவாக்குகிற எந்தக் கட்சியையும் அமைப்பையும் ஆதரிக்கத்தான் வேண்டும்.

பூரண மதுவிலக்கே நம் நாட்டின் அறிவுச் செல்வத்தை தக்க வைக்கும். உழைக்கும் திறனை மேம்படுத்தும்! தனி நபர் சேமிப்பைப் பெருக்கும்! வாழ்க்கை வளமும் நலப்படும்! பூரண மதுவிலக்குக்கு யார் குரல் கொடுக்கிறார்களோ அவர்களை அமைப்பு ரீதியாக ஆதரித்துச் செயல்படுவது காலத்தின் கட்டாயம்!

நன்றி : – க. அம்சப்ரியா – தினமணி