இன்று:
மாலை ஐந்துமணி
மஹரிபா பரபரத்தாள்!
அரைமணிப் பயணம்
அடுத்திருந்த டவுனுக்கு!
இருந்தாலும் அவளுக்குள்
ஏனோ ஒரு துருதுருப்பு!
“சீக்கிரமா வாங்களேன்”
சீறினாள் கணவனிடம்
மஹ்ஷூக் அவள் கணவன்
மௌனமாய்ப் பின் தொடர்ந்தான்
போர்டிகோவில் நின்றிருந்த
புதிய பியட்காரை
நளினமாய் ஸ்டார்ட்செய்தான்
நகர்ந்தது அந்தக்கார்!
தெருக்களைக் கடந்து
தென்கோடி வந்தவுடன்
மெயின்ரோட்டில் வளைந்து
மேற்கே விரைந்ததுவே!
வழியில் ஓரேழை
வருத்தத்துடன் நின்றானே!
“அத்தா சீதேவி
அம்மாவுக்கு முடியல
பஸ் இன்னும் வரக்கானோம்
பாவம் அம்மா துடிக்கிராங்க
தயவு பண்ணுங்க
தர்மம் தலை காக்கும்!”
என்றே கெஞ்சினான்
ஏறச்சொன்னான் மஹ்ஷூக்கும்!
பின்சீட்டில் சாய்ந்திருந்த
பெருமாட்டி மஹரிபாவும்
முறைத்தாள் கணவனை
“முடியாது ” என்றாளே!
“பஸ்ஸு வரலைனா
பக்குவமா கார் எடுவேன்!
எங்களைப் போட்டு
ஏன்ய்யா நீ வதைக்கிறே?
அதெல்லாம் முடியாது
அகன்றுபோ” என்றவளும்
ஆணவமாய்ச் சொன்னாள்!
அவனும் வழிவிட்டான்!
கார்மீண்டும் கிளம்பியது
கணவனிடம் அவள்சொன்னாள்!
“ஏங்க உங்களுக்கு
ஏதாச்சும் புத்தியிருக்கா?
இப்பவே ஆறுமணி!
ஏற்கனவே பெருங்கூட்டம்!
புதுப்படம்;அதுவும்
புரட்சிக்கலைஞர் நடிச்சபடம்!
டிக்கட் கிடைக்குமாண்டு
தவிச்சுக்கிட்டு நான் கெடக்கேன்!
நீங்க என்னண்டா
நேரத்தை வீணாக்குறய”
மஹ்ஷூக் பேசவில்லை
பேசிப் பழக்கமில்லை!
ஆண்களின் மௌனம்தானே
அழிவின் ஆரம்பம்!
அன்று
இரவில் கவர்னருமர்
என்றும்போல் உலாவந்தார்!
மதீனா நகரின்
மறுபுறத்தில் ஒரு மனிதன்
தன்னந்தனியாக
தவித்துக்கொண்டு நின்றிருந்தான்!
முகத்தில் சோகம்;
முத்துமுத்தாய்க் கண்ணீர்!
நின்றார் கவர்னர்
“நீர் யார், நண்பரே?”
என்று விசாரித்தார்
எரிச்சலுற்றான் நின்றவனும்!
கவர்னர் விடவில்லை
கனிவுடன் உரையாடல்!
வெளியூர்க் காரர்
வேலையும் கிடையாது!
உறவினர் உதவியில்லை
உணவுக்கும் கஷ்டம்தான்!
அவனது மனைவி
அவசரத்தில்- பிரசவத்தில்!
என்பதை அறிந்தார்
அப்போதே வீடு சென்றார்!
தம்மனைவி உம்முகுல்தை
கையோடு அழைத்து வந்தார்!
பிரசவம் பார்த்தார்
பெருமைமிகும் உம்முகுல்தும்!
“கவர்னரே ஆண்குழந்தை
கனிவுடன் வாழ்த்துக்கள்”
என்றவர் சொன்னவுடன்
ஏழைக்கோ ஆச்சரியம்!
அதுவரை உதவியது
உமர்ரலிதான் என்பது
அவருக்குத் தெரியாது;
அப்படியே ஸ்தம்பித்தார்!
அந்த உமர்ரலியும்
அவர்மனைவி உம்முகுல்தும்
இந்த மஸ்ஷூக்கும்
இவன்மனைவி மஹரிபாவும்
சொந்த பந்தம்தான்
சோதர முஸ்லிம்கள்தான்!
என்ன செய்வது?
சொல்லுங்கள்…
என்ன செய்வது?