Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,047 முறை படிக்கப்பட்டுள்ளது!

டாஸ்மாக்கை எதிர்க்கும் ஐயா. சசிபெருமாள்!

D2தமிழக அரசு மதுக்கடைகளை தானே ஏற்று நடத்துவதாக முன்பு அறிவித்தபோது, என்ன நடக்கும் என்று நாம் அஞ்சினோமோ அவையெல்லாம் இப்போது ஏறக்குறைய நடந்தேறி விட்டன.

தமிழக பள்ளி மாணவர்களில் 45% பேருக்கு குடிப்பழக்கம் இருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நமது குழந்தைகளுக்கும் நாளை இதே நிலைதான் வரும் என்று அனைவரும் அஞ்ச வேண்டிய நிலை வந்துவிட்டது.

சமீபத்தில் வந்த செய்திகள் சில :

  • – குடித்துவிட்டு பள்ளி மாணவியை பலாத்காரம் செய்தவன் கைது.
  • – ஆறாம் வகுப்பு மாணவர்களிடம் குடிப்பதற்கு காசு கேட்டு மிரட்டிய பதினோறாம் வகுப்பு மாணவர்கள்
  • – குடிக்க பணம் தர மறுத்த மனைவியைக் கொன்ற குடிகாரக் கிழவர்
  • – ஊனமுற்ற மகனின் சம்பளத்தை குடித்தே அழித்த தந்தை கொலை
  • – டாஸ்மாக்கில் சரக்கு வாங்கிவிட்டு, சைக்கிளில் சென்ற பள்ளி மாணவன் கீழே விழுந்து பாட்டில் குத்தி பலி.

…………….இப்படி நெஞ்சைப் பதற வைக்கும் சம்பவங்கள் தினசரிச் செய்தியாகின்றன. ஒரு சில குடும்பங்களைப் பாதிக்கும் விஷயமாக இருந்த குடி, இப்போது பல குடும்பங்களையும் தெருவுக்குக் கொண்டு வந்துள்ளது.

சில குடும்பங்களின் பிரச்சினையாக இருந்த குடி, இப்போது சமூகப்பிரச்சினையாக மாறியுள்ளது. ஆங்காங்கே மக்களே போரட்டம் நடத்தி/டாஸ்மாக்கை அடித்து நொறுக்கி தங்கள் எதிர்ப்பைக் காட்டுகிறார்கள். காந்திய மக்கள் இயக்கம், மனித நேயக்கட்சி உள்ளிட்ட பல அமைப்புகளும் பல்வேறு போரட்டங்களை நடத்தியுள்ளன.

பாமக நிறுவனர் ராமதாஸ் பல வருடங்களாக மதுவுக்கு எdதிராக குரல் கொடுத்துவருகிறார். அவரைத் தொடர்ந்து மதிமுகவும் இப்போது மதுவுக்கு எதிரான போராட்டத்தில் குதித்துள்ளது. மேலும்  பாமக, மதிமுக போன்ற கட்சிகள் களத்தில் இறங்குவது, சமூகத்தில் இது பற்றிய ஒரு விவாதத்தை துவக்க வழிவகுக்கும் என்ற வகையில், அவர்களின் பங்களிப்பு முக்கியமாகிறது.

இப்படி பல்வேறு தரப்புகள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்த போதிலும், இவர்களிடையே ஒற்றுமை இல்லாததால் வெறும் பத்திரிக்கைச் செய்திகளாகவே இவை நின்றுவிட்டன.

இத்தகைய சோகமான சூழலில் தான் ஐயா.சசிப்பெருமாள் எனும் காந்தியவாதி சென்னை மெரீனாவில் மதுவிலக்குக் கோரி சென்ற மாதம் உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தார். உடனே கொதித்தெழுந்த அரசு, அவரைக் கைது செய்து புழல் சிறையில் அடைத்ததோடு இந்திய அரசியல் வரலாற்றில் இல்லாத அசிங்கமாக அவர்மீது தற்கொலை முயற்சி வழக்குப் போட்டது.

ஆனாலும் அவர் தனது போராட்டத்தை நிறுத்திகொள்ளாமல், உண்ணாவிரத்ததைத் தொடர்ந்தார். இப்போது சிறையில் இருந்து வெளியாகி, மீண்டும் சென்னை மெரீனாவில் காந்தி சிலை அருகே 32ம் நாளாக உண்ணாவிரத்தை மேற்கொண்டுள்ளார்.

அவரை பாமக, மதிமுக,மநேக, கம்யூனிஸ்ட்கள் மற்றும் பல அமைப்புகள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்திருப்பதோடு, மதுவிலக்கு வேண்டும் என அரசுக்கும் வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள்.

‘உடனே மதுவிலக்கு வேண்டும்’ என பிடிவாதப்போக்குடன் ஐயா.சசிப்பெருமாள் அவர்கள் போராடவில்லை. அவர்களின் கோரிக்கைகள் யதார்த்தமானவையாக உள்ளன. அவை:

  • – கடைகளின் எண்ணிக்கையை முதலில் குறையுங்கள்
  • – கடைகளின் நேரத்தைக் குறையுங்கள்
  • – 21 வயதுக்குட்பட்டோருக்கு மது விற்பனைசெய்வதை உடனே நிறுத்துங்கள்
  • – வழிபாட்டுத்தலங்கள், கல்விக்கூடங்கள், பேருந்து நிலையங்கள் அருகே இருக்கும் மதுக்கடைகளை அகற்றுங்கள்
  • – மதுவினால் வரும் வருமானத்திற்கு ஈடாக மாற்று வழிகளைச் செயல்படுத்துங்கள்
  • – பின்னர் படிப்படியாக பூரண மதுவிலக்கைக் கொண்டு வாருங்கள்.

sasi2இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், தமிழருவி மணியன் அங்கம் வகிக்கும் காந்திய மக்கள் இயக்கமானது ஏற்கனவே மதுவினால் வரும் வருமானத்தை எப்படி வேறுவழியில் ஈடுகட்டுவது என்று தெளிவான செயல்திட்டத்தை அரசிடம் சமர்ப்பித்துள்ளது.(22000 கோடி ரூபாய் வருமானமீட்ட, வழிவகைகள் அரசுக்கு சொல்லப்பட்டுவிட்டது.)

எனவே தமிழக அரசு இன்னும் காலம் தாழ்த்தாமல், உடனே நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

பல்வேறு சிறு எதிர்ப்பலைகளாய் இருந்த மது அரக்கனுக்கு எதிரான போராட்டத்தை ஒன்று குவிக்கும் வாய்ப்பாக ஐயா.சசி பெருமாளின் போராட்டம் அமைந்துள்ளது.

D4அவரின் வேண்டுகோள், லட்சக்கணக்கான பெண்களின் வேண்டுகோள். இந்த சமூகத்தின்மீது அக்கறையுள்ள லட்சக்கணக்கான சமூக ஆர்வலர்களின் வேண்டுகோள். இந்த அரசு, மக்கள் டாஸ்மாக்கிற்கு எதிராக திரள ஆரம்பித்துவ்பிட்டதைப் புரிந்துகொண்டு, இப்போதாவது செயலில் இறங்க வேண்டியது அவசியம்.

நாளை(ஞாயிறு) மாலை, சென்னை மெரீனாவில் ஐயா,சசிப்பெருமாள் போராடும் இடத்தருகே மனித சங்கிலி நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னைவாசிகளும், சென்னைப்பதிவர்களும், மே17 இயக்கம் போன்ற தன்னலமற்ற இயக்கத் தோழர்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், புதிய தலைமுறை தவிர்த்து பிற ஊடகங்கள் இந்தச் செய்தியை வெளிக்கொண்டுவர ஆர்வமின்றி இருக்கின்றன. சமூக அக்கறையுள்ள பதிவர்கள், தொடர்ச்சியாக இதுபற்றிப் பதிவிட்டு, இந்தப் போராட்டம் வெற்றிபெற உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

நீங்கள் குடிப்பவர்களாகவே இருந்தாலும், உங்கள் குழந்தைகள் குடிகாரர்கள் ஆவதை விரும்ப மாட்டீர்கள் தானே? தமிழகப் பள்ளிக்குழந்தைகளையும் உங்கள் குழந்தைகளாக நினைத்து, குடிப்பழக்கம் உள்ள பதிவர்களும் இந்தப் போராட்டத்தில் இணைய வேண்டும் என்று வேண்டுகிறேன்.

நன்றி: செங்வோவி