கலைஞரின் பாராட்டு ஹிமானா சையதின் “ஹார்ட் அட்டாக்”
‘தமிழ் மாமணி, ‘பாரத் ஜோதி’, ‘சிறந்த குடிமகன்’ போன்ற விருதுகள் பெற்றுள்ள சித்தார்கோட்டையைச் சார்ந்த டாக்டர் ஹிமானா சையத் அவர்கள் 565 சிறுகதைகள், 9 நாவல்கள், 1000 கவிதைகள், 1000 கட்டுரைகள் மற்றும் 35 புத்தகங்களும் எழுதி உள்ளார்கள். அவற்றில் ஒன்று தான் “ஹார்ட் அட்டாக்” என்ற மருத்துவ நூலாகும்.
உலகின் தலைசிறந்த தமிழ் அறிஞரும், நாட்டின் மூத்த அரசியல் வாதியுமான டாக்டர் கலைஞர் அவர்கள் முரசொலியில் ‘சிந்தனையும் செயலும்’ என்ற தொடரை எழுதி வருகின்றார்கள். இந்த தொடர் 31ல் அவர்கள் எடுத்துக் கொண்ட தலைப்பு “சிறிய நூல் ஆனால் பெரிய பயன்” என்பதாகும்.
இவ்வாறு அவர்கள் குறிப்பிட்ட நூல் நமது ஹிமானா சையத் அவர்களின் ஆக்கங்களில் ஒன்றாகும். கலைஞர் அவர்கள் மிக அருமையாக இந்த நூலைப் பற்றி எழுதி உள்ளது சித்தார்கோட்டை மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்திற்கே – ஏன் முஸ்லிம் சமுதாயத்திற்கே பெருமையான ஒன்றாகும்.
கலைஞர் பாராட்டி எழுதியுள்ள ஹார்ட் அட்டாக் நூல் ஏற்கனவே 5 பதிப்புகளைக் கண்டிருக்கிறது. இன்ஷா அல்லாஹ் விரைவில் ஆங்கிலத்தில் வெளி வர உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இன்னூல் ‘மல்லாரி பதிப்பகம், சித்தார்கோட்டை- 623513 , இராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு’ தொலைபேசி எண்: 954567 – 261700 என்ற முகவரியில் கிடைக்கும். விலை: ரூபாய் முப்பது ; கூரியர் செலவு ரூ. பத்து.
கலைஞர் அவர்கள் முரசொலியில் எழுதியவற்றை “சித்தார்கோட்டை” இணையதளத்தில் வெளியிடுவதில் நான் பெருமையடைகிறேன்.
அன்புடன்
காஜா முயீனுத்தீன்
சிந்தனையும் செயலும் (31)
சிறிய நூல் – ஆனால் பெரிய பயன்! ( மு.க. )
பல்லாயிரம் நூல்கள் கொண்டதும் அவற்றை முறையாகப் படிப்பதற்குரிய வசதி வாய்ப்புகள் நிறைந்ததுமான நூலகம் ஒன்று சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் நீண்ட காலமாக இயங்கி வருகிறது. ‘பேராசிரியர் ஆய்வக நூல் நிலையம்’ என்ற பெயரால் விளங்கும் அதனை, அறிவு தாகமெடுத்தோர், இலக்கிய ஆர்வம் படைத்தோர், பயன்படுத்திக் கொள்ளும் பாங்கு, நாளும் வளர்வது கண்டு நமக்குப் பெருமகிழ்ச்சி ஏற்படுகிறது.
அனைத்துத் துறைகள் பற்றிய அரிய நூல்கள் பல அந்த ஆய்வக நூலகத்தில் இடம் பெற்றுள்ளன. விலை கொடுத்து வாங்கி வைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் மட்டுமின்றி; ஈ.கைக் குணமுடையோர் பலரும் ஏராளமான நூல்களை அன்பளிப்பாக வழங்கியும் வருகின்றனர். அந்த நூலகத்தில் நூலகராகப் பணியாற்றும் திரு. சுந்தரராஜன் அங்குள்ள ஆயிரக்கணக்கான புத்தகங்களை பொருள்வாரியாக பிரித்து வைத்திருப்பதோடு, ஆய்வுக்காக வருபவர்களின் தேவைக்கேற்ப அவராகவே முன்வந்து புத்தகங்களைத் தேடிக் கொடுத்து உதவி புரிந்து வருவதைப் பாராட்டாதார் இல்லை.
என்னைக் காண வருவோர், புத்தகங்கள் வழங்கிடும் பழக்கமுடையோர் எனக்களிக்கும் புத்தகங்களின் குவியலை சில நாட்கள் வீட்டில் வைத்திருந்து பின்னர் அந்த ஆய்வக நூல் நிலையத்துக்கே அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.
அவற்றில் ஒரு குவியல், மருத்துவத் துறை பற்றிய நூல்களாகவே இருக்கக் கண்டு, சிலவற்றை – ‘சிந்தனையும் செயலும்’ எனும் தலைப்பில் எழுதுவதற்குப் பயன்படுத்திக் கொண்டுமிருக்கிறேன்.
‘பேராசிரியர் ஆய்வக நூலக’த்திற்கு அனுப்பி வைத்திட எண்ணி சில நூல்களை எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தபோது ‘ஹார்ட் அட்டாக்’ என்று தமிழ் எழுத்துக்களில் ஆங்கில மொழியில் எழுதப்பட்டதும் அழுக்கேறிக் கிழிந்துபோன அட்டை போடப்பட்டதுமான புத்தகம் ஒன்று காணப்பட்டது. என் இல்லத்து நூல் நிலையத்திலேயே ‘4906’ என்ற எண்ணுள்ள அந்த நூலினை அதன் பரிதாபத் தோற்றங் கண்டு பரிவுடன் மேலும் கிழிந்து விடாமல் எச்சரிக்கையாகப் புரட்டினேன்.
‘ஹார்ட் அட்டாக் (மாரடைப்பு) நடைமுறை ஐயங்கள் – விளக்கங்கள்’
என்ற தலைப்பிடப்பட்ட அந்த நூலை எழுதியவர், ‘ஹிமானா சையத்’ என அழைக்கப்படும் பல்கலை ஆர்வலர் டாக்டர் அ. சையத் இப்ராஹிம் என்பவராவார். 1-7-1990 எனத் தேதியிட்டும் அவர் கையெழுத்திட்டும் அந்த நூலை எனக்கு 15 ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கியிருக்கிறார். புத்தகத்தைப் படிக்கும்போதும், முகவரியெனக் குறிக்கப்பட்டுள்ள (புத்தகம் கிடைக்குமிடம்) ”மல்லாரி கிளினிக், சித்தார் கோட்டை பனைக்குளம், அழகங்குளம்” என்பனவற்றை அப்புத்தகத்தின் முகப்பில் காணும்போதும் – அந்த நூலாசிரியர் இராமநாதபுரம் மாவட்டத்துக்காரர் என்பது எளிதில் புரிந்தது.
ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது ஒரு முறை உதகை மலர்க் காட்சி திறப்பு விழாவில் ‘சோலை வனங்களால் சொக்க வைக்கும், நீலகிரியும் காண்கிறேன் – பாலைவனம் போல் காட்சி தருகிற முகவை மாவட்டம் போன்ற பகுதிகளையும் எண்ணிக் கலங்குகிறேன்’ என்று உரை நிகழ்த்தியது; ‘இராமநாதபுரம்’ என்று யார் சொன்னாலும் உடனே என் நினைவுக்கு வந்துவிடும். பாலைவனத்தை சோலைவனமாக்கிடப் பணிகளும் தொடர்ந்தன அன்றைய ஆட்சியில்!
என் கையில் கிடைத்த நூலின் தலைப்பான ‘ஹார்ட் அட்டாக்’ என்பதையும், இராமநாதபுரத்தையும் இணைத்துப் பார்த்திடும் வேளையில் ஒரே குடும்பத்தில் தந்தை, தனயர்கள் மூவர்; இந்த நான்கு பேருமே 45 வயதுக்கு மேல் வாழாமல்; 45 வயதுக்குள்ளாகவே மாரடைப்பு மரணத்துக்கு ஆளாகிவிட்ட கொடுமையைக் கண்டு கேட்டுக் கண்ணீர் வடித்தவர்களில் ஒருவனாயிற்றே நான்!
அரசியலில் அண்ணாவின் தம்பிகளாக – என் அன்பு உடன்பிறப்புகளாக அல்லும் பகலும் பாடுபட்டவர்கள் – ஆம்; சத்தியேந்திரன், மகேந்திரன், ராஜேந்திரன் – இந்த மூன்று சகோதரர்களும் ஒருவர் பின் ஒருவராக 45 வயதுக்குள்ளாகவே மாரடைப்பு நோயினால் தாக்குண்டு, மறைந்து போனார்கள். அவர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களாக, நகர் மன்றத் தலைவர்களாக இருந்தவர்கள். திடீர் மாரடைப்புத் தாக்குதலால் தீர்ந்தது அவர்கள் வாழ்வு!
”இது ஒரு பரம்பரை வியாதி எனலாம். அதாவது குடும்பத்தில் தந்தை அல்லது தாய் வழியில் வேறு யாருக்காவது வந்திருந்தால் இவ்வியாதி வரலாம்” என்று நூலாசிரியர் அவர்களே குறிப்பிட்டுள்ளதற்கிணங்க – இந்த மூன்று சகோதரர்களின் தந்தை குப்புசாமி சேர்வை அவர்களும் கூட அதே மாரடைப்பு காரணமாகத்தான் குறை வயதில் மறைவுற்றிருக்கிறார்.
அந்தக் குடும்பத்தின் தொடர் சோக வரலாற்றை நண்பர் தென்னரசு அவர்களும், தம்பி தங்கவேலனும் என்னிடம் கூறியிருந்த காரணத்தால்; நான் அந்தச் சகோதரர்களைப் பல முறை எச்சரித்தும், முன் கூட்டியே அறுவை சிகிச்சை செய்து கொள்ளும்படி ஆலோசனை கூறியும், அதனை ஏற்று நடந்திடத் தயங்கி விட்டார்கள் அறுவை சிகிச்சைக்கு அஞ்சி!
தென்னரசு, அவர் காலந்தாழ்த்தி விட்ட காரணத்தால், அவரையும் காலம் வென்று விட்டது. கம்பம் ராஜாங்கம் எம்.பி., தொடங்கி, அடுத்து கம்பம் நடராசன், எம்.பி., – அண்மையில் க.சோ. கணேசன் வரையில் எச்சரிக்கையில்லாததாலும் – ஏற்ற சிகிச்சை பெறாததாலும் – மருத்துவர்கள் அறிவுரையை மனத்திற் கொள்ளாததாலும் – எத்தனை பேரிழப்புகளை நாம் சந்திக்க நேர்ந்திருக்கிறது. இளம் வயதினர் எல்லா இயக்கங்களிலுமே இப்படியொரு முடிவுக்கு ஆளாவதை பெருமளவு தடுப்பதற்கு நான் கண்டெடுத்துள்ளதும், கையில் கிடைத்ததுமான இந்த ‘ஹார்ட் அட்டாக்’ என்ற எட்டு ரூபாய் விலையுள்ள சிறிய புத்தகம் பெரிதும் பயன்படும்.
அந்த நூல் விற்பனைக்கான விளம்பர நோக்குடன் இதை நான் எழுதவில்லை. இருதய நோய் குறித்த நூல்கள்; எல்லா நோய்களையும் குறித்தும் சிகிச்சை குறித்தும் நூல்கள் பெரிய அளவில் வெளிவந்துள்ளன. அவற்றைப் படித்து முடிப்பதே பெரும் வேலை! ஆனால் இந்த நூல் சிறிய அளவிலும் – விரைவில் படித்துவிடக் கூடியதாகவும் – இருதய நோய் தாக்கினால் எப்படி குணமாக்குவது – வராமலே எப்படித் தடுப்பது – என்பன போன்ற பல விவரங்களை சுருங்கச் சொல்லி விளங்கவைப்பதாகவும் அமைந்திருப்பதால் இதனை எல்லோருமே எளிதாகப் படித்துப் பயன் பெறலாம் என்ற எண்ணத்துடன்தான் இதனை எழுதியுள்ளேன்.
நான் குறிப்பிடும் இந்த நூலில் மாரடைப்பு பற்றிய பல முக்கிய விபரங்கள் இருப்பினும் -மாரடைப்பு ஒரு முறை வந்தவர்கள் எப்படி எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகக் கூறப்பட்டுள்ள அறிவுரைகள்; முதல் முறையே கூட மாரடைப்பு வராமல் தடுப்பதற்கும் பயன்படக் கூடியவை என்பதை இந்த நூலைப் படிப்போர் உணர்ந்து கொண்டால் மட்டும் போதாது; உணர்ந்தவாறு நடந்து கொள்ளவும் வேண்டும்.
மருத்துவர்களின் சிகிச்சை – அவர்களின் அறிவுரை – அவற்றுக்குத் தோழமை உணர்வுடன் துணை நிற்கக் கூடியது ”ஹார்ட் அட்டாக்” எனும் இந்த சிறிய நூல் என்பதால்; இதனை இன்னும் பல பதிப்புகளாக வெளியிட்டுப் பரப்பலாம். இது, ஏதோ எழுத வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட எழுத்தல்ல; என்றைக்குமே என் எழுத்து;
– அத்தகைய பட்டியலில் இடம் பெறுவதல்ல; எல்லோரும் வாழ வேண்டும் என்பதற்காக
எழுதப்படுவதேயாகும்!
நன்றி : முரசொலி நாளிதழ் 10-09-2005 (Link = http://murasoli.in/2005/kaditham/2k50910k.htm)
கலைஞர் பாராட்டி எழுதியுள்ள ஹார்ட் அட்டாக் நூல் ஏற்கனவே 5 பதிப்புகளைக் கண்டிருக்கிறது. இன்ஷா அல்லாஹ் விரைவில் ஆங்கிலத்தில் வெளி வர உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இன்னூல் ‘மல்லாரி பதிப்பகம், சித்தார்கோட்டை- 623513 , இராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு’ தொலைபேசி எண்: 954567 – 261700 என்ற முகவரியில் கிடைக்கும். விலை: ரூபாய் முப்பது ; கூரியர் செலவு ரூ. பத்து.