20 -ம் நூற்றாண்டு முடிந்து 21-ம் நூற்றாண்டு பிறந்தது இப்போதுதான் நிகழ்ந்தது போலிருக்கிறது! ஆனால் இந்த நூற்றாண்டின் முதலாவது 10 ஆண்டுகள் ஒரு நொடிபோலப் பறந்து போய்விட்டது! இதோ… அடுத்த பத்தாண்டுக்குள் நுழையப் போகிறோம்!
கடந்த பத்தாண்டுகளில் உலகத்துக்கு நல்லவையும் நடந்தன; கெட்டவையும் நிகழ்ந்தன. ஆனால் … எட்டு ஆண்டுகாலம் அமெரிக்காவின் அதிபராக இருந்த புஷ் என்ற ஒரு மனிதரின் அவசரம் -அகங்காரத்தால் நிகழ்ந்த ‘அப்பாவி மரணங்கள்’தான் நம்மை இன்னும் கூட நம்மை எந்த முன்னேற்றத்தையும் ரசிக்க விடாமல் வருத்திக் கொண்டே இருக்கின்றன. அவர் ஆண்ட -உலகத்தை ஆட்டிவைத்த- அந்த 8 ஆண்டுகளின் விளைவுகளும் -பாதிப்புகளும் உடனடியாக ஒரு முடிவுக்கு வராமல், அடுத்த ஆண்டுகளுக்குள்ளும் பிரவேசிக்கின்றன என்பதுதான் நம்மை சஞ்சலத்துக்கு உள்ளாக்கும் இன்னொரு அதிர்ச்சி !
ஆனாலும் பிறக்கப்போகும் புதிய பத்தாண்டின் முதல் வருடத்தில் சில நம்பிக்கைக் கீற்றுக்கள் தெரிகின்றன!
- அமெரிக்க அதிபராக ஒபாமா வந்திருக்கிறார்; அவரது அணுகுமுறைகள் சில வித்தியாசமானவையாக இருக்கின்றன; சில புதிய பாதைகளையும் அடையாளம் காட்டுகின்றன.
- அமெரிக்க – ஐரோப்பிய -ரஷ்ய ஏகாதிபத்தியம் பலவீனமடைந்து, இதுவரை குறைத்து மதிப்பிடப்பட்ட ஆசியநாடுகளான இந்தியா-சீனா உலக ரயிலுக்கு எஞ்சின் போல செயல்படலாம் என்ற நம்பிக்கை அழுத்தமாகத் தெரிய ஆரம்பித்திருக்கிறது!
- கல்வி மேம்பாடு- பரவலான அறிவியல் வளர்ச்சி உலகத்தின் பின்னடைந்த -வளரும் நாடுகளின் மனிதவள மூலதனத்தை ஏற்றம் பெறச்செய்துள்ளன!
- நமது நாட்டைப் பொறுத்தவரை பன்முக வளர்ச்சியைக் காண்கிறோம். பொருளாதாரப் பின்னடைவு சுருங்கி வளர்ச்சிவேகம் அதிகரித்திருக்கிறது!
- அரசியல் ரீதியாக மதவாத சக்திகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, மதச் சார்பின்மை பேசும் கட்சிகளை மக்கள் பரவலாக அடையாளம் காணத்தொடங்கியிருக்கிறார்கள்.
- அரசியல்-அதிகார ஊழல்போன்ற ஊடுருவல்களின் – பின்னிழுப்புகளையும், அழுத்தங்களையும் புறந்தள்ளிவிட்டு மருத்துவம், போக்குவரத்து,தொழில் உற்பத்தி, ஏற்றுமதி -இறக்குமதி சார்ந்த துறைகளில் காணப்படும் அபரிமிதமான முன்னேற்றம் நிம்மதி தருகிறது!
எல்லாம் வல்ல இறைவன் புதிய பத்தாண்டுளில் உலக மக்களின் நிம்மதிகளுக்கு வேட்டுவைக்கும் எல்லா வகையான நச்சு சக்திகளையும் நீக்கிவிட்டு, அமைதியும், சமாதானமும், மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்த ஓர் உலகத்தை உருவாக்கும் நல்லவர்களால் நிரப்புவானாக, ஆமீன்!
நன்றி: நர்கிஸ் – துணைத்தலையங்கம் -டிசம்பர் – 2009