அல்லாஹ்வின் அருட்கொடைகளைச் சுமந்த இன்னொரு ரமலான் பிறந்து வளர்ந்து வருகிறது!
பசித்திருந்து, விழித்திருந்து நாம் முன்வைத்த பிரார்த்தனைகளின் பலத்தில் அவனது ரஹ்மத்தையும், மன்னிப்பையும் இரண்டு பத்துகளில் பெற்றுக் கொண்ட நாம், நரக நெருப்பிலிருந்து விடுதலை கோரும் கடைசிப் பத்தில் நுழைந்திருக்கும்போது இம்மாத நர்கிஸ் இதழ்விரிக்கிறது!
இந்தப் பத்தின் ஒற்றைப் படை எண் ஒன்றில்தான் லைலத்துல் கத்ர் இரவு வருகிறது!
இந்த இரவில் அடியான் கேட்கும் எந்தப் பிரார்த்தனைக்கும் அல்லாஹ்வின் தரப்பிலிருந்து கூடுதல் மகிமை உண்டு!
பலாபலன் -பரிசளிப்பு உண்டு!
நாம் எல்லோருமே, நமக்காக – நம் குடும்பத்துக்காக, நமது உற்றம் சுற்றத்துக்காக நிச்சயமாக மன்றாட விருக்கிறோம்!
அதனை சிறப்பாக நினைவுபடுத்தத் தேவையில்லை!
ஆனால், இந்த வேளையில் நினைவு படுத்தப் பட வேண்டிய சில பொதுத் தேவைகள் உள்ளன! நமது நாட்டின் வடக்கு எல்லையில் – காஷ்மீரில் பல ஆண்டுகளாக அணையாத நெருப்பாகக் கனன்று கொண்டிருக்கும் வன்முறை இப்போது பெருந்தீயாகப் பற்றிப் பிடித்திருக்கிறது!
அதுதொடர்பில் வரும் செய்திகள் பரஸ்பரக் குற்றச் சாட்டுகளாக இருக்கின்றன. ஆனால், அன்றாடம் கொல்லப் படுபவர்களோ அப்பாவிகளாகவே இருக்கிறார்கள் என்று செய்திகள் அறைகூவுகின்றன!
இப்போதுமட்டுமல்ல, எப்போதுமே இருதரப்புத் துப்பாக்களிலிருந்தும் புறப்படும் குண்டுகள் நிரபராதிகளைத் தானே குறிவைக்கின்றன!
- அந்த நிரபராதிகளைக் காப்பாற்றுமாறும் நாம் மன்றாடுவோம்!
- நாடுமுழுதும் எந்தத் தவறும் செய்யாத நம்மவர்கள் குற்றவாளிகளாக ஆயிரக்கணக்கில் சிறைக் கொத்தலங்களில் நசிந்துவருகிறார்கள்!
- பலர் மீது கைது செய்யப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் குற்றச்சாட்டுகள் கூட இன்னமும் பதிவுசெய்யப் படவில்லை என்று அறிகிறோம்!
- தடா செத்து- பொடா வந்து அதுவும் நீர்த்துப் போய்விட்ட பிறகும் இன்னும் தடாவில் கைதுசெய்யப் பட்ட பலர் சிறையில் வாடுகிறார்கள் என்பது வியப்பான செய்தி அல்லவா?
அந்த அப்பாவிகளுக்காகவும் …. - கைக்கூலி கொடுக்கமுடியாததால், முப்பது நாற்பது வயதைத் தாண்டியும் கல்யாண பேரங்களில் தோற்றுப் போய் வீடுகளில் அடைபட்டுக் கண்ணீர் சிந்தி வாடி வதங்கிக் கொண்டிருக்கும் முதிர்கன்னிகளுக்காகவும்….
- பிள்ளைகளால் புறக்கணிக்கப் பட்ட பெற்றோருக்காகவும்….
- நியாயமான காரணமின்றி கொடூரமாக தலாக் சொல்லப்பட்டு வாழ்க்கையைப் பறிகொடுத்துவிட்ட அபலைகளுக்காகவும்….
- முதுமையாலும், நோயாலும் வீடுகளில் முடங்கிக் கிடக்கும் சகோதர சகோதரிகளுக்காகவும்….
- ரமலானின் மீதி நாட்களில் கருணையாளனின் கடாச்சத்துக்காக -இரக்கத்துக்காகவும்… அருட்கொடைகளுக்காக…..
- நர்கிஸ் வாசகர்களாகிய நாம் அனைவரும் மன்றாடிப் பிராத்திப்போமாக!
நன்றி: நர்கிஸ் – தலையங்கம் – செப்டம்பர் -2010