ஊனமுற்ற தம்பதிக்கு 5 மணி நேரத்தில் ரேஷன் கார்டு : “தினமலர்’ செய்தி எதிரொலி
மூன்று ஆண்டுகளாக போராடி வந்த, ராமநாதபுரம் மாவட்ட ஊனமுற்ற தம்பதிக்கு,”தினமலர்’ செய்தி எதிரொலியாக ஐந்து மணி நேரத்தில் ரேஷன் கார்டு வழங்கப்பட்டது.
பனைக்குளத்தை சேர்ந்த ஊனமுற்ற தம்பதி அப்துல் ரஹிம்(30), ஷப்ராபானு(38). நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணம் ஆனதும் ரேஷன் கார்டு கேட்டு மனு அளித்தனர்.
தவழும் நிலையில் உள்ளதால், முறையிட வரும் போதெல்லாம் ஆட்டோவுக்கு செலவுச் செய்ய நேர்ந்தது. அலைந்தும் பயன் இல்லை. நேற்று முன்தினம் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வந்த தம்பதி மனு அளித்தனர்.
வழக்கம் போல அதிகாரிகள் பதிலளித்ததால், விரக்தியில் இருவரும் கண்ணீர் மல்க சாபம் விட்டு, அங்கிருந்து தவழ்ந்தபடி குழந்தையுடன் வெளியேறினர்.
இது குறித்த செய்தி “தினமலர்’ இதழில் நேற்று படத்துடன் வெளியானது. காலை 6.15 மணிக்கு நாளிதழை பார்த்ததும், கலெக்டர் ஹரிஹரன் உத்தரவின் படி சிவில் சப்ளை அதிகாரிகள் பனைக்குளம் வந்தனர்.
குழந்தையுடன் தம்பதியை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு ஆட்டோவில் அழைத்து வந்தனர். ஐந்து மணி நேரத்திலே அனைத்து நடைமுறைகளும் முடித்து, 11.15 மணிக்கு புதிய ரேஷன் கார்டு அச்சடித்து மாவட்ட வழங்கல் அலுவலர் நெல்லைவேந்தன் வழங்கினார்.
ஷப்ராபானு கூறியதாவது: உலகத்தில் ஏன் பிறந்தோம் என்ற எண்ணத்தில் தான் நேற்று வீடு திரும்பினோம். காலை விடிந்ததும் அதிகாரிகள் முகத்தில் தான் விழித்தோம். எங்களை உதாசீனப்படுத்தியவர்களே, எங்களுக்கு கார்டு தருவதாக கூறி அழைத்துச் சென்றனர். “தினமலர்’ செய்த உதவியை நான் மட்டுமல்ல எங்கள் கிராமமே மறக்காது’ என, கண்ணீர் மல்க கூறினார்.