- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

வாரிசுப்போட்டி

சித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை – தொடர்: 7

‘சசிவர்ணத்தேவரையும் கடம்பனையும் பொட்டல் வெளியில் திண்டாட விட்டு விட்டு இந்த சுற்றுலா அவசியம் தானா?’ என்று வாசகர்கள் கேட்கலாம்.

மேலோட்டமாகப் பார்க்கும் போது வாசகர்களின் கேள்வியில் நியாயம் இருப்பது தெளிவாகவே தெரிகிறது.

ஆனால் இந்த அத்தியாயத்தைப் படித்து முடித்த பின்னர் தான் இந்த சுற்றுலா எத்துணை முக்கியமானது என்பது புரியும்.

இந்த கதை ஆரம்பமாகும் 11ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து 12ஆம் நூற்றாண்டின் இறுதி வரை பாண்டிய நாட்டில் நடைபெற்றுள்ள அனைத்து நிகழ்ச்சிகளையும் நாம் தெரிந்து கொள்வது அவசியம்.

கி.பி.1025ல் சோழ மன்னன் முதலாம் இராசராசன் பெரும் கப்பற்படையுடன் சென்று கீழ்த்திசையில் மகா வல்லரசாகத் திகழ்ந்த ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தைப் பணிய வைத்தான்.

ஸ்ரீவிஜயத்தைச் சேர்ந்த கடற் கொள்ளைக்காரர்கள் சோழ வர்த்தகக் கப்பல்களைத் தொடர்ந்து கொள்ளையடித்துக் கொண்டேயிருந்தனர். மன்னனிடம் முறையிட்டும் அவன் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. அதனால் தான் அந்தப் படையெடுப்பு.

அச்சமயம் பாண்டிய நாடு சோழப் பேரரசின் கீழ் சிற்றரசாக இருந்தது.

கி.பி.1030ல் பாண்டியர் விடுதலைப் போர் துவக்கினர். போரைத் தலைமை வகித்து நடத்திய மூவரில் மானாபரணன்இ வீரசேனன் இருவரும் கொல்லப்பட்டனர். சுந்தரபாண்டியன் தப்பியோடி ஒளிந்தான்.

கி.பி.1162 வரை பாண்டியர் விடுதலைக் கிளர்ச்சி தொடர்ந்து கொண்டேயிருந்தது. இறுதியில் பாண்டியருக்கும் சோழருக்குமிடையே சமரசம் ஏற்பட்டு அதன்படி பராக்கிராம பாண்டியன் வட பகுதிக்கும் குலசேகரப் பாண்டியன் தென் பகுதிக்குமாக முறையே மதுரையிலும் திருநெல்வேலியிலும் முடிசூட்டிக் கொண்டார்கள்.

கொஞ்சகாலம் நாட்டில் அமைதி நிலவியது. மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ஆனால் அந்த அமைதி நீடித்ததா? மீண்டும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

பாண்டியர் இருவருக்குமிடையே ஏதோ பிரச்னை. பேசி உடன்பாடு காணலாம். போட்டிஇ பிரிவினை என்பது தான் பாண்டியர்களின் இரத்தத்தோடு இரத்தமாக ஊறிய குணமாச்சே!

திடீரென்று படைகளைத் திரட்டிக் கொண்டு வந்து மதுரையை முற்றுகையிட்டான் குலசேகரன். பொறியில் சிக்கிய எலி போல் திகைத்த பராக்கிரமன் இலங்கை அரசனிடம் உதவி கேட்டுத் தூதனுப்பினான்.

அச்சமயம் இலங்கையை ஆண்டு கொண்டிருந்தவன் பராக்கிரமபாகு என்பவன். ஒப்பாரும் மிக்காருமின்றித் தனியர சோச்சிக் கொண்டிருந்தான். நாட்டின் எல்லையை விஸ்தரிக்க வேண்டும் என்ற பேராசையில் சாம்ராஜ்யக் கனவு கண்டு கொண்டிருந்தான்.

இந்நிலையில் பராக்கிரமபாண்டியனின் வேண்டுகோள் தக்க தருணத்தில் கிடைத்த வரப்பிரசாதமாக அமைந்தது.

இலங்காபுரன் என்ற தளபதியின் கீழ் ஓர் படையை அனுப்பி வைத்தான்.

இலங்காபுரன் படை மதுரையை அடைவதற்கு முன்பே குலசேகரன் திடீர்த் தாக்குதல் நடத்தி பராக்கிரமனைக் குடும்பத்தோடு கொன்றொழித்தான்.

பராக்கிரமனின் மகன் வீரபாண்டியன் என்ற சிறுவன் மட்டும் தப்பியோடிக் காட்டில் ஒளிந்தான். எவ்வித எதிர்ப்புமின்றிக் குலசேகரன் முழுப் பாண்டிய நாட்டுக்கும் அரசனாக முடிசூட்டிக் கொண்டான்.

இலங்கையில் இருந்து புறப்பட்ட உதவிப்படை இராமேசுவரம் தீவில் கரையிறங்கியது. அங்கிருந்த கோயிலை இடித்துத் தரைமட்டமாக்கி விட்டுக் குந்துகால் என்ற இடத்தில் முகாம் அமைத்து நன்கு கால் ஊன்றிக் கொண்டது.

நாணயச்சாலை அமைத்து இலங்கை மன்னன் பேரால் நாணயங்களைப் புழக்கத்தில் விட்டான் இலங்காபுரன்.

பின்னர் வடக்கு நோக்கி உள்நாட்டுக்குள் பிரவேசித்தான். எதிர்பட்ட ஊர்களைக் கொள்ளையடித்தும்இ சூறையாடியும்இ தீவைத்துக்கொளுத்தியும் பைசாச தாண்டவமாடிக் கொண்டு இலங்கைப்படை முன்னேறியது.

வழியில் மதுரையில் நடந்த சம்பவங்கள் பற்றிய செய்தி கிடைத்தது. இலங்காபுரன் வெகுண்டான். கன வேகத்தில் படைகளை நேரே செலுத்திஇ இளையான்குடியை அடுத்துள்ள நெட்டூரில் முகாமிட்டுத் தங்கினான்.

வீரர்களை அனுப்பிக் காட்டில் ஒளிந்து கொண்டிருந்த வீரபாண்டியனை அழைத்து வருமாறு செய்தான்.

பின்னர் நேரே மதுரையை நோக்கிப் படையைச் செலுத்தினான்.

இலங்கைப் படைகள் வரும் தகவல் அறிந்த குலசேகரன் இருபடைப்பிரிவுகளை அனுப்பி இலங்கைப் படைகளை வழியிலேயே துரத்தியடிக்குமாறு பணித்தான்.

ஊழிக்காலத்து வெள்ளம் போல் ஆவேசத்துடன் ஆர்ப்பரித்து வரும் இலங்கைப் படைக்கு முன் குலசேகரன் படைகள் சுருண்டன. இலங்கைப் படைகள் மதுரையை நெருங்கும் முன்பாகவே உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு குலசேகரன் தப்பியோடிவிட்டான்.

எவ்விதப்பாதுகாப்பும் இன்றி வெறிச்சோடிக்கிடந்த மதுரைக்குள் வெற்றி முழக்கத்துடன் இலங்கைப் படை நுழைந்தது.

வீரபாண்டியன் மதுரை சிம்மாசனத்தில் அமர்ந்தான். இச்சிறுவனை தன் கைப்பாவையாக வைத்துக்கொண்டு இலங்காபுரனே சகல அதிகாரங்களையும் மேற்கொண்டான்.

பாண்டிய நாடு முழுவதும் இலங்கைப்படைகளின் ஆதிக்கத்திலேயே இருந்தது.

மதுரையில் இருந்து தப்பியோடிய குலசேகரன் பாளையங்கோட்டையில் தங்கியிருந்து கொண்டு; அவ்வப்போது இலங்கைப்படையுடன் மோதுவதும் பின்னர் தோல்வியடைந்து ஒளிந்து வாழ்வதுமாக இருந்தான்.

இறுதியில் சோழ மன்னனிடம் உதவி கேட்டுத்தூது அனுப்பினான். அப்போது சோழ நாட்டின் மன்னனாக ராசாதிராசன் என்பவன் இருந்தான்.

ஈழப்படை பாண்டிய நாட்டோடு நிற்காதுஇ சோழ நாட்டுக்குள் ஊடுருவவும் முயற்சிக்கக்கூடும். எனவே ஆரம்பகட்டத்திலேயே இதை நசுக்கிவிடுவது நல்லது என்ற முடிவுக்கு வந்தான்.

சோழர் தளபதி அண்ணன் பல்லவராயன் தலைமையில் சோழர் படைப்பிரிவு ஒன்றும்இ கொங்கு நாட்டுப்படைப்பிரிவு ஒன்றும் அனுப்பிவைக்கப்பட்டது. அத்துடன் குலசேகரன் திரட்டிவைத்திருந்த பாண்டியர் படைப்பிரிவும் சோந்து கொண்டது.

இம்மூன்று படைப்பிரிவுகளும் சேர்ந்து நடத்திய அதிரடித் தாக்குதலில் ஈழப்படை சின்னாபின்னமாக சிதறியோடியது.

குலசேகரன் அரியணையில் அமர்ந்தான். வீரபாண்டியன் ஓடி ஒளிந்தான்.

தோற்றோடிய ஈழப்படைகள் தொண்டியில் வந்து முகாமடித்தது. அவமானத்தால் இலங்காபுரன் குன்றிப்போனான். உடனடியாக உதவிப்படை அனுப்பிவைக்குமாறு இலங்கை வேந்தனுக்கு தகவல் அனுப்பினான்.

இலங்கையிலேயே திறமையும்இ துணிவும்இ வீரமும் நிறைந்த ஜெகத்விசயத்தண்டநாயகன் என்ற தளபதியின் கீழ் பெரும்படை ஒன்றை பராக்கிரமயாகு அனுப்பிவைத்தான். படைகள் ராமேஸ்வரத்தில் கரையிறங்கி தொண்டியை நோக்கி விரைந்தது.

இச்செய்தி சோழமன்னனுக்கு எட்டியது. அண்ணன் பல்லவராயன் தலைமையில் வந்த பெரும்படையுடன் குலசேகரன் படையும் சேர்ந்து கொண்டது.

தொண்டிஇ பாசிப்பட்டிணம் மற்றும் அதைச் சார்ந்துள்ள பகுதிகளில் கடும் போர் நிகழ்ந்தது. இலங்கைப் படை சின்னா பின்னாப்படுத்தப்பட்டது.

படைத் தளபதிகளான இலங்காபுரன்இ ஜெகத்விசயத் தண்டநாயகன் இருவரும் சிறைச் சேதம் செய்யப்பட்டு ஈட்டி முனையில் தலைகள் செருகப்பட்டு மதுரை கோட்டை வாயிலின் மேல் வைக்கப்பட்டது.

பாண்டியர்களின் அரியணைப் போட்டியால் எழுந்த குழப்பம் இன்னும் தீர்ந்தபாடில்லை.

நேருக்குநேர் பொருதி வெற்றி காண முடியாத இலங்கை வேந்தன் பிரித்தாளும் தந்திரத்தைக் கையாண்டான்.

சோழரின் நட்பைத் துண்டித்து விட்டு இலங்கையுடன் உறவைப் புதுப்பித்துக் கொண்டால் பாண்டிய அரசை பூரண சுதந்திரமுள்ள அரசாக ஏற்று அதற்கு சகல உதவியும் செய்வதாக குலசேகர பாண்டியனுக்கு ரகசியத் தகவல் அனுப்பி வைத்தான்.

அற்ப ஆசைக்கு அடிமைப்பட்டு நன்றி கெட்ட குலசேகரன் சோழருக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினான்.

இதனால் சீற்றமடைந்த ராசாதிராசன் அண்ணன் பல்லவராயன் தலைமையின் கீழ் ஓர் படையை அனுப்பி குலசேகரனை விரட்டி விட்டு வீரபாண்டியை அரியணையில் அமர்த்தினான்.

பாண்டிய மன்னர்களின் வாரிசுப்போட்டியில் உள்நாட்டில் ஏற்பட்ட குழப்பங்கள், இவர்களுக்கு ஆதரவாக பாண்டிய நாட்டிற்குள் நுழைந்த சேரஇ சோழ கொங்குஇ இலங்கைப் படைகளின் பரஸ்பர மோதல், இவற்றால் பாண்டிய நாடு சீரழிந்தது. மக்கள் பெரிதும் துன்பம் அடைந்தனர். இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது. மக்கள் வெளியில் நடமாட அஞ்சினர்.

அரியணைப் போட்டியால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் அவ்விருவருக்கும் ஆதராவாக போரில் ஈடுபட்ட பாண்டிய சிற்றரசர்களே. இவர்களின் நிலை தர்ம சங்கடமானது. மாறிமாறிப் போரில் ஈடுபட்டுக் கொண்டேயிருந்ததால் விரக்தியடைந்து தலைநகரை விட்டு தொலைதூர இடங்களுக்குச் சென்று தன்னாட்சியை ஏற்படுத்திக் கொண்டனர்.

இவ்வாறு வந்தவன்தான் இவ்வூருக்கு வந்து ஆட்சிபுரிந்த விஜயன் என்ற விஜயபாண்டியன்.

‘இப்போரில் வீரபாண்டியனுக்கு ஆதரவாகப் போரிட்ட பாண்டிய இளவரசன் ஒருவன் கொல்லப்பட்டான்’ என்று கா.அப்பாத்துரை தென்னாட்டுப் போர்க்களங்கள் என்ற தமது நூலில் குறிப்பிடுகிறார்.

இங்கிருந்து போரில் கலந்து கொள்வதற்காகச் சென்ற இளவரசனின் தலையற்ற உடல் இங்கு கொண்டுவரப்பட்டது என்பதை மேற்கண்ட தகவல் ஊர்ஜிதப்படுத்துகிறது.

பாண்டிய இளவரசன் ஒருவன் இவ்வூருக்கு வந்து ஆட்சி செய்தான், மன்னனுக்கு ஆதரவாகப் போரிடச்சென்று மான்டான் என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?.

சித்தார் கோட்டை –  ஓர் ஆய்வுக்கோவை அட்டவணை [1] சித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை தொடரும்