Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

February 2011
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,868 முறை படிக்கப்பட்டுள்ளது!

பொட்டலில் பூத்த புதுமலர் 3

சித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை – தொடர்: 5

அழகன்குளம் சென்ற குழு கையிலிருப்புச் சரக்குகளை விற்று விட்டு, புதிய சரக்குகள் கொள்முதல் செய்து ஆரவாரத்துடன் வந்து சேர்ந்தது.

தேவருக்கும் கடம்பனுக்குமாகச் சேர்த்து வாங்கிய சரக்குகளை முதலியார் விவரித்துக் கொண்டிருந்தார். சரக்கு அதிக அளவில் இருந்தது.

அதே சமயம் மேற்குத் திசையில் இருந்து வேகமாக ஓர் ஆள் வந்து சேர்ந்தான். அவன் வந்த வேகத்தில் மூச்சிரைத்தது.

அவன் யார்? எதற்காக வந்திருக்கிறான் என்பதைத் தெரிந்து கொள்ள எல்லோரும் அவனைச் சூழ்ந்து கொண்டனர்.

சற்று நேரம் ஆசுவாசப் படுத்திக் கொண்ட பின் அவன் சொன்ன செய்தி இது தான்:

“பங்காரு செட்டியின் மனைவிக்கு உடல் நிலை ரொம்ப மோசமாகவிருக்கிறது. உடனே அவர் புறப்பட்டுச் செல்ல வேண்டும்”.

செய்தி கேட்டதும் செட்டியார் இடிந்து போய் விட்டார். பாவம்! அவரும் அவர் மனைவியும் தவிர அவர் குடும்பத்தில் வேறுயாருமில்லை. மனைவி கெட்டிக்காரி. ஒன்றியாகவே வீட்டு வேலைகள் அத்தனையும் செய்து முடிப்பாள். இப்பொழுது யார் அவளைக் கவனிப்பது?

செட்டியாருக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. தாமதிப்பது ஆபத்து.

சரக்குகளை என்ன செய்வது? பரிதாபமாகத் தேவரைப் பார்த்தார்.

குறிப்பறிந்த தேவர், “செட்டியாரே! கவலை வேண்டாம். என்னுடைய சரக்கும், கடம்பன் சரக்கும் சற்று அதிகமாகயிருப்பதால் பாதியை முதலியார் வசம் அனுப்பி வைத்து விட்டு மீதியை இங்கேயே வைத்துக் கொள்ளப் போகிறேன். அத்துடன் உம்முடைய சரக்கும் இருக்கட்டும். நீர் ஊருக்குப் போய்த் திரும்பிய பின் அதைப் பற்றி யோசிக்கலாம். இப்போது தாமதிக்காமல் உடனே புறப்பட்டுச் செல்லும்.” என்று கனிவாகவும் ஆறுதலாகவும் கூறினார்.

செய்தி கொண்டு வந்த ஆளுடன் செட்டியார் புறப்பட்டு விட்டார்.

அடுத்து முதலியாரை அழைத்தார் தேவர்.

“முதலியாரே சரக்குகள் அதிகமாகயிருப்பதால் இப்போது பாதியை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். மீதி இங்கேயே இருக்கட்டும்…”

முதலியார் கேள்விக்குறியுடன் தேவரை ஏறிட்டுப் பார்த்தார்.

தேவர் முகத்தில் புன்னகையுடன் கண்களை பாதி மூடியவராக, “நான் ஒரு திட்டம் வைத்திருக்கிறேன். உம்…! அப்புறம் ஆண்டவன் விட்ட வழி…” பார்க்கலாம்…! தைரியம் புருஷலட்சணம்…!” என்று ஏதோ கனவில் பேசுவதைப் போல் பேசிக் கொண்டு போனார்.

முதலியாருக்கு ஒன்றும் புரியவில்லை. எதிர்த்துப் பேசத் தயக்கம். தலையைச் சொரிந்து கொண்டார்.

விரைவிலேயே முதலியாருக்குப் பதில் கிடைத்து விட்டது.

பக்கத்தில் நின்ற கடம்பனை விளித்து, “நம்முடைய சரக்கில் பாதியை முதலியாரிடம் ஒப்படைத்து விட்டு, மீதியை உள்ளே அடுக்கி வை. இன்னொரு விஷயம். செட்டியார் சரக்கை ஒரு பக்கம் தனியாக அடுக்கி வை” என்று கட்டளையிட்டார்.

கடம்பன் மறுபேச்சுப் பேசவில்லை. செயலில் இறங்கி விட்டான்.

பேச்சுத் துணைக்கு ஆட்கள்; தங்குவதற்கு வசதியான குடிசை; செல்லமாளின் கனிவான சிசுரூஷை; தேவருக்கு முற்றிலுமாக ஜுரம் தணிந்து விட்டது.

காலையிலும் மாலையிலும் காலார நடை பயின்றார். திட்டுப் பகுதியை விட்டு சற்று தொலைவிலும் போய் உலாவி விட்டு வந்தார்.

ஒரு நாள் காலையில் வெளியே சென்றவர் சற்று தாமதமாக வந்தார். முகத்தில் சந்தோஷக்களை, கையில் ஏதோ உருண்டை மாதிரி வைத்திருந்தார்.

மகிழ்ச்சி பொங்க கடம்பனை அழைத்தார். அவன் என்னவோ ஏதோ என்று விழுந்தடித்துக் கொண்டு ஓடினான்.

கையில் வைத்திருந்த இரண்டு உருண்டைகளையும் அவனிடம் கொடுத்தார்.

பயந்தபடியே அதைக் கையில் வாங்கி மேலுங்கீழும் பார்த்தான் கடம்பன். ஒன்னும் விளங்கவில்லை என்பதற்கடையாளமாக அவரை ஏறிட்டுப் பார்த்தான்.

தேவர் சிரித்துக் கொண்டார். “புரியவில்லையா? இரண்டும் களிமண் உருண்டை தான். ஆனால் வெவ்வேறு வகைக்களிமண். ஒன்று அடர்த்தியான சாம்பல் நிறம். மற்றொன்று மங்கலான பச்சை நிறம்.

முந்தியதில் பசைத்தன்மை அதிகம். ஆனால் காய்ந்தால் வெடிப்பு ஏற்படும். பிந்தியதில் பிசுபிசுத்தன்மை குறைவு. வெடிப்பு ஏற்படாது. ஆனால் காய்ந்தால் உறுதியாக இருக்காது.

இரண்டையும் சமமாக கலந்து பிசைந்து காய வைத்தால், வெடிப்பு ஏற்படாது; உறுதியாக இருக்கும்…” என்று அடுக்கிக் கொண்டே போனவர், கடம்பன் இடைமறித்து எந்தக் கேள்வியையும் கேட்காமல் இருந்தது, தான் கூறிய எந்த விளக்கமும் அவன் மண்டையில் ஏறவில்லை என்பதைப் புரிந்து கொண்டார்.

பேச்சை மறுவழியில் திருப்ப, “கடம்பா! இப்பொழுதாவது நான் சொல்வதை கவனமாகக் கேள்! இந்த இருவகைக்களி மண் (கரம்பை – புற்றுமண்)களையும் சமபாகத்தில் கலந்து தண்ணீர் விட்டுப் பிசைந்தால் அதிகமான பிசுபிசுப்புத் தன்மையிருக்கும். அத்துடன் போதிய அளவு மணல் சேர்த்துப் பிசைந்தால் இது ஒரு புது வகைக் கலவையாக மாறும். இப்போது பார்! நீ கட்டியிருக்கிறாயே குடிசை, அதன் நான்கு புறமும் இந்தக்கலவையைக் கொண்டு ஒரு முழம் அல்லது இரண்டு முழம் உயரத்தில் சுவர் எழுப்பினால் பூச்சி பொட்டு உள்ளே வராது. குளிர் காற்றைத் தடுக்கும். நான்கு விரற்கடை அளவில் தளத்திற்குப் பூசி மெழுகினால் கல்தளம் மாதிரி கெட்டியாக இருக்கும். சரக்குகளை பயமில்லாமல் அடுக்கி வைக்கலாம்……”

கடம்பன் சந்தோஷத்தில் கூவினான்.

“ஆஹா! அருமையான யோசனை! அற்புதமான கண்டு பிடிப்பு! இதை எங்கே கண்டு பிடித்தீர்கள் அண்ணா!”

“இந்த ஒரு வாரமாக நான் சும்மா சுற்றிக் கொண்டிருக்கிறேன் என்று நினைத்தாயா? நான்கு புறமும் சுற்றிப் பார்த்து ஆய்வு செய்து கொண்டிருக்கிறேன். இப்போது கட்டியிருக்கிறாயே குடிசை, இது காற்றுக்கும் மழைக்கும் ஈடுகொடுக்காது. காற்று அதிகம் வீசினால் கூரையைப் பிய்த்தெறிந்து விடும். மழை அதிகம் பெய்து தண்ணீர் தேங்கினால் குடிசையின் உட்புறம் நீர் நிறைந்து விடும்.

கிழக்குப்புறம் பனைமரம் ஏராளமாக இருக்கிறது. அவற்றை வெட்டி சட்டமாக்கிப் பரப்பி அதன் மேல் ஓலைக் கூரை போட்டால் எப்படிப்பட்ட காற்றும் அதை அசைக்க முடியாது.

நாம் இருக்கும் இந்த இடத்திற்கு மேற்கே இந்த களிமண் இருக்கிறது. இதை வைத்து சுவர் எழுப்பினால் தண்ணீர் உள்ளே புகுவதற்கு வழியில்லை.

அதுமட்டுமல்ல. இந்தக்களிமண் பகுதிக்கு இன்னும் சற்று மேல் புறமாக கரிசல் கலந்த வண்டல் மண் தரையிருக்கிறது. விவசாயத்திற்கு அருமையான நிலம்.

நெல், கம்பு, கேழ்வரகு, வாலி எதை விதைத்தாலும் நல்ல விளைச்சல் கிடைக்கும். தெற்கே வைகையாறு வரை இந்தத் தரை பரந்து கிடக்கிறது.

தேவிபட்டினத்திலிருந்து இராமநாதபுரம் செல்லும் பாதைக்கும் கீழ்புறமாக ஒரு சிறிய கண்மாய் அமைத்து விட்டால் இரு போகம் விவசாயம் செய்யலாம்.”

அவர் சொல்லச் சொல்ல திறந்த வாய் மூடாமல் அவரையே ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் கடம்பன். தேவர் தொடர்ந்தார்.

“கிழக்குப்புறம் மணல்வெளி. மா, வாழை, தென்னை வளர்ப்பதற்கு அருமையான இடம். பார்த்திபனாற்றில் இருந்து தேர்போகி எல்லை வரை இது விரிந்து படர்ந்து கிடக்கிறது.”

சற்று நேரம் கண்களை மூடிக்கொண்டு ஏதோ சிந்தனையில் மூழ்கினார்.

கடம்பனுக்கு ஒரே குழப்பம். சும்மா கிடந்த மனுஷன் நாலைந்து நாட்களுக்குள் இவ்வளவு இடங்களையும் எப்படிச் சுற்றிப் பார்த்தார்? இவ்வளவு துல்லியமான விவரங்களை எப்படிச் சேகரித்தார்? என்ன நோக்கத்தில் இவ்வளவு விபரங்களையும் தன்னிடம் சொல்கிறார்? என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் தவித்தான்.

ஆவலைக் கட்டுப்படுத்த முடியாமல் கடைசியில் கேட்டே விட்டான்.

“அண்ணா! நீங்கள் சொல்வதெல்லாம் கேட்பதற்கு இனிமையாகத் தான் இருக்கிறது. அழகான யோசனை. அற்புதமான திட்டம். நூறு பேர்களுக்கு மேல் இந்த இடத்தில் தங்கியிருந்தால் தான் நீங்கள் சொன்ன திட்டத்தை நிறைவேற்றி வைக்க முடியும்.

நாமோ வழிப்போக்கர்கள். அசம்பாவிதமாக உங்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தற்காலிகமாக இங்கு தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இந்த இடம் நமக்கு நிரந்தரமில்லையே! அப்படியே வைத்துக்கொண்டாலும் நம்மால் இவ்வளவு பெரிய திட்டத்தை நிறைவேற்ற முடியுமா? அண்ணா! நான் சொல்கிறேன் என்று கோபிக்காதீர்கள்.

தேவையில்லாமல் உடம்பை அலட்டிக் கொள்கிறீர்கள் என்பது தான் என்னுடைய உறுதியான எண்ணம்”.

கடம்பன் சொன்னது அத்தனையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த தேவர் அவனைக் கூர்மையாகப் பார்த்தார். கடம்பனின் வாதத்தில், வெகுளித்தனமான அவனது பேச்சில் உண்மையிருந்தது.

கிட்டநெருங்கி இருக்குமாறு சமிக்ஞையால் தெரிவித்தார். சற்றுத் தயக்கத்துடனேயே கடம்பன் நெருங்கி உட்கார்ந்தான்.

தொண்டையைச் செருமிக் கொண்டார். நாற்புறமும் கண்ணோட்டமிட்டார். ஏதோ பெரிய பீடிகை போடுவது போல் தெரிந்தது.

குரலைத் தாழ்த்திக் கொண்டு கடம்பனுக்கு மட்டுமே கேட்கக்கூடிய அளவில் சன்னமான குரலில் பேச்சை ஆரம்பித்தார்.

கடம்பன் காதைத் தீட்டிக் கொண்டு அவர் சொல்வதை குருவிடம் சீடன் தீட்சை பெறுவதைப் போல் பக்தி சிரத்தையுடன் கேட்டான்.

“கடம்பா! நான் சொல்லப் போகும் செய்தி உனக்கு ஆச்சரியமாக இருக்கும். அதே சமயத்தில் வேடிக்கையாகவும் இருக்கும். இது நடைபெறக் கூடிய காரியமா என்று அவநம்பிக்கை கொள்ளக் கூடியதாகக் கூட இருக்கலாம்.

ஆனால் நான் சொல்லப் போவது அனைத்தும் சத்தியமான உண்மை. நடக்கும் என்று என் உள்மனம் சொல்கிறது. கடவுள் சித்தம் எப்படியோ?

கடம்பா இந்த இடத்திற்கு இதற்கு முன் எத்தனையோ தடவை நாம் வந்து தங்கி இருக்கிறோம். அப்போதெல்லாம் இந்த இடத்தைப் பற்றி என் மனதில் எவ்வித எண்ணமும் எழுந்ததில்லை.

ஆனால் இந்த முறை நாம் இங்கு வந்ததில் இருந்து தான் விவரிக்க முடியாத சலனம். இழந்து விட்ட ஏதோ ஒரு பொருள் கைக்கெட்டிய தூரத்தில் இருந்தும் அதை அடைய முடியாத தவிப்பு. என்னைச் சுற்றிலும் ஒரு வித ஈர்ப்பு சக்தி. எங்கோ நான் கவர்ந்திழுக்கப்படுவது போன்ற உணர்வு. மனப்போராட்டம்… ” சற்று நேரம் பேச்சை நிறுத்தி ஆசுவாசப் படுத்திக் கொண்டு மீண்டும் துவக்கினார்.

கடம்பனோ ஆச்சரியமிகுதியால் கண் இமைக்காது தேவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“இந்தக் கையகல திட்டுப் பகுதியை மட்டுமே நீ பார்த்துக் கொண்டிருக்கிறாய்; நானோ இதன் நான்குபுறமும் வெகு தூரம் வரை பார்த்து விட்டேன். நாம் இதுவரை எவ்வளவோ இடங்களை, ஊர்களைப் பார்த்திருக்கிறோம். இது மாதிரியான ஒரு இடத்தை எங்குமே பார்க்கவில்லை.

இதன் மேற்குப்புறத்தில் கரிசல் தரை, உவர் மண்தரை, புற்று மண்தரை, கரம்பை மண்தரை.

வடபுறமும் கீழ்புறமும் மணற்பகுதியும், கரிசல் புற்று மண்பகுதியும் இணையும் இருச்சாரி மண்தரை, காய் கறிச் செடிகள், பயறு வகைகள், எலுமிச்சை, நார்த்தை, மாதுளை, கொய்யா போன்ற சிறுவிருட்சங்கள் வளர்க்க இம்மாதிரியான இடம் அமைவது அபூர்வம்.

அதற்கடுத்து மணற்கண்டம். மா, வேம்பு, வாழை, நாவல் போன்ற பெரு விருட்சங்கள் வளர்க்க உவந்தது.

இதை விட்டு இன்னும் கிழக்கே போனால் கடற்கரை வரை குறு மணல். தென்னை வளர்ப்புக்கு மிகச்சிறந்தது. ஆடு மாடுகள் மேய்ச்சல் நிலமாகவும் பயன்படுத்தலாம்.

தெற்கில் கீழ்புறமும் மேல் புறமும் விவசாய நிலம்.

மேல்புறத்தை விட்டு விட்டு மற்ற மூன்று பக்கங்களிலும் மதுரமான குடிநீர். இந்தத் தண்ணீரைக் குடித்துக் கொண்டே மூன்று நாட்கள் வரை சாப்பிடாமல் இருக்கலாம்.

இது ஒரு வரம் பெற்ற இடம். சொர்ணம் விளையும் பூமி. சீந்துவாரின்றி, தேடுவாரின்றி, பண்படுத்துவாரின்றி, பாலையில் காய்ந்த நிலவாக பயனற்றுக் கிடக்கிறது.

இந்த இடம் மட்டும் சீர்திருத்தப்பட்டால் ஆயிரக்கணக்கான மக்கள் இதன் மூலம் பயன் அடையலாம். உழைப்புத்தான்… ” என்று கூறிக் கொண்டிருக்கும் போது கடம்பன் இடைமறித்தான்.

“அண்ணா! உங்கள் நோக்கமும் திட்டமும் மிகப்பிரமாதமாக இருக்கிறது. இங்கிருப்பதோ நாலைந்து பேர் தான். நம்மால் என்ன சாதித்து விட முடியும்? நடைபெற முடியாத ஒரு விஷயத்தைப் பற்றி அளவுக்கதிகமாக நீங்கள் சிந்தனை செய்கிறீர்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. அண்ணா! தயவு செய்து இதைப் பற்றி மேலும் யோசிக்காதீர்கள். எனக்குத் தலை சுற்றுகிறது” என்று பரிதாமாகக் கூறினான்.

தேவர் சிரித்துக் கொண்டார். கண்களை மூடி சிறிது நேரம் சிந்தனை செய்தார்.

பிறகு கடம்பனைப் பார்த்து, “கடம்பா! நீ என்ன நினைத்தாலும் சரி! அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. என்னைப் பொறுத்தவரையில் நான் ஒரு உறுதியான முடிவுக்கு வந்து விட்டேன்.

இந்த இடத்தில் ஏதோ ஓர் ஈர்ப்பு சக்தியிருக்கிறது. இதை விட்டு என்னால் நகர முடியாது. மற்றவர்களைப் பற்றி நான் ஏதும் சொல்வதற்கு இல்லை. செல்லம்மாளுடன் இங்கேயே தங்கிவிட முடிவு செய்து விட்டேன். என்னால் முடிந்தவரை இந்த இடத்தை சீர்திருத்தம் செய்வென்”, என்று உறுதியான குரலில் கூறினார்.

அவரது கண்கள் கனவு உலகத்தில் சஞ்சரிப்பது போல் தெரிந்தது.

கடம்ப்ன் முகத்தில் குழப்பம் மறைந்தது. தெளிவு பிறந்தது. எழுந்து நின்றான்.

குரல் தழுதழுக்க, “அண்ணா! நீங்கள் சொன்ன விபரங்களை சரியாகப் புரிந்து கொள்ளாமல் ஏதேதோ பிதற்றி உங்கள் மனதைப் புண்படுத்தி விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்.

ராமனின் நிழலாக லட்சுமணன் இருந்ததைப் போல் நான் என்றும் உங்கள் நிழலாகவே இருப்பேன். தயவு செய்து என்னை விரட்டி விடாதீர்கள்” என்று கண்ணீர்மல்கக் கூறினான்.

தேவர் ஆதரவுடன் அவனைத் தட்டிக் கொடுத்து, “கடம்பா! சும்மா ஒரு பேச்சுக்காகச் சொன்னேன். இது ஒரு மகாப் பெரிய திட்டம். இதை நிறைவேற்றுவதற்கு நூற்றுக்கணக்கான ஆட்கள் தங்கள் முழு உழைப்பையும் தத்தம் செய்ய வேண்டும்.

இதில் முதலாவதாகக் களத்தில் குதிப்பவன் நீ தான். நாம் ஆரம்பித்து வைப்போம். கடவுள் விருப்பப்படி மற்றவை நடக்கட்டும்”, என்று மனநெகிழ்வுடன் கூறினார்.

சற்றுநேரத்திற்கெல்லாம் விஷயம் கசிந்து விட்டது. செல்லம்மாளும் பஞ்சவர்ணமும் மகிழ்ச்சி பொங்க தங்கள் சம்மதத்தைத் தெரிவித்தார்கள்.

உல்லாசப் பயணம் சென்ற இடத்தில் அங்குள்ள இயற்கைக் காட்சிகளைனைத்தும் சுற்றிப் பார்த்துக் களித்து விட்டு ஊர் திரும்ப வேண்டுமே என்ற கவலையில் இருக்கும் போது பெரிய மனிதர் ஒருவர் வந்து, ‘நான் வெளியூர் போகிறேன். என்னுடைய வீடு காலியாக இருக்கிறது. வர இரண்டொரு மாதங்கள் ஆகலாம். நீங்கள் அது வரை இங்கு தங்கிக் கொள்ளலாம்’ என்று சொன்னால் எவ்வளவு குதூகலம் ஏற்படும்?

செல்லம்மாளும் பஞ்சவர்ணமும் அதே மனநிலையில் தான் இருந்தார்கள்.

அன்று மாலை கதிரவன் மறைவதற்கு முன் இதமான மாலை வெயிலில் அமர்ந்து அனைவரும் இந்தப் புதிய அனுபவத்தைப் பேசிக் கொண்டிருந்தனர்.

பகலவன் மறைந்து அரை நாழிகை கூட ஆகியிருக்காது. வடக்குத் திசையில் இருந்து ஆரவாரத்துடன் ஒரு குழு வந்து சேர்ந்தது.

இது, ‘பர்தேசி’ என்ற பன்னாட்டுக் குழு. பெரும்பாலும் இப்படிப்பட்ட ஒதுக்குப் புறமான இடங்களுக்கு இக்குழுக்கள் வருவதில்லை.

தொண்டியில் இருந்து காயல்பட்டினம் செல்லும் வழியில் இடைத் தங்கலாக இங்கு தங்கிப் போகலாமென்று வந்திருப்பதாகக் குழுவின் தலைவர் கூறினார்.

குழுவில் தொண்டியைச் சேர்ந்த அரபு வியாபாரி ஒருவர் அங்கிருந்த குடிசையை வினோதமாகப் பார்த்தார்.

முழுமையான வீடாகவும் இல்லாமல், விழாக்காலத்தில் போடப்படும் பந்தலாகவும் இல்லாமல் ஏதோ ஒரு வித்தியாசமான அமைப்பாக அவருக்குத் தோன்றியது.

வியப்போடு பார்த்துக் கொண்டிருந்த அரபு வியாபாரியைத் தேவர் கவனித்தார்.

“நீங்கள் நினைப்பது சரி தான். இது வீடுமல்ல, பந்தலுமல்ல. வெயிலுக்கும், மழைக்கும் ஓதுங்கிக் கொள்வதற்கான கோழிக் கூடு…” என்று சிரிப்பும் வேடிக்கையுமாகக் கூறி, “உள்ளே போய்ப் பாருங்களேன்!” என்று கூறி அரபு வியாபாரியை அழைத்துக் கொண்டு குடிசைக்குள் நுழைந்தார்.

உள்ளே முக்கால்வாசி இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது வியாபாரப் பொருட்கள், அரபு வியாபாரிக்கு அளவுக்கு மீறிய ஆச்சரியம். இந்தப் பொட்டல் வெளியில், இந்தச் சிறிய ஓலைக் குடிசைக்குள் இவ்வளவு பொருட்களா?

சில பொதிகளைப் பிரித்துக் காண்பிக்குமாறு தேவரிடம் கேட்டார். பக்கத்தில் நின்று கொண்டிருந்த கடம்பனுக்கு சமிக்ஞை செய்யவே, அவன் பொதிகளைப் பிரித்துக் காண்பித்தான்.

எல்லையற்ற வியப்பால் அரபு வியாபாரி, “ஆ! என்று கூவி விட்டார்.

சித்தார் கோட்டை –  ஓர் ஆய்வுக்கோவை அட்டவணை சித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை தொடரும்