Categories

Archives

A sample text widget

Etiam pulvinar consectetur dolor sed malesuada. Ut convallis euismod dolor nec pretium. Nunc ut tristique massa.

Nam sodales mi vitae dolor ullamcorper et vulputate enim accumsan. Morbi orci magna, tincidunt vitae molestie nec, molestie at mi. Nulla nulla lorem, suscipit in posuere in, interdum non magna.

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,022 முறை படிக்கப்பட்டுள்ளது!

கௌரவம் – சிறுகதை

“பார்த்தா பிச்சைக்காரி மாதிரித் தெரியுது. ஆனா நீங்க தான் வரச் சொன்னதா அந்தப் பொண்ணு சொல்லுது. பேரு காவேரியாம். வாட்ச்மேன் என்ன செய்யறதுன்னு கேட்கறான்”

வேலைக்காரி சொன்னவுடன் அமிர்தம் எதுவும் புரியாமல் விழித்தாள். “நான் ஏன் பிச்சைக்காரியை வரச் சொல்றேன்..” என்றபடி யோசித்தவளுக்கு எதுவும் நினைவுக்கு வரவில்லை.

“நீங்க எழுதினதா ஒரு லெட்டரையும் கையில் வச்சிருக்காளாம்”

லெட்டர் என்றதும் அமிர்தத்தின் மூளையில் ஒரு பொறி தட்டியது. வீடு முழுவதும் ஏ.சி.யாக இருந்தாலும் அமிர்தத்திற்கு திடீரென வியர்த்தது. இதயம் படபடவென அடித்துக் கொண்டது. “வரச்சொல்லு” என்றாள்.

வேலைக்காரி திகைத்துப் போனாள். இப்படிப் பட்ட மனிதர்கள் அவளுக்குத் தெரிந்த வரை இந்த பங்களாவின் மெயின் கேட்டைத் தாண்டி இது வரை உள்ளே நுழைந்ததில்லை. தன் திகைப்பை மறைத்துக் கொண்டு அந்தப் பெண்ணை அழைத்து வரப் போனாள்.

அவள் அழைத்து வரும் வரை அமிர்தத்திற்கு இருப்பு கொள்ளவில்லை. மேற்கொண்டு சாப்பிடவும் பிடிக்கவில்லை. அந்தப் பெண் சிறு குழந்தையாக இருந்த போது பார்த்திருக்கிறாள். இப்போது அவள் எப்படி இருப்பாள் என்று பல உருவங்களை மனதில் ஏற்ப்படுத்திப் பார்த்தவளுக்கு நிஜமாகவே பார்க்கப் போகிறோம் என்ற போது பரபரப்பாய் இருந்தது.

அந்தப் பெண் தயக்கத்துடன் வந்தாள். ஏழ்மை தனது முத்திரையை அவள் மீது குத்தியிருந்தது. அமிர்தம் அவளைக் கூர்ந்து பார்த்தாள். கலைந்த தலைமுடி, ஆங்காங்கே கிழிசல் தைக்கப்பட்ட வெளிறிப் போன சேலை, முகத்தில் லேசாய் கலவரம், கையில் ஒரு பெரிய பழைய துணிப்பை…

காவேரி மௌனமாகக் கை கூப்பினாள்.

அமிர்தத்தின் வயிற்றை என்னவோ செய்தது. சமாளித்துக் கொண்டு வரவேற்றாள். “வாம்மா உட்கார்”

அந்தப் பெண் உட்காராமல் அவளையே பார்த்துக் கொண்டு சிறிது நேரம் நின்றாள். இருவருக்கும் என்ன பேசுவது, எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை.

சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு முன் இந்தப் பெண்ணின் தாயார் இவளை வயிற்றில் சுமந்து கொண்டு இதே பங்களாவிற்கு வந்தது இன்னமும் அமிர்தத்திற்கு நன்றாக நினைவிருக்கிறது. அவர்களது கம்பெனியின் வெளியூர் கிளையில் அப்போது அவள் வேலை செய்து கொண்டிருந்தாள். மிகவும் அழகாக இருந்தாள். அன்று அமிர்தத்தின் மாமனார் தான் அவளிடம் கறாராகப் பேசினார். “அவன் பலாத்காரம் செஞ்சான், கல்யாணம் செஞ்சுக்கறேன்னு சொன்னான்னு சொல்லிப் பிரயோஜனம் இல்லை. இதோ இங்க நிக்கறாளே இவ தான் அவன் சம்சாரம். பேர் அமிர்தம். ஒரு ஆளுக்கு உசிரோட ஒரு சம்சாரம் தான் இருக்க முடியும். அதுக்கு மேல இருக்கிறவங்களுக்கு இந்த சமூகத்தில் பேர் வேற. என்கிட்ட சொன்னதை ஊரெல்லாம் சொல்லிகிட்டு திரிஞ்சேன்னு தெரிஞ்சா என் கம்பெனில பணம் கையாடல் பண்ணிட்டேன்னு உள்ளே தள்ளிடுவேன். இனி இந்தப் பக்கமோ என் கம்பெனிப் பக்கமோ வராம என் கண்ணில் படாம தப்பிச்சுக்கோ”.

போவதற்கு முன்னால் அவள் முகத்தில் தெரிந்த வலி அமிர்தத்தை பல நாள் தூங்க விடவில்லை. விசாரித்ததில் அந்தப் பெண் ஒரு அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவள் என்றும் அவர்கள் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து ஒரு வருடம் தான் ஆகிறதென்றும் ந்¢ஜமாகவே ஒரு அப்பாவி என்றும் தெரிந்தது. கணவனுடன் இரண்டு நாள் பேசாதிருந்தாள். அந்தப் பெண்ணின் அப்பாவித்தனத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு சிறு குற்றவுணர்வு கூட இல்லாமல் இருந்த தன் கணவனுடன் வாழப் பிடிக்காமல் மூன்றாவது நாள் தாய் வீட்டுக்குப் போய் விட்டாள். தாய்வீட்டாரோ அவளது இரு குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்துப் பார்க்கச் சொல்லித் திருப்பி அனுப்பினார்கள். அந்தக் காலச் சமூக நிர்ப்பந்தங்கள் அவளைக் கட்டிப் போடவே, இயலாமையுடன் கூனிக்குறுகிப் புகுந்த வீட்டுக்குத் திரும்பி வந்தாள். கனவில் எல்லாம் அந்தப் பெண் வந்து அவள் குடும்பத்தார்களையும் அவள் குழந்தைகளையும் சபித்தாள். சில நாட்கள் கழித்து அந்தப் பெண் ஒரு பெண் குழந்தையைப் பிரசவித்ததும் அவள் சுமார் நூறு மைல் தள்ளி ஒரு ஊரில் இருப்பதும் அமிர்தத்திற்குத் தெரிய வந்தது. வீட்டார் யாருக்கும் தெரியாமல் அவளை ஒரு முறை பார்த்து விட்டு வந்தாள். கையோடு சிறிது பணத்தையும் கொண்டு போயிருந்தாள். முதலில் அந்தப் பெண் அதை வாங்க மறுத்தாள்.

“உனக்காக இல்லம்மா. இந்தக் குழந்தைக்காக இதை வாங்கிக்கோ. இது என்ன பாவம் செய்தது சொல்லு. என்னால வேறெந்த உதவியும் செய்ய முடியாது. நான் மாசா மாசம் என்னால் முடிஞ்சதை அனுப்பறேன். இந்தக் குழந்தையை நல்லாப் படிக்க வை. இது என் புருசன் செஞ்சதுக்குப் பரிகாரம் காட்டியும் அவள் படிப்புக்கும் அடிப்படை வசதிக்கும் உபயோகமாயிருக்கும். எனக்கும் ரெண்டு குழந்தைகள் இருக்கு. அதுக நல்லா வரணும்னு பிரார்த்தனை இருக்கு. அது பலிக்கணும்னா உன் குழந்தைக்கு நான் ஏதாவது செய்யணும்னு என் மனசாட்சி சொல்லுது. வாங்கிக்கம்மா”

கடைசியில் அவள் அந்தப் பணத்தை வாங்கிக்கொண்டாள். அன்று முதல் எந்த மாதமும் பணம் அனுப்ப அமிர்தம் தவறியதேயில்லை. வருடா வருடம் அனுப்பும் தொகையையும் அதிகப்படுத்தி வந்தாள். ஆரம்பத்தில் விஷயம் தெரிய வந்த போது கணவனும் வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இந்த விஷயத்தில் மட்டும் அமிர்தம் மிக உறுதியாக இருந்ததால் மறுபடி அந்தப் பெண்ணையும் குழந்தையையும் போய் சந்திக்கக் கூடாது என்ற ஒரு கட்டுப்பாடோடு நிறுத்திக் கொண்டார்கள். அப்படி அவள் போனாள் என்று தெரிந்தால் பணம் அனுப்பக் கூட விட மாட்டோம் என்று பயமுறுத்தினார்கள். ஆனால் அந்தப் பெண்ணைப் பற்றி அமிர்தத்துக்குத் தகவல் தரும் நபர் உடனடியாக வேலையிலிருந்து நிறுத்தப் பட்டார். கிட்டத் தட்ட இருபது வருடங்கள் கழித்து இந்த மாத மணியார்டர் மட்டும் விலாசதாரர் இறந்து விட்டார் என்ற தகவலுடன் திரும்ப வந்தது. கணவனிடம் தகவலைத் தெரிவித்தாள்.

வேண்டா வெறுப்பாக அவர் கேட்டார். “இதை என்கிட்ட ஏன் சொல்றே”

“”அம்மாவும் செத்துட்டா. ஒரு வயசுப் பொண்ணு அனாதரவா தனியா எப்படி இருக்க முடியும்”

“அதுக்கு என்ன செய்யணும்னு சொல்றே”

“அந்தப் பொண்ணுக்கு இனியாவது நாம ஆதரவு தரணும். நான் வரச் சொல்லப் போறேன்”

கணவர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன. “நீ என்னை நாலு பேர் முன்னாடி அவமானப் படுத்தாம விடமாட்டே”

“அவமானம் நம்ம கீழ்த்தரமான நடத்தையில் இருக்கு. அது வெளிய தெரிகிற போது புதிதாய் வர்றதல்ல. இது உங்கள மாதிரி ஆளுகளுக்குப் புரியாது”

தொடர்ந்த வாக்குவாதத்தின் முடிவில் அந்தப் பெண் வந்த பின் ஓரிரு வாரங்களில் ஒரு லேடீஸ் ஹாஸ்டலில் சேர்த்து விடுவது என்றும் பிறகு ஒரு நல்ல வாழ்க்கை அமைய ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் முடிவாகியது.

“ந்¢யாயமா நாம போய் கூட்டிட்டு வரணும்”

அவர் பார்வையாலேயே அவளைச் சுட்டெரித்தார். “பெரிய நியாய தேவதை. லெட்டர் போடு போதும்”

இனி அதிகம் பேசினால் வேதாளம் பழையபடி முருங்கை மரம் ஏறினால் என்ன செய்வது என்று அவளுக்குப் பயம் வந்தது. இவ்வளவு தூரம் இறங்கி வந்ததே அதிகம் என்று நினைத்தவளாய் அமிர்தம் உடனடியாக அந்தப் பெண்ணிற்குக் கடிதம் எழுதினாள். எழுதி ஒரு வாரம் கழித்து அந்தப் பெண் வந்திருக்கிறாள்.

“ஏம்மா நிற்கிறாய். உட்கார்”

அவள் மிகுந்த தயக்கத்தோடு சோபாவில் உட்கார்ந்தாள். அந்தப் பங்களாவும், அங்கு தெரிந்த செல்வச் செழிப்பும் அவளுக்கு பிரமிப்பை உண்டாக்கியிருந்ததாய்த் தோன்றியது. தோற்றத்தில் தன் தாயைப் போலவே இருந்தாலும், தாயிடம் காணப் படாத ஒரு உறுதி மகளிடம் தென்படுவதாக அமிர்தத்திற்குத் தோன்றியது. மெள்ள அமிர்தம் பேச்சுக் கொடுத்தாள்.
“காவேரி நீ என்னம்மா படிச்சிருக்கே”

“ஒன்பதாவது வரைக்கும் படிச்சிருக்கேன். அம்மா பக்கவாதம் வந்து படுத்தப்புறம் மேல படிக்கலைங்க”

அவள் தாய் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டது உண்மையில் அமிர்தத்திற்குத் தெரிந்திருக்கவில்லை. “எனக்கு ஒரு கடிதம் போட்டிருக்கலாமே. என்னால முடிஞ்ச உதவியைச் செஞ்சிருப்பேனே. படிப்பை நிறுத்தியிருக்க வேண்டாமே” அமிர்தத்தின் முகத்திலும் பேச்சிலும் நிஜமாகவே ஆதங்கம் தெரிந்தது. தனது மகனும் மகளும் நன்றாகப் படித்து பெரிய நிலையில் மேலை நாடுகளில் இருக்க, இந்தப் பெண் படிக்க முடியாமல் நின்றது அவளுக்கு மிக வருத்தமாக இருந்தது.

காவேரி பதில் சொல்லாமல் அமிர்தத்தையே ஆச்சரியத்தோடு பார்த்தாள்.

“என்னம்மா என்னை அப்படிப் பார்க்கறே”

உடனடியாகத் தன் பார்வையை விலக்கிக் கொண்டவள் தானும் பதிலுக்குக் கேட்டாள். “உங்க குழந்தைக என்ன படிச்சிருக்காங்க”

தயக்கத்துடன் அமிர்தம் சொன்னாள் “ரெண்டு பேரும் இஞ்சீனியரா அமெரிக்கால இருக்காங்க”

கேட்டு காவேரி சந்தோஷப் பட்ட மாதிரி தெரிந்தது. “எப்பவாவது வருவாங்களா?”

“வருஷத்துக்கு ஒரு தடவை வருவாங்க. போன மாசம் தான் வந்துட்டுப் போனாங்க” என்ற அமிர்தம் அப்போது தான் அவள் ஒரு பையைத் தவிர வேறு எதுவும் கொண்டு வராததைக் கவனித்து கேட்டாள். “வெறும் இந்தப் பையோட வந்திருக்கியே. உன்னோட பாக்கி சாமான் எல்லாம் எங்கே?”

ஒரு கணம் தயங்கி விட்டுச் சொன்னாள். “கொண்டு வரலைங்க”.

“ஏம்மா, நான் விவரமா எழுதியிருந்தேனே”

“இல்லைங்க எனக்குத் திரும்பப் போகணும்”

அமிர்தம் திகைத்துப் போய்க் கேட்டாள். “எங்கே போறே?”

“எங்க ஊருக்குத்தான். எனக்கு அங்க ஒரு ஸ்கூல்ல ஆயா வேலை கிடைச்சிருக்கு. இப்பப் போனா ராத்திரிக்குள்ள போய் சேர்ந்து நாளைக்கு வேலைக்குப் போயிக்கலாம். லீவு எடுக்க முடியாது.”

அமிர்தம் மறுப்பு சொல்ல வாயைத் திறந்தாள். அவளைப் பேச விடாமல், “ஒரு நிமிஷம்…” என்று சொல்லி விட்டு ஒரு ஓரமாக வைத்திருந்த துணிப்பையை எடுத்தாள்.

“நீங்க கண்டிப்பா தப்பா நினைக்கக் கூடாது. இதைத் திரும்பத் தரலைன்னா எனக்கு சமாதானம் கிடைக்காது. நீங்க மறுப்புச் சொல்லாம வாங்கிக்கணும்”

“என்ன இது…” என்ற படி பையைத் திறந்த அமிர்தம் திகைத்துப் போனாள். உள்ளே கட்டு கட்டாகப் பணம். “எனக்கு ஓண்ணும் புரியலை”

“இது நீங்க இது வரை எங்களுக்கு அனுப்பிச்ச பணம். இதிலிருந்து ஒரு பைசா கூட நாங்க எடுக்கலை. காரணம் அனுப்பினது நீங்கன்னாலும் இது உங்க கணவரோட பணம். அந்த ளோட பணத்தை எடுத்துக்க மனசு ஒத்துக்கல. எங்கள வேண்டாத ஆளை எங்களுக்கும் வேண்டாம். அவரோட காசு வேண்டாம். எத்தனையோ நாள் பட்டினி கிடந்துருக்கோம். மருந்துக்குக் காசு இல்லாம கஷ்டப் பட்டிருக்கோம். ஆனாலும் இதிலிருந்து பணம் எடுத்து உசிரோட இருக்க மனசு பிரியப்படல”

காவேரியின் வார்த்தைகளில் ஒரு பெருமிதம் இருந்தது. வந்த போதிருந்த பலவீனமான குரல் போய் இப்போது குரல் கணீரென்றிருந்தது.

“ந்£ங்க கேக்கலாம் ஏன் இந்தக் காசை அன்னைக்கே திருப்பி அனுப்பிச்சிருக்க வேண்டியது தானேன்னு. பணம் திருப்பி அனுப்புனா உங்க மனசு சங்கடப்படும்னு அம்மா நினைச்சாங்க. அவங்களத் தேடி வந்து பணத்தக் குடுத்து ஒரு பச்சக் குழந்தை கஷ்டப் படாம வளரணும்னு நினைச்ச உங்க மனசு வருத்தப்படக் கூடாதுன்னு அம்மா என்னைக்கும் சொல்லுவாங்க…” சொல்லச் சொல்ல அவளுக்குத் தொண்டையை அடைத்தது.

சுதாரித்துக் கொண்டு தொடர்ந்தாள். “இதை சேத்து வச்சு ஏதாவது அனாதை இல்லத்துக்குக் குடுத்துறலாம்னு அம்மா நினைச்சாங்க. பெருசான பெறகு நான் ஒத்துக்கல. யாரு பணத்த யாரு தர்மம் செய்யறது? செய்ய என்ன உரிமையிருக்குன்னு எனக்குத் தோணிச்சு. அதனால இதைத் திரும்பத் தரணும்னு நான் பிடிவாதமாய் இருந்தேன். அம்மா இதை திரும்ப உங்களுக்குத் தர்றது உங்கள அவமானப்படுத்தற மாதிரின்னு சொல்லி அப்ப தடுத்துட்டாங்க. ஆனா எனக்கு அப்படித் தோணல. அதான் அவங்க செத்துப் போனவுடனே இதைக் கொண்டாந்துட்டேன். நீங்க என்னப் புரிஞ்சுக்குவீங்கன்னு நினைக்கிறேன்”

“இந்தப் பணத்தில் உனக்கு உரிமை இருக்கும்மா. இது இனாம் அல்ல. இந்தப் பணத்துல மட்டுமல்ல. இந்த வீட்டுலயும் என் குழந்தைகளுக்கு இருக்கும் உரிமை உனக்கும் இருக்கு”

” நீங்க என்ன இன்னும் சரியாப் புரிஞ்சுக்கலன்னு தோணுது. நான் பொறக்கக் காரணமா இருந்ததால மட்டும் அந்த ஆள் எனக்கு அப்பான்னு ஆயிடாது. எடுத்துப் பாராட்டி சீராட்டாத ஒரு மனுசனை, ஒரு தடவை வந்து பார்க்கணும்னு கூடத் தோணாத அந்த ஆளை அப்பாங்கறதோ, அவர் காசுக்கு உரிமை கொண்டாடறதோ எனக்கு அருவருப்பா இருக்கு”

அமிர்தம் மிகுந்த வருத்தத்துடன் சொன்னாள் “நீ சொல்றது எனக்குப் புரியுதும்மா. ஆனா இத்தனை நாள் நான் கொஞ்சமாவது நிம்மதியா இருந்திருந்தேன்னா அதுக்குக் காரணம் உங்க வாழ்க்கையை நான் கொஞ்சமாவது பண ரீதியிலாவது சுலபமாக்கி இருக்கிறேன்னு நினைச்சுத் தான். ஆனா இத்தனை நாள் இப்படிக் கஷ்டப்பட்டுட்டீங்களேம்மா”

“அந்தக் கஷ்டத்துலேயும் இந்தக் காசைத் தொடாம வச்சிருக்கோம்கிற பெருமை இருந்துச்சும்மா” என்ற காவேரி லேசான மனத்துடன் தொடர்ந்தாள் ” உங்கள ஒரு தடவை பார்க்கணும்னு எனக்குப் பல தடவை தோணியிருக்கு. ஒவ்வொரு மாசமும் மறக்காம பணம் அனுப்புன உங்க நல்ல மனசுக்கு நானும் அம்மாவும் ரொம்பவே கடன் பட்டிருக்கோம். பொதுவா இந்த இரக்கம் எல்லாம் நாளாக நாளாக கம்மியாய் கடைசில காணாமப் போயிடும். ஆனா உங்க மனசுல மட்டும் இன்னைக்கு வரைக்கும் இந்த மனிதாபிமானம் குறையல. உங்கள என்னைக்கும் மறக்க மாட்டேன்.”

அமிர்தம் வாயடைத்துப் போய் நின்றாள். இந்தப் பெண்ணிற்கு இது வரை உதவவில்லை, இனியும் உதவ இவள் அனுமதிக்க மாட்டாள் என்ற உண்மை உறைத்ததால் அவள் மனம் கனத்தது.

அவளது களங்கமில்லாத மனதில் தோன்றியது அவள் முகத்திலும் பிரதிபலித்திருக்க வேண்டும். அவளது எண்ணத்தைப் புரிந்து கொண்டவளாய் காவேரி மனம் நெகிழ்ந்து போய் சொன்னாள். “நீங்க என்னைப் பத்திக் கவலைப்படாதீங்கம்மா. இவ்வளவு நாள் அம்மா மருந்துக்கே நான் சம்பாதிச்சதெல்லாம் செலவானதால தான் கொஞ்சம் சிரமப் பட்டுட்டேன். இனி அந்த செலவில்லாததால் என் சம்பாத்தியம் எனக்குத் தாராளமாப் போதும். நான் கிளம்பறேம்மா”

பணப் பையை டைனிங் டேபிள் மீது வைத்து விட்டு காவேரி திரும்பும் போது அறை வாயிலருகே முகம் சிறுத்து சிலையாக ஒரு மனிதர் நின்றிருந்தார். அவர் அவர்களிருவரையும் ஏதோ வேற்றுக் கிரக மனிதர்களைப் போலப் பார்த்துக் கொண்டிருந்தார். பிறந்ததிலிருந்து ஒரு முறை கூட அவள் பார்த்திராத தந்தையை ஒரு முறை பார்க்க வேண்டும் என்ற ஆசை எள்ளளவும் அவள் மனதில் இருந்ததில்லை. எனவே கதவு ஓரமாக நின்றிருந்த அந்த மனிதர் தன் தந்தையாகத் தான் இருக்க வேண்டும் என்று தெரிந்தும் ஏறெடுத்தும் பார்க்காது கதவை நேராகப் பார்த்த படி காவேரி கம்பீரமாக வெளியேறினாள்.

http://enganeshan.blogspot.com – என்.கணேசன்   நன்றி: –  பதிவுகள்.காம்