Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 7,437 முறை படிக்கப்பட்டுள்ளது!

வீட்டுத்தோட்டம் போடலாம்

செடிகளின் மேலும், பூக்களின் மேலுமான ஆசை எப்போதிலிருந்து ஆரம்பிச்சிருக்கும். யோசிச்சுப்பார்த்தா, பிறவியிலேயே ஆரம்பிச்சிருக்கும்ன்னு தோணுது. (நெறைய பெண்களுக்கு அப்படித்தான் :-)). ஐந்தாம் வகுப்பு வரைக்கும் பாப்கட் ஹேர்ஸ்டைல்தான். அதையும், உச்சந்தலையில் ரப்பர்பேண்ட் போட்டு கொத்தமல்லிக்கட்டு மாதிரி கட்டிவிட்டிருப்பாங்க. இந்த அழகுல, வீட்ல அம்மாவுக்கும் எனக்குமா பூ வாங்கினாக்கூட, அத்தனையும் எனக்குத்தான் வேணும்ன்னு பிடுங்கிப்பேனாம். தலைமுடியைவிட பூதான் அதிகமா இருக்கும்ன்னு ஆச்சிகூட கிண்டல் பண்ணுவாங்க!

கொஞ்சம் வளந்தப்புறம், வீட்டுல செடிவளர்க்கணும்ன்னு ஒரு ஆசை. என் அப்பாவழிப்பாட்டிக்கும், தாய்மாமாவுக்கும் தோட்டக்கலையில் இருந்த ஆர்வத்தைப்பார்த்துக்கூட வந்திருக்கலாம். அவங்களுக்கு நல்ல கைராசியும் உண்டு. என்னத்தை விதைச்சாலும், அவ்வளவு செழிப்பா வளந்து நிற்கும். (எனக்கும் துளியூண்டு உண்டு ஹி..ஹி..ஹி..). சிரட்டைன்னு சொல்லப்படற கொட்டாங்கச்சியில் மண் நிரப்பி கடுகு, மெரிகோல்ட் விதைகளை போட்டுட்டு, முளைச்சிடுச்சா இல்லியான்னு தெனமும் கவனமா பாத்துக்கிட்டிருப்பேன். முளைச்சு ஒரு ஜாண் உசரத்துக்கு வந்ததும் ரொம்ப சந்தோஷமா இருந்தது. அப்புறம், இதுலெல்லாம் வளர்த்தா பூக்காதுன்னு தெரிஞ்சதும் ஒர்ரே ஃபீலிங்க்ஸ்தான்..

பாட்டி வீட்டுல இருந்த அடுக்குமுல்லைப்பூக்கு அப்படி ஒரு அபாரமான மணம். ஒண்ணுமேல ஒண்ணா நாலடுக்கா,  இருக்கும். அவங்க வெச்சிருந்த செடிகொடிகளை வேறயாரையும் அண்டவிடாம தானே பராமரிப்பாங்க. கொடுக்காப்புளி, மருதாணி, முருங்கை, கனகாம்பரம், கோழி அவரைக்காய் (லேசான பர்ப்பிள் கலர்ல இருக்கும்)ன்னு அவங்க தோட்டத்தில் எக்கச்சக்கமா உண்டு. மாமாவோட தோட்டத்துல காய்கறிகளுக்கு தனியிடம் உண்டு. ஒருதடவை சூரியகாந்திப்பூவை கேட்டு அடம்பிடிச்சு, மாமாவை வீடு முழுக்க துரத்தி, ஓடவெச்சு தண்ணிகுடிக்க வெச்ச வீரக்கதையெல்லாம் உண்டு.. எனக்கு பயந்துட்டு தட்டட்டியில போய் உக்காந்துக்கிட்டார்.

இப்படியெல்லாம் பார்த்தே வளர்ந்ததுனாலயோ என்னவோ, வீட்டுத்தோட்டம் என்ற ஆசை மனசுல ஒரு மூலையில உக்காந்துக்கிட்டு பிறாண்டிக்கிட்டேயிருந்தது. வாய்ப்பும் வசதியும் கிடைச்சதும், நானும், சின்னதா அழகா ஒரு தோட்டம்போட்டுவெச்சேன். கல்யாணமாகி வந்தப்ப, தோட்டத்தை பிரியற ஏக்கம்தான் அதிகமா இருந்தது. இங்கே வந்தப்புறம், ஆரம்பத்துல ஒற்றை ரோஜாச்செடியை வளர்த்து திருப்திப்பட்டுக்கிட்டாலும்,   எப்பவாவது தொட்டிகளில், காய்கறிச்செடிகளை வளர்த்து உபயோகப்படுத்தும்போது நம்ம வீட்டுல வளர்த்ததுன்னு ஒரு தனி சந்தோஷம். அப்பப்ப சீசனுக்கேத்தமாதிரி, ஏதாவது விளையும். இப்போக்கூட புதினா, பொன்னாங்கண்ணி, தக்காளி, கரும்பு,  மிளகாய், இத்யாதிகள்ன்னு பயிரிட்டுருக்கேன். வருஷாவருஷம் பொங்கலுக்கு மஞ்சள்குலை என்னோட தோட்டத்து சப்ளைதான்.

ஒவ்வொருத்தரும் தன்னால் முடிஞ்சவரை, வீட்டுத்தோட்டங்களில் காய்கறி, கீரைகள், பூச்செடிகளை வளர்த்தாலே தன்னுடைய குடும்பத்தின் தேவைகளை ஓரளவு பூர்த்தி செய்துக்க முடியும். அதெல்லாம் கிராமங்களுக்குத்தான் சரிப்படும்.. நகரத்தில் ஏது வசதின்னு நிறையப்பேர் அலுத்துப்பாங்க. மனசிருந்தால் இடமுண்டு. இங்கே மும்பையில், குடிசைப்பகுதிகள்லயும் தொட்டிகளை வைக்க இடமில்லாட்டாக்கூட அதுகளை கயித்துல கட்டி கூரையின் பக்கக்கம்புகளில் தொங்கவிட்டுருப்பாங்க. சில இடங்களில் ஆஸ்பெஸ்டாஸ் கூரைகளுக்கு மேலயும் ரோஜாத்தொட்டிகளை வெச்சிருக்கறதுண்டு.

பால்கனிகளில், மொட்டைமாடிகளில், ஏன்.. ஜன்னல் விளிம்புகளில் கூட தொட்டிகளைவைத்து, செடிகளை வளர்க்கலாம். அதுக்குன்னு ஓவல் வடிவமைப்புள்ள தொட்டிகளும் கிடைக்குது. சிலவீடுகளில் அடுக்களையில் ரெண்டு சுவர்கள் சேரும் மூலைகளில் மார்பிள், கடப்பா போன்ற கற்களை ஷெல்புமாதிரி பதிச்சு, அதுல கனமில்லாத தொட்டிகளை வெச்சிருப்பாங்க. கொத்தமல்லி, வெந்தயம், அரைக்கீரை வகைகளை அதுல வளர்க்கும்போது அழகான உள்அலங்காரமாவும் இருக்கும்.

அபார்ட்மெண்டில் குடியிருப்பவர்கள், மொட்டைமாடியில் தோட்டம் அமைத்து, உழைப்பையும் செலவையும் பகிர்ந்துக்கிட்டா, பூச்சிக்கொல்லியின் நச்சு கலக்காத புத்தம்புது காய்கறிகள், பூக்கள் தங்குதடையில்லாம கிடைக்குமே. நல்ல உடற்பயிற்சியாவும், பயனுள்ள பொழுதுபோக்காவும் இருக்கும். மொட்டைத்தலையில்.. ச்சே.. மொட்டைமாடியில் பச்சைபசேல்ன்னு.. அழகா பூத்துக்குலுங்கும் தோட்டத்தையும் அதில் விளையாடவரும் அணில்கள்,குருவிகளையும் யாருக்குத்தான் பிடிக்காது!! Mumbai Port Trust-ன் காண்டீனின் மொட்டைமாடியில் இப்படியொரு அசத்தலான தோட்டத்தை, அதன் கேட்டரிங் ஆபிசரான ப்ரீதிபாட்டில் அமைச்சிருக்கார். காண்டீனின் பெரும்பான்மையான தேவையை அந்த தோட்டமே பூர்த்திசெய்யுதாம்.

அமோகமான நல்ல விளைச்சல் கிடைக்கணும்ன்னா, முதல்ல மண் ஆரோக்கியமா இருக்கணும். செடிகள் தங்களுக்கு தேவையான சத்துக்களை மண்ணிலிருந்தும், மிச்சத்தை காற்றிலிருந்தும் கிரகிச்சுக்குது. அதனால மண்ணும் சத்து நிரம்பியதா இருக்கணும். இதை, இப்பல்லாம் செடிகளுக்கான நர்சரிகளிலேயே ரெடிமேடா விக்கிறாங்க. செயற்கையுரம் போடாம, மட்கும் குப்பைகள், மாட்டுச்சாணம் இதெல்லாம் கலந்து மட்கச்செய்து தயாரிக்கப்படுது. வாங்கிட்டு வந்து தொட்டியில் நிரப்பி, செடியை நடவேண்டியதுதான்.

இந்த இயற்கை உரத்தை நாமளும் வீட்டிலேயே செஞ்சுக்கலாம். பழைய பக்கெட்டுகள், குப்பைத்தொட்டிகள் இதுல ஏதாவது ஒண்ணில் அடுக்களைக்கழிவுகள், செடிகளிலிருந்து உதிரும் இலைதழைகள் இதெல்லாம் போட்டுட்டு வரணும். ஜூஸ் எடுத்தப்புறம் கிடைக்கிற சக்கைகளைக்கூட போடலாம். மொத்தத்தில் மட்கக்கூடிய குப்பைகளா இருக்கணும். எப்பவும் லேசான ஈரப்பதம் இருந்துட்டிருந்தா ரொம்ப நல்லது. மழைக்காலத்தில் மண்புழுக்கள் தாராளமா கிடைக்கும். அதுல கொஞ்சத்தை எடுத்து, நம்ம உரத்தொட்டியில் போட்டுவெச்சா, குப்பைகளை நல்ல சத்துள்ள உரமா மாத்திடும்.

குறிப்பிட்ட அளவுக்கு ஒருமுறை கொஞ்சம் மண்ணையும் ஒரு லேயரா அடுக்குங்க. மறக்காம உரத்தொட்டியை மூடிவையுங்க. இல்லைன்னா, ஈத்தொல்லை தாங்காது. தொட்டி நிறைஞ்சதும், அப்படியே விட்டு வெச்சுட்டா, சுமார் மூணு மாசத்துல நல்ல அருமையான உரம் தயார். லேசா சலிச்சு எடுத்து, செடிகளுக்கு போடலாம். அமோக விளைச்சல் கொடுக்கும். எப்பவும்,ரெண்டு உரத்தொட்டிகளை கைவசம் வெச்சிருக்கணும். ஒண்ணு ரெடியாயிட்டிருக்கும்போது இன்னொண்ணில் உரம் தயாரா இருக்கும்.

செடிகளை வளர்க்க தொட்டிகளுக்கும் ரொம்ப மெனக்கெட வேண்டியதில்லை. இப்பல்லாம் கண்டெய்னர் விவசாயம்ன்னு ஒண்ணு பிரபலமாகிக்கிட்டு வருது. இது ஒண்ணும் புதுசில்லை.. நமக்கெல்லாம் தெரிஞ்சதுதான். வீட்டுல கிடக்கிற வேண்டாத பழைய டப்பாக்கள், பாட்டில்கள்ல செடி வளர்ப்போமே.. அதேதான். சில குடும்பங்கள்ல மாசாந்திர மளிகை வாங்கும்போது, அஞ்சுலிட்டர், ரெண்டு லிட்டர் கேன்கள்ல எண்ணெய் வாங்குவாங்க. அப்புறம், அதை பழைய பேப்பர்,பிளாஸ்டிக் வாங்குறவங்ககிட்ட தூக்கிப்போட்டுடுவாங்க. இதுதான் இப்போ நமக்கு கைகொடுக்கப்போவுது. பெப்சி, மிரிண்டா போன்ற பானங்கள் வர்ற பாட்டில்களையும் இப்படி உபயோகப்படுத்திக்கலாம். சுற்றுப்புறங்களில் பிளாஸ்டிக் குப்பைகள் கொஞ்சமாவது குறையும்.

கேன்கள், பாட்டில்கள், மற்றும் டப்பாக்களை அதன் குறுகிய வாய்ப்புறத்திலிருந்து கொஞ்சம் கீழிறக்கி வெட்டிக்கிட்டா, பூந்தொட்டி ரெடி. இதுல மண்ணை நிரப்பி தொட்டியின் அளவுக்கேற்ப சின்ன மற்றும் பெரிய செடிகளை நடலாம். பெரிய சைஸ் டப்பாக்களில், காய்கறிகள், கறிவேப்பிலை போன்றவற்றை நடலாம். சின்ன அளவுல வளர்ற ரோஜாக்கள், புதினா கொத்தமல்லி, அலங்காரப்பூச்செடிகளுக்கு குளிர்பான பாட்டில்களே போதுமானது. வீட்ல இருக்கற பசங்ககிட்ட செடிகளை பராமரிக்கிற பொறுப்பை கொடுத்துப்பாருங்க. ‘நானே வளர்த்ததாக்கும்’ங்கற பெருமையில பிடிக்காத காய்கறிகளும்கூட பிடிச்சுப்போக ஆரம்பிச்சுடும். எங்கவீட்ல வெண்டைக்காய் காய்ச்சுக்கிடந்தப்ப, பசங்க அதை பச்சையாவே சாப்பிடுவாங்க.

உங்க கற்பனைத்திறனுக்கேற்ப பாட்டில்கள்ல பெயிண்ட் வேலைப்பாடு செஞ்சுவெச்சா, அதுவே ஒரு அழகான உள்ளலங்காரமாவும் இருக்கும்.வீட்டுக்குள்ள வைக்கிறதுக்குன்னு தனியா க்ரோட்டன்ஸ்செடி வளர்க்கவேண்டியதில்லை. மும்பையில் குடிசைப்பகுதிகள்ல மட்டும் இருந்த இந்த கண்டெய்னர் முறை இப்ப நகரம் முழுக்க பரவ ஆரம்பிச்சிருக்கு. விளை நிலங்களெல்லாம் காங்கிரீட் காடுகளா மாறிட்டு வர்ற இன்றைய சூழல்ல, முடிஞ்சவரை அதை தடுக்கறதோட, நாம,இருக்குமிடத்தையும் உபயோகமுள்ள வகையில் பசுமையாக்கிக்கலாமே .

நன்றி: அமைதிச்சாரல்.காம்