Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,921 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஆலிம்சா முஸாபருக்கு கஞ்சி வாங்கிட்டு வரச் சொன்னாக

அது ஐம்பதுகளின் பின் பகுதி. கொழும்பு ஆலிம் அவர்களால் தொடங்கப்பட்ட உள்ளூர் மக்தப் மதரஸாவான (மார்க்கக் கல்விக்கூடம்)  ‘மதரஸா மழ்ஹருஸ்ஸுஅதா’வில் ஓதிக் கொண்டிருந்த நேரம். தலைமை உஸ்தாத் மௌலானா மௌலவி அஹ்மது இப்ராஹிம் ஆலிம் பாகவி முதவ்வல் அவர்களின்முதுமைக் காலம். மாவட்ட ஜமாத்துல் உலமாவின் தலைவராக ஆயுள் முழுக்க இருந்தவர்கள்; “சேதுநாட்டின் தீன் முத்து ” என்ற சிறப்புப் பெயர் பெற்றவர்கள். “பெரிய ஆலிம்ஸா” என்ற செல்லப் பெயரால்தான் அனைவரும் அழைப்பர் அவர்களை!

அவர்களைச் சந்திக்க சமுதாயத்தின் மூத்த உலமாக்கள் -தலைவர்கள் அடிக்கடி வந்து மார்க்க விஷயங்கள் – குறிப்பாக ·பத்வாக்கள்(மார்க்கத்தீர்ப்புகள்) பற்றி விவாதிப்பார்கள். இஹ்யாவுல் உலூமுத்தீனில் (இமாம் ஹஸ்ஸாலி என்ற பெரியார் எழுதிய ஞான நூல்) ஒரு அத்தாரிடி எனப் போற்றப் பட்டவர்கள்.

தர்ஜமதுல் குர்ஆன் மொழிபெயர்ப்பைச் சரிபார்க்க மௌலானா மௌலவி அப்துல் ஹமீது பாகவி அவர்களும். அவர்களது மகனார் அப்துஸ்ஸமது (முஸ்லிம் லீக் தலைவர், சிராஜுல் மில்லத்) அவர்களும் சித்தார்கோட்டைக்கு வந்து 17 நாட்கள் தங்கியிருந்ததை சிராஜுல் மில்லத் அவர்களே என்னிடம் பல முறை கூறியிருக்கிறார்கள். பிரிட்டிஷ் நீதிபதிகள் சில வழக்குகளுக்கு நீதிமன்றத்துக்கே அழைத்து ஆலோசனை கேட்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

அவர்கள் பணியாற்றிய காலத்தில் சமூகப் பிரமுகர்கள்தான் பார்க்க வருவார்கள் என்பதில்லை. நிறைய ஏழைகளும் உதவி கேட்டு வருவார்கள். வந்து ஓரிருநாட்கள் பள்ளியில் தங்குவார்கள்.

அவர்களுக்கு மதரஸா மாணவர்கள்தான் அவர்கள் குறிப்பிட்டுச் சொல்லும் வீடுகளுக்குச் சென்று உணவு வாங்கிக் கொண்டு வரவேண்டும். குறிப்பாக காலை நேரத்தில். அப்போதெல்லாம் காலை நேரத்தில் பெரும்பாலோர் வீடுகளில் பழைய கஞ்சிதான். சில பணக்கரர் வீடுகளில் மட்டுமே சுடுகஞ்சி.

பலகாரங்கள் மிக அரிது. பள்ளியில் ‘முஸாபிர்'(உதவி நாடும் ஏழைகள்) களுக்குக் கஞ்சி வாங்கி வருவதற்கென்றே தனியாக கோப்பைகள் இருக்கும். முஸாபிர்களின் எண்ணிக்கைக்கேற்ப இரண்டு அல்லது நான்கு மாணவர்கள் கஞ்சி வாங்கி வர அனுப்பப் படுவார்கள்.

அது ஒரு சிரமமான காரியம். சில நாட்களில்தான் உடனடியாகக் கிடைக்கும். பெரும்பாலான நாட்களில் கடுமையாக அலைய நேரிடும்.

கையில் தட்டேந்தி உண்மை முஸாபிர்கள் போலவே வீடு வீடாகப் போக வேண்டியிருக்கும். சில இல்லங்களில் எங்களுக்கும் திட்டு விழும். இன்னும் சில வீடுகளில் ‘ஆலிம்ஸா’வுக்கும் வசவு கிடைக்கும்.

“இந்த ஆலிம்ஸா’கிட்ட புள்ளைகள ஓத அனுப்புறமா இல்லே இப்படி கோப்பையத்தூக்கிக்கிட்டு வீடு வீடா பிச்சை எடுக்க அனுப்புறமா? ” என்று கோபப் படுவார்கள் ; ஆனால் அப்படி ஏசிய அவர்களே உடனே ” அத்தா சீதேவி… இதப் போயி ஆலிம்ஸாகிட்டச் சொல்லிப்புடாதே ” என்றும் கவனமாகச் சொல்வார்கள். அவவளவு பயம் கலந்த மரியாதை ஆலிம்ஸா அவர்கள் மீது!
சில வீடுகளில் கதவைத் தட்டினாலும் திறக்க மாட்டார்கள். எனவே வெளியில் இருந்தே நாம் நிஜத்தில் முஸாபிர்கள் இல்லை என்பதை அறிவிக்க , கதவைத் தட்டி, ” ஆலிம்ஸா ……. முஸாபருக்குக் கஞ்சி வாங்கிட்டு வரச் சொன்னாக……..”  என்று ராகம் போட்டுக் கத்த வேண்டியிருக்கும்.

அதைக்கேட்டு சில கதவுகள் திறக்கும்; பல வீடுகளுக்குள்ளிருந்து “இன்னக்கி வசதியில்லே” என்று குரல் மட்டும் வரும். சில வீடுகளிலிருந்து பதிலே வராது.

இப்படிக் கஷ்டமான இந்தப் பணிக்கு மாணவர்கள் பின்வாங்க மாட்டார்கள். நான் நீ என்று போட்டி போடுவார்கள்.

மதராஸாவில் பாடம் கேட்டு – பதில் சொல்லத் தெரியாமல் பிரம்படி வாங்கி நொந்து போவதை விட முஸாபிர்களுக்குக் கஞ்சி வாங்குகிற சாக்கில் ஜாலியாகச் சுற்றலாமே என்ற நினைப்பு.
சில நேரங்களின் உடனே கஞ்சி கிடைத்துவிட்டாலும் உடனடியாக மதராஸாவுக்குத் திரும்பாமல் இயன்றவரை இழுத்தடித்துவிட்டு வர, பிறகு இந்த விசயம் ஆலிம்ஸாவுக்குத் தெரியவர உதை பட்டவர்களும் உண்டு.

காலை ஆறரை மணிக்குத் தொடங்கும் இந்தக் கஞ்சி வாங்கும் விவகாரம் சரியாக எட்டுமணிக்கு முடிந்துவிடும்; ஏனென்றால் எட்டு மணிக்கு மதரஸா முடிந்துவிடும்.

இப்போது நினைத்தால் வியப்பாக இருக்கிறது. இந்தத் தலைமுறை பிள்ளைகளிடம் சொன்னால் நம்பக் கூட மாட்டார்கள். ஆனால் அதில் ஒரு இன்பம் இருந்தது. இந்த ஊருக்கு – இந்த ஆலிம்ஸாவிடன் சென்றால் நிச்சயமாக உணவு கிடைக்கும் ; கைச் செலவுக்கு காசும் கிடைக்கும் என்ற நம்பிக்கை, வீடு வீடாகச் சென்று கேட்க வெட்கப்படும் பழக்கமில்லாத ஏழைகளுக்கு. பழகியவர்கள் எப்படியும் கேட்டு வாங்கிப் பசியை அடக்கிக் கொள்வார்கள்; பழக்கமில்லாத மௌனப் பசியாளிகள் தங்கள் கண்ணியத்தையும் விட்டுகொடுக்காமல் தேவையையும் பூர்த்தி செய்து கொள்ளச் செய்த இந்த வித்தியாசமான அறப்பணியை அன்று புரிந்து கொண்டவர்கள் குறைவு; விமரிசனம் செய்தவர்களே அதிகம்.

கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு திடீரென இந்த நினைவுகள் மனதில் வந்தன. அவற்றை அசைபோடும்போது எனக்குப் பளிச்சென்று சில விசயங்கள் தோன்றின. அன்றையப் பணக்காரர்களில் பலர் சிடுசிடுப்பார்கள்; வேண்டா வெறுப்புடன் கொடுப்பார்கள். சிலர் மட்டுமே இல்லை எனாமல் மனநிறைவுடன் கொடுப்பார்கள்.

அப்படி கஞ்சி கேட்டுப் போகும் போது இல்லை என்று சொல்லாமல் இருந்ததைக் கொடுப்பதில் முந்திக்கொண்டவர்கள் பெரும்பாலும் ஏழைகள்; அல்லது முன்பு சிறப்பாக வாழ்ந்து பிறகு
கஷ்டத்தைச் சந்தித்துக் கொண்டிருந்தவர்கள். அவர்களுக்குக் காலையில் என்ன ஆகாரமோ அதைக் கொடுப்பார்கள். அதனுடன் கைச் செலவுக்குக் காசும் கொடுப்பார்கள் முஸாபரிடம் கொடுக்கச் சொல்லி. சில சமயங்களில் இது வசதியற்ற குடும்பம் என்று நாம் ஒதுங்கிச் சென்றாலும் வலிய அழைத்து கோப்பை நிறைய வீட்டில் இருந்ததை எல்லாம் அள்ளித்தந்த அந்தத் தாய்மார்களின் முகங்களை மனதில் கொண்டு வந்து பார்க்கிறேன்.

என்னுள் ஒரு புல்லரிப்பு!

அவர்களின் வாரிசுகள் எல்லாம் இன்று அல்லாஹ்வின் பெருங்கருணையினால் வசதியாக இருக்கிறார்கள்; வளத்துடன் வாழ்கிறார்கள்! டாக்டர்கள்; இஞ்ஜினீயர்கள்; தொழிலதிபர்கள்;
ஆசிரியர்கள்; அரசு அதிகாரிகள் என அவர்களது பிள்ளைகள் வாழ்ந்து சிறந்து இன்று பணி ஓய்வில் அல்லது ஆன்மீகத் தேடுதல்களில்!

அந்தத் தாய்மார்கள்தான் தங்கள் பிள்ளைகளுக்கு எவ்வளவு பெரிய சிறப்புக்களை மூலதனமிட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்கள்! ஸுப்ஹானல்லாஹ்!

ஒரு டாக்டராக – ஒரு சமுதாய எழுத்தாளனாக – ஒரு களப் பணி ஊழியனாக அன்று மர்க்கக் கல்வி பெற்ற அந்த மதரஸாவுக்கே சில வருடங்கள் நிர்வாகியாகப் பணிசெய்தவனாக, இறையருளால் கண்ணியத்துடன் வாழும் இன்றைய நான், அன்று பலரது வீட்டு வாசல்களில் நின்றுகொண்டு, கையில் தட்டேந்தி “ஆலிம்ஸா முஸாபருக்குக் கஞ்சி வாங்கிக்கிட்டு வரச் சொன்னாக” என்று கத்தியதை, அல்லாஹ் பெரிய ஆலிம்ஸாவின் மூலம் எனக்கு அருளிய அருட்கொடையாகவே பார்க்கிறேன்; இன்றைய இளைஞர்களின் பார்வைக்கு ஊற்றுக்கண்ணாய் அதைப் பதிவு செய்வதில் கொஞ்சம் கூட வெட்கப் படவில்லை; மாறாக அளவு கடந்த மகிழ்வும் நெகிழ்வுமே கொள்கிறேன்.