Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,476 முறை படிக்கப்பட்டுள்ளது!

பார்வை – ஒரு பார்வை

قُل لِّلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ

 

(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன். (24:30)

இறைவன் மனிதனின் உடலில் அமைத்திருக்கும் அத்துணை உறுப்புகளும் இன்றியமையாதவைதான். ஆனாலும் அதில் மிக முக்கியமான உறுப்பாக பார்வை பிரதான இடத்தை பெறுகிறது. பார்வையற்ற பல சகோதர, சகோதரிகள் அவர்களின் அன்றாட வாழ்வில் அனுபவிக்கும் வேதனை வார்த்தைகளால் வடிக்க இயலாதவை.

வெளிநாடுகளில் வாழும் எம்மில் பெரும்பாலோர், ‘என்ன வாழ்க்கை இது! கட்டிய மனைவி-பிள்ளைகளை பார்க்க முடியவில்லையே என்று வேதனையடைவோரை பார்க்கலாம். ஆனால், பார்வையற்றோர் தன் மனைவி-மக்கள் பெற்றோர்-உற்றார் அருகிலிருந்தும் அவர்களை பார்க்கமுடியாத அவலநிலை.

இவ்வாறெல்லாம் பார்வையற்றோரின் நிலையிருக்க, இறைவனின் மாபெரும் அருட்கொடையான பார்வை கிடைக்கப்பெற்றவர்கள் தங்களின் பார்வையை இறைவனுக்கு உவப்பான வழியில் பயன்படுத்துகிறார்களா என்று பார்த்தோமானால், பெரும்பாலோர் தமது பார்வையை மார்க்கம் தடுத்த வழியில் செலுத்துவதை காணலாம். எல்லாவற்றிற்கும் வழிகாட்டும் இஸ்லாம், ஒரு முஸ்லீம் பார்வையை செலுத்தவேண்டும் என்பதற்கும் வழிகாட்டுகிறது.

ரஸூல் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்; நீங்கள் உங்கள் பார்வைகளை தாழ்த்த வேண்டும், மர்மஸ்தானங்களை பேணவேண்டும். இல்லையேல்,அல்லாஹ் உங்கள் முகங்களை நிறம் மாற்றிவிடுவான் [தப்ரானி]

பார்வை விசயத்தில் இந்த அளவு அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறியிருக்க, நம்மில் பலர் பார்வையை தாழ்த்துவதுமில்லை. இயன்றவரை பார்வையால் எவ்வளவு ரசிக்கமுடியுமோ அந்த அளவுக்கு ரசிப்பதையும் பார்க்கிறோம். ஆடவர்கள் ஒரு பெண்ணை பார்த்து விட்டால் அப்பெண்ணை விழுங்கிவிடுவது போல் பார்ப்பதும், அப்பெண் இவனை கடந்து சென்ற பின்னும் கழுத்து வலிக்கும் அளவுக்கு வளைத்து-வளைத்து பார்ப்பதும் பெரும்பாலோரின் வாடிக்கையான பணியாகவே ஆகிவிட்டது. இவ்வாறான செயலை ஒரு முஸ்லீம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அன்னை ஆயிஷா (رَضِيَ اللَّهُ ) அவர்கள் அறிவிக்கிறார்கள்; அஸ்மா பின்த் அபூபக்கர் (رَضِيَ اللَّهُ) அவர்கள், நபியவர்களிடம் ஒரு மெல்லிய ஆடையணிந்து வருகை தந்தார்கள். நபி صلى الله عليه وسلم அவர்கள் அஸ்மா அவர்களை விட்டும் தன் பார்வையை திருப்பிக்கொண்டு, அஸ்மாவே! ஒரு பெண் பருவ வயதை அடைந்து விட்டால்,மனிக்கட்டுகளுக்கு கீழ் உள்ளவையும், அவளது முகத்தையும் தவிர மற்றவை வெளியே தெரியக்கூடாது என்று கைகளையும், முகத்தையும் சுட்டிக்காட்டினார்கள்.[அபூதாவூத்]

அறியாமையாலோ, அல்லது அவசரத்தாலோ அஸ்மா (رَضِيَ اللّ) அவர்கள் முறையான ஆடை அணியாததை கண்ட நபியவர்கள், சட்டென தம் பார்வையை திருப்புகிறார்கள் எனில், நமது நிலையோ பரிதாபம்! தன் பிள்ளைக்கு பால் கொடுக்கும் தாயின் சரிந்த மாராப்பை கண்போடும் கயவர்களும் சிலர் உண்டு. மற்றொரு பொன்மொழியில் ரஸூல் صلى الله عليه وسلم அவர்கள், அல்லாஹ் கூறுவதாக கூறினார்கள்; பார்வை ஷைத்தானின் நஞ்சூட்டப்பட்ட அம்புகளில் ஒன்று.யார் அதனை எனக்கு பயந்து விட்டு விடுகிறாரோ, அதற்கு பகரமாக அவருக்கு நான் ஈமானை கொடுப்பேன். அதன் இனிமையை அவர் தன் உள்ளத்தில் கண்டுகொள்வார். [தப்ரானி,ஹாகிம்] மேலும், சிலர் அண்டை வீட்டில் நடப்பவைகளை ஜன்னல் வழியாகவும், மாடியிலிருந்தும் நோட்டம் விடுவர். இந்த செயல் மார்க்கத்தில் தடுக்கப்பட்டதாகும். மேலும் இச்செயல் நபியவர்களை கோபத்திற்கு உள்ளாக்கிய செயலுமாகும்.

ஸஹ்ல் இப்னு ஸஅத் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவித்தார்; ஒருவர் ஒரு துவாரத்தின் வழியாக நபி صلى الله عليه وسلم அவர்களின் வீட்டினுள் எட்டிப் பார்த்தார். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள் ஈர்வலிச் சீப்பால் தம் தலையைக் கோதிக் கொண்டிருந்தார்கள். (அவர் எட்டிப் பார்த்தையறிந்த) நபி صلى الله عليه وسلم அவர்கள், ‘நீ பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்று எனக்கு (முன்பே) தெரிந்திருந்தால் இந்த ஈர்வலியைக் கொண்டே உன் கண்ணைக் குத்தியிருப்பேன். (வீட்டுக்குள், நுழைய) அனுமதி கேட்க வேண்டும் என்று சட்டமாக்கப்பட்டதே பார்வைகள் (வரம்பு மீறி வீட்டிலிருப்பவர்களின் மீது விழக் கூடும் என்ற) காரணத்தினால் தான்’ என்று கூறினார்கள்.[புஹாரி]

அண்டை வீட்டிற்குள் நுழைய அனுமதி கேட்கவேண்டும் எனபதற்கு காரணமே பார்வைதான் என்ற நபி

صلى الله عليه وسلم அவர்களின் கூற்றை கவனிக்க கடமைப்பட்டுள்ளோம். இன்று நம்மில் பெரும்பாலோர் நமது றவினர் வீடுகளுக்குள் செல்லுகையில் அனுமதி கேட்பதில்லை. திறந்த ட்டுக்குள் எதுவோ நுழைந்தமாதிரி நுழைந்துவிடுவது; இவ்வாறு அனுமதியின்றி நுழைவதால், அந்த வீட்டில் உள்ள பெண்கள் அதிகப்படியான ஆடைகளின்றி இருக்கும் காட்சியை காண நேரிடும். அந்த காட்சிகள் தவறிழைக்கவும் தூண்டும். சமீபத்தில் ஒரு பத்திரிக்கை செய்தி; தனது அண்ணன் வீட்டுக்குள் நுழைந்த தம்பி, தனது அண்ணி குளித்துவிட்டு ஈர ஆடையுடன் வருவதை கண்டு காமம் கொண்டு அந்த அண்ணியை கற்பழித்து கொன்றான். எனவேதான் காணும் காட்சி தவறை செய்யத்தூண்டும். ரஸூல் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்;

விபசாரத்தில் மனிதனுக்குள் பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபசாரம் மட்டுமல்ல் கண்ணும் நாவும் கூட விபசாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபசாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபசாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது.[புஹாரி]

இது மட்டுமன்றி, நம்மவர்கள் சினிமா, நாடகம் கேளிக்கைகள் என்று அதில் அரைகுறை ஆடைகளோடு வலம்வரும் அந்நிய பெண்களை பார்த்து ரசிக்கின்றனர். இவர்கள் மட்டுமன்றி, அந்நிய ஆண்கள் பங்குபெறும் சினிமாக்களை தமது மனைவி-சகோதரிகளை பார்க்க அனுமதிக்கின்றனர். மேற்கூறப்பட்ட ஹதீஸின் அடிப்படையில் இதுவும் ஒருவகை விபச்சாரமாகும். மார்க்கம் அனுமதித்த வீர விளையாட்டுகளை கூட பெண்கள் நேரடியாக பார்க்க நபியவர்கள் அனுமதிக்கவில்லை.

ஆயிஷா (رَضِيَ اللَّهُ )அறிவித்தார் அபிசீனியர்கள் பள்ளிவாசலில் (வீர விளையாட்டுகள்) விளையாடுவதை நான் பார்த்துக் கொண்டிருக்க, நபி صلى الله عليه وسلم அவர்கள் (அவர்களின் பார்வையிலிருந்து) என்னை மறைப்பதை கண்டேன். அப்போது உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ அபிசீனியர்களைக் கண்டித்து தடுத்தார்கள். இதைக்கேட்ட நபி صلى الله عليه وسلم அவர்கள், ‘அவர்களைவிட்டுவிடுங்கள். நீங்கள் அச்சமின்றி இருங்கள், அர்ஃபிதாவின் மக்களே!” என்று கூறினார்கள். [புஹாரி] மேலும் சிலர், பெண்கள் படிக்கும் கல்வி நிலையங்களுக்கு எதிரில்/அருகில் அமர்ந்து கொண்டு அங்கு வரும் பெண்களை பார்வையால் அளவெடுப்பதும், அவர்களுக்கு இம்சை தருவதுமாக தங்களின் பொழுதை போக்குபவர்களும் உண்டு. கிராம புறங்களில் வீட்டிற்குள் இருக்கும் கன்னிப்பெண்கள் சற்றே பொழுது சாய தங்களின் வீட்டிற்கு தண்ணீர் எடுக்க வருவார்கள். அவர்கள் வரும் வழியில் சில ரோமியோக்கள் அமர்ந்துகொண்டு கேலி செய்பவர்களும் உண்டு. ஆனால் ஒரு முஸ்லீம் இது போன்ற செயல்களை தவிர்க்கவேண்டும்.

அபூ ஸயீத் அல்குத்ரீ رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவித்தார். “நீங்கள் சாலையில் அமர்வதைத் தவிருங்கள்’ என்று இறைத்தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். மக்கள், ‘எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை அவைதாம், நாங்கள் பேசிக் கொள்கிற எங்கள் சபைகள்” என்று கூறினார்கள்.

நபி صلى الله عليه وسلم அவர்கள், ‘அப்படியென்றால் நீங்கள் அந்தச் சபைகளுக்கு வ(ந்து அம)ரும்போது, பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்” என்று கூறினார்கள்.

மக்கள், ‘பாதையின் உரிமை என்ன?’ என்று கேட்டார்கள். நபி صلى الله عليه وسلم அவர்கள், ‘(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும் (பாதையில் செல்வோருக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், சலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும்” என்று பதிலளித்தார்கள்.[புஹாரி] பார்வைகளை பக்குவப்படுத்துவோம்! படைத்தவனிடம் பரிசு பெறுவோம்!!

”Jazaakallaahu khairan”  முகவை எஸ்.அப்பாஸ் & முகவை  எக்ஸ்பிரஸ்.