Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,541 முறை படிக்கப்பட்டுள்ளது!

பிஎஸ்எல்வி-சி16 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

விவசாயம், புவியியல் ஆய்வு, வனவளம் உள்ளிட்டவை குறித்து துல்லியமான தகவல்களைத் தரும் தொலைவுணர்வு செயற்கைக்கோள், “ரிசோர்ஸ்சாட்-2’வுடன், பி.எஸ்.எல்.வி – சி 16 ராக்கெட் நேற்று காலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட் செலுத்தப்பட்ட 18 நிமிடத்தில், செயற்கைக்கோள்கள் அவற்றுக்கான சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டன. இது, இவ்வகை ராக்கெட்டுகள் அனுப்புவதில் இந்தியாவுக்கு கிடைத்த தொடர் வெற்றியாகும்.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதலாம் ஏவுதளத்திலிருந்து பி.எஸ்.எல்.வி – சி 16 ராக்கெட் நேற்று காலை சரியாக 10.12 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட் ஏவப்பட்ட சில நிமிடங்களிலேயே அதன் பகுதிகள் ஒவ்வொன்றாக பிரிந்து 18வது நிமிடத்தில் 822 கி.மீ., தொலைவில், “ரிசோர்ஸ்சாட்-2′ தொலைவுணர்வு செயற்கைக்கோள் அதன் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்திய – ரஷ்ய கூட்டுத் தயாரிப்பில் உருவான 92 கிலோ எடை கொண்ட, “யூத்சாட்’, சிங்கப்பூரில் உருவாக்கப்பட்ட 106 கிலோ எடை கொண்ட, “எக்ஸ்சாட்’ ஆகிய செயற்கைக்கோள்களும் அவற்றின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன. இவை வரும் 28ம் தேதி முதல் தம் பணிகளைத் துவங்கும்.முன்னதாக, ராக்கெட்டை செலுத்துவதற்கான ஐம்பத்து நான்கரை மணி நேர, “கவுன்ட் டவுன்’ கடந்த 18ம் தேதி அதிகாலை 3.42 மணிக்கு துவங்கியது.

அத்துடன் ராக்கெட்டை செலுத்துவதற்கு ஏதுவான இறுதிக்கட்ட ஆய்வுப் பணிகளையும், திரவ எரிபொருள் நிரப்பும் பணிகளையும் இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்டிருந்தனர். ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதும் விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். அப்போது மத்திய அமைச்சர் நாராயணசாமி, இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் ஆகியோர் விஞ்ஞானிகளை நேரில் பாராட்டினர்.

ராக்கெட் வெற்றிப் பயணம் குறித்து, “இஸ்ரோ’ தலைவர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், “இந்த பி.எஸ்.எல்.வி – சி 16 ரிசோர்ஸ்சாட் முழு வெற்றியாக விண்ணில் செலுத்தப்பட்டது’ என்றார்.

ஏற்கனவே ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்கள் செலுத்துவதில் இரு முறை தோல்விக்குப் பின் இம்முயற்சி முழு வெற்றியாக அமைந்திருக்கிறது.”ரிசோர்ஸ்சாட்-2′ செயற்கைக்கோள் மூலம் விவசாயம், நீர்வளம், கிராம மேம்பாடு, உயிரி வளர்ச்சி, கடலோர ஆராய்ச்சி, ஊரக எல்லை வரைமுறை, வன ஆய்வு, புவியியல் ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள முடியும். இது, அரசு, தனியார் துறைகளுக்கும், ஆராய்ச்சி மாணவர்களுக்கும் பெரிதும் உதவும்.”யூத்சாட்’ செயற்கைக்கோள் மூலம் வான்வெளிக்கும், புவி மண்டலத்திற்கும் இடையேயான தொடர்பை பற்றியும், விண்மீன்களைப் பற்றிய ஆய்வுகளையும் மேற்கொள்ள முடியும். “எக்ஸ்சாட்’, ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு பெரிதும் உதவும். பி.எஸ்.எல்.வி – சி 16 ராக்கெட் மற்றும் மூன்று செயற்கைக்கோள்கள் 250 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளன.

பி.எஸ்.எல்.வி – சி 16 ராக்கெட் சில குறிப்புகள்:பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டின் முக்கிய பகுதிகள், திருவனந்தபுரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்திலும், மற்ற பகுதிகள் பெங்களூரு, ஆமதாபாத் ஆகிய இடங்களில் தயாரிக்கப்பட்டு ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டது.இந்த ராக்கெட் 44.4 மீட்டர் உயரமும், 295 டன் எடையும், 3.2 மீட்டர் சுற்றளவும் கொண்டது. இதன் முதல் பகுதி, 138 டன் எடையுள்ள திட எரிபொருளாலும், இரண்டாவது பகுதியில் 41 டன் திரவ எரிபொருளும், மூன்றாவது பகுதியில் 7.6 டன் திட எரிபொருளும் மற்றும் நான்காவது பகுதியில் 2.5 டன் எடையுள்ள திரவ எரிபொருளும் கொண்டதாக அதிநவீன முறையில் வடிவமைக்கப்பட்டது.இது, பி.எஸ்.எல்.வி., ராக்கெட் வரிசையில் 18வது ஆகும். இதில், 17 ராக்கெட்கள் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் மொத்தம் 44 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 25 செயற்கைக்கோள்கள் வெளிநாடுகளுக்கு சொந்தமானவை. இது, முந்தைய பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டிலிருந்து மேம்படுத்தப்பட்டு அதிநவீன முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.

“ரிசோர்ஸ்சாட்-2′ செயற்கைக்கோள் சில குறிப்புகள்:இந்த செயற்கைக்கோள் கடந்த 2003ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட, “ரிசோர்ஸ்சாட்-1′ செயற்கைக்கோளுக்கு மாற்றாக அனுப்பப்பட்டுள்ளது. இதில், துல்லியமாகச் செயல்படும் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவை 200 “ஜிகாபைட்’ பதிவு தொழில்நுட்பத்தை உள்ளடக்கியது. இந்த கேமராக்கள் வெவ்வேறு கோணங்களில், வெவ்வேறு அளவுகளில் படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பும். கப்பல்களின் வேகம் மற்றும் பாதுகாப்பு குறித்த தகவல்களையும் இது அனுப்பும்.இது, 1,206 கிலோ எடை கொண்ட தொலைவுணர்வு செயற்கைக்கோளாகும். இந்த செயற்கைக்கோள்களின் செயல்பாடுகளை இந்தியாவிலிருந்தும், மொரீசியஸ், இந்தோனேசியா, நார்வே ஆகிய நாடுகளிலிருந்தும் கண்காணித்து தகவல்களை பெற முடியும்.

பி.எஸ்.எல்.வி., ராக்கெட் இதற்கு முன்… : இஸ்ரோ முதன் முதலாக 1993ம் ஆண்டு, “தி போலார் சேட்டிலைட் லாஞ்ச் வெகிகிள்’ (பி.எஸ்.எல்.வி.,) எனப்படும் ராக்கெட்டை ஐ.ஆர்.எஸ் – பி 2 என்ற செயற்கைக்கோளுடன் விண்ணுக்கு அனுப்பியது. இது, தோல்வியில் முடிந்தது. இதையடுத்து அனுப்பிய அனைத்து பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டுகளும் வெற்றியில் முடிந்துள்ளன.இஸ்ரோ, இதுவரை தொடர்ந்து 17 பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டுகளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

தேதி செயற்கைக்கோள் முடிவு

  • 1993, செப்., 20 ஐ.ஆர்.எஸ் -பி 2 தோல்வி
  • 1994, அக்., 15 ஐ.ஆர்.எஸ் -பி 2 வெற்றி
  • 1996, மார்ச் 21 ஐ.ஆர்.எஸ் – பி 3 வெற்றி
  • 1997, செப்., 29 ஐ.ஆர்.எஸ் -1 டி வெற்றி
  • 1999, மே 26 ஓசன்சாட்-1, கிட்சாட் – 3, டூப்சாட் வெற்றி
  • 2001, அக்., 22 டி.இ.எஸ்., வெற்றி
  • 2002, செப்., 12 கல்பனா -1 (மெட்சாட்) வெற்றி
  • 2003, அக்., 17 ரிசோர்ஸ்சாட் -1 (ஐ.ஆர்.எஸ் – பி 6) வெற்றி
  • 2005, மே 5 கார்டோசாட் -1, ஹாம்சாட் வெற்றி
  • 2007, ஜன., 10 கார்டோசாட் -2, எஸ்.ஆர்.இ -1,
  • லபான் டூப்சாட், பெகியூன்சாட் – 1 வெற்றி
  • 2007, ஏப்., 23 ஏஜைல் வெற்றி
  • 2008, ஜன., 23 டெக்சார் வெற்றி
  • 2008, ஏப்., 28 கார்டோசாட் -2 ஏ, ஐ.எம்.எஸ் – 1, எட்டு நானோசெயற்கைக்கோள்கள் வெற்றி
  • 2008, அக்., 22 சந்திரயான் – 1 வெற்றி
  • 2009, ஏப்., 20 ரிசாட்-2, அனுசாட் வெற்றி
  • 2009, செப்., 23 ஓசன்சாட் – 2, ஆறு நானோ செயற்கைக்கோள்கள் வெற்றி
  • 2010, ஜூலை 12 கார்டோசாட் -2 பி, அல்சாட் -2 ஏ, என்.எல்.எஸ்., 6.1, ஸ்டுட்சாட் வெற்றி
  • 2011, ஏப்., 20 ரிசோர்ஸ்சாட் – 2, யூத்சாட், எக்ஸ் சாட் வெற்றி

‘கிரையோஜெனிக்’ இன்ஜினில் வெற்றி பெறுவோம்: “இஸ்ரோ’ தலைவர் நம்பிக்கை:
“கிரையோஜெனிக் இன்ஜின் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட தவறுகளை சரி செய்து, 2012ல் ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்துவோம்,” என, “இஸ்ரோ’ தலைவர் ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நேற்று காலை பி.எஸ்.எல்.வி – சி 16 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதைத் தொடர்ந்து, “இஸ்ரோ’ தலைவர் ராதாகிருஷ்ணன், இதன் திட்ட இயக்குனர் குன்னிகிருஷ்ணன் மற்றும் விஞ்ஞானிகள் கூட்டாக அளித்த பேட்டி: பி.எஸ்.எல்.வி., ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டதன் மூலம், எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை காப்பாற்றப்பட்டுள்ளது. இது எங்கள், “இஸ்ரோ’ குழுவினருக்கு மகிழ்ச்சியான தருணம். இரண்டு வெளிநாட்டு செயற்கைக்கோள்களை அனுப்பியுள்ளதன் மூலம், நாம் பிற நாட்டின் நம்பிக்கையைப் பெற்றுள்ளோம். தற்போதைய திட்டம் வெற்றிகரமாக முடிந்துள்ளது.இந்த ஆண்டு பி.எஸ்.எல்.வி., ராக்கெட் வரிசையில், சி 17ஐ ஜூன் இறுதி வாரத்திலும், சி18ஐ ஆகஸ்ட் மாதத்திலும், சி 19ஐ இந்த ஆண்டின் இறுதி வாக்கிலும் செலுத்த உள்ளோம். வரும் மே 19ம் தேதி, “ஜிசாட் – 8′ செயற்கைக்கோள், பிரெஞ்சு கயானாவில் இருந்து செலுத்தப்பட உள்ளது.

இயற்கை சீற்றங்கள், கடலில் ஏற்படும் மாற்றங்கள், சுற்றுச்சூழல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் “மெகா டிராபிக்’ ராக்கெட்டை, பிரான்ஸ் நாட்டுடன் இணைந்து இந்த ஆண்டு நவம்பரில் செலுத்த உள்ளோம்.சந்திரனுக்கு ஆட்கள் அனுப்புவது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. 2013 – 14ம் ஆண்டு, “சந்திரயான் – 2′ செயற்கைக்கோள் அனுப்பப்படும். இது, சந்திரனைச் சுற்றி வந்து ஆய்வு செய்வதுடன், அதில், ரோவரை இறக்கி, சந்திரனில் உள்ள மண் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்து, தகவல்களை பூமிக்கு அனுப்பும்.தற்போது அனுப்பப்பட்டுள்ள, “ரிசோர்ஸ்சாட் – 2′ செயற்கைக்கோள் மூலம் பிற நாட்டிற்குத் தேவையான தகவல்களை அளித்து, அதை வர்த்தக ரீதியாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். தற்போது பல வெளிநாட்டு நிறுவனங்கள் வர்த்தக ரீதியான செயற்கைக்கோள்களை அனுப்ப, நம்மை அணுகி வருகின்றன; பிரிட்டன் நிறுவனமும் அணுகியுள்ளது.

இது, நமக்கு கிடைத்துள்ள அங்கீகாரம். இதேபோல், ரஷ்யாவுடன் இணைந்து ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் அனுப்பும் திட்டமும் உள்ளது.கடந்த ஆண்டு ஏவப்பட்ட ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் தோல்விக்கான காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கிரையோஜெனிக் இன்ஜினில், பூஸ்டர் பம்ப் சரியாக வேலை செய்யாததும், இரண்டாம் பகுதி சரியாக பிரியாததுமே அதன் தோல்விக்கு முக்கிய காரணம் என தெரிய வந்துள்ளது. தவறுகள் சரி செய்யப்பட்டு, பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட்டு கிரையோஜெனிக் தொழில்நுட்பம் மேம்படுத்தப்படும். தொடர்ந்து, அடுத்த ஆண்டு ஜனவரியில், ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் ஏவப்படும்.இவ்வாறு, “இஸ்ரோ’ தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் விஞ்ஞானிகள் கூறினர்.

நன்றி: தினமலர்