காசு கொடுத்துதானே சார் வாங்குறீங்க….? நுகர்வோர்க்கான ஒரு விழிப்புணர்வு பார்வை!
அன்றாட வாழ்க்கையின் அவசரத்தில் நுகர்வோராய் இருக்கும் நாம் வியாபாரிகளை பல்வேறு காரணங்களுக்காக குற்றம் சொல்வோம் ஆனால் நுகர்வோரின் கடமைகள் என்ன? என்று நமக்குத் தெரியுமா? இது பற்றிய ஒரு விழிப்புணர்வு பார்வை இதோ…
முக்கியப் பேருந்து நிலையங்கள் போன்ற, அவசரகதியாக மக்கள் கூடும் இடங்களில் அமைந்திருக்கும் கடைகளில் சென்று பொருட்களை வாங்கும் போது பார்த்தால், பெரும்பாலும் இரண்டு மூன்று ரூபாய் அதிகம் விலை வைத்தே விற்பனை செய்கிறார்கள். என்னது இது? எம்.ஆர்.பி இவ்வளவு தானே, ஏன் அதிகமான விலைக்கு இந்த பொருட்களை விற்கிறீர்கள் என்று கேட்டு விட முடியாது. அப்படிக் கேட்பின் சுற்றி நிற்பவர்களும், கடைக்காரரும் நம்மைப் பார்க்கும் பார்வை இருக்கிறதே… கொடுமை. அத்தனை ஏளனம் இருக்கும். நாம் வாங்குகின்ற பொருளுக்கு காசு குடுக்கின்ற நாம் எஜமானர்கள் கிடையாது. இது தான் நடப்பில் உள்ள நிதர்சனமான உண்மை. சரி, அதட்டித்தான் கேட்க வேண்டாம், “என்ன சார் இது? இப்டிப் பண்றீங்களே” என நியாயமான முறையில் கேட்டாலும் கூட… அதான் எல்லாரும் வாங்கிட்டுப் போறாங்களே.. உனக்கு மட்டும் என்னய்யான்னு துரத்தாத குறையாக, ஒரு அலட்சியப் பதில் வரும். ஏன் இந்த நிலை? எப்படி நாம் இந்த சூழலுக்குத் தள்ளப் பட்டோம்?
நம் மனமும் இது போன்ற அநியாயங்களுக்கு வேறு வழியின்றி இசைந்து,சகித்துக் கொள்ளப் பழகி விட்டது போலும்… மற்றவர்களும் வாங்கி விட்டுத் தானே செல்கிறார்கள். நமக்கு மட்டும் என்ன? என்று போகவும் மனமில்லை. ஆனால் ஒன்று மட்டும் உண்மை. வாங்கிவிட்டுச் செல்லும் அத்துனை பேர்களும் 1% அளவாவது எரிச்சல் படாமல் இல்லை. இது தான் நம் தலையெழுத்து போலும். நாம்(சாமானியர்கள்) ஒடுக்கப்படும் போது, எங்குமே குரல் எழுப்பக் கூட முடியாதபடி தான் நம் குரல்வளைகள் குடும்பம் என்ற கயிற்றால் கட்டப்பட்டிருக்கின்றன.சரி.. ஒரு சாமானிய மனிதனாக… இதை எப்படித் தட்டிக் கேட்பது? இல்லையென்றால் யாரிடம் புகார் அளிப்பது என விசாரித்ததில் கிடைத்த தகவலைப் பார்ப்போம்.
MRP -ஐ விட பத்து பைசா அதிகம் வாங்கினாலும் அதற்கான பில்லை முதலில் வாங்குங்கள். அப்படியே சென்று நுகர்வோர் பாதுகாப்பு மையத்தில் ஒரு புகார் செய்தால் போதும். மற்றவை தானாகவே நடந்துவிடும். அல்லது உங்கள் ஊரில் உள்ள நகராட்சி அல்லது மாநகராட்சி அலுவலகத்தில் செயல்படும் உணவுகலப்பட தடுப்புப் பிரிவில் சென்று புகார் தாருங்கள். ஏனெனில் அவர்கள் தான் இதை ஆய்வுசெய்து கண்டுபிடிக்க கடமைப் பட்டவர்கள். எனவே புகார் அளிப்பதற்கு ரசீது(பில்) வேண்டும். அது சரி.. நம் நாட்டில் எல்லாக் கடைகளிலும் பில்லிங் வசதி உண்டா? அதையும் பார்ப்போம்..
விற்பனைவரி அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்காத ஒரு சிறு அல்லது சாலையோரக் கடைகளில் மட்டுமே பில் இருக்காது. மற்றபடி பதிவு செய்யப்பட்டிருக்கும் கடைகள் அனைத்திலும் பில் கண்டிப்பாக இருக்கவேண்டும். இப்பொழுது கேள்வி என்னவென்றால் அனைத்துக் கடைகளிலும் பில்லிங் வசதியைக் கட்டாயப் படுத்தினால் தான் என்ன? இது சாத்தியமா? இதனால் உண்டாகும் நன்மைகள் என்ன? என ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
பில்லிங் முறையை அனைத்துக் கடைகளிலும் கட்டாயப்படுத்தினால் என்ன நன்மை? நிச்சயமாக பில் போட்டு வாங்கினால் தான் அந்த பொருளுக்கான வரி அரசாங்கத்திற்குச் செல்லும். அரசாங்கம் நினைத்தால் எதுவுமே சாத்தியம் தான். ஆனால் சிறு, குறு மற்றும் நடைபாதைக் கடைகள் வரிவிதிப்பில் கொண்டுவந்தால், நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவர். மிகப்பெரிய லஞ்சத்திற்கு வழிவகை செய்யும். விலைவாசி மிகக்கடுமையாக உயரும்.
இதையெல்லாம் சரி செய்ய வரிவிதிப்பில் நிறைய மாற்றங்களை கொண்டு வர வேண்டும். அது மிகவும் எளிமையாகவும், வியாபாரிகளுக்கும் அரசுக்குமான நேரடி தொடர்பில் நடக்க வேண்டும். வியாபாரிகளை தாமாக வரிகட்ட முன்வரவைக்க வேண்டும். இது மிகவும் சாத்தியம் தான். அரசுக்கும் இப்பொழுது உள்ளதை விட அதிக வருமானம் கிடைக்கும், விலைகளும் பெறுமளவில் குறையும். வியாபாரிகளும் நிம்மதியாக மக்களுக்கு இன்னும் பல வசதிகளுடன் கூடிய சேவையைத் தருவார்கள். ஆனால் இதையெல்லாம் அரசியல்வாதிகளும்அதிகாரிகளும் செய்யமாட்டார்கள். காரணம் அவர்களது தனிப்பட்ட வருமானம் நின்று போகும்.
சட்டப்படியான நடவடிக்கைகள் எடுப்பதற்கும், ஸ்மக்லிங் ப்ராடக்ட்ஸைத் தவிர்ப்பதற்கும், கடைகள் ரெஜிஸ்டர் செய்யப்பட்டிருத்தல் நலம். இது நன்மையா என அலசி ஆராய்ந்து பார்ப்போம். சரி, எல்லாக் கடைகளையும் விற்பனை வரி அலுவலகத்தில் பதிவு செய்துகொள்வது நல்லதா என்றால் அது யாருக்கு நல்லது? என்ற உப கேள்வியோடு இருக்க வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட மூன்று பிரிவினருக்கான நல்லது கெட்டதுகளைப் பற்றிச் சொல்லவேண்டும்.
1. கடைக்காரர்கள், 2. அரசாங்கம், 3. மக்கள்
பதிவு செய்யாமல் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் தெருவோர சிறுகடைக்காரர்களுக்கும், கிராமத்து கடைக்காரர்களுக்கும் இது நல்லது அல்ல. அதனால் அந்தக் கடைகளின் வாடிக்கையாளர்களான தினக்கூலி வாங்கிப்பிழைக்கும் மக்களுக்கும் இது நல்லது அல்ல. ஏனென்றால், தெருவோரக்கடை வைத்திருப்பவர்கள் யாரும் மாடிவீட்டில் வாழ்வது இல்லை தான்! அவர்கள் வயிற்றில் நாம் ஏன் அடிக்க வேண்டும்? வேறு வழியே இல்லை என்கிறபோது – இந்த நிலை எப்பொழுது வரும்? ஒரு குக்கிராமத்திலோ, காட்டுப்பகுதியிலோ, மக்கள் தொகை மிக மிக குறைவாக (அதிக வியாபாரத்திற்கு வழியில்லாத பகுதிகளிலோ ) உள்ள பகுதிகளிலோ தான் இந்த மாதிரி கடைகள் இருக்கும்.
அங்குள்ள சொற்பமானவர்கள் ஏதாவது வாங்க வேண்டும் என்றால் காத தூரம்போக வேண்டும். அதற்கான செலவைப் பாருங்கள். அதிக வியாபார வாய்ப்பு இல்லாத இடங்களில் ஒருவனுக்கு எப்படி பிரேக் ஈவன் வரும்? அப்படி அதையும்தாண்டி லாபம் என்ற ஒன்றை அவன் பார்க்க வேண்டும் என்றால் இப்படி விலையைக் கொஞ்சம் அதிகம் வைத்துத் தான் விற்க வேண்டி வரும். ஒரு உதாரணத்திற்கு உங்கள் தெருவில் ஒரு சிறிய பலசரக்கு கடை இருக்கும், அதில் மளிகை, காய்கறி, கூல்ட்ரிங்க்ஸ் உட்பட அனைத்துமே இருக்கும். ஆத்திர அவசரத்திற்கு தினமும் ஏதாவது ஒன்றை அங்கு தான் வாங்கவேண்டியிருக்கும்.இல்லையென்றால் கொஞ்சம் தூரம் அதிகம் சென்று வாங்க வேண்டியிருக்கும்.
அந்த மாதிரி கடைகள் கொஞ்சம் அதிகம் விலை வைத்து விற்பதுவாடிக்கையான விஷயம் தான். அவர்களை கண்டுபிடித்து தண்டனை வாங்கிக்கொடுத்தால் என்ன ஆகும்? நீங்கள் தினமும் அவசர ஆத்திரத்திற்கு உங்கள் வீட்டுக்காரரையோ அல்லது பிள்ளையையோ தொலைதூரத்திற்கு அனுப்பவேண்டிவரும்! அவர்களுடைய கோபத்திற்கு ஆளாக வேண்டிவரும். இது ஒரு சிச்சுவேசன்.
ஆனால், இதை அப்படியே.. டி.நகர் போன்ற பெரிய பசார் தெருக்களில் உள்ள சிறு சிறு கடைகளை மனதில் இருத்திப் பார்ப்போம். இங்கே எப்படி வியாபரம் நடக்கிறது? தி.நகரில், நீங்கள் வாங்கும் பொருட்களின் விலை, வேறு எங்கும் வாங்குவதை விட குறைவாகத்தான் இருக்கும். நெருக்கடியான சந்தை,அல்லது மக்கள் அதிகம் வந்து விற்பனையாகும் பகுதிகளில் உள்ள கடைகள்(ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள் தவிர்த்து – இங்கெல்லாம் மக்களின் முன்திட்டமிடாமையையும், அவசரத்தையும் அவர்கள் பயன்படுத்திக் காசாக்குகிறார்கள்) நிச்சயமாக எம்.ஆர்.பி ஐ விட அதிகமாக விற்கமாட்டார்கள். சொல்லப்போனால் அதைவிடக் குறைவாகத்தான் விற்பார்கள்.சரி தான்.. ஆனால் பொருட்களின் தரம் மற்றும் அரசுக்கு வரும் வருவாய் இழப்பீடு(வரி) இவற்றைக் கணக்கில் எடுத்துப் பார்த்தால் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படல் வேண்டும்? இது எப்படி மேற்கூறிய கிராமங்களில் இருக்கும் கடைகளின் சிச்சிவேசனோடு ஒத்துப் போகும்?
அடுத்ததாக அரசாங்கம். அனைத்து கடைகளையும் பதிவுசெய்ய வலியுறுத்தினால் அரசுக்கு 100 ரூபாய் வருமான அதிகரிப்பு ஏற்படும் என்று கணக்கிட்டால் அதில் 80 சதவிகிதத்தை சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர், மற்றும் உயரதிகாரிகள் முதற்கொண்டு, கடைநிலை ஊழியர் வரையிலும் தான் சாப்பிடுவார்கள். வெறும் 20 ரூபாய் வருமானத்திற்காக, வியாபாரிகளிடம் பெறுமளவிலான அதிருப்தியையும், விலையேற்றம் காரணமாக மக்களிடம் பெரிய அளவிலான எதிர்ப்பும் தான் மிஞ்சும். இதனால் விலைவாசி கடுமையாக உயர்வதோடு, பல சிறு, குறு வியாபாரிகளும், தெருவோரக் கடைக்காரர்களும்,தொழிலைவிட்டு வெளியேறும் அவலங்களும் ஏற்படும்.
அடுத்ததாக மக்கள். ஒரு வரிவிதிப்பு அல்லது அனைத்து கடைகளுக்கும் வரிகட்டும் அவசியமாதல் நடைமுறைக்கு வந்தாலே, உடனடியாகவும் நேரடியாகவும் பாதிக்கப்படப்போவது பொது மக்கள் தான். பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்துபவர்களின் வாழ்க்கை படு திண்டாட்டமாகிவிடும்.
எவை நம் நாட்டில் அதிகம் இருக்கின்றன? எங்கு வியாபாரம் அமோகமாக நடைபெறுகிறது? அரசுக்கு இதனால் எவ்வளவு வரி இழப்பு. அதை விட இன்னும் கொடுமைகள் பெரிய பெரிய கடைகள் வைத்திருந்தாலும், பில்லிங் வசதி இருந்தாலும், அங்கும் நாம் சந்திக்கும் பிரச்சனைகளும் அதிகம். அவர்களும் வரியை ஒழுங்காக கட்டுகிறார்களா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். வரிக் கட்டுதலும் நம் ஜனநாயகக் கடமைகளில் ஒன்றெனெக் கொள்வோம். பில் போடாமல் பொருள்(உதாரணத்திற்கு தங்கம்) வாங்கினால் அதற்கு ஒரு விலை. அரசைக் குறை சொல்லும் நாம், இவை எல்லாம் நம் ஜனநாயகக் கடமை எனவும், ஒரு வகையான ஒழுக்கம் எனவும் உணர்தல் வேண்டும். வேறு வழியாகவும் இந்த வரி வசூலித்தல் பற்றி யோசித்துப்பார்க்கலாம்.
மாத்தி யோசி:
பொருட்களுக்கு வரி போடக் கூடாது. வியாபாரிகளின் விற்பனை அளவிற்கு ஏற்றார் போல குறைந்த பட்சம் ஒன்றிலிருந்து அதிக பட்சமாக 5 வரையிலும் வரிவிதிக்க வேண்டும். அதாவது மாதம்1000 ரூபாய் விற்பனை செய்பவர் 10 ரூபாய் வரி கட்ட வேண்டும். 5000 ரூபாய் விற்பனைசெய்பவர் 250 ரூபாய் வரி கட்ட வேண்டும்.
அப்படியிருந்தால் அனைத்து வகையான கடைகளுக்கும் நேராகவே வணிகவரி அலுவலர் வந்து அவர் விவரங்களைக் கேட்டு வாங்கி கையோடு பதிவுச் சான்றிதழை வழங்க வேண்டும். ஒருகடைக்காரர் பதிவு செய்யப்படவில்லை என்றால் அது அவரின் குற்றமாக ஆகாது, மாறாக அது அந்த வணிக வரி அலுவலரின் குற்றமாகக் கருதப்படும்.
அதேப்போல் அவரே மாதாமாதம் வந்து வரியையும் வசூல் செய்துவிட்டுப் போய்விடவேண்டும். இப்படிச் செய்தால் அனைவரும் வரிகட்டுவார்கள். மக்களுக்கும் விலையேற்ற பிரச்சினை வராது. அரசாங்கத்திற்கும் இப்பொழுது உள்ளது போல நூறு மடங்கு வருமானம்அதிகரிக்கும்