பரபரப்பான இன்றைய கால கட்டத்தில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் முதல் வேலைக்கு செல்பவர்கள் வரை அனைவரும் ஏதோ ஒரு சூழலில் மன அழுத்த நோயினால் பாதிக்கப்படுகின்றனர். பணிச்சூழல், வீட்டில் ஏற்படும் பிரச்சினைகள் போன்றவற்றால் மன அழுத்தம் தாக்குவதால் பலரும் தன்னிரக்கத்தைத் தவிர்க்க முடியாமல் தவிக்கிறார்கள். “எனக்கேன் இது நிகழ்ந்தது மற்றவர்களுக்கு இப்படி இல்லையே” என்கிற எண்ணங்கள் எழும்போது தன்னிரக்கம் அவர்களின் செயல் திறனை மேலும் பாதிக்கிறது. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகளை உளவியல் வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பொறுமை அவசியம்
அழுத்தம் கொடுக்கும் பதட்டம் காரணமாக சில தவறான முடிவுகளை எடுக்கக் தோன்றும். அந்த நேரப் பதட்டத்தில் எது தவறு எது சரி என்று சிந்திக்காமல் செயல்படுவது பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, மனம் பதட்டமாக இருக்கும்போது முடிவெடுப்பதைத் தள்ளிப்போடுங்கள். பத்துவரை மனதுக் குள்ளேயே எண்ணி விட்டு, சிறிது தூரம் உலவிவிட்டு, பதட்டம் தணியும்வரை பொறுமையாய் இருந்தால் ஆக்கபூர்வமான முடிவுகள் சாத்தியமாகும்.
கூடுதல் பாரங்களை சுமக்கவேண்டாம்
பொதி சுமக்கும் காளையின் மீதுதான் அதிக பாரம் ஏற்றப்படும் இது உலக இயல்பு. எதையும் எளிதாக செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை இருந்தாலும் கூடுதல் பாரங்கள் மன அழுத்தத்தை வளர்த்துவிடும். எனவே எல்லோரையும் திருப்திப்படுத்துவது என்பது இயலாத காரியம் என்பதால், செய்ய முடியாதவற்றையும் செய்ய விரும்பாதவற்றையும் நாசூக்காக மறுத்துச் சொல்வதே நல்லது.
ஆழ்ந்த சுவாசமே தீர்வு
மனதில் உருவாகும் அழுத்தம் வந்து படிகிற இடங்களில் ஒன்று கடைவாய் இணைப்புகள். பற்களை இறுகக்கடித்து, காதுக்குக்கீழ் சுட்டுவிரலால் அழுத்திக் கொண்டு, நீளமாக மூச்சிழுப்பதும், வாயைத் திறந்தபடி காற்றை வெளியே விடுவதும், அழுத்தத்தின் சுவடுகளை உடலில் தங்காமல் வெளியேற்ற மேலைநாட்டு ஆய்வாளர்கள் கண்டு பிடித்திருக்கின்ற வழி.
ஆழ்ந்த சுவாசத்தின் மூலம் இரத்தத்தில் பிராணவாயுவின் அளவு அதிகரிப்பதால் உங்கள் தசைகள் தளர்வுநிலை அடைகின்றன. மனம் இயல்புநிலை அடைகின்றது. அடிவயிற்றில் கையை லேசாக அழுத்திக்கொண்டு ஆழமாக சுவாசிப்பதன் மூலம் அடிவயிற்றின் அசைவுகளையும், உடலும் மனமும் தளர்வு நிலை அடைவதையும் கண்கூடாக உணரலாம்.
கற்பனையே வெற்றிக்கு வழி
அமைதியான இடத்தில் அமர்ந்து கற்பனையாய் சிந்திப்பது பலனளிக்கும் என்கின்றனர் உளவியலாளர்கள். பூப்பூவாய்த் தூவும் வென்னீர் ஷவரின் கீழ் கண்மூடி நிற்பது போலவும், அதில் அழுத்தங்களும் பதட்டங்களும் அடித்துக் கொண்டு போவது போலவும் மனதுக்குள் ஒரு காட்சியை வரைந்து பார்க்கச் சொல்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.
மனதை இலேசாக்கும் இசை
அடைந்துகிடக்கும் உணர்வுகளை விடுவிக்கும் சக்தி திறந்தவெளிக்கு இருக்கிறது. அறைக்குள்ளேயே முடங்கிக் கிடக்காமல் வெளியே வந்து, ஆகாயத்தை, அலையலையாய்ப் போகும் மேகங்களைப் பார்ப்பது பயன்தரும் என்கிறார்கள் மனநல நிபுணர்கள். எத்தகைய பதட்டத்தையும் தணித்து அமைதிப்படுத்தும் சக்தி இசைக்கு உண்டு. இசையை கேளுங்கள் அல்லது வாய்விட்டுப் பாடுங்கள். உங்கள் இதயம் படபடவென்று அடித்துக்கொள்வதை அது கட்டுப்படுத்தும். நறுமணம் தரும் மலர்கள், எண்ணெய்கள் போன்றவற்றை நுகர்வதன் மூலம் மனதை மிக விரைவில் லேசாக்கிக் கொள்ளமுடியும்.
வெது வெதுப்பான வெந்நீர் குளியல்
டேவிட் சோபெல் என்ற மனநல மருத்துவர், மிக எளிதான வழியொன்றைச் சொல்கிறார். இரண்டு கைகளையும் பரபரவென்று தேய்த்து மூடிய கண்களுக்கு மேல் வைத்து, ஆழமாக சுவாசிக்கும்போதே அந்த உஷ்ணத்தையும் உள் வாங்குகிறபோது, புதிய உத்வேகம் உங்களுக்குள்ளேயே உருவாகும் என்கிறார் அவர்.
வெறுப்பாக இருந்தால் வெந்நீர்க் குளியல் போடுங்கள் என்கிறார் டாக்டர் வெஸ்டன். குளிக்கும் அளவு நிலைமையோ நேரமோ இல்லையென்றால் வெந்நீரில் கைகால்களையாவது கழுவுங்கள். இதம் செய்யும் ஆற்றல் வெந்நீருக்கு இருக்கிறது என்கிறார் அவர்.
அழுத்தம் போக்கும் உணவுகள்
வைட்டமின் பி, மற்றும் கால்ஷியம் போன்ற சத்துள்ள உணவுகளை உண்பவர்கள் எளிதாக மன அழுத்தத்திற்கு ஆளாக மாட்டார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். கார்போஹைட்ரேட் கொண்ட நொறுக்குத் தீனியை நொறுக்கினால் அதிலுள்ள செரிடானின் உங்கள் மனதை அமைதிப்படுத்தும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கவலைகளை ஆராயுங்கள்
நெஞ்சில் ஏதோ எண்ணங்கள் கனக்கத் தொடங்கிவிட்டால் கொஞ்சதூரம் நடந்துவருவது பயன்தரும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். வெளியே உலவுவதற்கு நேரம் ஒத்துழைக்காத நிலையில் அலுவலகத்துக்குள் அங்குமிங்கும் உலவுவது இடைக்கால நிவாரணம் போன்றது.
மனதில் தோன்றும் கவலைகள் எல்லா நேரமும் உங்களை அரித்தெடுப்பதை அனுமதிக்காதிருக்க வழி உண்டு. கவலைகள் என்னவென்று பார்க்க சில மணி நேரம் ஒதுக்க வேண்டும். அந்த நேரத்தில் கவலைகளை ஆராய்ந்து அவற்றை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.
செடி கொடிகளுடன் சில நேரம்
செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்களுக்கு, இரத்த அழுத்தம் ஏற்படுவதில்லை என்று நியூயார்க்கில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், தெரிய வந்துள்ளது. பேச முடியாத, பார்க்க முடியாத தாவரங்களிடம் ஜீவசக்தி நிரம்பி வழிகிறது. ஒரு செடியுடனோ மரத்துடனோ நெருக்கமாக சிறிது நேரத்தை செலவிடுங்கள். அழுத்தம் அகல்வதை உணர்வீர்கள்.
அழுத்தம் போக்கும் பிரார்த்தனை
பதற்றமான சூழலில் நுணுக்கமான விஷயங்களை நோக்கிக் குவியாமல் மனம் அலைபாயத் தொடங்கும். அப்போதெல்லாம், ஒரு சின்ன விஷயத்தை எடுத்துக்கொண்டு அதில் முழு கவனத்தை செலுத்துங்கள். உங்கள் மனம் இயல்பு நிலை அடைவதை உணர்வீர்கள்.
சோர்வு வரும்போது சுருண்டு படுக்கத்தான் மனது சொல்லும். முதுகுத்தண்டை நிமிர்த்தி நேராக, உட்காரும்போது இரத்த ஓட்டம் நன்கு நிகழ்ந்து உங்கள் சக்தியைப் பெருக்கும்.
மன அழுத்தம் மாறுவதற்கு வஜ்ராசனத்தில் அமருங்கள் என்று சொல்பவர்கள் நம் ஊர் யோகக்கலை வல்லுநர்கள் மட்டுமல்ல. வெளிநாட்டினரும் இதனை உறுதி படுத்துகின்றனர். குழந்தைபோல் மண்டியிட்டு கண்மூடி குதிகாலின் மீது சிறிது நேரம் அமருங்கள். அதுதான் வஜ்ராசனம். மெல்லக் குனிந்து முன் நெற்றியை நிலத்தில் பதியுங்கள். இதையே சில தடவைகள் செய்யுங்கள். இஸ்லாமியர்கள் தங்களின் ஒவ்வொரு தொழுகைகளிலும் கடைப்பிடிக்கிறார்கள்
மனமுருகும் பிரார்த்தனை, மன ஒருமை கொண்டு செய்யும் தியானம் இவையெல்லாம் மன அழுத்தத்தை விரட்டியடிக்கிற வல்லமை கொண்டவை என்கின்றனர் மனநல மருத்துவர்கள்.