Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

August 2011
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,219 முறை படிக்கப்பட்டுள்ளது!

மரணவேளையிலும் இறைவனை வணங்கிய மாவீரர்!

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்: நபி(ஸல்) அவர்கள் (பத்துப் பேர் கொண்ட) உளவுப் படையொன்ற (ஓரிடத்திற்கு) அனுப்பினார்கள். உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களின் புதல்வர் ஆஸிமீன்(தாய் வழிப்)பாட்டனார் ஆஸிம் இப்னு ஸாபித்(ரலி) அவர்களை அப்படையினருக்குத் தலைவராக்கினார்கள். அவர்கள் (மதீனாவிலிருந்து புறப்பட்டு வந்து) மக்காவுக்கும் உஸ்ஃபானுக்கும் இடையிலுள்ள (‘ஹத்தா’ என்ற) இடத்தில் இருந்தபோது ‘ஹுதைல்’ குலத்தைச் சேர்ந்த பனூ லிஹ்யான் என்றழைக்கப்பட்ட கிளையினருக்கு அவர்களைப் பற்றித் தெரிவிக்கப்பட்டது. அவர்கள், அப்பெய்யும் வீரர்கள் சுமார் நூறு பேருடன் (கிளம்பி உளவுப்படையினரைப் பிடிப்பதற்காக) அவர்களின் பாதச்சுவடுகளைப் பின்தொடர்ந்து வந்தனர். உளவுப்படையினர் இறங்கித் தங்கியிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர். படையினர் மதீனாவிலிருந்து உணவாகக் கொண்டுவந்திருந்த பேரீச்சம் பழங்களின் கொட்டைகளை அங்கே கண்டனர். அப்போது ‘இது ‘யஸ்ரிப்’ (மதீனா நகரின்) பேரீச்சம் பழம்” என்று சொல்லிக் கொண்டனர். எனவே, உளவுப்படையினரின் பாதச்சுவடுகளைப் பின்தொடர்ந்து வந்து, இறுதியில் அவர்களை அடைந்தேவிட்டனர்.

ஆஸிம்(ரலி) அவர்களை அடைந்தேவிட்டனர். ஆஸிம்(ரலி) அவர்களும், அவர்களின் நண்பர்களும் இதை அறிந்தபோது (மலைப்பாங்கான) உயரமான ஓரிடத்தில் தஞ்சம் புகுந்தனர். அப்போது (துரத்தி வந்த) அந்தக் கிளையினர் அவர்களைச் சுற்றி வளைத்துக் கொண்டு அவர்களைப் பார்த்து, ‘நீங்கள் எங்களிடம் இறங்கி வந்துவிட்டால், உங்களில் யாரையும் நாங்கள் கொலை செய்ய மாட்டோம் என்று உங்களுக்கு உறுதிமொழியும் வாக்குறுதியும் தருகிறோம்” என்று கூறினர்.

அப்போது ஆசிம் இப்னு ஸாபித்(ரலி), ‘நான் ஓர் இறை மறுப்பாளனின் (வாக்குறுதியை நம்பிஅவனுடைய) பாதுகாப்பில் இறங்கிச் செல்ல மாட்டேன்.

இறைவா! எங்களைப் பற்றிய செய்தியை உன் தூதருக்குத் தெரிவித்து விடு” என்று கூறினார்கள். அப்போது அக்கிளையினர் உளவுப்படையினருடன் சண்டையிட்டு ஆஸிம்(ரலி) அவர்கள உட்பட ஏழுபேரை அம்பெய்து கொன்றுவிட்டனர். இறுதியில் குபைப், ஸைத்(ரலி), மற்றொருவர் மட்டுமே எஞ்சியிருந்தனர்.

இம்மூவருக்கும் உறுதிமொழியும் வாக்குறுதியின் பேரில் இறங்கி வந்தனர். அவர்கள் (மூவரும்) கையில் கிடைத்தவுடன் (எதிரிகள்) தங்களின் அம்பின் நாணை அவிழ்த்து அதன் மூலம் அவர்களைப் பிணைத்தனர். (இதைக் கண்ட) அந்த மூன்றாம் மனிதர், ‘இது முதலாவது நம்பிக்கைத் துரோகம்.” என்று கூறி, அவர்களுடன் வர மறுத்துவிட்டார், எனவே, அவரை (அடித்து)த் துன்புறுத்தி தம்முடன் வரும்படி நிர்பந்தித்தனர்.

ஆனால், அவர் உடன்படவில்லை. எனவே, அவரை அவர்கள் கொலைசெய்துவிட்டனர். பிறகு, குபைப்(ரலி) அவர்களையும், ஸைத் இப்னு தஸினா(ரலி) அவர்களையும் கொண்டு சென்று மக்காவில் விலைக்கு விற்றுவிட்டனர். ஹாரிஸ் இப்னு ஆமிர் இப்னி நவ்ஃபல் என்பவருடைய மக்கள், குபைப்(ரலி) அவர்களை (பழிதீர்ப்பதற்காக) விலைக்கு வாங்கிக் கொண்டனர். (ஏனெனில்,) குபைப்(ரலி) ஹாரிஸ் இப்னு ஆமிரை பத்ருபபோரின்போது கொன்றிருந்தார். ஹாரிஸின் மக்களிடத்தில் குபைப்(ரலி) (புனித மாதங்கள் முடிந்தது) அவரைக் கொல்ல அவர்கள் ஒன்று திரளும் (நாள் வரும) வரையில் கைதியாக இருந்தது வந்தார். (கொல்லப்படும நாள் நெருங்கியபோது தன்னுடைய மறைவான உறுப்புகளிலிருந்த முடிகளை) மழிப்பதற்காக ஹாரிஸின் மகள் ஒருத்தியிடம் சவரக்கத்தி ஒன்றை குபைப்(ரலி) இரவலாகக் கேட்டார்.

அவளும் அவருக்கு இரவலாகத் தந்தாள். (அதற்குப் பின் நடந்ததை அப்பெண்மணியே விளக்கிக்) கூறுகிறார்கள்: நான் என்னுடைய சிறிய மகனைக் கவனிக்காமல் இருந்துவிடவே, அவன் (விளையாடிக் கொண்டே) தவழ்ந்து குபைப் அவர்களிடம் வந்து சேர்ந்தான். அவனை குபைப் அவர்கள் தங்களின் மடியில் வைத்தார்கள்.  (இந்நிலையில்) அவரை நான் பார்த்து பலமாக அதிர்ந்தேன். இதை அவர் புரிந்து கொண்டார். அவரின் கையில் கத்தி இருந்தது.

அப்போது அவர், ‘இவனை நான் கொன்று விடுபவன் என்று அஞ்சுகிறாயா? அல்லாஹ்வின் நாட்டப்படி நான் அப்படிச் செய்பவன் அல்லன்” என்று கூறினார். குபைபை விடச் சிறந்த ஒரு கைதியை நான் (என் வாழ்நாளில்) கண்டதில்லை. ஒரு நாள் அவர் தம் கையிலிருந்த திராட்சைப் பழக் குலையிலிருந்து (பழங்களைப் பறித்து) சாப்பிட்டுக் கொண்டிருக்கக் கண்டேன். அந்நாளில் மக்காவில் எந்தப் பழவகையும் இருக்கவில்லை. மேலும், அப்போது அவர் இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தார்.  (பிற்காலத்தில் அந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்து)” அது குபைபுக்கு அல்லாஹ் வழங்கிய உணவு” என்று அந்தப் பெண் கூறிவந்தார்.

(அவரைக் கொல்வதற்காக – மக்காவின்) புனித எல்லைக்கு வெளியே அவரை அவர்கள் கொண்டு வந்தபோது, ‘இரண்டு ரக்அத்துகள் நான் தொழுது கொள்ள என்னை விடுங்கள்” என்று குபைப் கேட்டார். (அவர்களும் அனுமதிக்க, குபைப் இரண்டு ரக்அத்துகள் தொழுதார்.) பிறகு, அவர்களின் பக்கம் திரும்பி , ‘நான் மரணத்தைக் கண்டு அஞ்கிறேன் என்று நீங்கள் எண்ணி விடுவீர்கள் என்ற அச்சம் எனக்கில்லாமல் இருந்திருந்தால் நான் (தொழுகையை) அதிகமாக்கியிருப்பேன்” என்று கூறினார். அவர்தான் (இறைவழியில்) கொல்லப்படுவதற்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவதை முன்மாதிரியாக்கியவராவார்.

பிறகு ‘இறைவா! இவர்களை நீ எண்ணி வைத்துக் (கொண்டு, தனித்தனியாக இவர்களைக் கவனித்துக்) கொள்வயாக!” என்று பிரார்த்தித்தார். அதன் பிறகு? ‘நான் முஸ்லீமாகக் கொல்லப்படுமபோது எதைப் பற்றியும் நான் பொருட்படுத்தமாட்டேன். எந்த இடத்தில் நான் இறந்தாலும் இறைவனுக்காகவே நான் கொல்லப்படுகிறேன் (என்பதில் எனக்கு மகிழ்ச்சியே). நான் கொலையுறுவது அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காகத் தான் எனும்போது, அவன் நாடினால் என்னுடைய துண்டிக்கப்பட்ட உறுப்புகளின் இணைப்புகளின் மீது தன் அருள்வளத்தைப் பொழிவான்” என்று (கவிபாடிக்) கூறினார்கள்.

பிறகு, உக்பா இப்னு ஹாரிஸ் என்பவன் குபைப்(ரலி) அவர்களிடம் வந்து, அவர்களைக் கொன்றுவிட்டான். மேலும், (ஆஸிம் இப்னு ஸாபித்(ரலி) கொல்லப்பட்டு விட்ட செய்தி குறைஷிகளுக்குக் கிடைத்தபோது அவர்கள் அவரை அடையாளம் கண்டு கொள்வதற்காக அவரின் உடலில் ஓர் உறுப்பை எடுத்து வரும்படி ஆளனுப்பினார்கள். (ஏனெனில்,) ஆஸிம்(ரலி) பத்ருப் போரின்போது அவர்களின் தலைவர்களில் ஒருவரை கொலை செய்திருந்தார். (அவரின் உடலின் ஒரு முக்கிய உறுப்பை வெட்ட போன போது) ஆஸிம்(ரலி) அவர்களுக்கு மேல் (அவர்களைப் பாதுகாக்கும் நோக்கில்) அல்லாஹ் மேகத்தைப் போன்று ஆண் தேனீக்களை அனுப்பினான். குறைஷிகளின் தூதர்களிடமிருந்து ஆஸிம்(ரலி) அவர்களை (சூழ்ந்து கொண்டு) அவை பாதுகாத்தன. எனவே, அவரிடமிருந்து எதையும் எடுக்க அவர்களால் இயலவில்லை. ஆதாரம் புஹாரி எண் 4086

இந்த செய்தியில் பல படிப்பினைகள் உள்ளன. முதலாவது ஒரு இறை மறுப்பாளனை நம்பி, அவனது வாக்குறுதியை நிறைவேற்றுவான் என்று நம்பி அவனிடம் சரணடைவதை விட, அவனுடன் போரிட்டு வீரமரணம் அடைவது சிறந்தது. அதைத்தான் இக்குழுவின் தலைவர் ஆஸிம் இப்னு ஸாபித்[ரலி] அவர்கள் உளிட்ட ஏழு பேர் செய்து ஷகீதானார்கள்.

இரண்டாவதாக, ஒரு இறை மறுப்பாளனை நம்பி சரணடைந்தால் கூட, அவன் வாக்குறுதி மீறும்போது அதற்கு கட்டுப்படாமல், உயிர்த்தியாகம் செய்வது சிறந்தது. அதைத்தான் அந்த மூன்றாமவர் செய்தார்.

மூன்றாவதாக ஒரு இறை மறுப்பாளனிடம் சரணடைந்தால் கூட தம் உயிர் பிரியும் நிலைவந்தாலும் நாம் இறைவனுக்காகவே உயிர் துறக்கிறோம் என்ற சிந்தனை வரவேண்டும். அது குபைப்[ரலி] அவர்களுக்கு அதிகமாகவே இருந்தது. மேலும், அந்த கயவர்களிடமிருந்து தப்பிப்பதற்கு குபைப்[ரலி] அவர்களுக்கு ஒரு வாய்ப்பும் கிடைத்தது. அது என்னவெனில், குபைப்[ரலி] அவர்களை கொல்லப்போகும் குடும்பத்தை சேர்ந்த குழந்தை குபைப்[ரலி] அவர்களிடம் வந்தபோது அதை பணயமாக வைத்து குபைப்[ரலி] தப்பியிருக்கமுடியும். ஆனாலும் அது ஒரு இறைநம்பிக்கையாளனுக்கு அழகல்ல என்பதால் உயிர் துரப்பதையே உயர்வாக கருதினார்கள் குபைப்[ரலி] அவர்கள். மேலும், எனது உயிர் எங்கு பிரிந்தாலும் அது என் இறைவனுக்காகவே பிரிகிறது என்பதால் எனக்கு மகிழ்ச்சியே என்றார்கள். அதோடு மரணம் எதிர் நோக்கியுள்ள இறுதி மணித்துளியிலும் இறைவனை இரு ரக்அத்துகள் தொழுது பிரார்த்திக்கிறார்கள் எனில், அந்த குபைப்[ரலி] அவர்களின் தியாக மனப்பான்மை-இறையச்சம் நம் ஒவ்வொருவருக்கும் வரவேண்டும். தொழுகையை வேண்டுமென்றே கோட்டைவிட்டுவிட்டு வருடத்தில் இருநாள் தொழுபவர்களும் , வாரத்தில் ஒருநாள் தொழுபவர்களும் குபைப்[ரலி] அவர்களின் வாழ்விலிருந்து படிப்பினை பெறவேண்டும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் குபைப்[ரலி] உள்ளிட்ட இந்த பத்து வீரர்களையும் பொருந்திக்கொள்வானாக!

ஸஹாபாக்களின் வாழ்வினிலே