Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

August 2011
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,974 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஸஹர் உணவு

ஸஹர் உணவு
சிரமமின்றி நோன்பைச் சமாளிப்பதற்காக, பின்னிரவில் உட்கொள்ளப்படும் உணவு ஸஹர் உணவு எனப்படுகிறது. ஸஹர் நேரத்தில் இவ்வாறு உணவு உட்கொள்வது கட்டாயக் கடமையில்லை என்றாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் பெரிதும் ஆர்வமூட்டப்பட்டுள்ளது.

நீங்கள் ஸஹர் நேரத்தில் உண்ணுங்கள். ஏனெனில் ஸஹர் நேர உணவில் பரக்கத் (புலனுக்குத் தெரியாத மறைமுகமான பேரருள்) உள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) நூல்: புகாரி 1923

 நமது நோன்புக்கும், வேதம் கொடுக்கப்பட்ட (யூத, கிறித்த)வர்களின் நோன்புக்கும் வித்தியாசம் ஸஹர் நேரத்தில் உண்பதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அம்ரு பின் அல்ஆஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 1836 ஸஹர் உணவு எவ்வளவு முக்கியமானது என்பதை இதிலிருந்து அறியலாம்.

ஸஹர் உணவைத் தாமதப்படுத்துதல்
ஸஹர் உணவை எந்த அளவுக்குத் தாமதப்படுத்தலாம் என்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செயல்முறை விளக்கம் தந்துள்ளார்கள்.

 நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஸஹர் செய்து விட்டு (சுபுஹ்) தொழுகைக்கு ஆயத்தமாவோம் என்று ஸைத் பின் ஸாபித் (ரலி) கூறினார்கள். (ஸஹருக்கும் சுபுஹுக்கும் இடையே) எவ்வளவு நேரம் இருக்கும்? என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், ஐம்பது வசனங்கள் ஓதும் நேரம் என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி 576, 1134, 1921, 575

 தமிழகத்தில் சுப்ஹுக்கு ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் இருக்கும் போது ஸஹர் செய்யும் வழக்கத்தை மேற்கொண்டுள்ளனர். அது மட்டுமின்றி ஸஹர் செய்து விட்டு உறங்கி, சுபுஹ் தொழுகையைப் பாழாக்கி விடுகின்றனர். ஸஹர் செய்து முடித்தவுடன் சுபுஹ் தொழுகைக்கு ஆயத்தமாகும் அளவுக்குத் தாமதமாக ஸஹர் செய்வதே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்த நடைமுறையாகும். ஐம்பது வசனங்களை நிறுத்தி நிதானமாக ஓதிட, பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் போதுமானதாகும். சுபுஹுக்குப் பத்து நிமிடம் அல்லது பதினைந்து நிமிடம் இருக்கும் போது தான் ஸஹர் செய்யும் வழக்கம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்துள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.

ஸஹருக்காக அறிவிப்புச் செய்தல்
மக்கள் உறக்கத்திலிருந்து விழித்து ஸஹர் செய்ய வேண்டியுள்ளதால் ஸஹர் செய்வதற்காக மக்களை எழுப்பிவிடக் கூடிய ஏற்பாடு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் செய்யப்பட்டிருந்தது.

 பிலால் (ரலி), அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரலி) ஆகிய இரண்டு முஅத்தின்கள் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் நியமிக்கப்பட்டிருந்தனர். இருவரது குரலும் மக்களுக்கு நன்கு பரிச்சயமாகி இருந்தது. ரமளான் மாதத்தில் ஸஹருக்கு ஒரு பாங்கும், சுபுஹ் தொழுகைக்கு ஒரு பாங்கும் என இரண்டு பாங்குகள் சொல்ல நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

மக்களுக்குக் குழப்பம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக, பிலால் (ரலி) அவர்கள் ஸஹருக்கு எழுப்பி விடுவதற்கான பாங்கு சொல்வார் எனவும், அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரலி) சுபுஹ் தொழுகைக்கு பாங்கு சொல்வார் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவிப்புச் செய்தார்கள்.

பிலாலின் பாங்கு ஸஹர் செய்வதிலிருந்து உங்களைத் தடுக்காது. ஏனெனில் (இரவில்) நின்று வணங்கியவர் வீடு திரும்புவதற்காகவும், உறங்குபவர் விழிப்பதற்காகவுமே அவர் பாங்கு சொல்வார் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்கள்: ஆயிஷா (ரலி), இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 621, 5299, 7247.

 மற்றொரு அறிவிப்பில், இரண்டு பாங்குகளுக்கும் இடையே எவ்வளவு இடைவெளி இருக்கும் என்பதை விளக்கும் போது, அவர் பாங்கு சொல்லி விட்டு இறங்குவார்; இவர் பாங்கு சொல்வதற்காகச் செல்வார் என்று ஆயிஷா (ரலி), இப்னு உமர் (ரலி) ஆகியோர் விளக்கமளித்ததாக இடம் பெற்றுள்ளது. நூல்கள்: முஸ்லிம் 1829, புகாரி 1919.

சுபுஹுக்குச் சிறிது நேரம் இருக்கும் போது ஒரு பாங்கு சொல்லி மக்களை விழித்தெழச் செய்யும் வழக்கம் பெரும்பாலும் எங்குமே இன்று நடைமுறையில் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்த இந்த சுன்னத்துக்கு உயிர் கொடுக்க வேண்டும். முதல் பாங்கு ஸஹருக்கு எனவும், இரண்டாவது பாங்கு சுபுஹுக்கு எனவும் மக்களுக்குத் தெளிவாக விளக்கிவிட்டு இதை நடைமுறைப்படுத்த வேண்டும்.

 தமிழகத்தின் பல பகுதிகளில் மக்களை ஸஹருக்கு எழுப்பி விடுவதற்காகப் பலவிதமான நடைமுறைகள் உள்ளன. நள்ளிரவு இரண்டு மணிக்கெல்லாம் ஒலிபெருக்கிக் குழாய் மூலம் பாடல்களைப் போட ஆரம்பித்து விடுகின்றனர். நன்மைகளை அதிகமதிகம் பெற்றுத் தரக்கூடிய புனித மாதத்தில், புனிதமான நேரத்தில் இசைக் கருவிகளுடன் பாடல்களை ஒலிபரப்பி, பாவத்தைச் சம்பாதித்து விடுகின்றனர். இது ஒட்டு மொத்த ஜமாஅத்தினரின் ஏற்பாட்டின் படி நடந்து வருகின்றது.

ஷைத்தானுக்கு விலங்கு போடப்படும் மாதத்தில் ஷைத்தானை அவிழ்த்து விடுவதை விடக் கொடுஞ் செயல் வேறு என்ன இருக்க முடியும்? இது உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

நள்ளிரவு இரண்டு மணிக்கு ஆரம்பிக்கும் பாடல்கள் சுபுஹ் வரை சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் விடாமல் அலறிக் கொண்டிருக்கும்.

 மாற்று மதத்தவர்களின் உறக்கத்தைக் கெடுத்து, அவர்கள் இஸ்லாத்தை வெறுப்பதற்கு இதுவும் காரணமாக உள்ளது. பின்னிரவில் எழுந்து தொழுவதே சிறப்பு என்ற அடிப்படையில் பின்னிரவில் எழுந்து தொழுபவர்களின் காதுகளைக் கிழிக்கும் வகையில் ஒலிபெருக்கியை அலற விட்டு, பாவத்தைக் கட்டிக் கொள்கிறார்கள். இன்னும் சில பகுதிகளில் இரவு ஒரு மணியிலிருந்தே பக்கிரிசாக்கள் கொட்டு மேளத்துடன் தெருத் தெருவாகப் பாட்டுப் பாடிச் செல்லும் வழக்கம் உள்ளது. ஸஹருக்காக இரவு ஒரு மணிக்கும், இரண்டு மணிக்கும் மக்களை எழுப்பி விடக் கூடிய அதிகாரத்தை இவர்களுக்கு யார் வழங்கினார்கள்?

 கடைசி நேரத்தில் ஸஹர் செய்வதே சிறந்தது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்க, நள்ளிரவு இரண்டு மணிக்கும், மூன்று மணிக்கும் மக்களின் உறக்கத்தைக் கெடுப்பது குற்றமாகும். இது போன்ற செயல்களைத் தடுத்து நிறுத்தியாக வேண்டும்.

விடி ஸஹர்
தமிழகத்தின் சில பகுதிகளில் விடி ஸஹர் என்ற வழக்கம் உள்ளது.
உறக்கம் மேலிடுவதால் சில நேரங்களில் ஸஹர் நேரம் முடிந்த பிறகு தான் சிலர் விழிப்பார்கள். இவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்ற அறிவு இல்லாததினால் நோன்பைப் பாழ்படுத்திக் கொள்கின்றனர்.

ஸஹர் செய்வதற்கான நேரம் முடிந்து விட்டது என்பது நன்றாகத் தெரிந்திருந்தும் அவசரமாக ஒரு குவளைத் தண்ணீர் குடித்து விட்டு (இதைத் தான் விடி ஸஹர் என்கின்றனர்) நோன்பு நோற்பதாக நிய்யத் செய்து கொள்கின்றனர்.

சுபுஹ் நேரம் வந்து விட்டால் எதையும் உண்ணவோ, பருகவோ கூடாது என்று கட்டளை உள்ளது. எந்த நேரத்தில் சாப்பிடவோ பருகவோ கூடாதோ அந்த நேரத்தில் சாப்பிடுவதன் மூலம் ஒரு நோன்பைப் பாழ்படுத்திக் கொள்கின்றனர்.

 இதைத் தவிர்க்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொண்டால் இந்த நிலையை நாம் தவிர்த்து விடலாம். இரவில் படுக்கைக்குச் செல்லும் போதே, இன்று நோன்பு நோற்பதாக முடிவு செய்து விட்டுப் படுக்க வேண்டும். அல்லாஹ், ஸஹர் செய்வதற்கு ஏற்ப விழிப்பை ஏற்படுத்தினால் ஸஹர் செய்யலாம். அவ்வாறு விழிக்காமல் சுபுஹு நேரத்திலோ அது கடந்த பின்னரோ விழித்தால் எதையும் உண்ணாமல் நோன்பைத் தொடரலாம். ஏனெனில் இரவிலேயே நோன்பு நோற்பதாக முடிவு செய்து விட்டோம்.

அதிகமாக உண்பது
நோன்பு துறக்கும் போதும், ஸஹர் நேரத்திலும் அதிக சுவைகளுடனும், அதிக அளவிலும் உணவு உட்கொள்ளும் வழக்கம் உள்ளது. மார்க்க அறிவு இல்லாத சூஃபிய்யாக்கள் எனும் அறிவிலிகள் இந்தப் பழக்கத்தைக் குறை கூறுகின்றனர். சுவையாக உண்பதால் நோன்பின் நோக்கமே பாழாகி விட்டதாகவும் எழுதி வைத்துள்ளனர்.

 நோன்பின் நோக்கம் உணவின் அளவையும், சுவையையும் குறைத்துக் கொள்வதற்கான பயிற்சி அல்ல! மாறாக இறையச்சத்தை அதிகரிப்பதற்கான பயிற்சியே என்பதை முன்னரே நாம் விளக்கியுள்ளோம். இந்தத் தத்துவத்திற்கு இது மாறாகவுள்ளது. நமது சக்திக்கும், வசதிக்கும் தக்கவாறு எத்தனை வகைகளிலும் உணவு உண்ண நமக்கு அனுமதி உள்ளது. நோன்பு துறந்த பின்பும் நோன்பாகவே இருங்கள் என்று அல்லாஹ்வும், அவனது தூதரும் கூறவில்லை.

 அதிக அளவோ, அதிக சுவையோ கூடாது என்றால் அதைக் கூற வேண்டிய அதிகாரம் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் தான் உள்ளது. மார்க்க அறிவற்ற சூஃபிய்யாக்களுக்கு இல்லை.
அல்லாஹ் ஹலாலாக்கியதை ஹராமாக்கும் அதிகாரம் எவருக்கும் இல்லை.
வகை வகையான உணவில் நாட்டமிருந்தும், எனக்காக அந்த ஆசையை எப்படி என் அடியான் பகல் நேரத்தில் கட்டுப்படுத்திக் கொள்கிறான் என்று அல்லாஹ் மகிழ்ச்சியடைவானே தவிர அவன் அனுமதித்ததைச் செய்யும் போது அதிருப்தி அடைய மாட்டான்.

நிய்யத்
எல்லா வணக்கங்களும் நிய்யத்தைப் பொறுத்தே! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நூல்: புகாரி 1.

 தொழுகையானாலும், நோன்பானாலும், இன்ன பிற வணக்கங்களானாலும் நிய்யத் மிகவும் அவசியமாகும். நிய்யத் என்றால் என்ன? இதைப் பற்றியும் பெரும்பாலான மக்கள் அறியாதவர்களாகவே உள்ளனர். குறிப்பிட்ட சில வாசகங்களை வாயால் மொழிவது தான் நிய்யத் என இவர்கள் நினைக்கின்றனர். பல காரணங்களால் இவர்களது நினைப்பு தவறானதாகும்.

நிய்யத் என்ற வார்த்தைக்கு மனதால் எண்ணுதல், தீர்மானம் செய்தல் என்பது பொருளாகும். வாயால் மொழிவது என்ற அர்த்தம் இந்த வார்த்தைக்கு இல்லை. ஒருவருக்குக் காலையில் எழுந்தது முதல், இரவு வரை ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்கவில்லை. நோன்பைக் கடைப்பிடிக்க வேண்டிய நேரம் முழுவதும் எதையும் உண்ணாமல் பருகாமல் குடும்ப வாழக்கையில் ஈடுபடாமல் இருந்துள்ளார். ஆனால் நோன்பு வைப்பதாக இவர் எண்ணவில்லை. ஏதாவது கிடைத்தால் சாப்பிடிருப்பார். நோன்பாளியைப் போலவே இவர் எதையும் உட்கொள்ளா விட்டாலும் நோன்பு நோற்கும் தீர்மானம் எடுக்காததால் இவர் நோன்பு வைக்கவில்லை. இவ்வாறு மனதால் முடிவு செய்வது தான் நிய்யத் எனப்படுகிறது.

 ஒருவர் ரமளான் மாதத்தில் வழக்கத்திற்கு மாறாக நான்கு மணிக்கு எழுகிறார். வழக்கத்திற்கு மாறாக இந்த நேரத்தில் சாப்பிடுகிறார். நோன்பு நோற்கும் எண்ணம் அவரது உள்ளத்தில் இருப்பதன் காரணமாகவே இவர் இப்படி நடந்து கொள்கிறார். எனவே இவர் நிய்யத் செய்து விட்டார். இன்னும் சொல்வதாக இருந்தால் இரவில் படுக்கும் போதே ஸஹருக்கு எழ வேண்டும் என்ற எண்ணத்தில் தான் படுக்கிறார். இது தான் நிய்யத்! இதற்கு மேல் வேறு ஒன்றும் தேவையில்லை. நோன்பு நோற்பதாக மனதால் உறுதி செய்ய வேண்டும் என்பதே சரியானதாகும்.

 ஆனால் ஒரு குறிப்பிட்ட வாசகத்தைக் கூறுவதற்கு நிய்யத் என்ற நம்பிக்கை நடைமுறையில் உள்ளது. நவைத்து ஸவ்ம கதின் அன்அதாயி பர்ளி ரமளானி ஹாதிஹிஸ் ஸனதி லில்லாஹி தஆலா என்பது தான் அந்தக் குறிப்பிட்ட வாசகம். இந்த வருடத்தின் ரமளான் மாதத்தின் பர்லான நோன்பை அதாவாக நாளைப் பிடிக்க நிய்யத் செய்கிறேன் என்று தமிழாக்கம் வேறு செய்து அதையும் கூற வேண்டும் என்று நினைக்கின்றார்கள்.

 இந்த வாசகத்தைக் கூற வேண்டுமென்று அல்லாஹ் கூறினானா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதைக் கூறினார்களா? அதுவுமில்லை. அவர்களிடம் பாடம் கற்ற நான்கு கலீபாக்களோ, ஏனைய நபித் தோழர்களோ இவ்வாசகத்தைக் கூறினார்களா? என்றால் அதுவும் இல்லை.
நான்கு இமாம்களாவது இவ்வாறு கூறியுள்ளார்களா? என்றால் அது கூட இல்லை. உலகில் எல்லா நாடுகளிலும் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். எங்கேயும் இந்த வழக்கம் இல்லை. இந்தியாவிலும், இந்தியர்கள் போய்க் கெடுத்த இலங்கை போன்ற நாடுகளிலும் தவிர வேறு எங்கும் இந்த வழக்கம் இல்லை. நிய்யத் என்பதன் பொருள் மனதால் நினைத்தல் என்பதாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைக் கற்றுத் தராததாலும் இதை விடடொழிக்க வேண்டும்.

 யாரேனும் நமது கட்டளை இல்லாமல் ஒரு அமலைச் செய்வாரேயானால் அது நிராகரிக்கப்படும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் 3243.

 மேலும் நிய்யத் என்ற பெயரில் சொல்லித் தரப்படும் வாசகத்தின் பொருளைச் சிந்தித்தால் கூட அது இஸ்லாமிய நடைமுறைக்கு எதிரானதாகவே உள்ளது. ரமாளன் மாதத்தின் பர்லான நோன்பை அதாவாக நாளை பிடிக்க நிய்யத் செய்கிறேன் என்பது இதன் பொருள். இஸ்லாமிய அடிப்படையில் ஒரு நாள் என்பது மஃக்ரிபிலிருந்து ஆரம்பமாகிறது. இஸ்லாம் பற்றிய அறிவு பெரிய அளவில் இல்லாதவர்கள் கூட நாளை வெள்ளிக்கிழமை என்றால் வியாழன் பின் நேரத்தை வெள்ளி இரவு என்றே கூறும் வழக்கமுடையவர்களாக உள்ளனர்.

 ஒருவர் ஸஹர் நேரத்தில் நாளை பிடிப்பதாக நிய்யத் செய்கிறார். ஆனால் உண்மையில் இன்று தான் நோன்பு நோற்கிறாரே தவிர நாளை அல்ல! ஏனெனில் ஸஹரைத் தொடர்ந்து வரக் கூடிய சுபுஹ் இன்று தானே தவிர நாளை அல்ல! இதைச் சிந்தித்தால் கூட இது மார்க்கத்தில் உள்ளது அல்ல என்பதைப் புரிந்து கொள்ளலாம். எனவே இது போன்ற நவீன கண்டுபிடிப்புகளை விட்டுவிட்டு அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டித் தந்த முறைப்படி மனதால் நோன்பு நோற்பதாக உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். இதுவே நிய்யத் எனப்படும்.

நிய்யத் செய்யும் நேரம்
நோன்பு நோற்கும் நிய்யத்தை, அதாவது முடிவை எப்போது எடுக்க வேண்டும்?
கடமையான நோன்புக்கும், கடமையில்லாத நோன்புக்கும் இதில் வித்தியாசம் உள்ளது.
ரமளான் அல்லாத நோன்பாக இருந்தால் நோன்பு நோற்கும் முடிவைக் காலையில் சுபுஹ் தொழுத பின்பு கூட எடுத்துக் கொள்ளலாம். காலையில் சுபுஹ் தொழுது விட்டு வீட்டுக்கு வருகிறோம். வீட்டில் உண்பதற்கு எதுவும் இல்லை. பட்டிணியாகத் தான் அன்றைய பொழுது கழியும் போல் தெரிகிறது. நோன்பு நோற்பதாக முடிவு செய்து கொள்ளலாம். ஆனால் சுபுஹ் நேரம் வந்தது முதல் எதுவும் உண்ணாமல் இருந்திருக்க வேண்டும்.

 ஒரு நாள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (உண்பதற்கு) ஏதும் உள்ளதா? என்று கேட்டார்கள். நாங்கள் இல்லை என்று கூறினோம். அப்போது அவர்கள், நான் நோன்பாளியாக இருந்து கொள்கிறேன் என்று கூறினார்கள். மற்றொரு நாள் எங்களிடம் வந்தார்கள். அப்போது நாங்கள், ஹைஸ் எனும் (நெய், மாவு, பேரீச்சம்பழம் ஆகியவற்றால் தயாரிக்கப்படும் ஒரு வகை) உணவு அன்பளிப்பாக வந்துள்ளது என்று கூறினோம். அதற்கவர்கள், நான் நோன்பு நோற்றுள்ளேன். இருந்தாலும் கொண்டு வா என்று கூறி விட்டுச் சாப்பிடலானார்கள். கடமையல்லாத நோன்பு நோற்பவர் தர்மம் செய்பவர் போலாவார். விரும்பினால் செய்யாமலும் இருக்கலாம் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம் 1951.

 கடமையில்லாத நோன்பைப் பொறுத்த வரை காலையில் கூட அது குறித்து முடிவு செய்யலாம் என்பதையும், விருப்பமான உணவு தயாராக இருந்தால் கடமையில்லாத நோன்பை முறிக்கலாம் என்பதையும் இந்த ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ளலாம். ஆனால் கடமையான நோன்பு நோற்கும் முடிவைக் காலையில் எடுக்கக் கூடாது. ஏனெனில் அது நமது விருப்பத்தின் பாற்பட்டது அல்ல. சுபுஹ் முதல் மஃக்ரிப் வரை நோன்பு நோற்குமாறு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். சுபுஹ் முதலே நோன்பாளியாக நாம் இருக்க வேண்டும் என்றால் சுபுஹுக்கு முன்பே நோன்பு நோற்கும் முடிவை நாம் எடுத்து விட வேண்டும்.

நன்றி: ஆன்லைன்பிஜே.காம்