Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

May 2005
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,848 முறை படிக்கப்பட்டுள்ளது!

வில்லன்

ன்ன ஹாஷிம் ரபீக், எப்படியிருக்கான்?”

“என்னப்பா தனியா வந்திருக்கியாம், ரபீக் வரலியா?”

“என்ன ஹாஷிம் ரெண்டு நாளா வெளியில காணோம், ரபீக் வரலேண்ட கவலையா?”

நண்பர்களின் கேள்வியெல்லாம் ரபீக்கைச் சுற்றித்தான் – ரபீக்கைப் பற்றித்தான்!

“ரபீக்கு தம்பிகிட்ட ரெண்டு பனியன் வாங்கி அனுப்பச் சொல்லி விட்டேன். உங்கிட்ட தந்தனுப்பினாரா?” பள்ளி மோதினார்!

“வழக்கமா எனக்கு கெர்ஞ்சம் பணம் கொண்டாந்து தரும் ரபீக் தம்பி – உங்ககிட்ட கொடுத்தனுப்பிச்சுச்சா” – ஊர்ப்பியூன்!

“வாத வளையங் கொடுத்து உடுறதா ரபீக்குத் தம்பி சொல்லிட்டுப் போச்ச! நீங்க வந்துட்டதாச் சொன்னாங்க கொடுத்தனுப்பியிருக்குமேண்டுதான் வந்தேன்” – வாதம் அடித்த காலை இழுத்து இழுத்து நடந்து வந்த பதிவுஸ்ஸமான்!

அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் எல்லோரும் அவனைப் பற்றித்தான் விசாரிக்கிறார்கள்!

ரபீக்!ரபீக்!ரபீக் அந்த வார்த்தையே காதில், ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவது போலிருக்கிறது!

மற்றவர்கள்தான் அவன் மறக்க நினைக்கும் அந்த வார்த்தையை அடிக்கடி  நினைபுபடுத்துகிறார்கள் என்றால், அவன் வீட்டில் அவனது அத்தா. அம்மா, மனைவி, குழந்தைகள் எல்லோரும்கூட ‘அந்த’ துரோகியைத்தான் நினைவுபடுத்துகிறார்கள்! அட, அந்தக் கடைக்குட்டி காசிம் பயல் என்னமாய் நடந்து கொண்டான்!

“இந்தக் கார் வேண்டாம் போ! ரபிக்மாமா வாங்கி வரதாச் சொன்ன ஏரோப்ளேன் தா!” என்று தூக்கி வீசி விட்டான் அவன் கொண்டு வந்த விளையாட்டுக்காரை! ஓய்வே கொடுக்காத ஒற்றைத் தலைவலியாய் – ஓரு நிமிடமும் பொறுக்காத எக்ஸிமா நமைச்சலாய் ரபீக்கின் நினைவு அவனை அலைக்கழிக்கிறது. ஆத்திரமூட்டுகிறது.

நளினமான புண் சிரிப்பால், நறுக்குத் தெறித்தாற் போன்ற நாலு வார்த்தைகளால், நாசூக்கான மழுப்பலால் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறான்.

உள்ளுக்குள் கொந்தளிக்கும் கோபஉணர்ச்சிகள் -எரி மலைக் குழம்புகள் எந்த நேரமும் வெடித்துச் சிதறலாம் என்ற நிலை!

அப்படி ஒரு கொதிநிலையில் உணர்ச்சிகளைக் கொட்டி விட்டால், விளைவுகள் எப்படியிருக்கும்?

உயிருக்கு உயிராய், அதனினும்மேலாய் ஒன்றி நின்ற நட்பின் பரிமாணத்தை உலகுக்கு வெளிக்காட்டி ஒரு சரித்திரம் படைத்து விட்டு, “பூ! இவ்வளவு தான? என்று கேலி பேசி ஓரு கைகொட்டிச் சிரிக்கும் அளவுக்கு தாழ்ந்து போவதா? காரணம் என்னவென்று எப்படி விளக்குவது? விளக்கக்கூடிய காரணமா அது?

தயக்கம் அழுத்துகிறது. தவிப்பும் மேலிடுகிறது. குழப்பத்தின் உச்சியில் நிற்கிறான் ஹாஷிம்!

ஒரே தெருவில் பிறந்து வளர்ந்து, விளையாடி, ஒரே உஸ்தாதிடம் அலிஃபே சொல்லி, ஒரே பள்ளியில் ஒன்னாங் கிளாசிலிருந்து படித்து, ஒரே கல்லூரியில், ஒரே குரூப் எடுத்து, ஒரே அறையில் தங்கிப் படித்துப் பட்டம் பெற்று, ஒரே ஏஜெண்டிடம் பணம் கட்டி, ஒரே ஃபிளைட்டில் சவூதி சென்று, ஒரே கம்பெனியில் வேலையும் வாங்கி ஒன்றாக முதல் சபுர் வந்து, ஒரே நாளில் திருமணமும் முடித்து ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளைவிட உணர்வுகளால் ஒன்றித்துவிட்ட அந்த நட்பின் இறுக்கத்தில் என்ன விரிசல்? எங்கு பிசிறு? எப்படிப் புரிய வைப்பது? யார் நம்புவார்கள்? எத்தனை நாளைக்கு மறைக்க முடியும் மற்றவர்களிடமிருந்து?

உஸ்தாத் உமர்ஸாஹிபைக் கேலி செய்தது ஹாஷிம்! ஆனால் அவனுக்காக உதை வாங்கியதோ ரபீக்!

“கண்ணாடி வாத்தியாரின் கண்ணாடியை ஒளித்து வைத்துப் பூச்சாண்டி காட்டியது ஹாஷிம்! ஆனால் அதற்குத் தண்டனை பெற்றதோ ரபீக்!

அது போகட்டும்! குண்டு விளையாட்டில் கில்லாடி ரபீக்! எப்போதும் ஜெயிப்புத்தான் அவனுக்கு! அதற்கு நேர்எதிர்மறை ஹாஷிம். எப்போதும், தோல்விதான்.

குழியின் ஓரத்தில் கையை மடக்கு வைத்து “மொக்குட்டு” அடிக்க மற்றப் பையன்கள் துடிக்கும் போது ‘டே பாவம்டா ஹாஷிம். அவனுக்குப் பதிலா என்னை அடிங்கடா!” என்று அவனுக்குப் பதிலா அந்தப் பளிங்கு ரவைகளால் அடிவாங்கி.. கைவீங்கி … ரத்தம் கசிந்து…. அந்த உபாதையில் அனிச்சையாகக் கண்களில் நீர் தளும்ப, ஆனால் அதை மறைத்து, நுனி விரலால் எச்சிலைத் தொட்டு காயத்தில் தடவிக் கொண்டே “ஒன்னுமில்லைடா” என்று சிரித்து மழுப்பிய ரபீக்!

S.S.L.C. அரசுத் தேர்வு! கணக்குப் பரீட்சை அன்று ஹாஷிமுக்கு வயிற்றுப்போககு ஏற்பட்டு பரீட்சை எழுத முடியாது போனபோது, அவன் பாஸாகாத போது தான் மட்டும் பாஸாவதா என்ற எண்ணத்தில் வெறும்பேப்பரை மடித்துக் கொடுத்துவிட்டு வந்து பெயிலான ரபீக்!

இப்படி எத்தனை நிகழ்ச்சிகள்? நெகிழ்ச்சிகள்? உள்ளம் நனைகிறது… ஓலமிடுகிறது!

அன்று அவனை அதிரவைத்த காட்சி…!

ஆயிரமாயிரம் பாசப்பரிமாறல்களால் வைரம் பாய்ந்திருந்த நட்புக் கோட்டையை ஒரு நொடியில் தகற்தெறிந்த நிகழ்ச்சி..!

அவனைப் பதற வைக்கிறது! உடம்பே பற்றி எரிவது போல பதைபதைக்க வைக்கிறது! வெறியேற்றுகிறது…!

“டேய் மாப்ளே! அதைக் கொஞ்சம் ஃப்ரீஸ் பண்ணு””

“டேய் மச்சான்! கொஞ்சம் ரீவைண்ட் பண்ணிப் போடுடா! அந்த நாணச் சிரிப்பை இன்னும் கொஞ்சம் பாத்துக்குவோம்”

டேய் டேய்! ஆஃப் பண்ணித் தொலைடா! குட்டி யானை வருது! டிவி உடைஞ்சு தொலைக்கப் போகுது”

“அப்பா! இந்த முகத்துக்கு இவ்வளவு மேக்கப் தேவைதான?”

இவன் மூஞ்சிக்கும் முகரக்கட்டைக்கும் இவ்வளவு அழகான பொண்ணா? மச்சம்டா”

பிரம்மச்சாரிகளும், கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரிகளா கேம்ப் வாழ்க்கையில் கூட்டாக வாழும் சபுராளிகளும் வாழும் எந்த அறையில்தான் இத்தகைய உரையாடல்கள் இல்லை, இந்தக் காலத்தில்?

ஊரில் நடக்கும் விசேஷ நிகழ்ச்சிகளை வீடியோ செய்து அனுப்பாவிட்டால் கோபம் பொத்துக் கொண்டு வருகிறதே வெளிநாட்டில் இருப்போருக்கு? அனுப்புவது தான் அனுப்புகிறார்கள். ஒழுங்காக எடிட் செய்தாவது அனுப்புகிறார்களா?  ஒவ்வொரு அறையாக – ஒவ்வொரு ஊராக அந்த நிகழ்ச்சி ரெக்கார்டு செய்யப்பட்ட கேஸட் ஊர்வலம் வரும்போது ஓராயிரம் ரகசியங்களும் அல்லவா ஊர்வலம் போகின்றன?

தன் திருமண காட்சியைக் கண்டு ரசிக்க, தங்கள் உற்றார் உறவினர்களை ஊராரைப் பார்த்துமகிழ, நீண்ட நாட்களாகப் பிரிந்து வாழும் தாபத்தைத் தணித்துக் கொள்ள கேஸட்டைக் கொடுக்க, அவனையே மற்றவர்கள் கொச்சைப்படுத்துகிறார்கள் என்பதை அவன் எங்கே உணர்கிறான்?

ஹாஷிமும் ரபீக்கும்கூட பிறத்தியார் கேஸட்டுகளைப் பார்த்து கமெண்ட் செய்தவர்கள் தானே? அப்படியிருந்தும் கூட அந்த நிகழ்ச்சியை அவனால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. மனம் பதறுகிறது!

சமீபத்தில் ஊரில் நடந்த தங்கையின் திருமணத்தை வீடியோ செய்து அனுப்புமாறு உத்தரவிட்டிருந்தான் ஹாஷிம். நிகழ்ச்சி நடந்த காலையில் தான் அந்த கேஸட் கைக்கு வந்து சேர்ந்தது.

பரபரப்பாக ஹாஷிமும் ரபீக்கும் அதைப் போட்டுப் பார்த்தனர்.

அதில் ஒரு இடத்தில் வீடியோ கேமராக்காரனின் லென்ஸ் அருவருப்பாக கொஞ்சம் விளையாடியிருந்தது.

உறிவினர்களுக்கு விருந்துச் சோறு அனுப்பிக் கொண்டிருந்த பரீதா, ஹாஷிமின் மனைவி, கொஞ்சம் இசகு பிசகாக நின்றிருந்தாள்.

அதைப் பாத்ததுமே சுருக்கென்றது ஹாஷிமுக்கு அவசரம் அவசரமாக அதை பார்வர்டு செய்து விட்டான்! வேண்டுமென்று பரீதா கொடுத்த போஸ் அல்ல அது! வேலை மும்மரத்திலிருந்த போது அந்த கேமராக்காரன் தூரத்திலிருந்து ஃபோகஸ் செய்திருக்கிறான்.

வேலைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தத மும்மரம்! வேலையிலிருந்து திரும்பியவுடன் முதல் வேலையாக அந்த பகுதியை கேஸட்டிலிருந்து “இரேஸ்” செய்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

இருந்தாலும், வேலையில் மனம் கவிழவில்லை. நினைவு முழுக்க அந்தக் கேசட்சையே சுற்றிச் சுற்றி வந்தது. மேஸ்த்ரியிடம் அனுமதி பெற்றுக் கொண்டு அவசரமாக அறைக்குத் திரும்பினான்!

ஆனால், அறைக் கதவு ஏற்கனவே திறந்திருந்ததும் உள்ளுக்குள் வீடியோ ஓடும் அரவமும் ரபீக் முன்கூட்டியே வந்துவிட்டான் என்பதை உணர்த்தியது! அவனுக்கு என்ன ஆயிற்று? முன்கூட்டியே வரக்காரணம்?

வெளி ஜன்னல்களும், அறைக் கதவும் உள்ளுக்குள் பூட்டப்பட்டிருந்தன.  கதவைத் தட்டுவதறக்காக கையை ஓங்கியவன் திடீரென்ற ஒரு நினைப்பில் நிறுத்திக் கொண்டான்!

அறையின் வெளிப்பகுதியிலிருந்த வெண்டிலேட்டர் வழியாக உற்றுப் பார்த்தான்!…

அங்கு அவன் கண்ட காட்சி…….!

அவன் ரத்தமே உறைந்து விட்டது போல இருந்தது!

இதயமே ஸ்தம்பித்துப் பேய்விட்டது அந்த நொடியில! எந்தப் பகுதியை கேஸட்டிலிருந்து அழித்துவிட வேண்டும் என்று அவன் நினைத்துதுக் கொண்டிருந்தானோ, அந்தப் பகுதியை திரும்ப திரும்ப ஓட விட்டு கட்டிலில் படுத்தவாறு ரசித்துக் கொண்டிருந்தான் ரபீக்! “டே துரோகி! அயோக்கிய ராஸ்கல்” என்று கத்திவிட்டான் ஹாஷிம்!

கதவை வெறிகொண்டு தட்டினான்.

அரக்கப் பரக்க விழித்துக் கொண்டு செய்வதறியாது நின்ற ரபீக்கை கையில் கிடைத்த சாமான்களை வைத்துத் தாக்க ஆரம்பித்தான்.

டி.வி. வீடியோ, கேஸட், எல்லாம சுக்கு நூறாய்ப் போது!

ஏதும் பேசாது தலைகுனிந்து நின்ற ரபீக்கின் கண்கள் மட்டும் அருவியாய்க் கொட்டின! மன்னிப்புக் கோரும் பார்வை!

குடுமபத்தைப் பிரிந்து வாழும் இளம் ரத்தத்தின் பலவீனத்தல்  – ஒரு நொடிச் சலனத்தில் நிகழ்ந்துவிட்ட தவறாய் இருக்கலாம் அது!

ஆனால், ஹாஷிம் எந்த விளக்கத்தையும் கேட்கும் நிலையில் இல்லை. ஒரு வெறியாட்டம் ஆடித் தீர்த்து விட்டு அந்த நிமிடமே அறையைக் காலிசெய்து விட்டான்.

ஒரிரு வாரங்கள் மற்றொரு இடத்தில் தங்கிவிட்டு மேலும் அங்கிருந்தால் தான் கொலைகாரனாகிப் போய் விடலாம் என்ற பீதியில் ஊர் திரும்பி விட்டான்! ஆனால் ஊரில் எங்கே அமைதி கிடைக்கிறது?

எந்த ரபீக்கை – அவன் செய்த துரோகத்தை மறக்க நினைக்கிறானோ அதுவேதான் நிமிடத்துக்குநிமிடம் முன் வந்து நிற்கிறது.

இதை யாரிடம் சொல்லிக் காட்ட முடியும்? இது, அவனுக்கு அவனே வில்லனாகிப் போன சோகக் கதை! தனக்குத் தானே போட்டுக்கொண்ட விலங்கு! தன் தலைக்குத் தானே இட்டுக்கொண்ட நெருப்பு!

அந்த நெருப்பின் தகிப்பில் அவன் வெந்து தானே ஆகவேண்டும்?

நன்றி: நர்கிஸ்

அலிஃப் பே – அரபிமொழியின் முதல் எழுத்துகள்