Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

August 2011
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,593 முறை படிக்கப்பட்டுள்ளது!

3டி தொலைக்காட்சி : அச்சுறுத்தும் அவதாரம்

“மை டியர் குட்டிச் சாத்தான்” – எனக்கு நினைவு தெரிந்து நான் பார்த்த முதல் 3டி படம் இது தான். பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் மனசை ரொம்பவே வியக்க வைத்த படம் இது. இந்தியாவின் முதல் 3டி படம். இந்தப் படம் வெளியான உடனே இனிமேல் எல்லாமே 3டி மயம் தான் என்றார்கள். சாதாரண படங்களெல்லாம் ஓடாது என்றார்கள். ஆனால் அப்படி ஏதும் மாயாஜாலம் நடக்கவில்லை.

அந்தப் படம் படம் வெளியாகி கால்நூற்றாண்டு கடந்தபிறகு வெளியாகி மீண்டும் அதே போல, சொல்லப் போனால் அதை விடப் பெரிய அளவில் 3டி பேச்சை ஆரம்பித்து வைத்த படம் அவதார். ஹாலிவுட்டின் பிரமிப்பூட்டும் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனின் பட்டறையிலிருந்து வெளியான படம் இது. இந்தப் படத்தை அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ திரையரங்கு ஒன்றில் பார்த்தேன். படம் ஆரம்பிப்பதற்கு முன் பதினைந்து நிமிடங்கள் விளம்பரம் போட்டார்கள். அதில் ஒன்று 3டி தொலைக்காட்சியைப் பற்றியது. 3டி தொலைக்காட்சி எப்படி இருக்கும் எனும் அந்த விளம்பரம் “வாவ்…” என வாய் திறந்து வியக்க வைத்தது !

அப்படின்னா இனிமே வீட்ல இருக்கிற டிவியை எல்லாம் எறிந்து விட வேண்டிது தானா ? முன்னாடியெல்லாம் ஒரு டிவி ஏதோ ஒரு அம்மிக் கல் ரேஞ்சுக்கு கனக்கும். நாலு பேர் சேர்ந்து தூக்கி வரவேண்டும். அப்புறம் அதை கொஞ்சம் லேசாக்கி “பிளாட் ஸ்கிரீன்” என்று கொண்டு வந்தார்கள். அப்புறம் எல்.சி.டி என்றார்கள். அதிலேயும் ஏகப்பட்ட வகைகளைக் கொண்டு வந்தார்கள். இப்போ ஏதோ பேப்பர் மாதிரி சுருட்டிக் கொள்ளக் கூடிய தொலைக்காட்சியும் வரப்போகிறது என்கிறார்கள். மூணு வருஷம் ஒரு வீட்ல இருக்கிற தொலைக்காட்சி ஏதோ அருங்காட்சியக சிற்பம் போல ஆகிப் போகிறது.

அந்த வரிசையில் இப்போ புதுசா வந்திருக்கிறது 3டி தொலைக்காட்சி ! இனிமே விளையாட்டுப் போட்டிகள் 3டியில், படங்கள் 3டியில், தொலைக்காட்சி தொடர்கள் 3டியில் என அமெரிக்காவில் விளம்பரங்கள் 3டியைச் சுற்றிச் சுற்றியே அலைகின்றன. போதாக்குறைக்கு சில கேபிள் டிவி நிறுவனங்களும் இதில் சேர்ந்து விட்டன. நாங்கள் 3டி தொழில் நுட்பத்துடன் படங்களை ஒளிபரப்புவோம் என விளம்பரங்கள் சூடுபிடிக்கின்றன.

ஒரு பொருளின் விலை வீழ்ச்சி அடைய துவங்கும்போ ஏதாச்சும் புதுசு புதுசா கதை கட்டி அந்தப் பொருளை விற்க வைப்பது கற்கால விளம்பர உத்தி தான். “லைஃப்பாய் சோப் புதிய உறையில் !”  என்று விளம்பரம் செய்வார்கள். ஏதோ உறையைத் தான் மக்கள் தேய்த்துக் குளிக்கிறார்கள் எனும் நினைப்பில். அது விற்பனையில் சூடு பிடிக்கும். பற்பசையில் உப்பு என்கிறார்கள். இனிமேல் அது போரடிக்கும் போது பற்பசையில் சீனி, நல்ல மிளகு, மஞ்சள், வத்தல், சாம்பார் பொடி என்றெல்லாம் கூட வரலாம் !

அந்த நிலை தான் தொலைக்காட்சிக்கும். முன்பெல்லாம் ஊருக்கு ஒரு தொலைக்காட்சி இருக்கும். வயலும் வாழ்வும் பார்க்கவே ஊர் திரண்டு வரும். இப்போ அப்படியில்லை. எல்லா வீட்டிலும் தொலைக்காட்சி இருக்கிறது. இனிமேல் விற்பனைக்கு என்ன செய்வார்கள். அதனால் தான் இந்த 3டியைக் கெட்டியாகப் பிடித்திருக்கிறார்கள் விற்பனையாளர்கள். தாம்சன், சேம்சங், சோனி, பேனாசோனிக் என எல்லா தொலைக்காட்சி ஜாம்பவான்களுக் களத்தில் குதித்திருக்கிறார்கள். 3டி டிவியின் விலையெல்லாம் சாதாரண டிவி விலையை விட பத்து மடங்கு வரை அதிகம் !

இத்துடன் இது நின்று விடுமா என்றால் இல்லை ! இனிமேல் 3டி படங்களைப் பார்க்க அதற்குரிய டிவிடி பிளேயர் வேண்டும் என்பார்கள். அதற்குரிய கேபிள் இணைப்பு வேண்டும் என்பார்கள். அதற்குரிய ஸ்பெஷல் டிஷ் வேண்டும் என்பார்கள். இப்படி வியாபாரத் தளம் விரிவடைந்து கொண்டே செல்லும்.

தொழில் நுட்பம் வளர்வது நல்லது தான். ஆனால் அதே நேரத்தில் அதனால் ஏற்படக் கூடிய பிரச்சினைகள் என்னவென்பதையும் பார்க்க வேண்டும். அதை நிவர்த்தி செய்ய வேண்டும். இந்த 3டி டிவியிலும் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருப்பதாய் விமர்சனங்கள் எழ ஆரம்பித்திருக்கின்றன.

ஒரு மூணு மணி நேரம் 3டி படம் பார்த்த பெரும்பாலானவர்கள் இந்த அசௌகரியத்தை உணர முடியும். தலை சுற்றல், வாந்தி, தலைவலி, கண் எரிச்சல், அழுத்தமான சூழல் என 3டி சாதாரணமாகவே ஒரு விருப்பப்படாத விருந்தாளி தான். கொஞ்ச நேரம் வித்தியாசமான அனுபவத்தைப் பெறுவதற்காக இந்த விலையைக் கொடுக்க வேண்டியிருக்கிறது. ஆண்டுக்கோ ஆவணிக்கோ பார்க்கும் ஒரு 3டி படம் பரவாயில்லை. வீட்டு வரவேற்பறையிலேயே எப்போதும் ஒரு 3டி சாத்தான் இருந்தால் ? உண்மையிலேயே கொஞ்சம் சிந்திக்க வேண்டிய விஷயம் தான்.

இப்போதைக்கு 3டி படங்களைப் பார்க்க வேண்டுமென்றால் கண்ணாடி அணிந்து தான் பார்க்க வேண்டும். பொதுவாக தொலைக்காட்சி பார்ப்பவர்கள் இன்னொரு வேலையையும் செய்து கொண்டு தான் பார்ப்பது வழக்கம். காய்கறி வெட்டிக் கொண்டோ, எதையேனும் எழுதிக் கொண்டோ, கணினியில் வேலை பார்த்துக் கொண்டோ இப்படி ஏதாவது ! அப்படிப்பட்டவர்களுக்கு கண்ணாடி போட்டுக் கொண்டு படம் பார்ப்பது சரிவராது ! அதனால் அந்த தொழில் நுட்பத்தையும் மாற்றி, கண்ணாடி இல்லாமலேயே 3டி படம் பார்க்கும் விதமாக தொலைக்காட்சிகளைத் தயாரிக்கும் முறையில் வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு களமிறங்கியிருக்கின்றன நிறுவனங்கள்.

3டியில் படம் பார்க்கும் போது கண்ணும், மூளையும் ஏகப்பட்ட அழுத்தத்துக்கு உள்ளாகின்றன என்பது தான் முக்கியமான சிக்கல். அதென்ன இப்படி ? நாம பார்க்கும் பூமி கூட 3டி யில தானே இருக்கு ? என அறிவு ஜீவித் தனமாக சிலர் கேள்வி எழுப்புவதுண்டு. உலகம் உண்மையான 3டியில் இருக்கிறது, சினிமா 3டி மாயத்தோற்றத்தில் இருக்கிறது என சுருக்கமாகச் சொல்லி விடலாம்.

கொஞ்சம் அறிவியல் ரீதியாகப் பார்த்தால், 3டியில் இரண்டு கண்ணுக்கும் வருகின்ற படங்களில் சிறிய அளவிலான வேறுபாடு இருக்கும். அதனால் மூளை ஒருவிதமான மாயத்தோற்றத்துக்குள் விழுந்து விடுகிறது. ஒரு செயற்கை ஆழத்தை உருவாக்கும் முயற்சியே 3டியில் முக்கியமானது. இது மூளையின் இயல்பான செயல்பாட்டை மாற்றி அதை வேறொரு நிலைக்குத் தள்ளிவிடுகிறது ! இதனால் மூளையும், கண்ணும் அதிக அழுத்தத்தில் மூழ்கி, தலைவலி, வாந்தி, பதட்டம் போன்றவை உருவாகிவிடுகிறது.

தொடர்ச்சியாக சில மணிநேரங்கள் 3டி படம் பார்த்துவிட்டால் பின்னர் கண்ணாடியைக் கழற்றினாலும் மூளை சட்டென இயல்பு நிலைக்கு வராது. இந்த நிலையை பைனாகுலர் டிஸ்போரியா என அழைக்கிறார்கள். தொலைக்காட்சியில் 3டி வந்தால், எவ்வளவு நேரம் நாம் அதைப் பார்ப்போம் என தெரியாது ! அப்படியானால் இந்த பைனாகுலர் டிஸ்போரியாவின் பாதிப்பு எவ்வளவு ஆழமாய் இருக்கும் என்பதும் தெளிவாய் தெரியாது என்பது தான் கவலைக்குரிய விஷயம்.

3டியில் சீரியல் பார்க்கும் அம்மாக்களாகட்டும், கிரிக்கெட்டில் மூழ்கிவிடும் அப்பாக்களாகட்டும் , மணிக்கணக்காய் வீடியோ கேம்ஸ் விளையாடும் குழந்தைகளாகட்டும் எல்லோருக்குமே சிக்கல் காத்திருக்கிறது ! ஆனால் அது எவ்வளவு ஆழமானது என்பதைப் பற்றி இன்னும் எந்த தொலைக்காட்சி நிறுவனமும் ஆய்வுகளை ஆழமாய்ச் செய்யவில்லை !

3டி தொலைக்காட்சியைப் பார்ப்பதால் கண்ணுக்கு பிரச்சினைகள் வரும். அதுவும் கண்ணில் ஏதேனும் சின்ன கோளாறு இருப்பவர்களுக்கு இது பிரச்சினையைப் பெரிதாக்கிவிடும் என்கிறார் அமெரிக்காவின் மைக்கேன் ரோசன்பெர்க். இவர் அமெரிக்காவின் நார்த் வெஸ்ட் மருத்துவப் பல்கலைக்கழக பேராசிரியர். நியூயார்க்கின் ரோச்சர் பல்கலைக்கழக பேராசிரியர் டொபோரா பிரைட்மேன் என்பவர் இது தலைவலிக்கு உத்தரவாதம் என அடித்துச் சொல்கிறார்.

3டி தொலைக்காட்சியைப் பார்ப்பதால் தாய்மைக்காலத்தில் இருக்கும் பெண்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கும் என்றும், உடல் அசௌகரியங்கள் வரும் என்றும் சில மருத்துவர்கள் கவலை தெரிவிக்கிறார்கள். இது 3டி மீதான அச்சத்தை இன்னும் அதிகரிக்கிறது.

வலிப்பு நோய் இருப்பவர்கள், மூளை சம்பந்தமான நோய் இருப்பவர்கள் போன்றவர்கள் 3டி பார்ப்பது நல்லதல்லையாம். பார்வைக்கோளாறு, மயக்கம், தலைவலி, குழப்பம், வாந்தி, பதட்டம், என பல சிறு சிறு குழப்பங்கள் 3டி பார்ப்பதால் வருமாம். குறிப்பாக சரியாக தூக்கம் வராதவர்கள், தண்ணி அடித்துக் கொண்டே படம் பார்ப்பவர்கள் எல்லாம் 3டியை விலக்கியே வைத்திருக்க வேண்டுமாம். ஆறு வயதுக்குக் குறைவான குழந்தைகள் 3டியைப் பார்க்கக் கூடாதாம். என ஏகப்பட்ட எச்சரிக்கை தொனிகள் எல்லா இடங்களிலிருந்தும் வந்து கொண்டிருக்கின்றன.

இந்தத் தொழில் நுட்பத்தில் வல்லவராய் இருக்கும் ரிக் ஹெயின்மென் என்பவரும் இவற்றில் சிலவற்றை ஒத்துக் கொள்கிறார். குறிப்பாக தலைவலி, வாந்தி, சோர்வு போன்றவை தான் 3டி தொழில்நுட்பத்தை அதிகம் வளர விடாமல் தடுத்திருக்கிறது என்பதை அவர் ஒத்துக் கொள்கிறார். அதே நேரத்தில், இப்போதெல்லாம் தொழில்நுட்பம் ரொம்ப வளர்ந்துவிட்டது. பழைய கால 3டி போல சிக்கல்கள் இருக்காது என்றும் சால்ஜாப்பு சொல்கிறார்.

எந்த புதிய தொழில்நுட்பமும் வசீகரிக்கும். ஆனால் அதன் பின் விளைவுகளை யோசிக்காமல் குதித்தால்  அது ஒரு புதைகுழியாய் மாறி ஆபத்தை உண்டுபண்ணவும் வாய்ப்பு உண்டு என்பதை நாம் தான் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நன்றி: அலசல்.காம்