“மகள் என்னைக் கனடாவுக்கு வரச் சொல்லுறா. இந்தச் சளிக்காரி நான் அங்கை போய் என்ன செய்யிறது”
மூக்கால் சளி சிந்தவில்லை.
வார்த்தைகளில் நம்பிக்கையீனம் ஓட ஓடச் சிந்தியது. அழாத குறையாகச் சொன்னார் அந்த அம்மணி.
இதே அம்மணி சென்ற மாதம் வந்தபோது,
“வாழ வழியே தெரியவில்லை. தனிய கிடந்து மாயிறன். கூப்பிட்ட குரலுக்கு ஏனென்ன யாருமில்லை. என்ன வாழ்க்கை” எனச் சலித்துக் கொண்டார்.
தனியே வாழ்வது சிரமம் எனக் கவலைப்பட்ட அதே அம்மா இப்பொழுது மகளுடன் வாழச் சந்தர்ப்பம் கிடைத்தபோதும் திருப்பதியடையவில்லை.
போதுமென்ற மனசு
போதுமென்ற மனசு பொன் போன்றது என்பார்கள். மாறாக எதிலும் திருப்பதிப்படாத மனசு நரகமாகத்தான் இருக்கும். கோப்பையும் தண்ணீரும் நல்ல உதாரணம்.
“எனது கோப்பையில் தண்ணீர் அரைவாசி நிறைந்திருக்கிறது”
எனச் நிறைவோடு சொல்பவர்கள் இருப்பார்கள், அல்லது
“அரைக் கோப்பை காலியாக இருக்கிறது”
எனக் கவலைப்படுபவர்களும் இருப்பார்கள்.
இதற்கான மறுமொழியிலிருந்து ஒருவரது வாழ்க்கை பற்றிய எண்ணத்தை அறிந்து கொள்ளலாம் என்பார்கள்.
இவற்றைத்தான் நேர் சிந்தனை (Positive thinking)> எதிர்மறை சிந்தனை (Negative thinking) என்றெல்லாம் சொல்கிறார்கள். நம்பிக்கையுள்ள மனது, அவநம்பிக்கையுள்ள மனது என்று புரியும்படி சொல்லலாமா?
இது வாழ்க்கை பற்றிய பார்வை மட்டுமல்ல. உங்கள் நலத்தோடும் தொடர்புடையனவாகும்.
மறுவார்த்தையில் சொன்னால்
* நேர் சிந்தனையுள்ள மனது உடல் ஆரோக்கியத்தோடு தொடர்புடையது.
* எதிர்மறை சிந்தனையுள்ள மனது நலக்கேட்டுடன் தொடர்புடையது எனலாம்.
நேர் சிந்தனையும் உடல் நலமும்
நேர் சிந்தனையாது உடல் நலம் பல வழிகளில் முன்னேற்றமடைய உதவுகிறது.
- வாழ்நாள் அதிகரிக்கும்.
- மனச் சோர்வு நோய்க்கான (Depression) சாத்தியம் குறைவாகும்.
- நாளாந்த வாழ்க்கை நெருக்கீடுகளின் தாக்கம் குறைவாகும்.
- உடல் உள ஆரோக்கியங்கள் மேம்படும்
- சாதாரண தடிமன் காய்ச்சல் அணுகுவது குறையும்.
- மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவற்றால் இறப்பதற்கான சாத்தியம் குறைவாகும்.
இவற்றுக்கான காரணங்கள் என்ன?
நேர்சிந்தனை உள்ளவர்களது உடல்நலம் நல்ல நிலையில் இருப்பதற்குக் காரணங்கள் என்ன?
* நேர் சிந்தனையானது, வாழ்வின் நெருக்கீடு நிறைந்த தருணங்களில் மனம் தளர விடாது நம்பிக்கையுடன் செயலாற்ற உதவும். இதனால் நெருக்கீட்டின் தீய விளைவுகளால் உடல்நலம் பாதிக்கப்படுவதைத் தடுக்கிறது என நம்பப்படுகிறது.
* நேர் சிந்தனை உள்ளவர்களுக்கு பொதுவாக வாழ்க்கை பற்றிய ஆரோக்கியமான நிலைப்பாடு உள்ளது. இதனால் அவர்கள் பொதுவாக நல்ல வாழ்க்கை முறைகளைக் கடைப்பிடிக்கிறார்கள்.
உதாரணமாக
1. நல்ல உணவுகளை உண்கிறார்கள்.
2. உடற் பயிற்சி, நடைப்பயிற்சி போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள்.
3. புகைத்தல், மது, போதைப் பொருட்கள் ஆகியவற்றில் ஈடுபடுவதில்லை. இதனால் ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் கிட்டுகின்றது.
மனதோடு பேசல்
நாங்கள் சதா காலமும் எமது மனதோடு பேசிக்கொண்டே இருக்கிறோம். இதை நாம் உணர்வதில்லை. ஆற்று நீர்போல எமது மூளையினுள் சதா காலமும் சிந்தனைகள் ஓடிக்கொண்டே இருக்கினறன.
தன்னிச்சையாகத் தோன்றி வற்றாத நீருற்றுப் போல பாய்ந்தோடுபவை நேர் சிந்தனைகளாக அல்லது எதிர்மறை சிந்தனைகளாக இருக்கலாம்.
இந்தச் சிந்தனைகள் பலவும் தர்க்க ரீதியானதாக உண்மையின் அடிப்படையில் தோன்றி இருக்கலாம். அல்லது எமது தவறான நம்பிக்கைகள் காரணமாகவும், போதிய தகவல்கள் கிட்டாததாலும் ஏற்பட்டு இருக்கலாம்.
இவ்வாறு எழுபவை எதிர்மறை சிந்தனைகளாக இருந்தால் வாழ்க்கை அவநம்பிக்கை சூழ்ந்ததாக மாறிவிடும். மாறாக நேர் சிந்தனைகளாக இருந்தால் ஒளிமயமான எதிர் காலம் சித்திக்கும். உங்கள் சிந்தனையின் போக்கு எத்தகையது என்பதை அடையாளம் காண முயலுங்கள்.
உங்கள் எதிர்மறை சிந்தனைகளை அடையாளம் காண்பது எப்படி?
* நாள் முழுவதும் பல நல்ல காரியங்களைச் செய்கிறீர்கள். சாதனைகளைப் புரிகிறீர்கள். மற்றவர்களது பாராட்டுகளையும் பெறுகிறீர்கள். ஆனால் ஒரு தவறு நடந்து விடுகிறது. அந்த நாளின் முடிவில் நீங்கள் மிகுதி எல்லாவற்றையும் மறந்து விட்டு அந்த ஒரு தவற்றை மட்டும் தூக்கிப் பிடித்துக் கவலை கொள்கிறீர்களேயானால் நீங்கள் எதிர்மறை சிந்தனை கொண்டவர் எனச் சொல்லலாம்.
* ஏதாவது தவறுகள் நேரும் போது அல்லது நடக்க வேண்டிய கருமம் நிறைவேறாத தருணங்களில் அதற்குக் காரணம் நீங்கள்தான் என மனங்கோணுவதும் எதிர்மறை சிந்தனைதான்.
* எதிலும் நன்மையை எதிர்பார்க்காது இருத்தல். உதாரணமாக காதலியுடன் ஒரு சுற்றுலா செல்லத் திட்டமிட்டிருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அங்கு போய் ஏதாவது மடைத்தனமாகப் பேசி, நடந்து அவளது உறவையே முறித்துவிடக் கூடும் எனத் தயங்கினால் அதற்கு வாழ்க்கை பற்றிய அவரது நம்பிக்கையீனம் மட்டுமே காரணமாக இருக்க முடியும்.
மாற்ற முடியுமா?
மனதோடு பேசும் உங்கள் உரையாடல்கள் அனைத்தும் எதிர்மறை சிந்தனைகளாக இருந்தால் உங்கள் வாழ்க்கை முடிந்துவிட்டது. இனிச் செய்வதற்கு எதுவும் இல்லை என மனங்கலங்க வேண்டியது இல்லை.
உங்கள் சிந்தனைகளினது பாதையை நீங்கள் முயற்ச்சித்தால் மாற்றிக் கொள்ளலாம்.
* நாளாந்த செயற்பாடுகளின் இடையே உங்களை நீங்களே சீர்தூக்கிப் பாருங்கள். உங்கள் சிந்தனைகள் சரியான வழியில் செல்கின்றனவா அல்லது கவலைக்குரிய பாதையில் செல்கிறதா? எதிர்மறை சிந்தனை வழி சென்றால் அதனை இடை மறித்துச் சரியான சிந்தனைக்கு இட்டுச் செல்லுங்கள்.
* புன்னகைக்கும் சிரிப்பிற்கும் இடம் ஒதுக்கி வையுங்கள். நகைச்சுவை உணர்வு வாழ்வை மலர்ச்சிக்கு உள்ளாக்கும். எத்தகைய நிகழ்வுக்கும் நகைச்சுவை, கிண்டல், முசுப்பாத்தி என இனிமையான பக்கம் இருக்கவே செய்யும். அதைக் கண்டு பிடித்து வாழ்வை நம்பிக்கையாக்குவது அவரவர் கைகளில்தான் தங்கியுள்ளது. அதிலும் முக்கியமாக துன்பமான நிகழ்விலும் கூட சிரிப்பை உண்டாக்கக் கூடிய பக்கத்தைத் தேடிக் கொள்ளலாம்.
மனைவியின் இறப்பு
எனது நண்பரின் மனைவி மறைந்தபோது அவரது மறைவிற்கு அனுதாபம் சொல்வதற்காகச் சென்றிருந்தேன்.
“இப்பத்தான் அவளுக்கு விடுதலை கிடைத்திருக்கிறது. எனது சுடுசொற்களிலிருந்து” என்றார்.
ஆழ்மனத்தில் சோகம் மூடியிருந்தபோதும் அதனை மறைக்க அவரது நகைச்சுவை உணர்வு கை கொடுத்தது.
உங்கள் வாழ்வைப் பார்த்து நீங்களே சிரிக்கக் கற்றுக் கொண்டால் அதைவிட பெரிய பேறு எதுவும் இருக்க முடியாது.
* வாழ்க்கை முறை:- ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளும் உதவும். தினசரி உடற் பயிற்சி அல்லது நடை உடல் நலத்திற்கு மட்டுமல்ல மனநலத்திற்கும் முக்கியமானது. அத்துடன் நொறுக்குத் தீனிகளைத் தவரித்த சத்துள்ள உணவு முறையும் நெருக்கீடுகளை துணிவோடு எதிர் கொள்ள உதவும்.
* நம்பிக்கையூட்டும் சூழல்:- நீங்கள் நேர் சிந்தனையுள்ளவர்களாக இருந்தால் மட்டும் போதாது. உங்களைச் சுற்றியுள்ளவர்கள் நல்லவர்களாக மட்டுமின்றி வாழ்வில் நம்பிக்கையுள்ளவர்களாக இருக்க வேண்டும். இல்லையேல் உங்களது நேர்சிந்தனைகளை அவர்கள் மாற்றிவிடக் கூடும் என்ற அபாயம் உண்டு. சந்தேகமும், நம்பிக்கையீனமும், செயற்திறனும் அற்றவர்கள் சூழலில் இருந்தால் உங்கள் வாழ்வில் நெருக்கீடுகள் அதிகரிக்கக் காரணமாகிவிடுவார்கள்.
* மனதோடு மகிழ்ச்சியாகப் பேசுங்கள்:- உங்களை நீங்களே உற்சாகப்படுத்துங்கள். உங்கள் உணர்வுகளை மென் மனத்தோடு அணுகுங்கள். அதை நோகடிக்கும் வகையில் உங்கள் மனத்தோடு பேசாதீர்கள். மற்றவர்கள் முகத்துக்கு நேரே சொல்ல முடியாத கடுமையான வார்த்தைகளை உங்கள் மனத்திற்குள் பேசி அதைக் காயப்படுத்தாதீர்கள். இவை உங்கள் சிந்தனைகளை நேர்வழியில் செல்ல வழிவகுக்கும்.
மாற்றங்களுக்கு தயாராகுங்கள்
1. இது முன்பு நான் ஒருபோதும் செய்யாதது. இப்பொழுது எப்படிச் செய்யப் போகிறேன் எனத் தயங்க வேண்டாம். இதைச் செய்து பார்க்க வாய்ப்புக் கிடைத்தது. இதை என்னால் செய்ய முடியும் எனச் சவாலாக எடுங்கள்.
2. இது சிக்கலானது என எதையும் செய்யத் தயங்காதீர்கள். மாற்று வழியிலாவது இதைச் செய்ய முடியும் என சிந்தியுங்கள்.
3. இது தீவிரமான மாற்றம். இதில் ஈடுபடுவது ஆபத்தை விலைக்கு வாங்குவது போல என புதிய முயற்சிகளில் இறங்கும்போது சிந்திக்காது, முயற்சித்துப் பார்ப்பதில் தவறில்லை என எண்ண வேண்டும்.
இவற்றைச் செய்தால் ஒரே நாளில் சிந்தனை முறையில் மாற்றம் ஏற்பட்டுவிடும் என எதிர்பார்க்க வேண்டாம். தொடர்ந்து முயற்சியுங்கள், தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள். படிப்படியாக நல்ல மாற்றம் ஏற்படும்.
நேர்சிந்தனை கொண்ட மனது உங்களுக்கு வாழ்வில் நம்பிக்கையையும், சுபிட்சங்களையும் உடல் ஆரோக்கியத்தையும் கொண்டு வரும். நம்புங்கள்.!
நன்றி: டொக்டர்.எம்.கே.முருகானந்தன் – ஹாய்நலமா