Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

April 2012
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,060 முறை படிக்கப்பட்டுள்ளது!

இன்றைய பெண்களின் முக்காடு!

நபியே நீர், உம்முடைய மனைவியருக்கும், உம்முடைய பெண் மக்களுக்கும், முஃமீன் பெண்களுக்கும், அவர்கள் தங்களுடைய தலை முந்தானைகளை இறக்கி கொள்ளும்படி நீர் கூறுவீராக. அதனால் [கண்ணியமானவர்கள் என] அறியப்பட்டு, எவருடைய துன்பத்திற்கும் அவர்கள் உள்ளாகாதிருப்பதற்கு இது சுலபமான வழியாகும். அல்லாஹ் மிக்க மன்னிப்போனும், கிருபை செய்வோனுமாக இருக்கின்றான். [சூரா அல் அஹ்ஜாப் :59]

அபூபக்கர்(ரழி) அவர்களுடைய மகள் அஸ்மாஃ(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். (அப்பொழுது) அவர்கள் மெல்லிய ஆடை (அணிந்திருந்தனர் அது கண்ட) நபி(ஸல்) அவர்கள் தங்கள் முகத்தை அவர்களை விட்டும் திருப்பிக்கொண்டு ‘அஸ்மாவே’ நிச்சயமாக பெண்கள் பூப்பெய்திவிடின் அவர்களின் இது, இதைத் தவிர (வேறு எதனையும் பிறர்) பார்த்தல் கூடாது’ என்று கூறித் தங்களின் முகத்தையும் கைகளையும் சுட்டிக் காட்டினர். (அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி) ஆதாரம்: அபூதாவூத்

கீழ்கண்ட கட்டுரையில் வரும் சம்பவங்களும், நபர்களும் உண்மையே அன்றி கற்பனை அல்ல. இக்கட்டுரையில் வரும் சம்பவங்கள், நபர்கள் உங்களை போல் இருந்தால் அதற்கு தாங்களே பொறுப்பு. நாங்கள் அல்ல. நமது சகோதரிகளின் அலட்சியத்தால் அல்லது கவன குறைவால் இது கூட சரியான வார்த்தையாக தோன்றவில்லை. இப்படி கூட நடக்குமா? என்ற எண்ணத்தில் செயல்படுவதால் இப்படி நம்மை எண்ண வைக்கிறது. இதை படித்துவிட்டு சகோதரிகளிடம் இருந்து காரசாரமான அம்பு மழைகளை எதிர்பார்க்கிறோம். நாம் குறை சொல்வது நோக்கமல்ல. நம்மை நாமே பரிசோதனை செய்வதே நோக்கம்.

முக்காடு என்பது தமிழ் பேசும் சகோதரிகளால் பல வண்ணங்களில் துப்பட்டி, அரை துப்பட்டி, முழு துப்பட்டி, கூசாலி துப்பட்டி, புர்கா என்று அழைக்கப்படுகிறது. அதற்கு கற்பனையான வடிவம் கொடுத்து அதை அணிவதையே இஸ்லாமிய உடையாக கருதுகிறார்கள். உண்மையில் இஸ்லாமிய உடை என்று ஒன்று இல்லை. அந்தந்த நாடுகளில் சகோதரிகள் அங்குள்ள தட்ப வெப்ப சூழ்நிலைக்கு ஏற்ப, இறைத் தூதர் சொன்ன வழியில் அணிவதே இஸ்லாமிய உடையாகும். முகம், இரு கைகள் மட்டும் தெரிய மற்ற உடல் உறுப்புகளை மறைப்பது, இறுக்கமான ஆடைகளை தவிர்ப்பது அனைத்தும் இஸ்லாமிய உடையாகும். அது எந்த வண்ணத்தில், வடிவில் இருந்தாலும் சரியே. இக்கட்டுரையின் பல பகுதிகளில் மக்கள் பயன்படுத்தும் அதே வார்த்தையை பயன்படுத்துகிறோம். உண்மை நிலையை உணர்த்தவே இவ்வாறு அழைக்கிறோம்.

முக்காடு இடுதலை பலவகையாக பிரிக்கலாம். அவற்றில் சிலவற்றை மட்டும் காண்போம்.

1.பார்த்தால் முக்காடு
இக்காட்சியை பெரும்பாலான இடங்களில் காணமுடியும். மாற்று மத நபர்களுடன் (ஆண்கள் உட்பட) பேசிக்கொண்டு இருப்பார்கள். முக்காடு இருக்காது. யாராவது ஒரு தாடியையோ, தொப்பியையோ, கைலியையோ அல்லது முஸ்லிம்களை பார்த்துவிட்டால் போதும். உடனே முக்காட்டை சரியாக இழுத்து போட்டுக் கொள்வார்கள். சகோதரிகளே! முக்காடு உங்களுக்கா!? மற்றவர்களுக்கா!? முக்காடு என்பது முஸ்லிம்களின் கண்களில் இருந்து பாதுகாக்க மட்டும் தானா!? மாற்று மத சகோதரர்களின் கண்களில் இருந்து பாதுகாக்க தேவை இல்லையா !!!

2.கிராமிய முக்காடு
முஸ்லிம் சகோதரிகள், உள்ளூரிலும், அண்டை வீடுகளுக்கும், ஊர்களுக்கும் செல்லும் போது முக்காடு இட்டு போவார்கள். கொஞ்சம் பெரிய நகரங்களுக்கு (திருச்சி, தஞ்சை, மதுரை, சென்னை) போகும் போது முக்காட்டுக்கு மூட்டை கட்டி விட்டு மற்ற இன பெண்களுள் கலந்துவிடுகிறார்கள். தங்களது அடையாளத்தை அறியாத அப்பாவிகள். ஏன்!? முக்காடு கிராமங்களுக்கு மட்டும் தானா!?

3.கிழடு கட்டை முக்காடு
இக்காட்சியை நகர் புறங்களில் காணலாம். முக்காடு அவசியம் தேவைப்படும் இளம் சகோதரிகள் அதை மறந்துவிட்டு (!) ‘ஹாயாக’ போய்க்கொண்டு இருப்பார்கள். முக்காடு அவசியம் தேவைப்படாத வயதான பெண்மணிகள் முக்காடு இட்டு செல்வார்கள். அதற்கு இளம் நங்கையர் சொல்லும் காரணம். முக்காடு எல்லாம் பத்தாம் பசலி தனம். அது எல்லாம் இக்காலத்துக்கு பொருந்தாது!

4.சீருடை முக்காடு (Uniform)
இது மார்க்க கல்வி, பள்ளிவாசல்கள், இறந்தவர்களின் வீடுகள் என செல்லும்போது மட்டும் பயன்படுத்துவார்கள். (குழந்தை பள்ளிக்கு செல்லும்போது மட்டும் அணியும் சீருடை போல) மற்ற நேரங்களில் அதை அப்படியே மாட்டி வைத்து விடுவார்கள். முக்காடும் சீருடையாகி விட்டதா!?

5.சவுதி முக்காடு
இவர்கள் சவூதி அல்லது  மற்ற முஸ்லிம் நாடுகளில் வசிக்கும்போது அந்த நாடுகளின் சட்டங்களுக்கு உட்பட்டு முக்காடிட்டு இருப்பார்கள். அவர்கள் அந்தந்த நாடுகளை விட்டு வெளிநாடுகளுக்கு  செல்லும்போது அந்த பழக்கத்தை அங்கேயே விட்டு விட்டு வந்துவிடுவார்கள், ஏன்? மன்னர் போடும் சட்டங்களுக்கு அடிபணியும் சகோதரிகள் அந்த மன்னனை படைத்த அல்லாஹ்வின் கட்டளையை மீறுவது ஏனோ?

6.ஏர்போர்ட் முக்காடு
இது வெளிநாடு செல்லும் சகோதரிகளிடம் காணப்படுகிறது. சகோதரிகள் தங்களது சொந்த வீட்டை விட்டு (தமிழகத்தில்) புறப்படும் போது முக்காடு இட்டு ஏர்போர்ட் உள்ளே நுழையும் வரை போட்டு இருப்பார்கள் உள்ளே நுழைவதற்கு முன்பு முக்காட்டை அப்படியே கழற்றி வந்தவர்களிடம் கொடுத்து அனுப்பிவிடுவார்கள். மீண்டும் வெளிநாட்டில் இருந்து வரும் போது முக்காடு ஏர்போர்ட்டில் இருந்து தொடங்கும். வெளிநாட்டில் முக்காடு இட்டால் ஒரு மாதிரியாக பார்ப்பார்கள். இது இவர்கள் சொல்லும் காரணம்.

இப்படி முக்காடு இடுதலை பலவகையாக காணலாம். முக்காடு போடும் பெரும்பாலான பெண்கள் (அனைவரும் அல்ல) தாங்கள் முக்காடு போடாவிட்டால் கிழடு, கட்டைகள் ஏதாவது சொல்வார்கள், நினைப்பார்கள் என ஒரு சமுதாய அங்கீகாரத்துக்காகவே போடுகிறார்கள், முக்காடு தங்களது தற்காப்புக்காகத்தான் என்பதை எத்தனை பேர் உணர்கிறார்கள். உண்மையில் பாலியியல் பலாத்காரத்திற்கு உட்பட்ட பெண்களில், முக்காடு இட்ட பெண்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. ஒளிவு மறைவு அற்ற சுதந்திரமாக வாழும் நாடுகளில் ஒழுக்க கேடுகளின் பட்டியலை எழுதினால் அது நீண்டு கொண்டே போகும்.

கல்யாணமில்லா குடும்பங்கள், தகப்பன் இல்லா குழந்தைகள், தகப்பன் பெயர் அல்லா முகமறியாத குழந்தைகள், பாசத்திற்கு அழும் குழந்தைகள், பிஞ்சிலே பழுத்த கிழங்கள், மணமாவதற்கு முன்பே குடும்ப உறவு காதல் பெயரில், முதியோர் இல்லங்கள் இப்படி எத்தனை எத்தனையோ…..

முக்காடு என்பது நம்மை தனிமைப்படுத்தவோ, அடையாளம் காட்டவோ அல்ல. தன்னுடைய பாதுகாப்புக்கு இறைவன் வழங்கியுள்ள சாதனம் என்பதை நாம் ஏன் உணர தவறிவிட்டோம்.!?

படித்த நமது சகோதரிகள் அடிமை தனம், ஆண் வர்க்கத்தின் ஆதிக்கம், பத்தாம் பசலித்தனம் என அடுக்கிக்கொண்டே போகலாம்.

நவ நாகரீகமான சுதந்திரமான அமெரிக்க குட்டை பாவாடையுடன் வாழ்ந்த ஒரு பெண் இஸ்லாத்தை தழுவிய பின்பு, முக்காட்டை பற்றி கூறிய கூற்று:- குட்டை பாவாடையுடன் சுதந்திரமாக சுற்றி வந்த போது கிடைக்காத சுதந்திரம் முக்காடு போட்ட பின்பு தான் கிடைத்தது என கூறுகிறார்.

“உயர்ந்த பொருளைத்தான் பாதுகாப்பாக வைத்திருப்போம். வைரத்தை தான் பட்டு துணியில் சுற்றிபாதுகாப்பாக வைப்பார்கள்.கற்களையோ ,கூலாங்கற்களையோ அல்ல. இஸ்லாத்தில் பெண்களுக்கு மிகுந்த சிறப்பான ஒரு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.அதை உணர்ந்து, நீங்கள் வைரம் என்றால் முக்காடு இடுங்கள். இல்லை..இல்லை… நாங்கள் கூலாங்கற்கள் என்றால்…  சகோதரிகளே நீங்கள் வைரமா ??? கூலாங்கற்களா !!!! “

பெண்ணே, முக்காடு என்பது உனக்காக, உன் பாதுகாப்புக்காக என்பதை நீ உணராத போது நீ ஏன் பிறருக்காக முக்காடு போடுகிறாய். அது உனக்கு அல்லாஹ் வழங்கியுள்ள கொடை என்று நீ அறியாத வரை அதை போடாதே என சொல்ல எனக்கு உரிமை இல்லை. ஆனால் உணர்ந்து போடு என்று கூறத்தான் ஆசைப்படுகிறேன்.

அபூ முஹம்மது, சிங்கப்பூர்