Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

April 2012
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,068 முறை படிக்கப்பட்டுள்ளது!

தீவிரவாதி யார்?

உலகம் முழுக்க உள்ள பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் இன்று அதிக பட்ச பயத்துடன் உச்சரிக்கப்படும் வார்த்தைகள் இவைதான். ‘தீவிரவாதம்’ ‘வன்முறை’ என்று தான் நான் கேள்விபட்டிருக்கிறேன். ‘இஸ்லாமிய தீவிரவாதம்’ என்று சொல்லுகிறார்களே அது என்ன?

இஸ்லாமியர் செய்கிற தீவிரவாதம் என்று பொருள் சொல்லலாமா? பழிக்குப்பழி; ரத்தத்துக்கு ரத்தம்’ என்று எந்த மதமும் வன்முறையை போதிப்பது இல்லை என்னும் போது, தீவிரவாதத்திற்கு முன்னால் ‘இஸ்லாமிய’ என்கிற அடைமொழி ஒட்டிக்கொள்வதன் பின்னணி என்ன?

ஒரு இந்துவோ, கிறிஸ்தவரோ தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டால் அவரை ‘இந்து தீவிரவாதி’ என்றோ, ‘கிறிஸ்தவ தீவிரவாதி’ என்றோ ஏன் அழைப்பதில்லை? தீவிரவாதம் என்ற விஷயம் நாடு, இனம், மதம், மொழி என எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது’ என மனித உரிமை ஆர்வலர்கள் பலமுறை சொன்னாலும் அது ஏன் பெரும்பாலானவர்கள் காதுகளில் விழுவதில்லை? இப்போது உலகம் முழுக்க திரும்ப திரும்பக் கட்டவிழ்க்கப்படும் முஸ்லிம்களுக்கு எதிரான பொய்களுக்கு என்ன காரணம்?

சுமார் அறுநூறு வருடங்களுக்கு முன்பு இந்தியா முழுவதையும் முகலாயர்கள் ஆண்டதாக வரலாறு இருக்கிறது. அதிகாரமும் ஆட்சியும் இருந்தபோதே அவர்கள் நினைத்திருந்தால் மக்களை மிரட்டிப் பணிய வைத்து, இஸ்லாமிய மதத்தைப் பரப்பியிருக்கலாம். ஆனால் இன்றைய நடைமுறை உண்மை, முஸ்லிம்கள் இந்தியநாட்டில் வாழும் சிறுபான்மை மதத்தினர் என்பதுதான்! அதேபோல் ஸ்பெயினிலும் சில நூறு வருடங்களுக்கு முன்பு ஆண்டிருக்கிறார்கள். இன்று ஸ்பெயினில் வாழக்கூடிய முஸ்லிம்களை விரல்விட்டு எண்ணி விடலாம்.

எந்த முகலாய மன்னரும் இஸ்லாமியர்களின் புனிதக் கடமைகளில் ஒன்றாகச் சொல்லப்படும் ஹஜ்ஜுக்கு புனிதப் பயணம் போனதாக ஒரு சிறிய தகவல் குறிப்பு கூட கிடையாது. வெள்ளையர்கள் போல நாடு பிடிக்க வந்தவர்கள்தான் முகலாயர்கள். தாஜ்மஹாலையும் கோட்டைகளையும் கட்டினார்களே தவிர, இஸ்லாமிய மதத்தைப் பரப்ப வந்தவர்கள் என்பதில் வரலாற்று ரீதியான சான்றுகள் எதுவும் இல்லை. அந்த வரலாற்றிலும் கூட, அவுரங்கசீப் ஒரு மோசமான முகலாய மன்னன்.

அவன் இந்துக்களை ஒடுக்கினான்’ என்பது போன்ற முகலாய மன்னர்களுக்கு எதிர்மறையான சாயத்தை பூசும் வரலாற்றுத் உண்மையில் அவுரங்கசீப்பீன் அரசவையில் பல முக்கியமான பதவிகளை இந்துக்கள் வகுத்திருக்கிறார்கள்.

எத்தனையோ இந்துக் கோயில்களுக்கு அவர் நன்கொடை கொடுத்திருக்கிறார். இதை வின்சென்ட் ஸ்மித் என்பவர், ‘இந்தியன் ஹிஸ்டரி’ என்கிற புத்தகத்தில் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார். மாமன்னர் அசோகரின் ஆட்சிக்கு பிறகு இந்தியா முழுவதையும் தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தவர்கள் முகலாய மன்னர்கள்தான். ‘ஒருங்கிணைந்த இந்தியா’ என்ற கருத்தாக்கத்தை அறிமுகப்படுத்தியவர்களும் முகலாயர்கள்தான்!

‘ஆரியர்கள் வருகை’ என்று பாடப்புத்தகங்களில் சொல்லப்படும் வரலாற்றில் தான் ‘முகலாயர்களின் படையெடுப்பு’ என்று சொல்லிக் கொடுத்து பள்ளிப் பருவத்திலேயே மதத் துவேஷத்தைத் தூவி வளர்க்கிறார்கள். இவர்கள் குறிப்பிடும் பெருமைக்குரிய ஆரியர்கள் வருகைதான், இங்கிருந்த பூர்வகுடிகளை சாதி ரீதியாக பிரித்து,அந்த பிரிவினையில் தன்னை கொழுத்து வளர்த்துக் கொண்டு நிற்கிறது.

இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தைப் பற்றியும் பேசவேண்டிய கட்டாயம் இருக்கிறது. முஸ்லிம்களுக்கு தேசப்பற்று இல்லை என்கிற விஷமமும் இங்கே திரும்பத் திரும்ப சொல்லப்படுகிறது. இந்தியாவின் சுதந்திரத்திற்காக எத்தனை தூரம் மற்றவர்கள் பாடுபட்டிருக்கிறார்களோ, அதற்குக் கொஞ்சமும் குறையாமல் முஸ்லிம்களும் பாடுபட்டிருக்கிறார்கள். ‘முஸ்லிம்கள் மதவெறி பிடித்தவர்கள், மதத்திற்காக எதையும் செய்வார்கள்’ என்று சொல்லுபவர்கள், உண்மையான வரலாற்றை தயவு செய்து படித்து விட்டு பேச வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.

‘இஸ்லாம்’ என்ற சொல்லின் அர்த்தமே, ஆண்டவனுக்கு அர்ப்பணித்துக் கொண்டு அமைதியை நிலை நாட்டுவது’ என்பதுதான். ‘ஜிகாத்’ என்று குறிப்பிடுவது நல்லதுக்கும் கெட்டதுக்குமான மனப்போராட்டத்தை. அமைப்பு ரீதியிலான வன்முறையை இஸ்லாம் ஒரு போதும் ஆதரிக்கவிலை. ஆனாலும் வரலாற்று நெடுகிலும் முஸ்லிம்களை வன்முறையாளர்களாக்க் காட்டுவதன் அரசியல் என்ன?

இந்தியாவில் தலித்துகளை விட மோசமான நிலைமையில் முஸ்லிம்கள் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது “சச்சார் கமிட்டி” அறிக்கை. அதிக அளவில் வசிக்கிறார்கள் என்று சொல்லப்படும் பீகார், உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் சோற்றுக்கே வழியில்லாத பரம ஏழைகளாகவே முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள், ஆம்பூர் பகுதியில் வாழும் முஸ்லிம்கள் தோல் பதனிடும் தொழிற்சாலைகளில், காலை ஆறு மணியிலிருந்து இரவு ஏழு, எட்டு மணிவரை உழைத்தாலும் அவர்களுடைய ஒருநாள் கூலி பதினைந்து ரூபாய்க்கு மேல் இன்னமும் உயர்ந்து விடவில்லை. எவ்வளவு கடுமையான உடல் உழைப்புக்கும் இங்கே கிடைக்கக்கூடிய கூலி எந்த வகையிலும் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிவிடப் போவதில்லை என்பதை அறிந்துதான், இதே உடல் உழைப்பை வெளிநாடுகளில் கொட்டினால் நிறைய சம்பாதிக்கலாமே என்று வெளிநாடுகளுக்கு போவதை பலர் விரும்புகிறார்கள்.

காலம்காலமாகப் பதவிகளில் இருந்து சுகம் கண்டவர்கள்தான் அந்தப் பதவியை தக்க வைத்துக் கொள்ள படாதபாடு படுகிறார்கள். ஐஐடி ஒதுக்கீடு விஷயத்தில் அதைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் ஷூ பாலீஷ் போட்டு போராட்டம் நடத்தியதை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது. ‘அவனவன் அவனவன் வேலை செய்தால் போதும்; பட்டத்தையும் பதவியையும் நாங்கள் மட்டுமே அனுபவிப்போம்’ என்பதே அந்தப் போராட்டத்தின் நோக்கம். எங்கே இவர்களும் மேலே வந்து விட்டால் நம் நிலைமை என்னவாகுமோ என்ற பயம் பீடிக்கத் தொடங்கியதன் விளைவே இந்த போராட்டங்கள் அனைத்தும்! ஒடுக்கப்பட்ட தலித்துகளும் சிறுபான்மையினரும் நிர்வாகத்துக்கு வந்தால்தான், அவர்கள் சார்ந்த சமுதாயத்துக்கு விடிவுகாலம் பிறக்கும். ஆனால் இன்றைய சூழ்நிலையில் ஒரு தலித்தோ, முஸ்லிமோ பிரதமராக முடியுமா? எந்த காலத்திலும் முடியாது என்பது தான் உண்மை. இப்படியொரு காலகட்டத்தில் தமிழக முதல்வர் கொண்டு வந்திருக்கும் 3.5 சத இடஒதுக்கீடு முக்கியமான முன்முயற்சியாக இருக்கிறது. அவசரச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட இந்த ஒதுக்கீட்டையும் கிடைக்காமல் செய்ய சில சக்திகள் முனைப்பாக இருக்கின்றன.

ஒதுக்கீடுகள் கிடைத்தாலும் அதை பயன்படுத்தும் மனநிலையை முஸ்லிம்கள் வளர்த்துக் கொள்வதும் இங்கே செய்யவேண்டிய ஒன்று, நன்றாகப் படித்தால் இங்கேயே நல்ல சம்பளத்தில் வேலை பார்க்கலாம் என்ற எண்ணம் முதலில் அவர்களுக்கு வர வேண்டும். ஒரு குடும்பத்தில் நாலு பேர் இருந்தால், அதில் ஒருவன் உழைத்தால் போதும்… மற்றவர்கள் அவனுடைய உழைப்பில் வாழலாம் என்கிற மனப்போக்கு இருக்கிறது. மற்ற சமூகங்களில் உள்ளவர்களைப் போல நாமும் படிக்க வேண்டும், நிர்வாகத் துறைகளுக்கு வரவேண்டும் என்ற விருப்பமே பலருக்கு வரவில்லை.

தங்களுக்கு அடிப்படையான தகுதிகளை வளர்த்துக் கொண்ட பிறகு கிடைக்க வேண்டிய உரிமைகளைப் பற்றிப் பேசுவது தானே சரியாக இருக்கும்? எதற்காகப் போராடுகிறோம் என்று தெரியாமல் போராடுவதில் என்ன நடந்துவிடப்போகிறது? குர்ஆனில் வாசகம் ஒன்று உண்டு.

‘உங்கள் மனதில் மாற்றத்தை கொண்டுவராத வரையில் நாங்கள் கொடுக்கின்ற அருட்கொடைகளை மாற்றித்தரப் போவதில்லை’

இப்போதைய சூழ்நிலைக்கு மிகவும் பொருந்தக்கூடிய வாசகம்!

நன்றி: -நாகூர் ரூமி  – (குங்குமம் 04-10-2007)