Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,641 முறை படிக்கப்பட்டுள்ளது!

இந்தியாவில் இஸ்லாம் – 8

செம்பேடு தரும் சான்றுகள்..

சேரமான் பெருமாள் என்று வரலாற்றில் புகழ் பெற்ற முதல் சேரவம்சத்தின் கடைசி பெருமாளுடைய பெயர் ‘இராஜசேகர வர்மா’ என்பதாகும். இவரது ஆட்சிக் காலம் கி.பி.750க்கும் 850க்கும் இடைப்பட்ட காலம் என திருவிதாங்கூர் ஆர்க்கியாளஜிக்கல் சீரிஸின் (T.A.S) ஆசிரியர் திரு. டி.ஏ. கோபிநாதராவ் (T.A.S Vol.11 Page 9) குறிப்பிடுகிறார். கேரளாவில் சங்கனாச்சேரியின் அருகாமையில் உள்ள ‘வாழப்பள்ளி’ என்ற ஊருக்கு இவர் செப்பேடு ஒன்று எழுதிக் கொடுத்துள்ளார். அந்த செம்பேட்டில் அரபி நாணயமான ‘தினாரை’ சில இடங்களில் குறிப்பிட்டிருப்பதைக் காண முடியும். “திருவாற்றுவாய் முட்டாப்பலி விலக்குவார் பெருமானடி கட்டு நூறுதிநாரத்தண்டப்படுவது….” (T.A.S. Vol.11 Page 13 செப்பேட்டின் 3வது வரி) “…மேனூற்றைம் பதி தூணி நெல்லு மூன்று தினாரமும் – ஐயன் காட்டு

மற்றத்திலிரண்டு வேலி உந்தாமோ” (T.A.S. Vol. 11 Page 14 செம்பேட்டின் 10வது வரி)

சேரமான் பெருமாள் என அறியப்படும் ராஜசேகர வர்மா, முதல் சேர வம்சத்தில் கடைசிப் பெருமாள். இவர் எழுதிக் கொடுத்த முதல் செப்பேட்டில் மேற்குறிப்பிடப்பட்ட வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த செம்பேடு “வாழப்பள்ளி சாசனம்” என்ற பெயரில் அறியப்படுகிறது. அரபி நாணயமான ‘தினார்’ இந்த செப்பேட்டைத் தவிர வேறு எதிலும் குறிப்பிட்டிருப்பதாகத் தெரியவில்லை. எட்டாவது நூற்றாண்டில் எழுதப்பட்டதாக (என்று கூறப்படுகிறது) கூறப்படும் இந்த செப்பேட்டில் அரபி நாட்டு நாணயமான ‘தினாரை’ குறிப்பிட்டிருப்பது கவனத்திற்குரியது.

Those who stop the perpetually endowed bali ceremony (muttappali in the “Thiruvarruvay (temple) should pay to the King (or the god) a time of one hundred dinara…(T.A.S.Page 14 (English Translatio)

கோயிலில் வழக்கமாக நடைபெறும் ‘பலி’ எனும் வழிபாட்டை நிறுத்துவதாக இருந்தால் அரசருக்கு (அல்லது இறைவனுக்கு) ‘நூறு தினாரம்’ பிழை செலுத்தவேண்டும் என்று பொருள்படும்படி முதல் சாசனத்தில் காணப்படுகிறது.

“…..both situated in Uragan and yielding one hundred and fifty tumi of paddy and three dinaras, two “velis’ in the land in Ayyankadu Damodaran’s”

கோயிலுக்கு இனாமாக வழங்கப்பட்ட சில நிலங்களைப் பற்றியும், அந்நிலங்களில் கிடைக்கும் வருவாயைப்பற்றியும் குறிப்பிடுகையில், ஊரகத்திலுள்ள இரு நிலங்களிலிருந்து 1,500 (துணி) நெல்லும் மூன்று தினாரமும் வருவாய் உள்ளன என்று இரண்டாவது சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசர் ஒருவர் கோயிலுக்கு எழுதிக் கொடுத்த மானியமொன்றில் தண்டனையைக் குறிக்குமிடத்திலும், வருவாயை குறிக்குமிடத்திலும் தினாரம் என்ற அரபி நாட்டு நாணயத்தை தனியாக எடுத்துக் கூறுகிறார். அப்படியானால் ‘தினாரம்’ இங்கு நடைமுறையில் இருந்திருக்க வேண்டும்.

8வது நூற்றாண்டில் அரேபியா முழுவதும் முஸ்லிம் ஆட்சியின் கீழ் வந்துவிட்டது கடல் தாண்டியுள்ள சேரநாட்டில் தினாரம் செல்வாக்குப் பெறவேண்டுமேயானால், அரேபியர்களான முஸ்லிம்களின் செல்வாக்கு இங்கு அதிக அளவில் இருந்திருப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் சேரநாட்டு மக்கள் தொகையில் கணிசமான அளவில் எண்ணிக்கை உள்ளவர்களாகவும் இருந்திருக்க வேண்டும். அப்படி கணிசமான எண்ணிக்கை உள்ள குடிமக்களாக முஸ்லிம்கள் இங்கு வாழ்ந்திருப்பார்களேயானால், அந்த அளவிற்கு வளர்ச்சிப் பெற நபிகள் நாயகம்(ஸல்) காலத்திலேயே முஸ்லிம்கள் இங்கு வந்து தங்கியிருக்க வேண்டும் என்பது உறுதியாகிவிட்டது.

இந்த ஆவணத்தின் அடிப்படையில் ஆராய்வோமேயானால், சுலைமான் என்ற பாரசீக வணிகரின் கூற்று உண்மைக்கு மாறானது என்று புலனாகிறது.

சிலர் ‘தினாரம்’ என்ற தங்க நாணயத்தை ‘தங்க நாணயம்’ என்ற பொருளிலும், வேறு சிலர் அது ரோமானியருடைய நாணயம் என்றும் திசை திருப்பி விடுகின்றனர். தினார் அரேபியர்களிடையே பழக்கத்திலிருந்த தங்க நாணயமாகும்.

உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் தினார் என்ற சொல்லுக்கு ஒரு பழைய அரபி தங்க நாணயம் என்று பொருள் கொடுக்கப்பட்டுள்ளது. அதுபோன்று சென்னை பல்கலைக்கழக வெளியீடான ஆங்கில தமிழ் அகராதியிலும் ‘தினாரம்’ என்பதற்கு பழைய அரேபிய தங்க நாணயம் என்றே பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.

தினாறும் திர்ஹமும் எப்படி முத்திரை அடித்து வெளியிடப்படுகின்றன என்பதைப் பற்றி இபுனு கல்தூன் தம்முடைய ‘முகத்திமா’ என்ற பேர் பெற்ற நூலில் விரிவாக விளக்கியுள்ளார். இது அரபி நாட்டு நாணயம் என்றுதான் 14-வது நூற்றாண்டில் வாழ்ந்திருந்த கல்தூனும் குறிப்பிடுகிறார். மேற்கு கடற்கரை துறைமுகமான கொடுங்கல்லூரில், கப்பலில் இறங்கிய முதல் இஸ்லாமிய பிரச்சாரக் குழுவின் தலைவருடைய பெயரும் ‘மாலிக் இபுனு தீனார்’ என்றாகும்.

அரேபியர்களிடையே ‘தினார்’ என்ற பெயர் பழக்கத்தில் இருக்கையில் ‘தினார்’ என்பதை ரோமானிய நாணயம் என்ற முடிவுக்கு எப்படி வரமுடியும். வணிகத்தில் முன்னணியில் நின்றிருந்த அரேபியர்களுடைய நாணயம் ரோம் நாட்டிலும் செல்வாக்கைப் பெற்றிருக்கலாம்.

‘தினார்’ என்ற சொல் அரபி சொல்லாகும். இன்று உலக பொருளாதாரத்தில் அமெரிக்க நாட்டு நாணயமான ‘டாலர்’ எவ்வளவு செல்வாக்கைப் பெற்று பேசப்படுகிறதோ அதுபோன்று அன்றைய பொருளாதாரத்தில் தினாரும் செல்வாக்கு பெற்றிருந்தது.

செப்பேடு தரும் செய்தி

முதல் சேர வம்சத்தின் கடைசி பெருமாளாகிய சேரமான் பெருமாள் நாயனாருக்குப் பின், இரண்டாவது சேர வம்சத்தை சார்ந்த ஸ்தாணுரவி வர்மா என்ற சேர அரசர் கொல்லம் நகரில் உள்ள ‘தரீசாப் பள்ளி’ என்ற சிரியன் (Syrian) கிறிஸ்தவ தேவாலயத்திற்கு எழுதிக் கொடுத்த மானியமாகும்.

இரண்டாவது ஆவணம் அந்த தேவாலயத்தைக் கட்டிய ‘ஈசோ சபீர்’ என்பவர் பெயருக்கு எழுதிக் கொடுத்த இச்செப்பேடு (Copper Plate) தரீசாப் பள்ளி சாசனம் என்று அறியப்படுகிறது. தென்னக வரலாற்றை எழுதிய ஆசிரியர்கள் அனைவரும் புகழ்பெற்ற இந்த செப்பேட்டை குறிப்பிடாமலிருந்ததில்லை.

தென்னக வரலாற்றில், குறிப்பாக அன்றைய சேர நாட்டு வரலாற்றைப் பொருத்தமட்டில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு செப்பேடாகுமிது. அன்று எந்தெந்த சாதி மதத்தினர் இங்கு வாழ்ந்திருந்தனர் என்பதை இச்செப்பேடு மூலம் அறிய முடிகிறது.

தரீசாப் பள்ளி செப்பேட்டின் காலம் கி.பி.824 என்றும், கி.பி.849 என்றும் இரு கருத்துக்கள் நிலவுகின்றன. கி.பி.849க்குப் பின் எழுதப்பட்டதாக யாரும் குறிப்பிடவில்லை. அதனால் கி.பி.849, அல்லது அதற்கு முன் எழுதப்பட்ட மானியம் (grant) என்ற கருத்தின் அடிப்படையில் ஆய்வை மேற்கொள்வோம்.

இந்த செப்பேடு மூலம் மானியம் வழங்கிய மன்னருடைய பெயரிலும் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. மன்னருடைய பெயர் நமக்கு இங்கு முக்கியமல்ல, அவர் எழுதிக் கொடுத்த ஆவணம் தான் முக்கியம். மன்னர் பெயரில் குளறுபடிகள் இருப்பதால், பெரும்பான்மையினரான ஆசிரியர்கள் ஏற்றுக் கொண்ட ‘ஸ்தாணு ரவி வர்ம்மா’ என்ற பெயரையே நாமும் ஒப்புக் கொள்வோம்.

ஸ்தாணு ரவி வர்ம்மாவின் ஆளுகைக்கு உட்பட்ட வேணாட்டின் ஆளுனரான (Governor) அய்யனடிகள் திருவடிகள், ஸ்தாணு ரவி வர்ம்மா அரியாசனம் ஏறிய ஐந்தாவது ஆண்டில் எழுதிக் கொடுத்த இந்த செப்பேட்டில் மன்னருக்காக ஆளுனரே கையொப்பம் போட்டுள்ளார். எந்த ஆண்டில் மானியம் கொடுக்கப்பட்டது என்ற குறிப்பு இதில் இல்லை. மன்னர் ஆட்சி பொறுப்பேற்ற ஐந்தாவது ஆண்டில் எழுதிக் கொடுத்தது என்று காணப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட மானியம் மூன்று செம்பு தகடுகள் (Three Plates) எழுதப்பட்டிருக்கின்றன. முதல் இரண்டு தகடுகளில் தமிழ்மொழியில் வட்டெழுத்திலும், மூன்றாவது தகடில் (Plate) மானியம் வழங்கப்பட்டதற்கான சாட்சிகளின் கையொப்பமும், முதல் இரண்டு தகட்டில் ஈசோ சபீருக்கு என்னென்ன உரிமம் வழங்கப்பட்டன. மூன்றாவது தகடில் பஹ்லவி, கூஃபி, ஈப்ரு (Pahlavi, Kuffic and Hebrew) மொழிகளில் சாட்சிகளின் கையொப்பம் காணப்படுகின்றன.

கொல்லம் நகரை நிர்மானித்து அங்கு ஒரு சிரியா கோயிலை (Syrian Church) எழுப்பிய ஈசோ சபீர் முறையாக செய்து வருகிறாரா, என்பதைக் கண்காணிக்கும் பொறுப்பை அஞ்சு வண்ணாத்தாரிடத்திலும் மணிக் கிராமத்தாரிடத்திலும் வழங்கியுள்ளதாக செப்பேட்டில் காணப்படுகிறது. கூடாமல் மக்களிடமிருந்து அரசுக்கு சேரவேண்டிய வரி வசூல் செய்யும் உரிமையையும் இச்செப்பேடு வழங்குகின்றது. இவ்வகையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தரிசாப்பள்ளி செப்பேட்டில் காணப்படும் மூன்று மொழிகளில் போடப்பட்ட சாட்சி கையொப்பங்களைப் பற்றி டி.ஏ. கோபிநாத ராவ் குறிப்பிடுகிறார்.

தொடரும்..

நன்றி: தோப்பில் முஹம்மது மீரான் – மக்கள் உரிமை வாரஇதழ்