Categories

Archives

A sample text widget

Etiam pulvinar consectetur dolor sed malesuada. Ut convallis euismod dolor nec pretium. Nunc ut tristique massa.

Nam sodales mi vitae dolor ullamcorper et vulputate enim accumsan. Morbi orci magna, tincidunt vitae molestie nec, molestie at mi. Nulla nulla lorem, suscipit in posuere in, interdum non magna.

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,633 முறை படிக்கப்பட்டுள்ளது!

எதிர்மறைச் சூழலிலும் நேர்மையாய் இருப்போம்

எதிர்மறைச் சூழலை மிக நுட்பமாய் முறியடிக்கும் வழி நாம் நேர்மறையாய் (positive) நடந்துகொள்வது தான்.

எல்லா நேரங்களிலும் நம்முடைய சூழல் நாம் விரும்புவது போல் அமைந்துவிடுவதில்லை. பல நேரங்களில் எதிர்பாராமலே நாம் எதிர்மறைச் சூழலில் சிக்கிக் கொள்கிறோம்.

  • – நம்மைப் பற்றி பிறர் மாறுபாடாய் பேசும் போதும்,
  • -நியாயமான தேவைகளுக்கும் மறுப்புகளைச் சந்திக்கும்போதும்,
  • – நடந்துவிடும் என்று எதிர்பார்த்து காத்திருக்கும் நேரத்தில் ஏமாற்றம் ஏற்படும் போதும்,
  • – அவசரமான நேரத்தில் அவசியமில்லாமல் நம் நேரத்தை பிறர் வீணடிக்கும் போதும்,
  • – நாம் காரணமாய் இல்லாத நிலையில் நம்மீது குற்றமோ, பழியோ சுமத்தப்படும்போதும்,
  • – நம்முடைய உழைப்பும், ஆற்றலும், பணமும், நேரமும் மற்றவர்களால் அல்லது புறச் சூழல்களால் விரயமாகும்போதும்,
  • -அநியாயங்களைக் கண்டும் வாய்மூடி மௌனியாய்ச் செல்ல நேரிடும்போதும்

என இன்னும் பல்வேறு நேரங்களில் நாம் எதிர்மறையான சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம்.

இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இயல்பாய் இருப்பதென்பதும், இயல்புநிலை மாறாமல் நடந்துகொள்வதென்பதும் கடினமானதுதான்.
ஒவ்வொரு சூழலுக்கும் முடியும் என்றால் அதேயளவு எதிர்வினை காட்டக் கூடியவர்களாகத் தான் பெரும்பாலானவர்கள் இருக்கிறார்கள். ஆனால்

எதிர்மறைச்சூழலில்  நாமும் எதிர்மறையாகவே நடந்து கொண்டால் நிலைமை இன்னும் மோசமாவதோடு சம்பந்தப்பட்டவர்கள் நம்மோடு பகையாகி விடுவதற்கான வாய்ப்பும், நம்மிடமோ, நமக்கு செய்யவேண்டிய பணிகளிலோ மேலும் மோசமாய் நடந்துகொள்ளவும் நேரிடலாம்.

எதிர்மறையாய் நாம் நடந்துகொண்ட நாள் முழுவதுமே சினத்தாலும், அதிருப்தியாலும் நிரம்பி நாம் துன்புற வேண்டியுள்ளது.

பின்பற்றுவதற்குச் சற்று கடினம்தான் என்றாலும் எதிர்மறைச்சூழல்களிலும் நாம் நிலை மாறாமல் இருப்பது பெரிதும் அவசியமானதாகும். குறைந்த பட்சம் கோபம், வெறுப்பு, அலட்சியம் போன்றவற்றை வெளிப்படுத்தாமல், தேவைப்படும் நிலையில் வருத்தத்தை வெளிப்படுத்தி நம் கருத்தைத் தெரிவிக்கலாம். எதிர்மறைச் சூழலை மிக நுட்பமாய் முறியடிக்கும் வழி நாம் நேர் மறையாய்  நடந்துகொள்வதுதான்.

நேர்மறையாய் நடந்துகொள்ளும் வழி முறைகளைப் பார்ப்போம்.

  • – அமைதியிழந்து காணப்படும் நேரத்தில் பதிலளிப்பதை தவிர்க்கலாம். நாம் ஏதோ சலனத்தில் இருக்கிறோம் என்பதை மென்மையாய் தெரிவிக்கலாம்.
  • – குரலை உயர்த்திப் பேசுபவர்களிடம் நாம் அதே தொனியில் பேச வேண்டுமென்பதில்லை. அப்படிப் பேசினால் நிலைமை விபரீதமாகுமே யன்றி, இரு சாரார்க்குமே நன்மை ஏற்படாது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர நாம் மென்மையான குரலில் பேசுவதே உகந்ததாகும்.
  • – “எதிர்த்தரப்பார் அப்படி ஆவேசப்படும் போது நான் மட்டும் ஏன் அடங்கிப் பேச வேண்டும்?” என்ற கேள்வி நம் மனத்தில் எழக்கூடும். இது அடங்கிப் போவதல்ல. நிலைமையை அடக்குவதாகும்.
  • – பிரச்னைகள் தீர்ந்த பின் யோசித்துப் பார்த்தால் நாம்தான் உயர்வாக, கண்ணியமாக நடந்து கொண்டோம் எனும்போது பாராட்டும், பெருமிதமும் கிடைப்பதை உணரலாம்.
  • -பாராட்டிற்காகவோ, பெருமிதத்திற்காகவோ இல்லையென்றாலும் கடைப்பிடிக்க வேண்டிய சிறந்த அணுகுமுறைமென்மைதான்.
  • – எதிர்மறைச்சூழலில் நமக்குப் பலரும் ஆலோசனைகள் சொல்வார்கள். “எனக்குத் தெரியாததையா சொல்லிவிட்டார்கள்?” என்று முற்றிலும் புறந்தள்ளிவிடாமல் நாம் இயல்பாய் இருக்கவும், நேர்மறையாய் செயல்படவும் எது சிறந்த ஆலோசனையோ அதனை ஏற்றுக் கொள்ளலாம்.
  • – சில நேரங்களில் நம் குழப்பத்தை அதிகரிப்பது போல் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைக் கூறுவார்கள். சூழலின் கடுமையை அதிகரிப்பது போல் யார் பேசினாலும் அவரை மதிக்கவேண்டிய நிலையிலிருப்பதைப் பற்றி கவலைப்படாமல் தவிர்த்துவிடலாம்.
  • – மற்றவர்களின் கருத்துக்களில், செயல்பாடு (நடத்தை- Attitude)களில் நமக்கு உடன்பாடில்லை என்றாலும் அவைகளுக்காக அவர்களை உள்ளுக்குள் நாம் வெறுப்பதாயிருந்தாலும் எதிரில் எதனையும் வெளிப்படுத்துதல் கூடாது. அதற்கும் மேலாக அவர்களிடமும் இயல்பாகவே நடந்து கொள்ளுதல் நல்லது.
  • – நம்முடைய எதிர்மறையான சிந்தனைகளோ, செயல்பாடுகளோ மற்றவரைக் காட்டிலும் நமக்குத் தான் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நினைவில் நிறுத்துதல் அவசியம்.
  • – “ஒவ்வொரு இடர்ப்பாட்டிலும் ஒரு வாய்ப்பு மறைந்துள்ளது” என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறுகிறார். எதிர்மறைச் சூழலிலும் நமக்கான வாய்ப்பு எதுவென பார்க்கலாம்.
  • – நம்மால்தான் தவறு நிகழ்ந்தது எனும்போது நேர்மையாய் அதனை ஒப்புக்கொள்ளுதல் வேண்டும்.
  • -அறிந்தோ அல்லது அறியாமலோ நாம் தவறு செய்துவிடும்போது மனத்தளர்ச்சி அடைய வேண்டியதில்லை. “வாழ்வில் தவறுகள் செய்வதால் கழியும் நேரமாவது ஏதும் செய்யாமல் சும்மாவே கழித்த நேரத்தைவிட மதிப்பு வாய்ந்தது” என்று ஜார்ஜ் பெர்னாட்ஷா கூறுகிறார். (எல்லாத் தவறுகளும் இதில் அடங்கிவிடாது என்பதில் கவனம் இருக்கட்டும்)
  • – எதற்காக பெர்னாட்ஷா அப்படிச் சொல்கிறார்? தவறு நேரும்போதுதான் சரி எது என்பதில் தெளிவு பிறக்கிறது. அனுபவங்கள் கிடைக்கின்றன. அனுபவங்கள்தான் நம்மைச் சரியாக வழிநடத்துகின்றன.
  • – எதிர்மறைச்சூழலில் நாமிருக்கும்போது நம்முடைய நலம்விரும்பும் நண்பர்களை அழைத்து நம் எண்ணங்களை பகிர்ந்துகொள்ளலாம். சரியான ஆலோசனைகளைக் கேட்கலாம்.
  • – நமக்குப் பிடித்த நல்ல புத்தகங்களை எடுத்துப் புரட்டிப் பார்க்கலாம்.
  • -ஆழ்ந்து மூச்சுவிடுதல். கண்களை மூடியபடி சிறிதுநேரம் அமைதியைக் கடைப்பிடித்தல். தியானம் பழக்கமுள்ளவர்கள் சிறிதுநேரம் தியானம் செய்தல். குளிர்ந்த நீரைப் பருகுதல் போன்றவை நம்மை உடல், மன ரீதியாக ஆசுவாசப்படுத்தும்.
  • – நாம் எல்லோரையும் எல்லா நேரத்திலும் திருப்தியுறச் செய்ய இயலாது. நாமென்பதில்லை. யாராலுமே அது முடியாது. எனவே சில சமயங்களில் வேண்டிய மனிதர்களையோ, பொருள் பணத்தையோ, ஏன் நட்பையோ கூட இழக்கவேண்டி வரலாம். அதற்காக இடிந்துபோய் விடுவதோ, வாட்டமாகவே காணப்படுவதோ தவிர்க்கப்பட வேண்டும்.
  • – சில இழப்புகள் பெரும் நிம்மதியைக் கூட கொண்டுவந்து சேர்க்கலாம். எப்போதும் நமக்கு இன்னலை ஏற்படுத்துபவர்கள் என்னதான் தேவைப்படுபவர்களாக இருந்தாலும் அவர்களை இழப்பதற்கு நாம் நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
  • – அதற்குப் பின்னர் நேர்மறையான மனிதர்களை நோக்கி நம்முடைய கவனத்தை திசை திருப்பலாம்.

இன்பமும் துன்பமும் கலந்துதான் வாழ்க்கை என்பது எல்லோரும் அறிந்திருப்பதுதான். இன்பத்தை மகிழ்வோடு கொண்டாடுகின்ற நாம் துன்பத்தைக் கொண்டாட இயலாது. ஆனால் எப்படிப்பட்ட சிக்கலான சூழ்நிலைகளையும் எதிர் கொள்கின்ற பக்குவம் பெற்று விட்டோமெனில் துன்பம் என்பது ஏது? பக்குவப்படுவோமா!

நன்றி:- ருக்மணி பன்னீர்செல்வம் –  நமதுநம்பிக்கை