Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 7,928 முறை படிக்கப்பட்டுள்ளது!

புரிவது போல் வாழ்க்கை!

ஒரு தாவோ கதை!

பழங்கால சீனாவில் இருந்த ஒரு தாவோ ஞானியிடம் பலரும் தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வருவார்கள். அவர் அதிகம் பேச மாட்டார். பிரச்சினைகளுக்கு அவர் சொல்லும் தீர்வு ஒரு சில சொற்களாகத் தான் இருக்கும். ஆனால் அந்த சொற்களில் எப்படிப்பட்ட பிரச்சினைக்கும் அருமையான பதில் இருக்கும்.

ஒரு நாள் அவரைத் தேடி இரண்டு இளைஞர்கள் வேறு வேறு பகுதிகளில் இருந்து வந்தார்கள். அவருக்காகக் காத்திருக்கும் போது அவர்கள் பேசிக் கொண்ட போது இருவருடைய பிரச்சினையும் ஒன்று தான் என்பதைக் கண்டு கொண்டார்கள். இருவருக்கும் அப்போது அவர்கள் செய்து கொண்டிருந்த வேலை பிடிக்கவில்லை. அவர்களை அவர்களுடைய மேலதிகாரிகள் நடத்தும் விதம் பிடிக்கவில்லை. தினமும் மன உளைச்சல் மற்றும் நிம்மதியில்லாத சூழ்நிலை. இதிலிருந்து விடுபடத் தான் அந்த ஞானியிடம் ஆலோசனை கேட்க அவர்கள் வந்திருந்தனர்.

ஞானி அவர்களைச் சந்தித்த போது இருவரும் ஒருசேரத் தங்கள் பிரச்சினையைச் சொன்னார்கள். கேட்டு விட்டு கண்களை மூடிக் கொண்டு சில நிமிடங்கள் இருந்து விட்டு அவர் சொன்னார். “எல்லாம் ஒரு பானை சோற்றிற்காக!”

அவ்வளவு தான் பதில். தாவோயிசத்தில் பெரிய விளக்கங்கள் கிடையாது. ஒரு விஷயம் சுட்டிக் காண்பிக்கப்படும். அவ்வளவு தான். அவர்கள் இருவரும் அவரை வணங்கி விட்டு வெளியே வந்தார்கள்.

‘எல்லாம் ஒரு பானை சோற்றிற்காக’ என்ற பதிலை ஆழமாக யோசித்த போது எல்லாமே ஒரு ஜாண் வயிற்றுக்காக என்றும் வேலையே வயிற்றுப் பிழைப்புக்காக என்றும் இருவருக்கும் புரிந்தது.

“உயிர் வாழத் தேவையான சம்பாத்தியத்தைத் தருவது தான் வேலை, அதை விட அதிக முக்கியத்துவம் அதற்குத் தர வேண்டாம் என்று அவர் சொல்கிறார்” என்று சொன்னான் ஒரு இளைஞன்.

மற்றவனுக்கும் அது உண்மை என்றே தோன்றியது. “ஆமாம். அதை விட அதிகமாக வேலையில் இருந்து எதிர்பார்க்க ஒன்றும் இல்லை என்றே அவர் சுட்டிக் காட்டுகிறார்” என்று அவனும் சொன்னான்.

இருவரும் பிரிந்து சென்றார்கள்.

முதலாம் இளைஞன் வேலையை அந்த அளவுக்கு சீரியஸாக நினைக்க ஒன்றும் இல்லை என்று ஞானி உணர்த்துவதாகப் புரிந்து கொண்டான். உயிர் வாழ வேலை செய்தாக வேண்டும். அது தவிர்க்க முடியாதது என்கிற போது சலித்துக் கொண்டும், அதிக எதிர்பார்ப்புகளை வைத்துக் கொண்டும் மனவருத்தம் அடைவதில் அர்த்தமில்லை என்று எண்ணிய அவன் அந்த வேலையிலேயே தொடர்ந்து நீடித்தாலும் மனப்பக்குவத்துடன் வேலை செய்ய ஆரம்பித்தான். சின்னச் சின்ன குறைகளை பெரிது படுத்தாமல் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக் கொண்டு வேலை செய்தான். அவனுக்குள் ஏற்பட்ட மாற்றம் நாளடைவில் அவனுக்கு வேலை செய்யும் இடத்தில் ஓரு தனி மரியாதையை ஏற்படுத்தியது. அவன் வேலையில் நேர்த்தியும், மேன்மையும் தெரிய ஆரம்பித்தது. உத்தியோக உயர்வுகள் விரைவாகக் கிடைக்க ஆரம்பிக்க சீக்கிரத்திலேயே மேல் நிலைக்கு வந்து விட்டான்.

இரண்டாம் இளைஞன் வெறும் வயிற்றுப் பிழைப்புக்காக பிடிக்காத வேலையில் நீடிப்பது தான் பிரச்சினை என்று அந்த ஞானி குறிப்பிடுவதாக நினைத்தான். உயிர் வாழ சம்பாத்தியத்திற்கு எத்தனையோ வழிகள் இருக்கும் போது மரியாதையோ, நிம்மதியோ இல்லாத இடத்தில் தொடர்ந்து கஷ்டப்படுவதில் அர்த்தம் என்ன இருக்கிறது என்று நினைத்தவனாக வேலையை விட்டு விட்டு சொந்தமாக வியாபாரம் ஒன்றைச் செய்ய ஆரம்பித்தான். சுதந்திரமாக, யாருடைய கட்டுப்பாடும் இல்லாமல் வியாபாரம் செய்வதில் மகிழ்ச்சி இருந்தது. உற்சாகமாகவும், புத்திசாலித்தனமாகவும் அவன் உழைத்ததில் அவன் வியாபாரம் நல்ல அபிவிருத்தி அடைய ஆரம்பித்தது. அவனும் சீக்கிரத்திலேயே செல்வந்தனாகி விட்டான்.

இருவரும் சில காலம் கழித்து சந்திக்க நேர்ந்தது. இருவருமே வெற்றிகரமாகவும், திருப்திகரமாகவும் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொண்டிருந்த போதும் அந்த ஞானி சொன்ன ஒரே உபதேசம் வேறு வேறு விதமாகத் தங்கள் வாழ்க்கையை மாற்றி விட்டதை எண்ணி ஆச்சரியப்பட்டார்கள். இருவர் வாழ்க்கையில் யார் வாழ்க்கை அந்த ஞானி சொன்ன அர்த்தத்தில் அமைந்திருக்கிறது என்று அறிய ஆசைப்பட்டு இருவரும் அந்த ஞானியை மறுபடியும் சந்தித்தார்கள்.

“ஐயா நீங்கள் அன்று எங்களுக்கு உபதேசித்ததின் உண்மையான அர்த்தம் என்ன என்று இன்று எங்களுக்குக் குழப்பமாக இருக்கிறது. நீங்கள் உபதேசித்ததின் உண்மைப் பொருளைத் தயவு செய்து தெளிவுபடுத்துங்களேன்”

ஞானி சிறிது நேரம் மௌனம் சாதித்து விட்டு சொன்னார். “புரிந்து கொள்வதில் தான் எல்லா வித்தியாசங்களும்!”

உண்மையில் இது தான் ஒரே வழி, இது தான் ஒரே தீர்வு என்று எதையும் ஆணித்தரமாகச் சொல்வது சரியல்ல. ஒரே பிரச்சினைக்கு பல தரப்பட்ட தீர்வுகள் இருக்கலாம். இருக்க முடியும். அந்த வழிகளில் தங்களுக்கு அதிகமாகப் பொருந்துகிற ஒன்றைத் தேர்ந்தெடுத்து பயணிக்கும் மனிதன் கண்டிப்பாக தன் லட்சியத்தை சிரமமில்லாமல் அடைகிறான். மேலே சொன்ன உதாரணத்தில் தன் மனநிலையை மாற்றிக் கொண்டு அதே வேலையில் முதலாமவன் நீடித்ததும் சரியே. அதே போல தன் மனநிலைக்கு ஒத்துக் கொள்ளாத வேலையை விட்டு விட்டு தன் மனநிலைக்கு ஏற்ற வியாபாரத்தில் இரண்டாமவன் ஈடுபட்டதும் சரியே. இரண்டும் அவர்களை வெற்றிக்கே அழைத்துச் சென்றன.

மனமும், செயலும் ஒன்றுக்கொன்று எதிராக இயங்காமல், ஒத்துப் போகும் போது பிரச்சினை முடிந்து தீர்வு ஆரம்பிக்கிறது. வேறு வேறு விதங்களில் இருவரும் மனம்-செயல் இரண்டும் முரணாக இயங்காமல் பார்த்துக் கொண்டதால் தான் அவர்களால் வெற்றி அடைய முடிந்தது. அந்த நல்லிணக்கம் மனதுக்கும், ஈடுபடுகின்ற தொழிலுக்கும் இடையே இருக்காத வரை எந்த மாற்றமும் நிம்மதியையோ, வெற்றியையோ தராது.

இரண்டாவதாக அவர் சொன்னது போல ஒவ்வொருவர் வாழ்க்கையையும் வித்தியாசப்படுத்துவது அவரவர் வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும் விதங்களே. புரிந்து கொள்ளும் விதம் சிறிது மாறினாலும் வாழ்க்கையில் அது பெரிய மாறுதலுக்கு வழி வகுக்கிறது.

எதையும் எப்படிப் புரிந்து கொள்கிறோம் என்பது மிக முக்கியம். ஏனென்றால் ஒன்றைப் புரிந்து கொண்டதன் படியே அதை அணுகுகிறோம். ஒரு பிரச்சினையைத் தீர்க்க முடிவதும், மேலும் சிக்கலாக்குவதும் அதைப் புரிந்து கொள்ளும் விதத்திலேயே தீர்மானிக்கப்படுகிறது. முன்னதாகவே ஒரு முடிவெடுத்து விட்டு குறுகிய பார்வையில் எதையும் பார்ப்பவன் தவறாகவே புரிந்து கொள்கிறான். தவறாகவே எதையும் ஆக்கியும் விடுகிறான். அப்படிப்பட்டவன் தானாக துளியும் மாறாமல் நின்று தன் விருப்பப்படி அனைத்தையும் மாற்ற முனைகிறான். அனைத்துடனும் பிணக்கம் கொள்கிறான். காலச் சூழலை எதிர்க்கும் அவன் பின்னுக்குத் தள்ளப்படுவதோடு அல்லாமல் நிம்மதியும் இன்றி தவிக்கிறான்.

சரியாகப் புரிந்து கொள்ளும் விதமோ சொந்த விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி விட்டு அமைதியாக திறந்த மனதுடன் உள்ளதை உள்ளபடி பார்க்க முடிவதில் தான் ஆரம்பிக்கிறது. அப்படிப் பார்க்க முடிபவன் தேவைப்படும் போது சின்னச் சின்ன மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வதில் தயக்கம் காட்டுவதில்லை. உலகத்தோடு அவன் யுத்தம் செய்வதில்லை. அதனுடன் சேர்ந்து கூட்டாக இயங்குகிறான். அனைத்தையும் துணையாக்கிக் கொண்டு அழகாக வாழ்ந்து முன்னேறுகிறான்.

வாழ்க்கையை ஒரு பிரச்சினையாகப் புரிந்து கொண்டு வாழ்கிறவன் அப்படியே தன் அனுபவங்களைக் காண்கிறான். சந்திக்கின்ற மனிதர்கள், சூழ்நிலைகள், எல்லாமே பிரச்சினைகளாக உருவெடுக்க, அவன் புரிந்து கொண்ட விதமாகவே வாழ்க்கை துக்கமயமாகவே அமைந்து விடுகிறது. வாழ்க்கையில் எல்லாமே ஏதோ ஒன்றை சொல்லித் தருகின்றது என்று புரிந்து கொண்டு வாழ்க்கையை அணுகுபவன் ஒவ்வொரு பிரச்சினையிலும் ஒவ்வொரு பாடத்தைப் படித்துக் கொண்டு அதைக் கச்சிதமாக சந்திக்கும் விதத்தில் தன்னை பலப்படுத்திக் கொள்கிறான். ஒவ்வொரு பிரச்சினையும் அவனை உயர்த்தும் படிக்கட்டாக அமைந்து அவன் புரிந்து கொண்ட விதமாகவே வாழ்க்கை அவனுக்குக் கற்றுக் கொடுக்கும் ஆசானாக அமைந்து அவனை உயர்த்தி விடுகிறது.

எனவே புரிந்து கொள்ளும் விதத்திலேயே வாழ்க்கை தீர்மானிக்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.!

 நன்றி:- என்.கணேசன்