Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,330 முறை படிக்கப்பட்டுள்ளது!

மனதில் சுமக்கும் கனங்கள்!

ஒரு மனோதத்துவ வகுப்பில் ஒரு பேராசிரியர் ஒரு தம்ளரில் சிறிது தண்ணீரை ஊற்றிக் கையில் ஏந்தியபடி மாணவர்களிடம் கேட்டார். “இந்தத் தம்ளர் எவ்வளவு கனம் இருக்கும்?” என்று கேட்டார்.

மாணவர்கள் பக்கத்தில் இருந்து பல உத்தேச பதில்கள் வந்தன. ”ஐம்பது கிராம்… எழுபது கிராம்…. நூறு கிராம்…. நூற்றி இருபது கிராம்….”

பேராசிரியர் சொன்னார். “இதை எடை போட்டால் தான் உண்மையான எடை நமக்குத் தெரியும். ஆனால் இது ஒருவரால் மிக சுலபமாக சுமக்கும் கனம் தான், இல்லையா?”

“ஆமாம்” என்று மாணவர்கள் ஒருமித்த குரலில் சொன்னார்கள்.

பேராசிரியர் கேட்டார். “இதை நான் சில நிமிடங்கள் கையில் ஏந்திக் கொண்டிருந்தால் என்ன ஆகும்?”

”ஒன்றும் ஆகாது”  மறுபடி ஒருமித்த குரலில் பதில் வந்தது.

”இதை நான் ஒரு மணி நேரம் அப்படியே பிடித்துக் கொண்டிருந்தால் என்ன ஆகும்”

“கை வலிக்கும்” என்று ஒரு மாணவர் சிரித்துக் கொண்டே சொன்னார்.

“உண்மை தான். சரி, நான் இதை ஒரு நாள் முழுவதும் இப்படியே பிடித்துக் கொண்டிருந்தால் என்ன ஆகும்”

”தாங்க முடியாத வலி ஏற்படும்”,  “கை தசைகள் இறுகி கையை நகர்த்த முடியாமல் போய் விடும்”,  “ஆஸ்பத்திரிக்குத் தான் போக வேண்டி வரும்” என்று பதில்கள் வந்தன.

”அந்தப் பிரச்சினை ஏற்படுவது தம்ளரின் கனம் கூடுவதாலா?”

“இல்லை நீங்கள் தொடர்ந்து அதை பிடித்துக் கொண்டிருப்பதால் தான்”

”இந்தப் பிரச்சினை ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?”

ஒரு மாணவன் சுலபமாகச் சொன்னான். “அந்தத் தம்ளரை கீழே வைத்தால் போதும்”

பேராசிரியர் சொன்னார். “மிகவும் உண்மை. ஒன்றுமே இல்லை என்று சொல்லக்கூடிய ஒரு எடையைக் கூட தொடர்ந்து நிறைய நேரம் கையில் ஏந்திக் கொண்டே இருந்தால் அது உடலில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த வல்லது. வாழ்க்கையில் எல்லா பிரச்சினைகளும் அப்படித்தான். அவற்றை உங்கள் மனதில் சிறிது நேரம் வைத்திருந்தால் பெரிய பாதிப்பு இல்லை. ஆனால் அவற்றை நிறைய நேரம் சுமக்க ஆரம்பித்தால் சின்னப் பிரச்சினை கூட உங்களுக்கு வலியை ஏற்படுத்தி விடும். அதையே நாள் கணக்கில் சுமக்க ஆரம்பித்தால் அது உங்களை வாழ்க்கையையே ஸ்தம்பிக்க வைத்து விடும். அதனால் எந்த சுமையையும் இரவு தூங்கப் போகும் முன் கீழே இறக்கி வைத்து விட்டு உறங்கச் செல்லக் கற்றுக் கொள்ளுங்கள். வாழ்க்கை எளிதாக இருக்கும். மறு நாளைய பிரச்சினைகளைச் சமாளிப்பது சுலபமாகும்”

மிக அழகான ஒரு உவமை இது. நமக்கு மனதில் சுமைகளை ஏற்றிக் கொண்டே போகத் தெரிகிறதே ஒழிய இறக்கி வைக்கத் தெரிவதில்லை. சுமைகள் கூடிக் கொண்டே போகும் தான் நம்மால் புதியதாக சின்னப் பிரச்சினை வந்தால் கூட அதை சமாளிக்கத் தெரிவதில்லை. ”ஐயோ இதுவுமா” என்று மலைத்துப் போய் விடுகிறோம். ஒவ்வொரு பிரச்சினையாக எடுத்துப் பார்த்தால் அதை சமாளிப்பது சுலபமாக இருக்கும். பெரும்பாலானவை தனித்தனியாக அணுகும் போது அப்படி சமாளிக்க முடிந்தவையே. ஆனால் பிரச்சினைகளை சேர்த்து வைத்துக் கொண்டே சுமந்து நின்றால் அதன் பின் கூடும் எல்லாச் சின்னப் பிரச்சினைகளும் தாங்க முடியாதவையாக மாறி விடுகின்றன.

ஒன்று மட்டும் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. சுமந்து கொண்டே இருப்பதால் கனம் கூடுமே ஒழிய குறையாது. இறக்கி வைத்தால் மட்டுமே கனம் குறையும். எனவே அவ்வப்போது மனதின் சுமைகளை இறக்கி வைக்கப் பழகிக் கொள்ளுங்கள். புதிதாக வருவதை சமாளிப்பது சுலபமாகும். வாழ்வின் இனிமைகளை ரசிக்க மனதில் இடம் பாக்கி இருக்கும்!

 நன்றி:- என்.கணேசன்