Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 25,229 முறை படிக்கப்பட்டுள்ளது!

30 வகை பிரேக்ஃபாஸ்ட் ரெசிபி! – 2

ஸ்டஃப்டு பிடிகொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி ரவை (நொய்) – ஒரு கப், தேங்காய் துருவல் – அரை கப், பொடித்த வெல்லம் – கால் கப், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை: கடாயில் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். அதில் அரிசி ரவையை (நொய்) போட்டு கெட்டியாக கிளறி எடுக்கவும்.
தேங்காய் துருவல், வெல்லம், ஏலக்காய்த்தூளை ஒன்றாகக் கலக்கவும். கையில் எண்ணெய் தடவிக் கொண்டு, அரிசி கலவையில் பெரிய எலுமிச்சம் பழ அளவுக்கு எடுத்து உருட்டி, குழிவாக செய்து அதனுள் 2 ஸ்பூன் அளவு தேங்காய் கலவையை வைத்து மூடவும். இதே போல் மொத்தத்தையும் தயார் செய்யவும். தயாரித்தவற்றை ஆவியில் வேகவிட்டு எடுக்கத்தால்… ஸ்டஃப்டு பிடிகொழுக்கட்டை தயார்.

குறிப்பு: அந்தக் காலத்தில் வயதானவர்கள், ஏகாதசி அன்று ஒரு வேளை மட்டும் இதனை சாப்பிட்டு விரதம் இருப்பார்கள்.

சாபுதானா கிச்சடி

தேவையானவை: ஜவ்வரிசி – ஒரு கப், கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – இஞ்சி துண்டுகள் – ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, வேர்க்கடலை (ஒன்று இரண்டாக உடைத்தது) – கால் கப், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: ஜவ்வரிசியை கொஞ்சம் தண்ணீர்விட்டு பிசிறி ஊற வைக்கவும். (கிச்சடி செய்வதற்கு 3 மணி நேரம் முன்னதாக ஊற வைக்கவும்). கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து வறுக்கவும். பெருங்காயத்தூள் இஞ்சி – பச்சை மிளகாய் துண்டுகள், கறிவேப்பிலை போட்டு கிளறவும். பொன் னிறம் ஆனதும் பிசிறி வைத் துள்ள ஜவ்வரிசி, உப்பு சேர்த்து மேலும் கிளறவும். ஜவ்வரிசி வெந்ததும் வேர்க்கடலை தூளை சேர்த்து நன்றாகக் கிளறவும் நல்ல மணம் வந்ததும் இறக்கவும்.

வெஜ் பணியாரம்

தேவையானவை: இட்லி மாவு – ஒரு கப், நறுக்கிய வெங்காய துண்டுகள், கேரட் துருவல், முட்டை கோஸ் துருவல் – தலா 2 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி, புதினா – சிறிதளவு, பொடியாக நறுக்கிய இஞ்சி – பச்சை மிளகாய் துண்டுகள் – ஒரு டேபிள்
ஸ்பூன், எண்ணெய் – கால் கப், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: இட்லி மாவில் வெங்காய துண்டுகள், கேரட் துருவல், முட்டைகோஸ் துருவல், நறுக்கிய கொத்தமல்லி, புதினா, இஞ்சி – பச்சை மிளாய் துண்டுகள், உப்பு சேர்த்துக் கலக்கவும். குழி சட்டியில் எண்ணெய் கொஞ்சம் விட்டு, மாவு கலவையில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து விடவும். வெந்ததும் திருப்பி விடவும். நன்கு வெந்ததும் எடுக்கவும்.

குறிப்பு: சத்து நிரம்பிய இந்த பணியாரம், எல்லா சட்னியும் தொட்டு சாப்பிட ஏற்றது.

பம்கின் பூரி

தேவையானவை: பரங்கிக்காய் துருவல் – 2 கப், கோதுமை மாவு – 3 கப், பொடித்த வெல்லம் – முக்கால் கப், எண்ணெய் – தேவையான அளவு, உப்பு – சிறிதளவு.

செய்முறை: கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு, சூடானதும் பரங்கிக் காய் துருவலை போட்டு வதக்கவும். வெல்லம், உப்பு சேர்த்துக் கலந்து விடவும். நன்கு ஆறியதும் கோதுமை மாவுடன் சேர்த்துப் பிசையவும். மாவு கலவையில் சிறிது எடுத்து வட்டமாக இட்டு, சூடான எண்ணெயில் போட்டு, பொரிந்து வந்ததும் திருப்பிவிட்டு, வெந்ததும் எண்ணெய் வடித்து எடுக்கவும்.

எனர்ஜி சாலட்

தேவையானவை: முளைகட்டிய பயறு – 2 கப், நறுக்கிய வெங்காயம் – அரை கப், வெள்ளரிக்காய் துண்டுகள் – அரை கப், லெட்டூஸ் இலை துண்டுகள் – கால் கப், வறுத்த வேர்க்கடலை – கால் கப், எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: பயறு, வேர்க்கடலை, வெங்காயம், வெள்ளரிக்காய், லெட்டூஸ் இலை ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு… உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கினால்… சாலட் தயார்.

குறிப்பு: இது, பசி தாங்க கூடியது… சத்து நிரம்பியது.

பிரேக்ஃபாஸ்ட் ஆப்பிள் ஜூஸ்

தேவையானவை: மீடியம் சைஸ் ஆப்பிள் – ஒன்று, கேரட் – 2 அல்லது 3, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, தேன் – 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை : ஆப்பிள், கேரட், இஞ்சியை தோல் சீவி, துண்டுகள் செய்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். தேவையான அளவு மினரல் வாட்டர் கலந்து வடிகட்டி, தேன் விட்டு கலக்கினால்… பிரேக்ஃபாஸ்ட் ஆப்பிள் ஜூஸ் தயார்.

தாணிய பணியாரம்

தேவையானவை: புழுங்கல் அரிசி – ஒரு கப், துவரம்பருப்பு – ஒரு கப், கடலைப்பருப்பு – ஒரு கப், உளுத்தம்பருப்பு – ஒரு கப், தேங்காய் துருவல் – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 4, நறுக்கிய இஞ்சி – பச்சை மிளகாய் துண்டுகள் – 2 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை : அரிசி, பருப்பு வகைககளை ஒரு மணி நேரம் ஊற வைத்து, காய்ந்த மிளகாய் சேர்த்து கொர கொரப்பாக அரைத்து எடுக்கவும். உப்பு, தேங்காய் துருவல், இஞ்சி – பச்சை மிளகாய் துண்டுகள் சேர்த்து, கறிவேப்பிலை, கொத்தமல்லியை கிள்ளிப் போட்டு கலக்கவும்.குழி சட்டியில் அரை ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் மாவு கலவையை அரை குழி வருமாறு விடவும். வெந்ததும் குச்சியால் திருப்பி விடவும், பொன்னிறமானதும் எடுக்கவும்.

குறிப்பு: இதற்கு தக்காளி சாஸ், சட்னி சிறந்த காம்பினேஷன்.

ராகி புட்டு

தேவையானவை: அரிசி மாவு – ஒரு கப், ராகி மாவு (கேழ்வரகு மாவு) – ஒரு கப், தேங்காய் துருவல் – ஒரு கப், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசி மாவு, ராகி மாவு, உப்பு, ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வெந்நீர் விட்டு பிசிறினாற்போல் கலக்கவும். மாவு கலவையை புட்டு குழாயில் சிறிதளவு போட்டு, தேங்காய் துருவல் சேர்க்கவும். இப்படி மாற்றி மாற்றி மாவு மற்றும் தேங்காய் துருவல் போட்டு குழாயை நிரப்பவும் அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும். சிறிது ஆறியதும் தட்டினால், குழாயை விட்டு புட்டு வெளியே வரும். இதனுடன் சர்க்கரை சேர்த்தும் சாப்பிடலாம்.

குறிப்பு: இது, இரும்புச் சத்து நிறைந்தது.

பெசரட்

தேவையானவை: பச்சைப்பயறு – ஒரு கப், அரிசி – அரை கப், பச்சை மிளகாய் – 2, சீரகம் – அரை டீஸ்பூன், வெங்காயம் – ஒன்று, இஞ்சி – ஒரு துண்டு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: பச்சைப்பயறு, அரிசியை ஊற வைத்து அரைத்து எடுக்கவும். இதில் பச்சை மிளகாய், சீரகம், பொடியாக நறுக்கிய இஞ்சி, நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்துக் கலக்கவும். தவாவில் எண்ணெய் தடவி, மாவு கலவையில் இருந்து 2 கரண்டி எடுத்துவிட்டு தேய்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு, வெந்ததும் எடுக்கவும்.

ஆட்டா காஷீரா

தேவையானவை: கோதுமை மாவு – அரை கப், சர்க்கரை – அரை கப், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், நெய் – கால் கப், முந்திரி, பாதாம் – தலா – 5.

செய்முறை: கடாயில் நெய் விட்டு, சூடானதும் கோதுமை மாவை வறுக்கவும். சர்க்கரை, தண்ணீர் தெளித்து கலக்கவும். சர்க்கரை கரைந்து இறுகிவரும் சமயம் ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, பாதாம் சேர்த்துக் கலக்கவும். நன்கு கலந்து இறுகி வந்ததும் இறக்கினால்… ஆட்டா காஷீரா ரெடி. இதை விரும்பிய வடிவத்தில் செய்து கொள்ள லாம்.

பிரேக்ஃபாஸ்ட் வெஜ் ஜூஸ்

தேவையானவை: தக்காளி – 3, வெள்ளரிக்காய் துண்டுகள் – ஒரு கப், செலரி (டிபாட்ர்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) – ஒன்று, மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்

செய்முறை: தக்காளி, வெள்ளரிக்காய், செலரி ஆகியவற்றை அரைத்து எடுக்கவும். மினரல் வட்டர் கலந்து வடிகட்டவும். இந்த ஜூஸில் மிளகுப்பொடி சேர்த்துக் கலக்கவும். பிரேக்ஃபாஸ்ட் வெஜ் ஜூஸ் ரெடி.

கோதுமை ரவை கஞ்சி

தேவையானவை: கோதுமை ரவை – ஒரு கப், பால் – 300 மில்லி, வறுத்த முந்திரி – 4, நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, சர்க்கரை – தேவையான அளவு.

செய்முறை : கடாயில் நெய் விட்டு கோதுமை ரவையை வறுத்து, தண்ணீர் சேர்த்து வேகவிடவும். சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். கோதுமை ரவை நன்கு வெந்து குழைந்து வந்ததும் இறக்கவும். காய்ச்சிய பாலை சேர்க்கவும். வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்தால்… கோதுமை ரவை கஞ்சி தயார்.

குறிப்பு: இனிப்பு பிடிக்காதவர்கள் உப்பு, மோர் கலந்து பருகலாம்.

லோ கலோரி சாலட்

தேவையானவை: நறுக்கிய கேரட், தக்காளி, வெள்ளரிக்காய், வெங்காயம் – தலா 2 டேபிள்
ஸ்பூன், இஞ்சித் துண்டுகள், பச்சை மிளகாய் துண்டுகள், சோயா சாஸ் – தலா ஒரு டேபிள் ஸ்பூன், எலுமிச்சைச் சாறு – அரை டேபிள்ஸ்பூன், சர்க்கரை (விருப்பப்பட்டால்) ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் காய்கறி துண்டுகள், சோயா சாஸ், எலுமிச்சைச் சாறு, உப்பு, சர்க்கரை எல்லாவற்றையும் போட்டு கலந்து பரிமாறவும்.

இடியாப்பம்

தேவையானவை: அரிசி மாவு (அரிசியை ஊற வைத்து, களைந்து, உலர்த்தி அரைத்த மாவு) – 1 கப், வெண்ணெய் – அரை டேபிள்ஸ்பூன், தேங்காய்ப்பால் – ஒரு கப், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், உப்பு, சர்க்கரை – தேவையான அளவு.

செய்முறை: அரிசி மாவில் உப்பு, வெண்ணெய் கலந்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து, இடியாப்பம் அச்சில் போட்டு, எண்ணெய் தடவிய தடவிய தட்டில் பிழிந்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும். தேங்கய்ப்பாலில் ஏலக்காய்த்தூள், சர்க்கரையை கலக்கவும். இடியாப்பத்தை தட்டில் வைத்து, கிண்ணத்தில் தேங்காய்ப்பால் வைத்து பரிமாறவும்.

குறிப்பு: ஆவியில் வெந்ததால், இடியாப்பம் எளிதில் ஜீரணமாகும்.

ஹெர்பல் பால்ஸ்

தேவையானவை: அரிசி மாவு: 1 கப், வெண்ணெய் – டேபிள்டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா – சிறிதளவு, இஞ்சி – சிறிய துண்டு (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்), நறுக்கிய பச்சை மிளகாய் – 1, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசி மாவு, உப்பு, வெண்ணெயை ஒரு பாத்திரத்தில் போட்டுக் கலக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, இஞ்சி, பச்சை மிளகாயை அரைத்து மாவில் போட்டு கலந்து தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து, சிறுசிறு உருண்டைகளாக உருட்டவும். இந்த உருண்டைகளை ஆவியில் வேகவைத்து எடுத்தால்… ஹெர்பல் பால்ஸ் ரெடி!

குறிப்பு: தொட்டுக்கொள்ள எதுவும் வேண்டாம். அப்படியே சாப்பிடலாம்.

நன்றி: அவள் விகடன்