உலக மக்களின் முதன்மையான கடல் உணவு மீன்களே ஆகும். 1950 ஆம் ஆண்டில் ஒரு கோடியே 93 இலட்சம் டன் மீன்கள் பிடிக்கப்பட்டன. தாமாகவே வளர்ந்த இந்த மீன்கள் ஆறுகள், குளங்கள், ஏரிகள், மற்றும் கடலின் மூலமாக கிடைத்தவை. இதுவே 2003 ஆம் ஆண்டில் பிடிக்கப்பட்ட மீன் அளவு 13 கோடியே 25 இலட்சம் டன்கள். மனிதர்களினால் வளர்க்கப்பட்டு பிடிக்கப்பட்டவை 5 கோடியே 48 இலட்சம் டன்கள்.
உலகில் கிடைக்கும் மொத்த மீன்களில் மூன்றில் இரண்டு பங்கு சீனா, பெரு, இந்தியா, இந்தோனேசியா, அமெரிக்கா, ஜப்பான், சிலி ஆகிய ஏழு நாட்டு மக்களால் உட்கொள்ளப்படுகிறது. இந்திய மக்கள் 2003 ஆம் ஆண்டில் 59 இலட்சம் டன் மீன்களை சாப்பிட்டு இருக்கின்றனர்.
மனிதர்களின் உணவில் முக்கிய இடத்தைப் பிடித்து வந்த மீன்கள் தற்போது சூழல் மாசுபாடு காரணமாக அழியும் நிலைக்கு வந்து விட்டது. இயற்கையாக மீன்கள் உற்பத்தி ஆகும் வேகத்தை விட, அவைகள் மனிதர்களினால் பிடிக்கப்படும் வேகமும், அளவும் அதிகமாகி வருவதும் இந்த அழிவிற்கு ஒரு முக்கியமான காரணமாகும். சூழல் மாசுபாட்டினால் மீன்களின் கிடைக்கும் அளவு குறைவதுடன், அவற்றின் பருமனும் குறைகிறது. இதன் காரணமாக பல மீன் இனங்கள் முற்றிலுமாகவே அழிந்து போய்விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடலிலும் ஆறுகளிலும் கழிவுநீர் கலப்பதாலும், ரசாயன குப்பைகள் கொட்டப்படுவதாலும் மீன்களின் இனப்பெருக்கம் பெரிதும் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. சுற்றுச்சூழல் சீர்கேட்டைத் தடுக்காவிட்டால் மீன்கள் அழிவதையும் தடுக்கமுடியாது. எனவே சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த கடல் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து அந்தப் பகுதிகளில் மீன்பிடிக்கத்தடை விதிக்கவேண்டும். அப்போதுதான் மீன்வளத்தைப் பெருக்க முடியும். தற்போது இது போன்ற நடவடிக்கைகள் உலக நாடுகள் பலவற்றிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்காலத்தில் ஏரிகளினால் நீர்ப்பாசனம் பெறும் நஞ்சை நிலங்கள் எல்லாம் குடியிருப்பு பகுதிகளாக மாற்றம் பெற்று வருகின்றன. ஒரு ஏரியில் நிறைந்திருக்கின்ற நீர் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வேளாண் கிணறு வற்றாமல் பார்த்துக் கொள்ளும். தற்போது பெரும்பாலான கிராமங்களில் மக்கள் குளித்தல், துணிதுவைத்தல், வீட்டு உபயோகம் போன்றவற்றுக்கு நிலத்தடி நீரையே நம்பி இருக்கின்றனர். ஏரிகள் மறையும் போது நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்பது உறுதி.
மேலும் ஏரிகள் மறையுமானால் கால்நடைகளுக்குத் தேவையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். குளிப்பதற்கும், குடிப்பதற்கும் கால்நடைகள் மற்ற விலங்குகள் ஏரி, குளம், குட்டைகளையே நம்பி இருக்கின்றன. இந்த நீர் நிலைகள் மறையுமானால் அந்தப் பகுதியில் வாழும் கால்நடைகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும் அபாயம் ஏற்படும்.
ஏரிகள் இருக்கும் பகுதியில் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். ஏரிகள் மறையும் போது நீர் இருப்பதில்லை. காற்றில் ஈரப்பதமும் குறைந்துவிடும். வெப்பமும் அதிகரிக்கும். வெப்பமான சூழ்நிலையில் வாழுவதற்கு அந்தப் பகுதியில் வாழும் மக்கள் தள்ளப்படுவார்கள். எனவே ஏரிகளைக் காப்போம்.
ஏரிகள் என்பவை நன்னீர் சூழல் தொகுப்பு வகையைச் சார்ந்தவை. ஏரியில் உணவு உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாக விளங்குபவை பாசிகள். இவை தவிர ஒருவிதையிலை தாவரங்கள், இருவிதையிலைத் தாவரங்கள் ஆகியவையும் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்த தாவரங்கள் உற்பத்தி செய்கின்ற உணவினை பூச்சிகள், புழுக்கள், மீன்கள், நன்னீர் மட்டிகள், நத்தைகள், தவளைகள், நண்டுகள் போன்றவை உள்ளன. இந்த உயிரினங்களை நுகர்வோர் என்று அழைக்கலாம்.
இந்த விலங்கினங்களை உட்கொண்டு வாழ்பவை கொக்கு, கழுகு, நாரை, மீன்கொத்தி, போன்ற பறவை இனங்கள். இவை அல்லாமல், ஏரிகளில் அழுகிப்போகும் விலங்குகளின் இறந்த உடல்களையும், தாவரங்களை சிதைக்கும் பாக்டீரியா போன்ற உயிரினங்களும் அங்கு காணப்படுகின்றன.
ஒரு ஏரி அழியுமானால் வெறும் தண்ணீர் மட்டும் குறைவது பிரச்சினையல்ல, நாம் மேலே பார்த்த உற்பத்தியாளர்கள், நுகர்வோர்கள், சிதைப்பான்கள் என்று ஒரு கூட்டமே அழியும். அதோடு இயற்கையில் ஏற்பட்ட விலங்கு, பறவை, பூச்சி இனங்களின் உணவுச் சங்கிலியும் அறுந்து விடும்.
அயிரை, விரால், விலாங்கு போன்ற மீன்வகைகளும், அவற்றை உண்டு வாழும் கொக்கு, நாரை, வாத்து மீன் போன்ற பறவை இனங்களும் இந்த பூமிப்பந்தில் இருந்தே மறைந்து விடும் அபாயம் ஏற்படும். எனவே ஏரிகளைக் காப்பது என்பது நம் அனைவருடைய கடமையாகும்.
நன்றி: வேணுசீனிவாசன் – அகல்விளக்கு