Categories

Archives

A sample text widget

Etiam pulvinar consectetur dolor sed malesuada. Ut convallis euismod dolor nec pretium. Nunc ut tristique massa.

Nam sodales mi vitae dolor ullamcorper et vulputate enim accumsan. Morbi orci magna, tincidunt vitae molestie nec, molestie at mi. Nulla nulla lorem, suscipit in posuere in, interdum non magna.

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,432 முறை படிக்கப்பட்டுள்ளது!

இறைவனுக்கு வழிகாட்டாதீர்கள்!

தலைப்பு சரிதானா என்ற சந்தேகம் உங்களில் பலருக்கு வந்திருக்கக் கூடும். இறைவன் அல்லவா நமக்கு வழிகாட்ட வேண்டும் அப்படி இருக்கையில் இறைவனுக்கு சிலர் வழிகாட்டத் துணிவது போலவும், அது வேண்டாம் என்பது போலவும் அல்லவா சொல்லப்படுகிறது என்றும் திகைக்கலாம். ஆனால் தலைப்பு சரி தான். தொடர்ந்து படியுங்கள்.

அண்ட சராசரங்களை இம்மி பிசகாமல் இயக்கத் தெரிந்த இறைவனுக்கு நம்முடைய வாழ்வை இயக்குவது எப்படி என்று சரிவரத் தெரிவதில்லை என்பது நம்மில் பலருடைய அபிப்பிராயமாக இருக்கிறது. அதனால் தான் தினந்தோறும் எனக்கு அதைச் செய், இதைச் செய் என்று பிரார்த்திக்கிறோம், ஏன் இப்படிச் செய்தாய், ஏன் அப்படிச் செய்தாய் என்று கேள்வி கேட்கிறோம். பல சமயங்களில் எதை எப்போது செய்ய வேண்டும் என்று கூட இறைவனுக்குத் தெரிவிக்கிறோம். இறைவனை வணங்கி விட்டு இப்படி நாம் அதற்குக் கூலியாகக் கேட்கும் விஷயங்கள் ஏராளம்.

இறைவனிடம் கேட்காமல் யாரிடம் கேட்பேன் என்று பக்தன் கூறுவதில் ஒரு நியாயம் இருக்கிறது என்பது உண்மையே. ஆனால் கேட்பதெல்லாம் நியாயமாக இருக்கிறதா என்பதே நம் கேள்வி.

1.       செயலுக்கு எதிரான விளைவைக் கேட்காதீர்கள்:
பரிட்சை நெருங்கிக் கொண்டிருக்கிறது. படிக்க மாணவனுக்கு நேரமும் ஒதுக்கப் பட்டிருக்கிறது. நன்றாகப் படித்தால் தான் நல்ல மதிப்பெண் பெற முடியும் என்பதை இறைவன் தந்திருக்கிற அறிவு தெரிவிக்கிறது. ஆனால் கிரிக்கெட் விளையாட்டு தினமும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவதைப் பார்க்காமல் மாணவனால் இருக்க முடியவில்லை.  கிரிக்கெட் பார்க்கிறான். வேறு பொழுது போக்குகளிலும் நேரத்தைப் போக்கி பரிட்சைக்கு இரண்டு நாள் முன்பு தான் படிக்க ஆரம்பிக்கிறான். படித்தது போதவில்லை. பரிட்சை நன்றாக எழுதவில்லை. வெளியே வந்தவன் தேர்வு வரும் வரை தினமும் கோயிலிற்குச் சென்று மனம் உருக வேண்டுகிறான். “கடவுளே என்னை நல்ல மார்க் எடுத்து பாஸ் செய்ய அருள் புரி”.

’உள்ளம் உருகப் பிரார்த்தித்தால் இறைவன் செவி சாய்ப்பான்’ என்று பெரியோர் சொல்வதை அவன் நம்புகிறான். அப்படி நம்புவதை அவன் இறைவனுக்கும் தெரியப்படுத்துகிறான். இறைவன் என்ன செய்வார் சொல்லுங்கள். இன்னொருவன் இறைவன் தந்த அறிவின்படி விளையாட்டு கேளிக்கைகளில் இருக்கும் ஆர்வத்தை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு ஒழுங்காகப் படிக்கிறான். இவனும் நல்ல மதிப்பெண் பெற வைத்து படிக்காத மாணவனும் நல்ல மதிப்பெண் பெற வைத்தால் இறைவன் செய்வது நியாயமாகுமா?

இயற்கையின் விதிப்படி படிக்காதவன் பரிட்சையில் தோல்வியுற்றோ, முறைவான மதிப்பெண்கள் பெற்றோ, ”உன்னை நான் மலை போல் நம்பினேனே. இப்படி ஏமாற்றி விட்டாயே” என்று மனம் குமுறினால் அது அறிவீனமே அல்லவா? இது போல ‘இந்த செயலுக்கு இந்த விளைவு’ என்று எச்சரிக்கும் இறை அறிவைப் புறக்கணித்து விட்டு தவறாக அனைத்தையும் இஷ்டம் போல் செய்து விட்டு கடைசி நிமிஷத்தில் பிரார்த்தித்து விட்டு எல்லாம் சரியாக அமைய வேண்டும் என்று இறைவனிடம் தயவு செய்து சொல்லாதீர்கள்.

2.       உங்களை மட்டுமே பார்க்காதீர்கள்:
இறைவனுக்கு இரு பக்தர்கள் இருக்கிறார்கள். இருவருமே மிக நல்ல பக்தர்கள். ஒருவன் குயவன். மற்றவன் விவசாயி. குயவன் ”மழையே வேண்டாம் கடவுளே, மழை பெய்தால் என் பிழைப்பு நடக்காது” என்று வேண்டிக் கொள்கிறான். விவசாயியோ, “இறைவனே மழை பொழிய வை. இல்லா விட்டால் என் பிழைப்பு என்று வேண்டிக் கொள்கிறான்.

எல்லாம் வல்ல இறைவன் இப்போது என்ன செய்வான் சொல்லுங்கள். இருவருமே பக்தர்கள் தான். இருவர் கோரிக்கையும் அவரவர் வகையில் நியாயமானது தான். முன்பு சொன்ன படிக்காத மாணவனைப் போல இவர்கள் பேராசைப்படவில்லை. இறைவன் என்ன செய்தாலும் அவன் ஒரு பக்தன் பழிச்சொல்லுக்கு ஆளாவது நிச்சயம்.

இப்படித் தான் சில சமயங்களில் நம் பிரார்த்தனைகள் பலிக்காமல் போகலாம். அப்போதெல்லாம் ஏன் அப்படிச் செய்தாய் ஏன் இப்படிச் செய்தாய் என்றெல்லாம் கேள்வி கேட்காமல், இனியாவது இப்படிச் செய், அப்படிச் செய் என்று கோபத்தோடு அறிவுரை வழங்காமல் இருங்கள். இவர்களில் ஒருவன் பிரார்த்தனையை இறைவன் நிறைவேற்றினால், வேறொருவன் பிழைப்புக்கு இறைவன் கண்டிப்பாக வேறொரு வழியைக் காண்பிப்பான் என்பது நிச்சயம்.

3.       எல்லாமே எப்போதுமே முழுமையாக விளங்க வேண்டும் என்று எதிர்பாராதீர்கள்:
மனிதன் அறிவுக்கு எல்லை உண்டு. அவனால் எல்லாவற்றையும் எல்லா நேரங்களிலும் விளங்கிக் கொள்ள முடியாது. புரியாததாலேயே நடப்பதை எல்லாம் நியாயமில்லாதது என்ரும் தனக்கு எதிரானது என்றும் முடிவு எடுத்து விடக்கூடாது.  பல நிகழ்வுகள் அந்தந்த நேரத்தில் தீமை போலவும் தோல்வி போலவும் தோன்றினாலும் பொறுத்திருந்து பார்த்தால் நடந்தது நன்மைக்கே என்பது புரிய வைக்கும்.

எனக்குத் தெரிந்த ஒரு தொழிலதிபர் பல கோடி சொத்துக்களுக்கு அதிபர். இறைவனின் தீவிர பக்தர். அவர் ஒரு முறை சொன்னார். “எனக்கு சிறு வயதில் இருந்தே ஸ்டேட் பேங்கில் வேலைக்குச் சேர வேண்டும் என்று ஆசை. அது நிறைவேற தினமும் கடவுளிடம் வேண்டிக் கொண்டே இருப்பேன். மூன்று தடவை ஸ்டேட் பாங்க் பரிட்சை எழுதினேன். ஒரு முறை கூட நான் பாஸாகவில்லை. பிறகு எழுத வயது கடந்து விட்டது. நான் கடவுளிடம் கோபித்துக் கொண்டு ஆறு மாதம் கும்பிடாமல் கூட இருந்தேன்….”

பெரிய தொழிலதிபர் ஆகவும் பல கோடி சொத்துக்கு சொந்தக்காரர் ஆகவும் முன்னேற வேண்டிய மனிதர் ஒரு வங்கி குமாஸ்தாவாக வேண்டும் என்று பிரார்த்தித்தால் இறைவன் என்ன செய்வார்? பக்தன் கோபப்பட்டாலும் பரவாயில்லை என்று பொறுத்துக் கொண்டு அந்த ஆசையை நிறைவேற்றி வைக்காமல் இருந்தது அவருடைய கருணையை அல்லவா காண்பிக்கிறது. எனவே பல நேரங்களில் உங்களுக்கு நல்லது எது என்று உங்களை விட இறைவனுக்கு நன்றாகத் தெரியும் என்பதை உணர்ந்திருங்கள். அவனிடம் அப்படிச் செய், இப்படிச் செய் என்று சொல்லி வழி காட்டாதீர்கள்.

”நம்பினார் கெடுவதில்லை! நான்கு மறை தீர்ப்பு!” என்கிறது இந்துமதம். “நம்பிக்கை கொள்ளுங்கள் நலம் பெறுவீர்கள்!” என்கிறது கிறிஸ்தவம்.
”அல்லாஹ்வின் கட்டளையைக் குறித்தும் தீர்ப்பைக் குறித்தும் அதிருப்தி கொள்வது மனிதனின் துர்பாக்கியமேயாகும்” என்கிறது இஸ்லாம். இப்படி எல்லா மதங்களும் இறைவனின் சித்தம் மனிதனின் சிற்றறிவை விட மேலானது என்றும் அதை எப்போதும் நம்புங்கள் என்றும் ஒருமித்த குரலில் சொல்கின்றன.

உங்கள் செயல்கள் உங்கள் நோக்கங்களுக்கு எதிராக இல்லாத வரையில், உங்கள் கடமைகளை நீங்கள் ஒழுங்காகச் செய்து கொண்டிருக்கும் வரையில் எல்லாம் வல்ல இறைவன் கண்டிப்பாக உங்களுக்கு எது நல்லதோ, எது சிறப்போ அதைச் செய்வான் என்பதை நம்புங்கள். அதை விட்டு விட்டு ஒவ்வொரு நாளும் என்னவெல்லாம் அவன் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். அந்த அளவு பேரறிவு எந்த மனிதனுக்கும் இருக்க முடியாது என்பதை உணர்ந்திருங்கள்.

குழந்தை பிறப்பதற்கு முன்பே தாயின் மார்புகளில் பாலைத் தயார் நிலையில் உருவாக்க முடிந்த இறைவனுக்கு, அண்ட சராசரங்களையும் அனாயாசமாக ஒப்பற்ற ஒழுங்கு முறையில் இயக்க முடிந்த இறைவனுக்கு, ஒவ்வொன்றையும் அடுத்தவர் சொல்லித் தெரிய வேண்டும் என்று அவசியமில்லை. நல்லது நடக்க வேண்டும் என்று பிரார்த்தியுங்கள். தவறில்லை. ஆனால் அதன் பின் எது நடந்தாலும் அது சரியாகவே இருக்கும், இன்று புரியா விட்டாலும் பின்பாவது புரியவரும் என்று நம்பிக்கையுடன் பொறுத்திருங்கள். அதுவே இறைவன் மேல் வைக்கக் கூடிய உண்மையான நம்பிக்கை.

நன்றி:  என்.கணேசன் – –    தினத்தந்தி – ஆன்மிகம் – 26-03-2013