Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,839 முறை படிக்கப்பட்டுள்ளது!

கோடை நோய்களை விரட்ட வழிகள்

கோடை பிறந்து விட்டாலே கொதிக்கும் சூரியனின் வெப்பத் தான் நினைவுக்கு வரும். கோடைக் காலம் குழந்தைகளின் கொண்டாட்ட காலம். கோடை வெயிலின் உக்கிரத்தை தணிக்க சிலர் மலைப்பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்கின்றனர். பலர் பூங்கா, கடற்கரை என நிழல் தரும் இடங்களுக்கு சென்று வெயிலின் வேகத்தை தணித்துக் கொள்கின்றனர். இந்த கோடையின் முக்கிய காலகட்டமான அக்கினி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் தாக்கம் சென்னை போன்ற பெரு நகரங்களில் வாழும் மக்களுக்கு நரக வேதனை தான்.

கோடைக்காலத்தில் உண்டாகும் அதிக உஷ்ணத்தால் மனிதர்களுக்கு பலவகையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. கடுமையான வெப்பத்தைத் தாங்க முடியாமல் நம் உடலில் பல நோய்கள் வெளிப்படுகின்றன. இனி குறைந்தது மூன்று மாதங்களுக்கு இந்த வெப்ப பாதிப்புகளை நாம் சமாளித்தே ஆக வேண்டும். கோடையில் நம்மை தாக்கும் வெப்ப நோய்கள் பற்றியும் அவை வராமல் தடுப்பது எப்படி? என்பது பற்றியும் டாக்டர் திருத்தணிகாசலம் விவரிக்கிறார்.

வியர்க்குரு……..

வெயில் ஏற ஏற உடலில் வியர்வை அதிகமாகச் சுரக்கும் அப்போது தோலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளில் அழுக்கு சேர்ந்து அடைத்துக் கொள்ளும். அதனால் `வியர்க்குரு’ வரும். வெயில் காலத்தில் தினமும் இரு வேளை குளித்தால் வியர்க்குரு வராது. குளித்து முடித்த பின் உடலைத் துடைத்து விட்டு, வியர்க்குரு பவுடர் காலமின் லோஷன் அல்லது சந்தனத்தைப் பூசலாம். வேனல் கட்டிகள்…….

தோலின் வழியாக வெளியேற வேண்டிய உப்பு, யூரியா போன்றவை வெளியேற முடியாமல் வியர்க்குருவில் அழுக்கு போல் தங்கி விடும். அப்போது அங்கு பாக்டீரியா தொற்றிக் கொள்ளும். உடனே அந்த இடம் வீங்கிப் புண்ணாகும். இது தான் வேனல்கட்டி இதற்கு நுண்ணுயிர் கொல்லி மருந்துகள், வலி நிவாரணி மாத்திரைகள், வெளிப்பூச்சு களிம்புகள் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். வேனல் கட்டி வருவதைத் தடுக்க, வெயிலில் அதிகமாக அலைவதைத் தவிர்க் கவும். நிறைய தண்ணீர் பருகவும்.

காளான் படை…………..

வியர்குருவில் பூஞ்சை அல்லது காளான் சேர்ந்து கொண்டால் அரிப்புடன் கூடிய படை, தேமல் தோன்றும். உள்ளாடைகளைச் சுத்தமாக வைத்துக் கொண்டால் காளான் படை நீங்கி விடும். படையைக் குணப்படுத்தும் களிம்புகளையும் மாத்திரைகளையும் பயன்படுத்தலாம்.

வியர்வை நாற்றம்……..

அளவுக்கு அதிகமான வியர்வை காரணமாக உடலில் நாற்றமெடுக்கும். இதனைத் தவிர்க்க, குளித்து முடிந்ததும் அலுமினியம் குளோரைடு அல்லது ஜிங்க் கலந்த நாற்றம் போக்கும் பவுடர்களை உடலில் பூசிக் கொள்ள வேண்டும்.

வெப்பத் தளர்ச்சி……..

வெயிலின் ஆதிக்கம் அதிகரிக்கும் போது உடலின் வெப்பம் சிலருக்கு 106 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு மேல் தாண்டி விடும். அப்போது உடல் வளர்ச்சி அடையும். களைப்பு உண்டாகும். நிறைய வியர்க்கும், தண்ணீர் தாகம் அதிகமாக இருக்கும். தலைவலி, வாந்தி, தலைச்சுற்றல், மயக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றும். அளவுக்கு மீறிய வெப்பத்தின் காரணமாக உடலின் உப்புகள் வெளியேறிவிடுவதால் இந்த தளர்ச்சி ஏற்படுகிறது.

வெப்ப மயக்கம்……….

சுட்டெரிக்கும் வெயிலினால் தோலிலுள்ள ரத்த நாளங்கள் அதீதமாக விரிவடைந்து இடுப்புக்குக் கீழ் ரத்தம் தேங்குவதற்கு வழி செய்து விடுகிறது. இதனால் இதயத்திற்கு ரத்தம் வருவது குறைந்து விடுகிறது. ரத்த அழுத்தம் கீழிறங்குகிறது. மூளைக்குப் போதுமான ரத்தம் கிடைப்பதில்லை. உடனே தலைச் சுற்றல், மயக்கம் உண்டாகிறது. சில சமயங்களில் மரணம் கூட நிகழலாம்.

ஒளி ஒவ்வாமை……….

சூரியனின் புற ஊதாக்கதிர்கள் ஒத்துக் கொள்ளாதவர்களுக்கு `ஒளி ஒவ்வாமை’ உண்டாகும். இதனால் உடலில் வெயில் படும் இடங்கள் கறுத்து விடும். சிலருக்கு வெயிலின் உக்கிரம் தாங்க முடியாமல் தோல் கன்றி சிவந்து புண்ணாகி விடும். இதனை `வெப்பப் புண்கள்’ என்கிறோம். இதனைத் தவிர்க்க வெயிலில் செல்லும் போது `சன்ஸ்கிரீன்’ களிம்புகளைத் தோலில் தடவிக் கொள்ளலாம். மேலும் வெயிலில் அலைவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

நீர்க்கடுப்பு:…….

கோடையில் சிறுநீர்க்கடுப்பு அதிக தொல்லை தரும். அளவுக்கு மீறி வியர்வை வெளியேறுதல் மற்றும் தேவையான அளவு தண்ணீர் குடிக்காதது இதற்கு காரணம். நிறைய தண்ணீர் குடித்தால் இந்த பிரச்சினை சரியாகி விடும். என்றாலும் அடிக்கடி நீர்க்கடுப்பு வந்தால் அதற்குரிய பரிசோதனைகளைச் செய்து கொள்ள வேண்டும். முதலுதவி……… வெப்ப மயக்கம் மற்றும் வெப்பத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முதலுதவி தரவேண்டியது முக்கியம். அவரைக் குளிச்சியான இடத்திற்கு அப்புறப்படுத்துங்கள்.

மின் விசிறிக்குக் கீழ் படுக்க வைத்து, ஆடைகளைத் தளர்த்தி காற்று உடல் முழுவதும் படும்படிச் செய்யுங்கள். அவரைச் சுற்றிக் கூட்டம் சேருவதைத் தவிர்க்கவும். தண்ணீரில் நனைத்த துணியால் உடலைத் துடைக்கவும். இது மட்டும் போதாது அவருக்கு குளுக்கோஸ் மற்றும் தாதுக்கள் அடங்கிய சிரைவழி நீர்மங்களைச் செலுத்த வேண்டியதும் முக்கியம். ஆகையால் உடனடியாக மருத்துவரின் உதவி கிடைப்பதற்கும் வழி செய்யுங்கள்.

மஞ்சள் காமாலை………

கோடையில் சமைத்த உணவுகள் விரைவில் கெட்டு விடும். அவற்றில் நோய் உருவாக்கும் கிருமிகள் அதிகமாக இருக்கும். இந்த உணவுகளை உண்பதால் பலருக்கு கோடை காலத்தில் வாந்தி, வயிற்றுப் போக்கு, சீதபேதி, காலரா, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் வரும். ஆகையால் கோடை காலத்தில் சமைத்த உணவுகளை உடனுக்குடன் பயன்படுத்தி விட வேண்டும். தண்ணீரைக் காய்ச்சி ஆற வைத்துக் குடிக்க வேண்டும். வயிற்றுப் போக்கின் ஆரம்பநிலையிலேயே `எலெக்ட்ரால்’ போன்ற பவுடர்களைத் தண்ணீரில் கரைத்துச் சாப்பிட வேண்டும்.

கோடையை வெல்வது எப்படி………

கோடை வெயிலைச் சமாளிக்கவும், வெப்ப நோய்கள் வராமல் தடுக்கவும், அதிகமாகத் தண்ணீர் குடியுங்கள். சாதாரணமாக தினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிப்பது வழக்கம். கோடையில் குறைந்தது 3லிருந்து 4 லிட்டர் வரை குடிக்க வேண்டும் காய்ச்சி ஆற வைத்து தண்ணீரை ஒரு மண்பானையில் ஊற்றி வைத்து ஜில்லென்று குடிக்கலாம். காபி மற்றும் தேநீர் குடிப்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

வாயு நிரப்பப்பட்ட செயற்கை மென் பானங்களைக் குடிப்பதை விட இளநீர், நீர்மோர், பதநீர், பழச்சாறுகள், லஸ்சி ஆகிய இயற்கை பானங்கள் குடிப்பதை அதிகப்படுத்துங்கள். எலுமிச்சைச் சாற்றில் உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிடுவது நல்லது. தர்ப்பூசணி, நுங்கு, வெள்ளரி, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, பலாப்பழம், அன்னாசி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களையோ பழச்சாறு களையோ அடிக்கடி சாப்பிடுங்கள்.

கோடையில் இரண்டு மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து வெயிலில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். பகல் 12 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வெளியில் செல்லாமல் தவிர்ப்பது நல்லது. இயன்றவரை நிழலில் செல்வது நல்லது. குழந்தைகளை வெயிலில் விளையாட விடாதீர்கள்.

நன்றி: தரு