அனஸ் இப்னு மாலிக் (ரழி) அறிவிக்கின்றார்கள்: (நபி (ஸல்) அவர்களை நோக்கி) ஒரு மனிதர் “முஹம்மதே! எங்களின் தலைவரே! எங்கள் தலைவரின் மகனே! எங்களில் சிறந்தவரே! எங்களில் சிறந்தவரின் மகனே! என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மக்களே அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள், மேலும் ஷைத்தான் உங்களைக் கெடுத்துவிட வேண்டாம். அல்லாஹ்வின் மீது ஆணை! எனக்கு அல்லாஹ் வழங்கிய தகுதியை விட என்னை உயர்த்துவதை நான் விரும்ப மாட்டேன்” (அஹ்மது : ஹதீஸ் எண்: 12141)
இஸ்லாம் நடுநிலையையும் நீதியையும் பேணும் மார்க்கமாகும். ஆன்மீகத்தின் பெயரால் வரம்பு மீறுதலை ஒருபோதும் இஸ்லாம் அங்கீகரிப்பதில்லை. இதனால் தெளிவான ஏகத்துவக் கொள்கையில் சிறிதும் பிறழாமல் மேலோங்கி நிற்கிறது. அதன் இறைக் கொள்கைக்குக் களங்கம் விளைவிக்கும் சிறு செயலைக் குறித்தும் அது எச்சரிக்காமல் விட்டதில்லை.
இஸ்லாமிலிருந்து வழிதவறிச் சென்ற மதங்கள் மகான்கள் மற்றும் புண்ணிய புருஷர்கள் மீது கொண்ட வரம்பு மீறிய பக்தியால் அவர்களை இறைவனின் தன்மைக்கு உயர்த்தின. இதனால் இறைவனின் தன்மைக்குக் களங்கம் கற்பித்து இணைவைப்புக் கொள்கையில் சென்றுவிட்டன. மனிதர்களை இறை அவதாரங்களாகவும் இறைவனின் புதல்வர்கள் எனவும் நம்பிக்கை கொண்டு அவர்களை வணக்கத்துக்குரியவர்களாகவும் ஆக்கிக்கொண்டனர். உண்மையில் இத்தகைய நம்பிக்கை இறைவனின் மேன்மைக்கும் மகத்துவத்திற்கும் களங்கம் கற்பிக்கும் நம்பிக்கையாகும்.
சிலைவணக்கத்தை எதிர்த்த பகுத்தறிவுத் தலைவர்களுக்குக் கூட அவர்களின் தொண்டர்கள் சிலைகளை ஏற்படுத்தி அதற்கு மாலை மரியாதை செய்து கொள்வதை நவீன உலகில் கூட நாம் கண்டு வருகிறோம். கல்லுக்கு மரியாதை கூடாது என்றவர்களே கல்லுக்கு மாலை இட்டு மரியாதை வழங்கும் அவலம்!
தெளிவான ஏகத்துவக் கொள்கையை உலகுக்கு போதித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்குப் பின்னால் தன் சமுதாயம் சிஞ்சிற்றும் வழிதவறாத வண்ணம் சீரிய வழிகாட்டுதலை விட்டுச் சென்றார்கள். ஏகத்துவக் கொள்கைக்கு களங்கம் ஏற்படும் சிறிய காரியங்களைக் கூட அவர்கள் சமூகத்துக்கு எச்சரிக்காமல் விட்டதில்லை. மக்கள் தம்மை வரம்பு மீறிப் புகழ்வதால் இறைவனின் தன்மைக்கு தம்மை உயர்த்தி அதனால் இறைவனின் மகத்துவத்துக்குக் களங்கம் கற்பிக்கும் படுபாதகச் செயலில் அது அவர்களைக் கொண்டு சேர்த்து விடும் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். அதனால் தான் இத்தகைய வரம்பு மீறிய புகழ்ச்சிகளை மக்கள் செய்யும் போது அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள், சாத்தான் உங்களைக் கெடுத்துவிட வேண்டாம் என்று கூறி எச்சரித்தார்கள்.
இதனால் தான் இன்றளவும் மதத் தலைவர்களும் ஏன் அரசியல் தலைவர்களுக்குக் கூட சித்திரங்களும் சிலைகளும் செய்யப்பட்டு மாலை மரியாதைகளுடன் வணங்கப்படும் போது ஒரு கற்பனை உருவம் கூட முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு கொடுக்காமல் அதன் ஏகத்துவக் கொள்கையில் இஸ்லாம் சிறந்து விளங்குகிறது. இதனால் தான் முஹம்மத் (ஸல்) அவர்கள் கற்பனையாக வரையப்படுவதைக்கூட முஸ்லிம் சமுதாயம் ஏற்றுக்கொள்வதில்லை.
“நிச்சயமாக நான் உங்களைப் போன்ற மனிதனே! திண்ணமாக உங்கள் இறைவன் ஒரே இறைவன் என எனக்கு (இறைவனிடமிருந்து) வெளிப்பாடு வருகின்றது, யார் தன் இறைவனின் சந்திப்பை ஆதரவு வைக்கிறாரோ அவர் அறச்செயல்களைச் செய்து தன் இறைவனை வணங்குவதில் எவரையும் இணையாக்காமல் இருக்கட்டும் என்று (நபியே!) நீர் கூறும்!” (திருக்குர்ஆன் 18: 110)
நன்றி: இறுதித்தூது