Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 12,595 முறை படிக்கப்பட்டுள்ளது!

டைனோசர் தோன்றிய நகர் அரியலூர்

’கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி’ என்பது நமது தமிழ்க்குடியின் தொன்மையை விளக்கும் முதுமொழி யாகும். இது இன்று அறிவியல் பூர்வமாகவும், மரபணுக்கள் சோதனைகள் மூலமாகவும் தமிழர்கள்தான் இந்தியத் துணைக்கண்டத்தின் பூர்வ குடிகள் என்று நிரூபணமாகியுள்ளன. மனித இனம் தோன்றுவதற்கு முன்பே பழங்காலத்திலிருந்து உயிரினங்கள் வாழ்வதற்கான ஏற்றதொரு சூழல் தென்னகத்தில் நிலவியது என்பதற்கான அடுத்த ஒரு சான்றுதான் அரியலூர்.

அறிவியலாளர்கள் 460 கோடி ஆண்டுகட்கு முன் அண்டத்தின் வாயுக்கள் குளிர்ந்து தூசுப் படலமாகி, கணமான தூசுக்கள் தாதுக்களாக பூமியின் மையத்திலும், லேசான துகள்கள் பூமியின் மேற்பரப்பில் பாறைகளாகப் படிந்து ஓடாக உருமாறி, பூமி உருவாக்கம் நிகழ்ந்ததாகக் கணித்துள்ளனர்.

பூமியில் பிராணவாயுப் படலம் ஒன்று சேர்ந்து ஓசோன் மண்டலம் உருவானது 340 கோடி வருடங்களுக்கு முன் என்றும், அதன் பிறகு 283 கோடி ஆண்டுகள் கழித்தே உலகின் முதல் ஒரு செல் உயிரினம் 57 கோடி ஆண்டுகளுக்கு முன் கடலில் உருவாகியிருக்க முடியும் என்பது அறிவியலாளர்கள் கருத்தாக உள்ளது.

பூமியில் எந்த ஒரு ஜீவராசிகளுமற்ற 340 முதல் 57 கோடி ஆண்டுகள் வரையிலான இந்தக் கால கட்டத்தை பிரிகேம்ப்ரியன் யுகம் என்பார்கள்.

57 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் முதல் உயிரினம் உருவான பிறகு இன்று வரையுள்ள காலத்தை அறிவியல் வல்லுனர்கள் பேலியோசோயிக் (Palaeozoic), மீசாசோயிக் (Mesozoic), சீனோசோயிக் (Cenozoic) என மூன்று யுகங்களாகப் பிரித்துள்ளனர்.

ஒரு செல் நுண்ணுயிரிகள் பல செல் உயிரினங்களாகிப் பின்னர் அவைகள் தாவ்ரங்கள், பிராணிகள் எனப் பரிணாம வளர்ச்சி அடைந்தன. அதன் பயனாக 51 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் உலகின் முதல் முதுகெலும்புள்ள பிராணி தோன்றியது. உலகின் முதல் தாவர இனம் தோன்றியது 40 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் என்றும் உலகின் முதல் தரையில் வாழும் உயிரினம் தோன்றியது 37 கோடி ஆண்டுகளுக்கு முன் என்றும் கணகிட்டுள்ளனர்.

உயிரினங்களின் இந்த பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் யுகங்களை மேலும் பல சகாப்தங்களாகப் பிரித்துள்ளனர். பேலியோசோயிக் யுகத்தை கேம்பிரியன், ஆர்டோவீசியன், சிலூரியன், டிவோனியன், கார்போனிஃபெரஸ், பெர்மியன் என ஆறு சகாப்தங்களாகப் பிரித்துள்ளனர். இந்த யுகம் 57 முதல் 24.5 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வரை உள்ள கால கட்டமாகும்.

மீசாசோயிக் யுகம் 24.5 முதல் 6.5 கோடி ஆண்டுகள் வரையிலான 18 கோடி ஆண்டுகள் காலம் கொண்டது. டிரையாசிக், ஜுராசிக், கிரெடேசியஸ் என மூன்று சகாப்தங்களாக இந்த யுகத்தைப் பிரித்துள்ளனர்.

சீனோசாயிக் யுகம் டெர்சியரி, குவாட்டனரி என இரண்டு சகாப்தங்களைக் கொண்டது. இது 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன் தொடங்கி இன்று வரையுள்ள காலகட்டமாகும்.

இதில் இக்கட்டுரையின் நாயகர்களான டைனோசர்கள் வாழ்ந்த காலம் ஜுராசிக் சகாப்தமாகும். இந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த உயிரினங்களில் முக்கியமான இனம் டைனோசர்கள். அவைகள் முட்டையிட்டு, குலம் வளர்த்த பெருமை கொண்டது தமிழகம் என்பது இப்போது அரியலூரில் நிரூபணமாகி இருக்கிறது.

மீசாசோயிக் யுகத்தின் மத்திய காலகட்டமான 20.8 முதல் 14.6 வரையிலான 6.2 கோடி ஆண்டுகள் காலம் ஜுராசிக் சகாப்தம் எனப்படுகிறது.

ஜுராசிக் சகாப்தத்தில் நம் பூமி எவ்வாறு இருந்திருக்கும்?

ஜூரசிக் சகாப்தத்தில் நம் பூமி மிக மிக இளமையான கிரகமாகத் திகழ்ந்துள்ளது. அப்போது பூமியில் ஒன்றாயிருந்த நிலப்பரப்பு, யூரேசியா, காண்ட்வானா எனப்பிரிந்து, பூமி ஓடு நகர்வால் மேலும் பல கண்டங்களாகப் பிரியத் தொடங்கிய காலம் அது. ஆல்ப்ஸ் மலையோ, இமயமலையோ அப்போது தோன்றியிருக்கவில்லை. தாவரங்களில் பாசிகள், பெரணிகள், ஊசி இலைத் தாவரங்கள், பனைக் குடும்பத்தைச் சேர்ந்த சில ஒற்றை விதையிலைத் தாவரங்கள் மட்டுமே பூமியில் அப்போது தழைத்திருந்தன. பூக்கும் தாவரங்கள் கிடையாது. கடலில் முதுகெலும்பற்ற ஜெல்லி, நட்சத்திர மீன்வகைகளும் கடல்பஞ்சு போன்ற உயிரினங்களும் பல்கிப் பெருகியிருந்தன. முதுகெலும்புள்ள மீன்வகைகள், சுராமீன்கள் போன்றவைகளும் வாழ்ந்தன. நிலத்தில் வாழும் இனங்களில் ஊர்வன கோலோச்சிய காலம் இது. டைனோசர்கள் பிரமாண்டமான பல்லியினத்தைச் சேர்ந்தவைகள் என்பதால் இவைகளுக்குக் காதுகள் கிடையாது. டைனோசர்கள் தவிர்த்து தவளைகள், முதலைகள், பல்லிகள், ஆமைகள் போன்ற வைகளும் அக்காலத்தில் நிலத்தில் வாழ்ந்து வந்தன. பின்னால் வந்த கிரெடேசியஸ் சகாப்தத்தில் தான் பறவை இனங்கள் டைனோசர் குடும்பத்திலிருந்து பிரிந்து உருவானவை என்பதால் ஜுராசிக் சகாப்தத்தில் பறவை இனங்கள் வாழ்ந்த சாத்தியமே கிடையாது. அன்று உயிரோடிருந்த ஒரு சில சிறு பாலூட்டி இனங்கள் கூட இன்று அழிந்து விட்டன.

dc_card_echin_bigகடலை ஒட்டிய சதுப்பு நில பகுதிகளில்தான் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏதுவான மித வெப்ப சீதோஷ்ணம் நிலவியது. நிலப்பகுதியின் உட்புறம் மிகுந்த வெப்பமும் வறட்சியும் கொண்டதாக இருந்தது. அரியலூர் அருகில் இப்போது வெற்றுப் பாறையாக இருக்கும் இந்தப் பகுதியில் அந்தக் காலத்தில் வற்றாத ஆறு ஓடி இருக்கிறது. நல்ல தண்ணீரோடு மிகப் பெரிய ஏரி இருந்திருக்கிறது. கடலும் மிக அருகாமையில் இருந்துள்ளது. எனவேதான் இங்கு டைனோசர்கள் பல்கிப் பெருகி பலகாலம் வாழ்ந்துள்ளன.

சுண்ணாம்புப் பாறைகள் நிறைந்த அரியலூர் அருகில் செந்துரை என்னும் கிராமத்தில் 2 சதுர கி.மீ பரப்பளவில் பரந்து கிடக்கும் இந்த படிம பொக்கிஷம் டைனோசர்களின் வாழ்க்கை முறையையும் அது அழிந்த விதத்தையும் அறிய உதவும் என்கின்றனர் தொல் புவியியல் வல்லுனர்கள். ஆனால் இது இன்னும் சரிவரப் பாதுகாக்கப்படாததால் இங்கிருந்து இந்த அரிய முட்டைகள் உள்ளூர்வாசிகளால் எடுத்துச் செல்லப்படுகிறது.

இதே போன்ற டைனோசர் படிம பிரதேசம் ஒன்று 1981ல் குஜராத்தில் கண்டறியப்பட்ட போது, அம்மாநில அரசு உடனடியாகச் செயல்பட்டு அதைப் பாதுகாக்கப் பட்ட பகுதியாக அறிவித்து, அங்கு ஒரு படிம அருங்காட்சியகம் உருவாக நடவடிக்கை எடுத்தது என்கிறார்கள் தொல் புவீயியல் வல்லுனர்கள். இப்பகுதியின் முக்கியத்துவம் கருதி, இப்பகுதிகளை ஒருங்கிணைத்து அதே போன்றதொரு அருங்காட்சியகமும், ஆய்வகமும் செந்துரையில் அமைக்க உடனடி நடவடிக்கை அவசியம் என்கிறார்கள் உயிரின ஆராய்ச்சியாளர்கள். மத்திய அரசு உதவும்பட்சத்தில் இவற்றைச் செயல்படுத்த திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம் முன்வந்துள்ளது.

சேலம் பெரியார் பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் ராம்குமார் தலைமையிலான மாணவர் குழுவினர்தான் முதன் முதலில் அரியலூர் நகரை ஒட்டிய இப்பகுதியில் குவியல் குவியலாய்ப் பல அடுக்குகளில் இருந்த டைனோசர் முட்டைப் படிமங்கள், முட்டையிட்ட இடங்கள், டைனோசர் எலும்புகள் ஆகியவற்றைக் கண்டுபிடித்துச் சேகரித்திருக்கிறார்கள்.

இங்கிருந்து சுமார் 60 டைனோசர் முட்டைகளை எடுத்திருக்கும் இந்தக்குழு, மேலும் ஆயிரக்கனக்கான முட்டைகள் படிமங்களாக இருப்பதையும் கண்டறிந்துள்ளது. மணலில் வளை தோண்டி கூடு மாதிரி உருவாக்கி, அதில்முட்டைகள் இடப்பட்டுள்ளன. ஒவ்வொரு கூட்டிலும் ஆறேழு முட்டைகள் இருக்கின்றன. இப்படி எராளமான முட்டைக் குவியல்கள் இருப்பதால், ஒரு காலத்தில் இங்கு ஆயிரக்கனக்கான டைனோசர்கள் குடும்பம் குடும்பமாக வாழ்ந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

டைனோசர் குடும்பத்தை அதன் இடுப்பெலும்பு அமைப்பை வைத்து சௌரிச்சியன்ஸ் (Saurischians) வகை எனவும், ஆர்னித்தோச்சியன்ஸ் (Ornithischians) வகை என்றும் இரண்டு பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். முதலாவதில் பல்லிவகை இடுப்பெலும்பும், இரண்டாவதில் பறவை இன இடுப்பெலும்பும் காணப்படுவதால் இது பறவைகளின் மூதாதையர் எனப்படுகிறது.

பெரிய பெரிய மிருகங்களை வேட்டையாடிச் சாப்பிடும் மாமிசபட்சனி ரக டைனோசர்கள் மற்றும் வெறும் இலைகளை மட்டுமே சாப்பிடும் சாதுவான சைவ சாரோபோட் ரக டைனோசர்கள் என டைனோசர்களில் பல வகை உண்டு. அரியலூரில் இந்த இரண்டு இன வகை முட்டைகளும் கிடைத்திருப்பதால், இப்பகுதியில் அந்த இரண்டு இனங்களும் வாழ்ந்திருக்கின்றன என்பது உறுதியாகிறது. இவற்றின் மீது எரிமலைக் குழம்பு ஓடியதற்கான தடயங்களும் சிக்கியுள்ளன. தக்காணப் பகுதியில் இருந்த ஏதோ ஒரு எரிமலை, இந்தியத் துணைக் கண்டம் காண்ட்வானா கண்டத்திலிருந்து பிரிந்து சென்று யூரேசிய கண்டத்தில் மோதி வெடித்துச் சிதறிய காலகட்டத்தில், அந்த இயற்கைச் சீற்றத்தில் இங்கு வாழ்ந்த டைனோசர்கள் குடும்பதோடு அழிந்திருக்கலாம். அப்போது எஞ்சிய முட்டைகள் அப்படியே மண்ணில் உறைந்து படிமங்கள் ஆகியிருக்கக்கூடும். உயிரோடு புதைந்த டைனோசர்கள் எலும்புக்கூடுகள் ஆகிவிட்டன என்பதும் கருத்தாக உள்ளது. எது எப்படியோ, டைனோசர் இனம் எப்படி அழிந்தது என்பதற்கான ஆராய்ச்சியை இனி எந்த நாட்டு நிபுணரும் அரியலூரில் வந்து செய்யலாம்.

Ck39t1150 ஆண்டுகளுக்கு முன்பே பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் இங்கு டைனோசர் எலும்புகளைக் கண்டுபிடித்தனர். அரியலூர் சிமெண்ட் ஆலையின் சுரங்க வளாகத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பே டைனோசர் முட்டை ஒன்று கிடைத்தது. ஆனால் அப்போது ஸ்பீல்பெர்க்கின் ஜூராசிக் பார்க் போன்ற திரைப்படங்கள் வரவில்லை என்பதால், போதுமான விழிப்புணர்வு அப்போது இல்லை. இப்போது உலக வரைபடத்தில் அரியலூருக்கு என்று ஒரு தனி இடம் கிடைச்சாச்சு! இதனால் தமிழர்களுக்கும் தமிழகத்திற்கும் பெருமைதானே! தமிழக அரசின் தனி கவனமும் செயல்பாடுமே இந்தப் பெருமையை போற்றிப் பாதுகாக்க முடியும் என்பது இந்தியத் தொல் புவியியல் துறை (Geological Survey of India) அதிகாரிகளின் கூற்றாக உள்ளது.

கிரெடேசியஸ் சகாப்தத்தில் டைனோசர் இனத்திலிருந்து பறவைகள் உருவான விதம்

நன்றி: அறிவியல் நம்பி