Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

February 2014
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,623 முறை படிக்கப்பட்டுள்ளது!

கருத்துரிமை – சட்டம் – கைதுகள்

crimeஇதற்கெல்லாமா கைது செய்வார்கள்? சமீபத்தில் செய்தித்தாள்கள் படித்தவர்களுக்கு நிச்சயம் இந்தக் கேள்வி எழுந்திருக்கும். அதே போல், சோஷியல் நெட்வொர்க் எனப்படும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோரின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது இந்தச் செய்திகள்.
எனில், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றைப் பயன்படுத்தி தங்கள் கருத்தைச் சொல்பவர்கள் இனி கவனமாக இருக்கவேண்டுமா? கமெண்ட் போடுபவர்கள், லைக் போடுபவர்கள் இனி எச்சரிக்கையாக இருக்கவேண்டுமா?

சிவசேனா தலைவர் பால் தாக்கரே இறந்ததை முன்னிட்டு மும்பை நகரத்தில் முழு அடைப்பு கடைபிடிக்கப்பட்டது. இது குறித்து ஷஹின் தாதா என்ற பெண் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட கருத்து இது. ’இந்த முழு அடைப்பு தன்னிச்சையாக நடைபெறவில்லை. வலுக்கட்டாயமாக நடந்தேறியிருக்கிறது. இது போன்று முன் எப்போதாவது நடந்திருக்கிறதா? பகத் சிங், சுகதேவ் போன்ற சுதந்தரப் போராட்டத் தியாகிகளுக்கு நாம் இதுவரை இரண்டு நிமிடமாவது மௌன அஞ்சலி செலுத்தியிருப்போமா? ஒருவர் மீதுள்ள மதிப்பு என்பது, தானாக வருவது. அது பெறப்படுவதில்லை. மும்பை ஸ்தம்பித்திருப்பதற்கு காரணம் மரியாதையால் இல்லை, பயத்தால் மட்டுமே.’

இந்த கருத்தை வெளியிட்டதற்காக ஷஹின் காவல் துறையால் கைது செய்யப்பட்டார். இந்தச் செய்திக்கு ஃபேஸ்புக்கில் லைக் போட்ட ரேணு சீனிவாஸ் என்ற அவர் தோழியும் கைது செய்யப்பட்டார். இவ்வாறு நடக்கும் என்று இந்த இருவரும் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள்.

மேற்படி இருவரும் தகவல் தொழில் நுட்பச் சட்டம் (Information Technology Act, 2000) 66 A பிரிவின் கீழும், இந்திய தண்டனைச் சட்டம் 295 A பிரிவின் கீழும் கைது செய்யப்பட்டனர்.

இந்திய தண்டனைச் சட்டம் 295 A என்ன சொல்கிறது?
யாரேனும் ஒருவர் தீய நோக்கத்துடன் தன்னுடைய வார்த்தைகளாலோ அல்லது எழுத்துகள் மூலமாகவோ அல்லது வேறு எந்த வகையிலோ மற்றவர்களின் மத நம்பிக்கையை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் நடந்து கொண்டால் அல்லது அதற்கான முயற்சியில் ஈடுபட்டால் அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

இதே போல் மூன்று வாரங்களுக்கு முன்னர் புதுச்சேரியை சேர்ந்த ரவி என்ற தொழிலதிபரைக் காவல்துறை கைது செய்தது. ரவி செய்த குற்றம் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரம் குறித்து ஒரு ட்வீட் போட்டது. சோனியா காந்தியின் மருமகனான ராபட் வதேராவைவிட கார்த்தி சிதம்பரம் அதிகமாக சொத்து குவித்திருக்கிறார் என்பதுதான் அந்த செய்தி. உடனடியாக ரவிமீது காவல் துறை வழக்கு பதிவு செய்தது. தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66 A பிரிவின் கீழ் குற்றம் அவர் இழைத்துவிட்டார் என்று சொல்லப்பட்டது.

அதே போல் சற்று முன்னதாக, பின்னணிப் பாடகி மற்றும் தொலைக்காட்சி பிரபலமான சின்மயி கொடுத்த புகாரின்படி, காவல்துறை ஒரு கல்லூரிப் பேராசிரியரை கைது செய்தது. சம்பந்தப்பட்ட கல்லூரிப் பேராசிரியர் சின்மயியை பற்றி அவதூறான, இழிவான செய்திகளை ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவரும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66 A பிரிவின் கீழ் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66A பிரிவு அதிகம் பயன்படுத்தப்படாத, அதிகப் பரிச்சயம் இல்லாத ஒரு சட்டப்பிரிவு. ஆனால் இப்பொழுது மிகவும் பிரபலமாகி விட்டது.

சட்டப்பிரிவு 66 A என்ன சொல்கிறது?

யாரேனும் ஒருவர் கணிணி சாதனத்தைப் பயன்படுத்தியோ அல்லது தொலைத்தொடர்பு சாதனத்தை பயன்படுத்தியோ :

  1. விகல்பமான முறையிலோ (ஒருவருடைய மனதுக்கு வருத்தத்தை ஏற்படுத்தக்கூடிய முறையில்) அல்லது பயமுறுத்தலை விளைவிக்கும் முறையிலோ தகவல்களை அனுப்பினாலோ; அல்லது
  2. தவறு என்று தெரிந்தும் ஒரு தகவலை தொல்லை செய்யும் விதமாகவோ; அசவுகரியத்தை ஏற்படுத்தும் விதமாகவோ; அபாயம் ஏற்படுத்தும் விதமாகவோ; தடங்கல் ஏற்படுத்தும் விதமாகவோ; அவதூறு செய்யும் விதமாகவோ; ஊறு விளைவிக்கும் விதமாகவோ; பயமுறுத்தும் விதமாகவோ; பகைமை விளைவிக்கும் விதமாகவோ; வெறுப்பை தோற்றுவிக்கும் விதமாகவோ; அல்லது கெட்ட நோக்கத்துடனோ மற்றவருக்கு அனுப்பினாலோ; அல்லது
  3. யாரேனும் ஒருவருக்கு தொந்தரவு தரும் விதத்தில் அல்லது அசவுகரியத்தை விளைவிக்கும் விதத்தில் அல்லது தகவல் எங்கிருந்து அனுப்பப்பட்டது என்று தெரியாத விதத்தில் (ஏமாற்றும் நோக்கில்) அல்லது திசை திருப்பும் விதத்தில் தகவல்களை அனுப்பினாலோ

அவருக்கு (தகவலை அனுப்பியவருக்கு)மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்று அபராதம் விதிக்கப்படும்.

இங்கு தகவல் எனப்படுவது எழுத்து மூலமாக வார்த்தையாகவோ, அல்லது ஒலியாகவோ, அல்லது படமாகவோ, அல்லது வேறு வகையிலோ இருக்கலாம்.

மேலும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் எது விகல்பமான அல்லது பயமுறுத்தலை விளைவிக்கும் தகவல்கள் என்று விவரிக்கப்படவில்லை.
அது போக 66 A பிரிவின்படி ஒருவர் மற்றவருக்கு மேற்குறிப்பிட்ட தகவல்களை அனுப்பியிருந்தால்தான் (Send) குற்றம். தகவல்களை வெளியிட்டால் (Publish) அது குற்றம் என்று சட்டப்பிரிவு சொல்லவில்லை.

ஃபேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் பொதுவாக ஒருவர் தங்களுடைய நண்பர்களிடமும் தன்னைப் பின்தொடருபவர்களிடமும் தகவல்களை வெளியிட்டு பரிமாறிக்கொள்கிறார்கள். கமெண்ட் செய்கிறார்கள். லைக் செய்கிறார்கள். மற்றபடி தனிப்பட்ட ஒருவருக்கு தகவல்களை ஈமெயில் அனுப்புவதில்லை. அதனால் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66 A பிரிவு சோஷியல் நெட்வொர்க்குக்குப் பொருந்துமா என்பது கேள்விக்குறிதான்.

அப்படியானால் சோஷியல் நெட்வொக்கைப் பயன்படுத்தி மற்றவர்களைப் பற்றி அவதூறாக செய்திகளை அனுப்பினால் அது தப்பில்லையா? குற்றமாகாதா?
தகவல் தொழில் நுட்பச் சட்டத்தின் 66 A பிரிவு சட்டப் பிரிவுவின்படி குற்றமாகாது. ஆனால் இந்திய தண்டனைச் சட்டம் 499ம் பிரிவின்படி குற்றமாகும். அந்தக் குற்றத்துக்கு இரண்டாண்டு வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். இது தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66 A பிரிவு சட்டப் பிரிவின்படி வழங்கப்படும் தண்டனையைவிடக் குறைவு.

கணிணியையோ அல்லது செல்ஃபோனையோ பயன்படுத்தி தனிப்பட்ட ஒரு நபருக்கு அவதூறு செய்தியை அனுப்பி வைத்தால்தான் தகவல் தொழில் நுட்பச் சட்டத்தின் 66 A பிரிவை பிரயோகிக்கமுடியும்.

மேலும் இந்த விவகாரத்தில் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் கவனிக்கவேண்டும். ஒருவர் மற்றவரைப் பற்றி சுமத்தும் பழிச்சாட்டு (Imputation) எல்லாமே அவதூறு ஆகாது. எதுவெல்லாம் அவதூறு ஆகாது (விதிவிலக்கு) என்று இந்திய தண்டனை சட்டம் 499ம் பிரிவில் பத்து விளக்கங்கள் கொடுக்கிறது.

அனைத்துக்கும் மேலாக ஓர் இந்திய குடிமகனுக்கு கருத்து சுதந்தரம் என்பது அடிப்படை உரிமையாக இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 19 (1)(A) பிரிவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அரசியல் அமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகள் ஏனையச் சட்டங்களைவிடப் பெரியது. மற்ற சட்டங்கள் அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டே இருக்க வேண்டும், எதிராக செயல்படக் கூடாது.

அதற்காக கருத்து சுதந்தரம் என்ற போர்வையில் ஒருவர் மற்றவரைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லமுடியாது, கருத்து தெரிவிக்கமுடியாது. கருத்து சுதந்தரத்துக்கும் ஒரு வரையறை உண்டு. தெரிவிக்கப்பட்ட கருத்து உண்மையானது என்றால் அதில் அவதூறு எதுவுமில்லை.

மேற்குறிப்பிட்ட அனைத்து சட்டவிதிகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் சமீபத்திய நிகழ்வுகளை பரிசீலனை செய்யவேண்டும். சட்ட விதிகளை பார்த்து விட்டோம். தார்மிக ரீதியாக இனி நீங்கள்தான் சின்மயி வழக்கிலும், கார்த்திக் சிதம்பரம் வழக்கிலும் தாக்கரே தொடர்பான வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றம் புரிந்திருக்கிறார்களா என்பதை முடிவு செய்யவேண்டும். சட்ட ரீதியில் யார் செய்தது சரி என்பதை அறிய, இந்த வழக்குகளில் நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கும் வரை காத்திருக்கவேண்டும்

நன்றி: தமிழ் பேப்பர்