Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

February 2014
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 7,700 முறை படிக்கப்பட்டுள்ளது!

மாதம்தோறும் 1,00,000 தெம்பான வருமானம் தரும் இத்தாலியத் தேனீ !

தேன்… இயற்கை நமக்கு வழங்கியிருக்கும் எத்தனையோ அருட்கொடைகளில் ஒன்று. மருந்தாக, உணவாக, பிரசாதமாக, அழகுப்பொருளாக… என இதன் பயன்பாடுகளை, சொல்லிக் கொண்டே போகலாம்! ஆனால், இன்றைக்கு சுத்தமான தேன் கிடைப்பதுதான்… கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது.

யாருக்கு தேன் தேவைப்பட்டாலும்… ”சுத்தமான (கலப்படமில்லாத) தேன் எங்கு கிடைக்கும்?” என்பதாகத்தான் அவர்களுடைய கேள்வி இருக்கிறது. ஆம், அந்தளவுக்கு இதில் கலப்படம் நிறைpv26aந்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணமே… தட்டுப்பாடுதான்!

தேவை இருக்கும் பொருளுக்குத்தானே மரியாதையும் அதிகம். இதைச் சரியாகப் புரிந்து கொண்ட பலரும், சுத்தமான தேனை உற்பத்தி செய்து, நல்ல லாபம் ஈட்டி வருகிறார்கள். கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் வட்டம், செஞ்சேரி மலையை அடுத்துள்ள மந்திரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த திருஞானசம்பந்தம் போல. இவருடைய குடும்பம், கடந்த மூன்று தலைமுறையாக தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறது!

பருத்தி விவசாயியின் வெகுமதி!

அந்தப் பகுதியில் போய் திருஞானசம்பந்தத்தின் தோட்டத் துக்கு வழிகேட்டால்… ‘தேன்காரர் தோட்டம்தானே! என்றபடி அனுப்பி வைக்கிறார்கள். தேன் சேகரிக்கும் பணியில் மனைவி ரேவதியுடன் சேர்ந்து, பரபரப்பாக இருந்த திருஞானசம்பந்தம், நம்மைக் கண்டதும் தேனாகப் பேசத்தொடங்கினார்.

 ”எங்க அப்பாவோட தாத்தா பேரு கந்தசாமி. வெள்ளைக்காரன் காலத்துல இவர், பருத்தி வியாபாரி. ஊர் ஊரா போயி, விவசாயிகள்கிட்ட பருத்தியை கொள்முதல் செய்றப்போ… பல்லடம் பக்கத்துல ஒரு விவசாயி, பருத்திக்காட்டுல பெட்டிகளை வெச்சு, தேன் சேகரிச்சுட்டு இருந்ததைப் பார்த்திருக்காரு. அதுல ஆர்வமாகி, அவர்கிட்ட இருந்து ஒரு பெட்டியை வாங்கிட்டு வந்து, எங்க தோட்டத்துல வெச்சுருக்கார். அதுல நல்லா தேன் கிடைக்கவும், நிறைய பெட்டிகளை வெச்சு, தேனை சேகரிச்சு விக்க ஆரம்பிச்சுருக்காரு. ஒரு கட்டத்துல நல்ல வருமானம் கிடைச்சதால, பருத்தி வியாபாரத்தைக் கைகழுவிட்டு, முழுநேரமா தேனீ வளர்ப்புல இறங்கிட்டாரு.

‘நல்ல வருமானம் கிடைக்குற தேனீ வளர்ப்புத் தொழில் தன்னோட போயிடக்கூடாது’னு மகள் வழி பேரனான என் அப்பா வேலுச்சாமியையும் பழக்கப்படுத்திட்டாரு.

எங்க அப்பா, இன்னிக்கு வரைக்கும் தேனீ வளர்த்து, வருமானம் பாத்துட்டு இருக்காரு. இப்போ நானும், இதுல இறங்கிட்டேன்” என்று முன்கதை சொன்ன திருஞானசம்பந்தம், தொடர்ந்தார்.

 வழிகாட்டிய வானொலி!

”ஆரம்பத்துல அப்பாவும், நானும் எங்களுக்குத் தெரிஞ்ச அளவுக்கு தேனீ வளத்துக்கிட்டிருந்தோம்.

95-ம் வருஷம், ‘ஆல் இன்டியா ரேடியோ’வுல ‘தேனீ வளர்ப்புத் தொழில்நுட்பங்கள்’ பத்தி ‘தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகப் பூச்சியியல் துறை பேராசிரியர், முத்துராமன் பேசினாரு. நிறைய விஷயங்கள தெரிஞ்சுக்கிட்டதும், எனக்கு ஆர்வம் அதிகமாகி… அடுத்த நாளே அவரைப் போய் பார்த்தேன். நிறைய சந்தேகங்களைத் தீர்த்து வெச்சு… அடுக்குத் தேனீ வளர்ப்புல வைரஸ் நோயைக் கட்டுப்படுத்துறதையும் சொல்லிக் கொடுத்தார். அப்பறம், பல்கலைக்கழகத்துல தேனீ வளர்ப்புப் பயிற்சி வகுப்புல சேர்ந்து… செயற்கை முறையில ராணித்தேனீயை உருவாக்குற சூட்சமத்தைக் கத்துகிட்டேன். எட்டாம் வகுப்புகூட தாண்டாதவன் நான். இப்ப, என் தோட்டத்துல பல்கலைக்கழக மாணவர்கள் வந்து, தேனீ வளர்ப்புப் பயிற்சியை எடுத்துட்டுப் போறாங்க.

தேனீ வளர்ப்புல பல நுட்பங்களைத் தெரிஞ்சுக்கிட்ட பிறகு, வழக்கமா செஞ்சுட்டு இருந்த அடுக்குத்தேனீ வளர்ப்பை விட்டுட்டு… அதிக மகசூல் கொடுக்குற இத்தாலியத் தேனீக்களை வளக்க ஆரம்பிச்சேன். இப்போ, நானே, ராணித் தேனீக்களை உருவாக்கி,

புது காலனிகளை ஏராளமா உருவாக்கிட்டிருக்கேன். அதேமாதிரி, வழக்கமா புகை போட்டுத்தான் தேன் எடுப்பாங்க. நான் புகை இல்லாம தேன் எடுக்குற மாதிரி, சின்னதா ஒரு கருவியை உருவாக்கியிருக்கேன். அதன் மூலமா, ஈக்களுக்கு பாதிப்பில்லாம, தேனை எடுக்க முடியுது” என்ற திருஞானசம்பந்தம், தேனீ வளர்ப்பு பற்றிய சில தொழில்நுட்பங்களையும் பகிர்ந்தார். அதை பாடமாகத் தொகுத்துள்ளோம்.

பத்தடி இடைவெளி!

’3 ஆயிரம் தேனீக்களை உள்ளடக்கிய இத்தாலியத் தேனீப் பெட்டி ஒன்றின் விலை 6 ஆயிரத்து 500 ரூபாய். இதை பூக்கள் அதிகம் உள்ள தோட்டங்களில், நிழலான இடங்களில் ஒன்றரை அடி உயரத்தில் வைக்க வேண்டும். இதற்காக பிரத்யேக ‘ஸ்டாண்டு’கள் உண்டு. ஒரு பெட்டிக்கும் அடுத்தப் பெட்டிக்கும் 10 அடி இடைவெளி இருக்க வேண்டும். பெட்டியில், எறும்பு, பல்லி போன்றவை ஏறாமல் பார்த்து கொள்ள வேண்டும். பெட்டியை வைத்ததில் இருந்து 130 நாட்களில் 3 ஆயிரம் தேனீக்கள் 12 ஆயிரம் தேனீக்களாகப் பெருகிவிடும். இந்தக் காலகட்டத்துக்குப் பிறகு தேனை அறுவடை செய்யலாம். முதல் அறுவடையில் இருந்து, 15 நாட்கள் இடைவெளியில், தொடர்ந்து அறுவடை செய்யலாம்.

pv26dஒவ்வொரு முறை சேகரிக்கும்போதும், 2 கிலோ அளவுக்குக் குறையாமல் தேன் கிடைக்கும். பெட்டியில் தேனீக்கள் பெருகிய பிறகு, அதிலிருந்து நாமே அடுத்த பெட்டியை உருவாக்கிக் கொள்ளலாம். தேனீக்கள் இல்லாத காலி பெட்டி 2 ஆயிரத்து 500 ரூபாய் விலையில் கிடைக்கிறது. ஒரு பெட்டியிலிருந்து மாதம் சராசரியாக

4 கிலோ அளவுக்கு தேன் கிடைக்கும். பெட்டியை ஒரே இடத்தில் வைத்திருந்தால், பெரியளவில் லாபம் பார்க்க முடியாது.

பொதுவாக தேனீ வளர்த்தால், ஆண்டு முழுவதும் தேன் கிடைக்காது என்று சொல்வார்கள். காரணம், தேனீக்களுக்கு வேண்டிய பூக்கள் அங்கு தொடர்ந்து இருக்காது. அதனால்தான் தொடர்ந்து தேன் எடுக்க முடியாமல் போகிறது.

ஒவ்வொரு பருவத்திலும் எந்தெந்தப் பகுதியில பூக்கள் அதிகமாகப் பூக்கும் என்பதைத் தெரிந்துகொண்டு, அந்த இடங்களில் பெட்டிகளைக் கொண்டு போய் வைக்க வேண்டும். அப்போதுதான் ஆண்டு முழுவதும் வருமானம் கிடைக்கும்.’

முருங்கைத் தேனுக்கு கூடுதல் விலை!

தொழில்நுட்பங்களைச் சொல்லி முடித்த திருஞானசம்பந்தம், ”நான், எங்க ஊர்ல இருந்து, 150 கிலோ மீட்டர் தூரம் வரை பெட்டிகளைக் கொண்டு போய் வைக்கிறேன். முருங்கை, கொத்தமல்லி, கடுகு, சூரியகாந்தி, பந்தல் பயிர்கள், தென்னை மாதிரியான பயிர்கள்ல அதிக தேன் கிடைக்கும். அந்த தோட்டங்கள்ல பெட்டிகளை வைக்கும்போது, அந்தப் பயிர்களோட மகசூலும் கூடுது. அதனால, விவசாயிகள் அவங்க தோட்டத்துல பெட்டி வைக்கறதுக்கு ஒத்துழைக்கிறாங்க.

 pv26eஅரவக்குறிச்சி, மூலனூர் பகுதிகள்ல நூத்துக்கணக்கான ஏக்கர்ல செடிமுருங்கை விவசாயம் நடக்குது. அந்தப் பகுதிகள்ல எப்பவுமே அதிக அளவுல தேன் கிடைக்கும். அதனால அந்தப் பகுதிகள்ல பெட்டிகளை வெச்சுருக்கேன். முருங்கைத்தேன் கெட்டியாகவும் சுவையாகவும் இருக்கறதால, அதுக்கு கிராக்கியும் அதிகம். உடுமலைப்பேட்டை, பல்லடம் பகுதிகள்ல, வருஷம் ஒரு போகம் மானாவாரியா நாட்டுக் கொத்தமல்லி விதைப்பாங்க. அது பூவெடுக்கும் சமயத்துல இந்தப் பகுதிகள்ல பெட்டிகளை வெச்சுடுவேன். பொங்கலூர், சுல்தான்பேட்டை பகுதிகள்ல வெங்காய சாகுபடி அதிகம். இந்த பகுதிகள்லயும் பூவெடுக்குற பருவத்துல பெட்டிகளை வெச்சுடுவேன்.

மாத வருமானம் 1 லட்சம்!

ஒரு பெட்டியிலிருந்து மாசம் சராசரியா 5 கிலோ தேன் கிடைக்கும். 130 பெட்டிகள் மூலமா, மாசத்துக்கு சராசரியா 5 ஆயிரம் கிலோ அளவுக்கு தேன் உற்பத்தி செய்றேன். முருங்கைத் தேன் கிலோ 500 ரூபாய்க்கும், மத்த தேன் கிலோ 250 ரூபாய்க்கும் விலை போகுது. 6,500 ரூபாய் முதலீட்டுல ஆரம்பிச்ச இத்தாலியத் தேனீ வளப்பு மூலமா இப்போ, மாசம் ஒரு லட்ச ரூபாய் சம்பாதிக்கிறேன்” என்று பெருமிதப் பார்வையை வீசினார்.

நிறைவாக, ”தேனீக்களைப் போல நாமும் சுறுசுறுப்பாக இருந்தாதான் இந்த தொழில்ல லாபம் பாக்க முடியும். பெட்டியை வாங்கி வெச்சுட்டு ‘தேமே’னு உக்காந்து இருந்தா… பல நேரங்கள்ல முதலுக்கே மோசம் வந்துடும்” என்கிற எச்சரிக்கையையும் சொல்லி முடித்தார்.

நிலமே தேவையில்லை…

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் துறை பேராசிரியர் முனைவர் இரா. பிலிப்ஸ்ரீதர் தேனீ வளர்ப்புப் பற்றி சொன்ன தகவல்கள்…

”தேனீ வளர்ப்பு லாபகரமான தொழில்களில் ஒன்று. கையளவு நிலம் சொந்தமாக இல்லாதவர்கள்கூட, தேனீ வளர்ப்பு மூலம் சம்பாதிக்க முடியும். தேனீ வளர்ப்பில், ‘விவசாய ரீதியில் தேனீ வளர்ப்பு’, ‘வியாபார ரீதியில் தேனீ வளர்ப்பு’ என இரண்டு முறைகள் உள்ளன.

விவசாய ரீதியாக வளர்க்கும்போது, இந்தியத் தேனீக்களை மட்டும்தான் வளர்க்க முடியும். இவை, அயல் மகரந்த சேர்க்கைக்கு உகந்தவை. இந்தத்தேனீப் பெட்டிகளை குறிப்பிட்ட இடைவெளியில் தோட்டத்தில் ஆங்காங்கு வைத்துவிட வேண்டும். இவற்றை இடம் மாற்றக்கூடாது. இம்முறையில், கிடைக்கும் தேனின் அளவு குறைவாகத்தான் இருக்கும். ஆனால், அயல் மகரந்தச் சேர்க்கை, நன்றாக நடப்பதால், வயலில் உள்ள பயிர்களில் மகசூல் கூடும்.

வியாபார ரீதியில்… அதாவது, தேன் உற்பத்திக்காக வளர்க்க, இத்தாலியத் தேனீக்கள் சிறந்தவை. இவற்றை அடிக்கடி இடம் மாற்றி வைத்து வளர்க்க வேண்டும். இவை, அதிக அளவில் உண்ணக்கூடியவை. அதனால், பூக்கள் அதிகமாக இருக்கும் இடங்களில்தான் இவை வாழும்.

‘எந்த மாதத்தில், எந்த ஊரில் என்ன பயிர் இருக்கும்?’ என்ற தகவல்களைத் திரட்டி, ஒரு வரைபடம் தயார் செய்துகொண்டு… அதன் அடிப்படையில் அந்தந்தப் பகுதிகளில் பெட்டிகளை வைத்தால், அதிகளவில் தேன் அறுவடை செய்யலாம். இம்முறையில், குறைந்தது 100 பெட்டிகளாவது வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் லாபம் ஈட்ட முடியும். கிட்டத்தட்ட கிடை ஆடு மேய்ப்பது போலத்தான் இத்தாலித் தேனீ வளர்ப்பும். ஆனால், ஒரே ஒரு வித்தியாசம்தான். ஆடுகளை பகலில் இடம் மாற்றுவோம். தேனீக்களை இரவில்தான் இடம் மாற்ற வேண்டும்.

வில்லங்கமில்லாத விற்பனை வாய்ப்பு !

தேனுக்கு எப்போதுமே கிராக்கி இருக்கிறது. முறைப்படி ‘அக் மார்க்’ முத்திரை பெற்று, இதை விற்பனை செய்யும்போது நம்பிக்கை கூடுவதால், விற்பனையும் கூடும். கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் தேன் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. இச்சங்கத்தினர், அதிகளவில் தேனை கொள்முதல் செய்து, பல்வேறு இடங்களுக்கு அனுப்புகிறார்கள். தனியாக, சந்தைப்படுத்த முடியாதவர்கள் இச்சங்கத்தில் விற்பனை செய்யலாம்.

முறையான தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்வதன் மூலம், ராணித் தேனீயில் இருந்து ‘ராயல் ஜெல்லி’யை சேகரித்து லட்சக்கணக்கில் வருமானம் பார்க்க முடியும்” என்ற பிலிப்ஸ்ரீதர் நிறைவாக,

”நமது நாட்டில் பஞ்சாப் மாநிலத்தில்தான் அதிகளவில் தேன் உற்பத்தி செய்யப்படுகிறது. அங்கு பெட்டிகளை, பல கிலோ மீட்டர் தொலைவிலுள்ள செழிப்பான பகுதிகளுக்கு எடுத்துச் செல்ல, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட லாரிகளில் ‘நடமாடும் தேன் உற்பத்திக் கூடங்கள்’ இயங்குகின்றன. அதுபோல இங்கும் வசதிகள் ஏற்பட்டால், இன்னும் ஏராளமானோர் தேனீ வளர்ப்பில் ஈடுபடுவார்கள்.

ஒவ்வொரு மாதமும் 6-ம் தேதி, எங்கள் பல்கலைக்கழகத்தில் தேனீ வளர்ப்பு குறித்த பயிற்சி நடத்தி வருகிறோம். ஒரு வேளை அன்று அரசு விடுமுறை நாளாக இருந்தால், அதையடுத்த வேலை நாளில் பயிற்சி நடைபெறும். இதற்கு கட்டணம் உண்டு. முடிவில் சான்றிதழ் வழங்கப்படுகிறது” என்று சொன்னார்.

தொடர்புக்கு, ம.வே. திருஞானசம்பந்தம், செல்போன்: 99762-63519. டாக்டர். இரா. பிலிப்ஸ்ரீதர், செல்போன்: 94429-18685.

நன்றி: பசுமை விகடன்