Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

July 2014
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,646 முறை படிக்கப்பட்டுள்ளது!

அனுபவ கல்விக்கு எப்போது மதிப்பெண்?

தமிழக அரசு கல்லூரிகளில் படிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ மாணவியர் உலகத்தரம் வாய்ந்த உயர்கல்வியை பெறவேண்டும் என்ற நோக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக உயர்கல்வி மன்றமும், தென்னிந்திய பிரிட்டிஷ் கவுன்சிலும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

படிப்பில் சிறந்து விளங்கும் மாணவ மாணவியரை வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி குறிப்பிட்ட காலத்திற்கு அங்கேயே படிக்கவும், சிறப்பு பயிற்சி பெறவும் தமிழக அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்காக ஒருவருக்கு 15 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.   பல்வேறு கட்ட தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவியர் பிரிட்டனில் உள்ள எட்ஜ்ஹில், நாட்டிங்ஹாம், ராயல் ஹாலோவே மற்றும் பர்மிங்ஹாம் ஆகிய நான்கு பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க தேர்ந்தெடுக்கப்பட்டனர்.   அவர்களில் முதற்கட்டமாக வெளிநாடு சென்று திரும்பிய சென்னை மாணவியரை சந்தித்தோம். தங்கள் அனுபவங்களை அவர்கள் சந்தோஷமாக பகிர்ந்து கொண்டனர்.   நாட்டுக்கு பாடுபடுவேன்   சென்னை, காயிதே மில்லத் கல்லூரியில் எம்.காம். முடித்துள்ள மாணவி முத்துலட்சுமி. தன்னை தயார்படுத்திக் கொண்ட அனுபவங்களை கூறுகிறார்: எங்க வீட்டுல பெருசா படிச்சவங்க யாரும் கிடையாது. அப்பா லாரி மெக்கானிக்; அம்மா இல்லத்தரசி. நான் படிச்சது தமிழ் வழிக்கல்வி தான்.

ஆங்கிலம் இல்லேன்னா நாம இருக்கற இடத்தை விட்டு கொஞ்சம் கூட நகர முடியாதுன்னு தெரிஞ்சுக்கிட்டேன். ஆங்கிலம் படிக்கிற முயற்சியில இறங்கினேன். இருந்தாலும் ஆங்கிலத்துல அவ்வளவா பேச வரலை. என்னோட ஆசிரியர்கள் கேட்கிற கேள்விகளுக்கு ஆங்கிலத்தில பதில் சொல்ல ஆரம்பிச்சு, அதிலேயும் தேறினேன்.

எட்ஜ்ஹில் பல்கலையில நாலு மாசம் சிறப்பான கல்வியை முடிச்சு திரும்பியாச்சு. இப்போ எம்.பில். படிக்கலாம்னு இருக்கேன். அங்கே நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டு வந்திருக்கேன். அதை எல்லாம் நம்ம நாட்டுலேயே வேலை பார்த்து, மாணவர்கள் பயன் பெற பாடுபடுவேன். இவ்வாறு அவர் உற்சாக பெருக்குடன் தெரிவித்தார்.   பெண்களை மதிக்கின்றனர்!   ராணிமேரி கல்லூரியில் எம்.காம். முடித்து எம்.பில். படிப்பிற்காக காத்திருக்கும் ரேகா, நம் நாட்டு பாடத் திட்டத்திற்கும், லண்டன் மாநகரின் எட்ஜ்ஹில் பல்கலைப் பாடத்திட்டத்திற்கும் உள்ள வேறுபாடுகளைக் கூறுகிறார்: என்னோட அப்பா ஒரு தொழிற்சாலையில வேலை பார்க்கிறார்; அம்மா இல்லத்தரசி. எனக்கு இந்த வாய்ப்பு கிடைச்சதே பெரிய இன்ப அதிர்ச்சி.

அதைவிட பெரிய அதிர்ச்சி என்னன்னா, அங்கே பார்த்த வகுப்பறைகளும், மாணவர்களோட பழக்க வழக்கங்களும் தான். அங்கே ஒரு பொண்ணு தனியா போனா, முன்னாடி போற ஆண் ஒரு ஓரமா ஒதுங்கி நிப்பாங்க. கதவை திறந்து விடுவாங்க. பேருந்துல பெண்கள் எல்லாம் உட்கார்ந்த பிறகு தான் அவங்க உட்காருவாங்க.   ஆனா ஆசிரியர், மாணவர்களுக்கு இடையில பெரிய வித்தியாசம் கிடையாது. ஆசிரியரை பெயர் சொல்லி அழைப்பாங்க. கூட கால்மேல கால் போட்டு உட்கார்வாங்க. இப்படி நிறைய நடக்கும். அதேநேரம் நம்முடைய பண்பாட்டையும் ரொம்பவே மதிப்பாங்க.

இங்கே, நல்ல மதிப்பெண் வாங்கணும்னா விழுந்து விழுந்து படிச்சு மனப்பாடம் செஞ்சு தேர்வெழுதுவோம். அங்கே அப்படி இல்லை. நாம படிக்கிறதை வைச்சு நடைமுறை பிரச்னைகளை எப்படி சமாளிச்சோம்னு எழுதணும்.

சந்தைப்படுத்தல்ங்கற தலைப்புல நாம என்ன பொருள் தயாரிக்க போறோம், அதுக்கு என்ன பெயர் வைச்சு, எப்படி சந்தைப்படுத்த போறோம் எவ்வளவு செலவு செய்ய போறோம் எவ்வளவு லாபம் ஈட்ட முடியும், போட்டியை எப்படி சமாளிக்கிறதுங்கறதை எல்லாம் நடைமுறை அறிவோடு எழுதினா தான் அங்கே மதிப்பெண் கிடைக்கும். அப்படி எழுதினா, இங்கே, மதிப்பெண்ணே கிடைக்காது.   அங்கே குழு விவாதம், இணைய விவாதம் எல்லாம் அடிக்கடி நடக்கும். தேர்வை இணைய வழியாக தான் எழுதணும். அங்கே 24 மணிநேரமும் நூலகத்தை பயன்படுத்த முடியும். இணையத்தின் மூலமா நூலக புத்தகங்களை படிப்பதற்கான வசதிகளும் உண்டு. நம்ம நாட்டிலேயும் அனுபவ கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தா மாணவர்களோட தனித்திறமை வளரும். வித்தியாசங்களை இவ்வாறு விரித்துரைத்தார் ரேகா.   தமிழர்கள் பகுதி குப்பை தான்!   மாநில கல்லூரியில் எம்.எஸ்சி. கணிதம் படித்து எம்.பில். படிக்க காத்திருக்கும் ஜெனிஷா கூறியதாவது: என்னோட அப்பா ஒரு தேங்காய்மண்டியில வேலை பார்க்கிறார்; அம்மா இல்லத்தரசி. நான் படிச்சது எல்லாமே ஆங்கில வழியிலதான். அதனால எனக்கு தேர்வுகள் பெரிய வேறுபாடா இல்லை.   உளவியல் தேர்வுல நிறைய புதிய கேள்விகள் இருந்துச்சு. உங்களுக்கு வீட்டு ஞாபகம் வந்தா என்ன செய்வீங்க? இந்திய உணவு கிடைக்கலைன்னா என்ன செய்வீங்க? இப்படியான கேள்விகளுக்கு நல்ல பதிலை கொடுத்திருந்தேன். அப்புறம் ராயல் ஹாலோவே பல்கலையில படிக்கிறதுக்கான வாய்ப்பு கிடைச்சது.   என்னோட பாடம் கணக்குங்கறதால அங்கே பெரிய வேறுபாட்டை பார்க்க முடியலை. சுகாதாரத்தை பொறுத்தவரைக்கும் அங்கே ரொம்பவே சுத்தமா வைச்சிருக்காங்க. வார கடைசியை எல்லாரும் கொண்டாடுறாங்க. நம்ம தமிழர்கள் வாழ்ற பகுதிகள்தான் கொஞ்சம் குப்பையா இருக்கு.

ஆனா அங்கே இருக்கிற இலங்கை தமிழர்கள் எல்லாம் நம்ம மக்களை ரொம்பவே பத்திரமா பாத்துக்கறாங்க. நிறைய உதவி செய்றாங்க. அங்கே போய் படிச்சிட்டு வந்ததால போன மாசம் ஆப்ரிக்காவில ஆசிரியரா பணியாற்றுகிற வாய்ப்பு வந்தது. ஆனா எங்க கல்லூரி ஆசிரியர் உன்னோட அறிவு நம்ம நாட்டு மாணவர்களுக்கு பயன்படணும்னு சொன்னார். அதனால அந்த வாய்ப்பை மறுத்திட்டேன். இவ்வாறு ஜெனிஷா கூறினார்.   100௦௦ ரூபாய்க்கு கறிவேப்பிலை   பாரதி மகளிர் கல்லூரியில் எம்.எஸ்சி. கணிதம், பி.எட். படித்து தற்போது ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் சங்கீதா கூறியதாவது: என்னோட அப்பா லிப்ட் பராமரிப்பாளர்; அம்மா மழலையர் பள்ளி ஆசிரியை. எனக்கு கிடைச்ச இந்த வாய்ப்புக்கு ரொம்ப பெருமைப்படுறேன்.   ஏற்கனவே பி.எட். தேர்வு எழுதி இருந்ததால உளவியல் தேர்வுகளை எளிதா கையாள முடிஞ்சது. நானும் ராயல் ஹாலோவே பல்கலையிலதான் படிச்சேன். அங்கே படிச்ச நாலு மாதங்களையும் மறக்கவே முடியாது. அங்கே பெண்கள் எல்லாம் ரொம்பவே தன்னம்பிககையோட இருக்காங்க; தன்னிச்சையா இயங்குறாங்க.

யாராவது வழி தெரியாம தயங்கி நின்னா, அவங்களே வலிய வந்து உதவுறாங்க. எல்லா இடத்திலேயும் வரிசையிலதான் நிக்கிறாங்க. சாலையோரத்தில விழுந்து கிடக்கிற ஆப்பிளை கூட எடுக்க ஆள் இல்லை. நம்மளோட பண்பாட்டை ரொம்ப மதிக்கிறாங்க.   நம்ம சமையல்ல பயன்படுத்துற துணை பொருட்களோட ஊட்டச்சத்துக்களை இணையத்துல தெரிஞ்சுக்கிட்டு ரொம்பவே ஆச்சரியப்படுறாங்க. நாங்களே சமையல் செஞ்சுக்கிட்டதால எங்களுக்கு சாப்பாட்டுப் பிரச்னை வரலை. ஆனா 100 ரூபா கொடுத்து கறிவேப்பிலை வாங்கின கொடுமையெல்லாம் அங்கே நடந்தது.

அங்கே பாடங்களை பவர்பாயின்ட் மூலமா நடத்துறாங்க. மூளைக்கு நிறைய வேலை கொடுக்கறாங்க. ராணுவ ரகசியங்களுக்கான சங்கேதங்கள் உருவாக்கத்துல பூஜ்யத்தோட பங்களிப்பை பத்தி அங்கேதான் தெரிஞ்சுக்கிட்டேன். அங்கே கத்துக்கிட்ட சைபர் சிஸ்டம்ங்கற பாடத்தை இங்கே நடந்த கருத்தரங்கத்துல எடுத்து சொன்னேன்.

அங்கே போய் படிச்சுட்டு வந்தபிறகு, தன்னம்பிக்கை ரொம்பவே கூடி இருக்கு. என்னோட படிப்பை கற்பித்தல் மூலமா வெளிப்படுத்தணும். இவ்வாறு சங்கீதா தெரிவித்தார்.