Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

October 2014
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,458 முறை படிக்கப்பட்டுள்ளது!

புரோக்கோளி சாப்பிடலாம் வாங்க!!!!

broccoliநாட்டுக்கோழி, முட்டைக்கோழி, கரிக்கோழி, வெடக்கோழி, உஜாவால் கோழி, ஸ்வேதா கோழி, பியர்ல் கோழி, கினி கோழி(திரைப்படப் பாடலாசிரியர் ப. விஜயின் ஃபேவரேட்) கிரி=நிர்பீக், ஹிட்கரி, வனராஜா, கிரிஷிப்ரோ, அங்களேஷ்வர், அசீல், பர்சா, டங்கி, சிட்டாகாங், தவோதிகிர், காகஸ், ஹர்ரிங்காடா, கருப்புகதக்நாத், காலஸ்தி, காஷ்மீர் பவிரோலா, மிரிநிக்கோபாரி, பஞ்சாப் பிரெளன், தெள்ளிச்சேரி, வான்கோழி, புரோக்கோளி…..

என்னங்க இது ஒரே கோழியா இருக்குன்னு கேக்கிறீர்களா? இதில் ஒன்று மட்டும் வித்தியாசமானது. சுத்தமான சைவ உணவு. கண்டுபிடிங்க பார்க்கலாம். ம்ம்ம்ம்ம்ம்ம் மிகச்சரியான பதில். சரியா கண்டு பிடிச்சிட்டீங்களே. அதுமட்டும் தான் கோழி இனம் அல்ல. காய்கறி இனம். ஆமாம் புரோக்கோளி (Broccoli) என்பது முட்டைக்கோஸ் குடும்பத்தில் அவதரித்த அடுத்த வாரிசு. அந்தக் குடும்பத்து காலிஃபிளவரும் இதுவும் கலர் மட்டும் கொஞ்சம் மாறுபட்ட டிவின்ஸ்ன்னு சொல்லலாம். இந்த இரட்டைக் குழந்தைகளுக்கு கொஞ்சம்தான் வேறுபாடு இருக்கும். ப்ரோக்கோளி பூ காலிஃப்ளவர் பூ போலவே இருக்கும். ப்ரோக்கோளியி அடர்பச்சை, பிரெளன் இரண்டு நிறத்திலும் இருக்கும்.

இதன் பிறப்பிடம் இத்தாலி என்பதால் இதனை இட்டாலிகா இனம் என்றும் கூறுவர். ப்ரோக்கோளி என்ற பெயரும் Broccolo என்ற இத்தாலிச் சொல்லில் இருந்து பிறந்ததே. இலத்தின் மொழியில் கிளை அல்லது கை என்ற பொருள் தரும் ப்ரோச்சியம் (brachium) என்ற சொல் மருவி ப்ரோக்கோளியாக உருமாறியது என்று இதற்குப் பெயர் வைத்த கதையைச் சொல்லுவார்கள் அந்தக் குழந்தைக்குச் சொந்த நாட்டுக்காரர்கள்..

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இத்தாலியில் பயிரான ஒரு தாவரம் இது. 1920 வரை அதிகம் மக்களால் பயன்படுத்தப் படாத இத்தாவரம் வழக்கம் போல இங்கிலாந்துக்குப் போய் அங்கிருந்து மீள் அறிமுகம் செய்யப்பட்டது. ஜெ.டி.ஸ்மித் என்பவரே இதனை எடுத்துச் சென்று உலகத்திற்குக் காட்டினார். இது குளிர்காலப்பயிர். குளிர்ச்சியான தட்பவெப்பநிலையில் பயிரடப்படும் இந்த புரோக்கோளியில் எண்ணற்ற சத்துப்பொருகள் நிறைந்துள்ளன. 100 கிராம் புரோக்கோளியில் உள்ள சத்துப் பொருட்களைப் பாருங்க,

கார்போஹைடிரேட்ஸ் 6.64 கிராம், சர்க்கரை 1.7 கிராம், நார்ச்சத்து 2.6 கிராம், நீர்ச்சத்து 89.30 கிராம், கொழுப்புச்சத்து 0.37 கிராம், புரதம் 2.82 கிராம, சுண்ணாம்புச்சத்து 5%, வைட்டமின் ஏ 3%, வைட்டமின் சி 149%, வைட்டமின் ஈ 5%, இரும்புச்சத்து 6%, மக்னீசியம் 6%, பாஸ்பரஸ் 6%, பொட்டாசியம் 7%, சிங்க் 4%. பீடா கரட்டின் 3%, தயாமின் 5%, ரிபோஃப்ளோவின் 8% நியாசின் 4% பேண்டொதேனிக் 11% அடங்கியுள்ளன. இத்தனைச் சத்துக்களை விட்டு வைக்கலாமா சாப்பிடாமல்? அது என்னென்ன வேலைகளை நம்ம உடலில் செய்கிறது என்று பாருங்கள்.

புற்றுநோய் என்ற கொடுங்கோல் எமதர்மன் இன்ஃப்லமேஷன், ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ், டெடாக்ஸ் என்ற மனித உடலில் நல்லாட்சி புரியும் மூவேந்தர்களை அடிமையாக்குவதன் மூலமாகத் தன் கடுகிய ஆட்சியைப் புரியத் தொடங்குவான். இவர்களைத் தன் படைபலத்தால் காத்தும், புற்று நோய்க் கிராதகனை இவர்களிடம் அண்ட விடாமலும் உடல்நாட்டைக் காக்கும் அருமையான பணியைச் செய்கிறது இந்த புரோக்கோளி. ஒவ்வொரு முறையும் இரண்டு முதல் மூன்று கப் ப்ரோக்கோளி வீதம் வாரத்திற்கு மூன்று முறை உணவில் சேர்த்து வந்தால் உடலின் எதிர்ப்புச்சக்தியை அதிகரிப்பதன் மூலம் புற்றுநோயைக் கிருமிகளை வ(ள)ரவிடாமல் தடுக்கலாம் என்கிறது தற்போதைய ஆய்வு முடிவுகள்.

ஆம், இதுவரை பல கோணங்களில் நடைபெற்ற ஏறத்தாள முந்நூறு ஆய்வுக்ளின் முடிவாக, ப்ரோக்கோளி புற்றுநோயை வராமல் தடுக்கும் மாபெரும் பணியை செய்கிறது என்கின்றனர் ஜெட் பாகே உள்ளிட்ட ஜான் காப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளகள் பலர்.

புற்று நோய்க்குச் சமமாக இன்றையச் சூழலில் மக்களை அதிகமாக அச்சுறுத்தி வரும் நோய் மாரடைப்பு. ப்ரோக்கோளியில் உள்ள பிகாம்ப்ளக்ஸும் வைட்டமின் எ,சி,ஈ, ஆகிய உயிர்ச்சத்துக்களும் இதய நோயிலிருந்தும் இதயத்தைக் காக்கிறதாம். உடனடி

மாரடைப்பு வராமலும் தடுக்கிறதாம்.

தைராய்டு எனப்படும் முன்கழுத்துக் கழலைக்கு ப்ரோக்கோளி மிகச்சிறந்த மருந்தாகும் இதனைப் பச்சையாக தின்று வந்தால் தைராய்டு சுரப்பியின் செயற்பாடு கட்டுக்குள் இருக்குமாம்.

விழி பாதுகாப்புக்குத் தேவையாக வைட்டமின்கள் அனைத்தும் இதில் உள்ளதால் விழியைப் பாதுகாப்பதிலும் சிறந்த சேவையை ஆற்றுகிறதாம். முக்கியமாக காட்ராக்ட் வராமல் தடுக்கிறதாம்.

சூரிய ஒளியால் சருமத்தில் ஏற்படும் அலஜியையும் தடுக்கிறதாம். உடலில் அலர்ஜியை ஏற்படுத்தும் சரும நோய்க்கிருமிகளைக் குறைப்பதால் தோல்வியாதி உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த மருந்துப் பொருளாகிறது என்கிறது தற்போதைய ஆராய்ச்சி.

இரும்புச் சத்து அதிகம் உள்ள இந்த புரோகோலிக்கு அல்சர் நோய் வராமல் தடுக்கும் வல்லமையும் உண்டு.

பத்து கலோரி ப்ரோக்கோளியில் சுமார் 1கிராம் நார்ச்சத்து இருப்பதால் இது ஜீரணசக்தியை அதிகரிக்கும் நற்பணியைச் செய்யும் நல்ல தாவரமாகும். அதுமட்டுமல்ல ப்ரோக்கோளியைப் பச்சையாகப்ப் பயன்படுத்துவதால் வயிற்றில் தேவையற்று வளரும் சில தசைகளின் வளர்ச்சியைக் குறைக்கிறதாம்.

சிங்கும் வைட்டமின் ஈயும் நோய் எதிர்ப்பாற்றலைத் தருவதால் பல நோய்களில் இருந்து காப்பாற்ற இந்த இரு சத்தும் நிறைந்த ப்ரோக்கோளி பயன் படுகிறது.

ப்ரோக்கோளியைச் சமைக்கும் முறை. ஒன்றும் பெரிதாக இல்லை. காளிஃபிளவரை சமைக்கும் முறை அனைத்தும் ப்ரோக்கோளிக்கும் பொருந்தும். காளிஃப்ளவரைப் போலவே பூவிலிருந்து ஒவ்வொரு இதழாகப் பிரித்து கொள்ளவேண்டும். பெரிய இதழ்களாக (கொண்டைகளாக) இருந்தால் அவற்றைச் சிறிது சிறிதாக வெட்டிக்கொள்ளலாம். அதனை உப்பு போட்டுக் காய்ச்சிய வெந்நீரில் போட்டு கழுவிச் சுத்தம் செய்த பின்பு சமைக்க வேண்டும். காளிஃப்ளவரில் காணப்படுவது போல சிறு புழுக்கள் இதிலும் இருக்க வாய்ப்புள்ளதால். நீரில் வேகவைப்பதை விட ஆவியில் வேகவைப்பது சரியான சமையல் முறை.

சரி.. இத்தனை பயன்பாடுகள் உள்ள இந்தக் கோளி இங்கு கிடைக்குமா என்றால்….. கண்டிப்பாக கிடைக்கிறது. பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட இந்தக்கோளி விமானத்தில் பயணித்து சென்னை நீல்கிரிஸ், ரிலையன்ஸ் போன்ற கடை வரைக்கும் வந்து விட்டது. பிற இடங்களில் தெரியவில்லை. சென்னை வாசிகளெல்லாம் எப்பொழுதோ சாப்பிடவும் ஆரம்பித்து விட்டார்கள்.

ஒரு முக்கியமான செய்திங்க.. இதை மறந்திடாதீங்க.. இதனை குளிர்ச்சாதனப் பெட்டியில் வைத்து பத்து நாட்கள் வரை பயன்படுத்தலாம். ஆனால் வைக்கும் போது நீரில் கழுவிவிட்டு வைக்கக் கூடாது. ஏனெனில் நீர் இதனைக் கெட்டுப்போக வைக்கும். அதே போல பிரித்து வைத்த ப்ரோக்கோளியை இரண்டு நாட்களுக்கு மேல் பயன்படுத்தாமல் இருப்பதும் நல்லது.

கறிக்கோழி, முட்டைக்கோழி, வெடக்கோழி கினிக்கோழியெல்லாம் சாப்பிடும் போது இந்தப் ப்ரோக்கோளி மட்டும் என்ன பாவம் பண்ணிச்சு.. எத்தனையோ சாப்பிட்டுட்டோம்….இதையும் சாப்பிட்டு வைக்கலாமே…. நாங்க தொடங்கிட்டோம்…… நீங்க??….

 நன்றி: குமுதம் ஹெல்த் ஸ்பெஷல்

புற்றுநோய்க்கு எதிரான ப்ரோக்கோலி

புற்றுநோய்க்கு எதிரான ப்ரோக்கோலி ப்ரோக்கோலி ப்ரோக்கோலி என்ற காய்கறி பற்றி அறிந்திருக்கலாம். முட்டைகோஸ் வகையைச் சேர்ந்த காய்கறியான ப்ரோக்கோலி அதிகமான சத்துள்ளது. புற்றுநோய்க்கும் இது தடை போடும் என்கிறார்கள் ஆய்வார்கள்.   ப்ரோக்கோலியில் உள்ள எளிதில் கரையும் நார்ச்சத்து பொருள்கள், நம் உடலில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகின்றன. நம் வயிற்றில் உள்ள செரிமானப் பாதைகளை நன்றாக சுத்தப்படுத்துவதில் ப்ரோக்கோலி பெரும்பங்கு வகிக்கிறது. இதில் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் இருப்பது ஒரு காரணமாகும்.   ப்ரோக்கோலியில் கால்சியம் சத்து அதிகம் காணப்படுகிறது. எலும்பு வளர்ச்சிக்கு கால்சியம் எவ்வளவு நல்லது என்பது நமக்குத் தெரிந்த விஷயம் தானே. ப்ரோக்கோலியில் உள்ள தாதுப்பொருட்கள், ஆன்டி ஆக்சிட்ன்ட்கள் புற்றுநோயை விரட்டி அடிக்கும் தன்மை வாய்ந்தவையாகும்.   ரத்தத்தில் உள்ள சர்க்கரையில் அளவைச் சீராகவும், கட்டுக்குள்ளும் வைத்திருக்க ப்ரோக்கோலியில் உள்ள நார்ச்சத்து உதவுகிறது. ப்ரோக்கோலியில் உள்ள வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் ஆகியவை மனநலத்தை பராமரிக்க உதவுகின்றன.

ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, புத்திசாலித்தனமாக விளங்கவும் இவை கைகொடுக்கின்றன. பலவிதமான எரிச்சல்களையும், அலர்ஜிகளையும் போக்குவதற்கு ப்ரோக்கோலி மிகவும் பயன்படுகிறது.

இதில் இருவரும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மற்றும் கேம்ப்பெரால் ஆகியவை அலர்ஜிக்கு எதிராக வேலை செய்கின்றன. ப்ரோக்கோலியில் பொட்டாசியமும், மெக்னீசியமும் நிறைந்து காணப்படுகின்றன. மத்திய நரம்பு மண்டலம் ஆரோக்கியமாக இருக்க இவை பெரிதும் உதவுகின்றன.

ப்ரோக்கோலி மசாலா

broccoliதேவையான பொருட்கள் : ப்ரோக்கோலி – 1 (சிறியது) வெங்காயம் – 1 குடைமிளகாய் – 1/2 உருளைக்கிழங்கு – 2 இஞ்சிபூண்டு விழுது – 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன் மிளகு தூள் – 1 ஸ்பூன் மல்லி தூள் – 1 ஸ்பூன் தயிர் – 2 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை :

1. ப்ரோக்கோலியை சிறு பூக்களாக பிரித்துக் கொள்ளவும்.உருளையை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
2. வெங்காயம், குடைமிளகாயை மெல்லியதாக நறுக்கி கொள்ளவும்.
3. கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம் , குடைமிளகாய் சேர்த்து வதக்கவும். இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
4. பின்னர் ப்ரோக்கோலி , உருளையை சேர்த்து வதக்கவும்.
5. தூள் வகைகள், உப்பு, தயிர் சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.
6. 1/4 கப் தண்ணீர் சேர்க்கவும்..மூடி போட்டு வேக விடவும்.
7. காய்கள் வெந்து எண்ணெய் பிரிந்து வரும் போது அடுப்பை அணைக்கவும்.
சுவையான ப்ரோக்கோலி உருளை மசாலா தயார்.
அனைத்து குழம்பு வகைகளுக்கும் , வெரைட்டி  ரைஸ்க்கும் ஏற்ற பக்க உணவு..